Published:Updated:

நிவாரண நிதிக் கொள்ளை...

ஏப்பம் விட்ட வி.ஏ.ஓ... சாட்டை எடுத்த கலெக்டர்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'எரிகிற வீட்டில்... பிடுங்குற வரை லாபம்’ என்று பழமொழி சொல்வார்கள். கிட்டத்தட்ட அந்த மனநிலையில்தான் நமது நாட்டில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், என்பது நம்முடைய சாபக்கேடு. இதற்கு சமீபத்திய உதாரணமாக, அரியலூர் விவசாயிகள் படும்பாட்டைச் சொல்லலாம்.

கடந்த ஆண்டிலும்... இந்த ஆண்டின் துவக்கத்திலும் வரலாறு காணாத வறட்சியை தமிழகம் சந்தித்தது. பருவமழையை நம்பி பயிரிட்ட பயிர்களெல்லாம் கருகத் தொடங்கவே... வறட்சி நிவாரண நிதியை அறிவித்தது தமிழக அரசு. ஆனால், இந்த நிதியை வாங்குவதற்கு விவசாயிகள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. பல இடங்களில் லஞ்ச, லாவண்ய அதிகாரிகளுக்கு எலும்புத் துண்டுகளை வீசாமல் பைசா பெயரவில்லை.

இதைப் பற்றி 'பசுமை விகடன்’ இதழில் பதிவு செய்ததை அடுத்து... சில மாவட்ட ஆட்சியர்கள், இந்த விஷயத்தைக் கையில் எடுத்து, தன் கீழ் பணியாற்றும் அலுவலர்களை கடுமையாகக் கண்டித்தனர். ஆனால், பல இடங்களில் முறைகேடுகள் முன்னேற்றப் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன. விவசாயிகளோ... வேதனையில் வெந்து கொண்டிருக்கிறார்கள்.

அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமத்தின் 'வி.ஏ.ஓ.' (கிராம நிர்வாக அலுவலர்) மலர்க்கொடி மீது, 'வறட்சி நிவாரண நிதியில் முறைகேடு செய்தார்’ என்று புகார் மனுக்களை, ஆட்சித்தலைவர் சரவணவேல்ராஜிடம் கொடுத்துவிட்டு, நடவடிக்கைக்காக காத்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

நிவாரண நிதிக் கொள்ளை...

இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான அழகரிடம் பேசியபோது, ''எங்க ஊர் முழுக்க நெல் விவசாயம்தான். எங்க குடும்பத்துக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, அண்ணன் அஞ்சு ஏக்கர், நான் அஞ்சு ஏக்கர்னு சாகுபடி பண்றோம். கடன் வாங்கி கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவு செஞ்சும் பிரயோஜனமில்லாம போயிடுச்சு. கடன்காரங்க கழுத்தை நெரிக்க ஆரம்பிச்ச சமயத்துலதான், ஏக்கருக்கு பதினைஞ்சாயிரம் ரூபாய்னு நிவாரணம் அறிவிச்சாங்க. ஒரு கோடியே இருத்தியோரு லட்சத்து முப்பத்தியெட்டாயிரம் ரூபாயை எங்க பகுதிக்கு ஒதுக்கினாங்க.

வி.ஏ.ஒ.-கிட்ட (மலர்க்கொடி) போய் கேட்டப்போ, 'லிஸ்ட்டுல உன் பேர் இல்லை’னு சொல்லிட்டாங்க. திரும்பத் திரும்ப அலைஞ்சப்போ, 'பணத்தை உங்க அண்ணன்கிட்ட கொடுத்துட்டோம்’னு சொன்னாங்க. அவருக்கு, அவரோட அஞ்சு ஏக்கருக்கு மட்டும்தான் கொடுத்திருக்காங்க. அதுக்குக் கூட ஆயிரக்கணக்குல லஞ்சம் கொடுத்திருக்கார். எனக்கு இதுவரைக்கும் பணம் கொடுக்கவே இல்லை. வி.ஏ.ஒ., தலையாரியெல்லாம் சேர்ந்துகிட்டு, நெல் பயிரிடாதவங்க பேர்லயெல்லாம் கணக்கெழுதி, சுருட்டிட்டாங்க. குளம், குட்டை, தரிசு நிலத்தையெல்லாம் சாகுபடி நிலமா கணக்குக் காட்டிட்டாங்க. என்னை மாதிரி, கிட்டத்தட்ட 200 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கோம். பல தடவை கலெக்டர்கிட்ட மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று கதறலாகச் சொன்னார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி மலர்க்கொடியிடம் கேட்டபோது, ''நான் பஸ்ல போயிட்டிருக்கிறேன். பிறகு பேசுறேன்'' என்றார். பத்து நிமிடங்கள் கழித்து, 'மலர்க்கொடியின் கணவர்’ என்று சொல்லிக் கொண்டு நம்முடைய செல்போனில் பேசிய நபர், ''நாட்டுல யாரு ஊழல் பண்ணாம இருக்காங்க. நீ ஏதோ புதுசா கண்டுபுடிச்சிட்ட மாதிரி பேசுற. நான் யாரு தெரியுமா? அரியலூர் அ.தி.மு.க- வுல முக்கிய புள்ளி. அரியலூர் எம்.எல்.ஏ-வுக்கு சொந்தக்காரன்? இதோட இந்த விஷயத்தை விட்டுடு'' என்று மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

நிவாரண நிதிக் கொள்ளை...

உடனே, நாம் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மணிவேலைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''மலர்க்கொடி யாருனே எனக்கு தெரியாது. என் பேரை தேவையில்லாம இழுக்கறாங்க. அதிகாரிகள்கிட்ட சொல்லி ஆக்ஷன் எடுக்கச் சொல்லுங்க. எந்தவிதத்துலயும் தலையிட மாட்டேன்'' என்றார்.

அடுத்து, மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு விஷயங்களைக் கொண்டு சென்றபோது, ''இதுவரைக்கும் என் கவனத்துக்கு இந்த விஷயம் வரல. இப்பவே இதை விசாரிக்க சொல்றேன். தவறு நடந்திருந்தா... அந்த வி.ஏ.ஒ.- மேல கண்டிப்பா துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பேன்'' என்று உறுதிமொழி தந்தார்.

மலர்க்கொடி சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னையை விசாரித்து வரும் உடையார் பாளையம் வருவாய் கோட்ட ஆட்சியர் கஸ்தூரியிடம் பேசினோம். 'முதல் கட்ட விசாரணையில் மலர்க்கொடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளதால், தற்காலிகப் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடக்கிறது’ என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு