பிரீமியம் ஸ்டோரி

மாத்தி யோசி 
ஓவியம்: ஹரன்

##~##

'அரிசிக்கு ஆறு உலக்கை, அவலுக்கு ஏழு உலக்கை’னு கிராமத்து மக்கள் எளிமையான சூத்திரம் வெச்சுருக்காங்க. அதாவது, நெல்லை உரல்ல கொட்டி, குத்தும்போது ஆறு முறை குத்தினா, அரிசியாகும். அதுவே, ஏழு முறை குத்தினா, அவல் பதம் வந்துடும். ஒவ்வொரு முறை நெல் குத்தும்போதும், கையைவிட்டு, பார்க்கிற வேலை, இதனால மிச்சம்.

கைக்குத்தல் அரிசியில சத்து சேதாரம் வராது. நம்ம பெரியவங்க... நோய், நொடியில்லாம வாழ்ந்ததுக்கு இந்த கைக்குத்தல் அரிசி, அவல்னு சாப்பிட்டு வாழ்ந்ததும் ஒரு காரணம். இன்னும் சில கிராமங்கள்ல அம்மிக்கல்லு, உரல்- உலக்கையையெல்லாம் புழக்கத்துலதான் இருக்கு. உரல்ல நெல்லு குத்துற பெண்களுக்கு, ஊளைச்சதை பிடிக்காது. உடம்புக்கு எந்த நோயும் வராது. இந்த சங்கதியைத் தெரிஞ்ச பட்டணத்துப் பெண்களும், வாரத்துல ஒரு முறையாவது உரல்ல அரிசி மாவு இடிப்போம்னு களத்துல இறங்கி இருக்காங்க சில இடங்கள்ல. அம்மியில மிளகாய் அரைக்கிறது, உரல்ல மாவு ஆட்டறது, மாவு இடிக்கிறதுனு வேலை செய்றாங்க. இதுக்கான இடத்தை... 'ஹோம் ஜிம்’னு சொல்றாங்க.

அந்தக் காலத்துல கேழ்வரகு, சாமை மாதிரியான சிறுதானியம்தான் பிரதான உணவு. இதோட தோல நீக்குறதுக்கு திருகைக் கல், உரல்-உலக்கையைத்தான் பயன்படுத்துவாங்க. இப்ப, சிறுதானிய சாகுபடிக்கு மவுசு கூடிட்டு இருக்கு. தோல் நீக்குறதுக்கு இயந்திரமும் வந்தாச்சு. ஆனா, நெல்லுக்கு பாலீஷ் போடற மாதிரி, சிறுதானியத்துக்கும் பாலீஷ் போடறாங்க. தயவு செஞ்சி, சிறுதானியத்தை பாலீஷ் செய்யாதீங்க. ஏன்னா... அதுல இருக்குற நன்மை செய்ற விஷயமெல்லாம் பாலீஷ் பண்றப்ப போயிடும். இதை சாப்பிடறதும் ஒண்ணுதான், சாப்பிடாம இருக்கிறதும் ஒண்ணுதான்.

மண்புழு மன்னாரு !

இப்ப ஜெயில்ல விதவிதமா அரிசி சாப்பாடும் போடுறாங்க. ஆனாலும்... 'ஜெயிலுக்குப் போனா களிதான் சாப்பிடணும்’னு பழைய கதையையே இப்பவும் சொல்லிக்கிட்டிருக்காங்க. அந்தக் காலத்துல காலையில ஜெயில் கைதிகளுக்கு கேழ்வரகு களிதான் போடுவாங்க. இட்லி சாப்பிட்டா, இடையில பதினோரு மணிக்கே பசி வயித்த கிள்ளற மாதிரி இருக்கும். ஆனா, கேழ்வரகு களிகிட்ட இந்த பாட்சாவெல்லாம் பலிக்காது. வயிறு திம்முனு இருக்கும். களைப்பு இல்லாம, கல் உடைக்கறது மாதிரியான கடினமான வேலைகளை செய்ய முடியும். காலையில 8 மணிக்கு களி சாப்பிட்டா, மதியம் ரெண்டு மணிக்குத்தான் பசிக்கும். அதனாலதான், ஜெயில்ல களி போடற பழக்கத்தை உருவாக்கினாங்க. விவசாய வேலை செய்யறவங்களும் காலையில கம்பு, கேழ்வரகுக் கூழை சாப்பிட்டுட்டு... வயல்ல இறங்கினா, ஒரு மணிக்கு மேலதான், மதிய சாப்பாட்டுப் பக்கம் வருவாங்க.

சின்னபசங்களுக்கு சாமை, கேழ்வரகு மாவுல செஞ்ச பண்டங்களோட சுவை பிடிக்காமப் போன... சிறுதானியங்களோட அரிசி அல்லது கோதுமை மாவைக் கலந்து சமைக்கலாம். இதனால, சுவையும் மாறாம இருக்கறதோட... தேவையான சத்து, தப்பாம கிடைச்சுடும்.

மீன் சமைக்கிற அன்னிக்கு, மீன் கழுவின தண்ணியை சாக்கடையில கொட்டாம, உங்க வீட்டு, செடி கொடிகளுக்கு ஊத்திப் பாருங்க... சும்மா 'தளதள’னு வளரும். பூச்செடிங்க, பூத்துக் குலுங்கும். ஒவ்வொரு மரத்தையும், நம்ம முன்னோருங்க ஒவ்வொரு பயன்பாட்டுக்கு உதவும்னு வகைவகையா பிரிச்சு வெச்சிருக்காங்க. அதுல வாகை மரமும் அடக்கம். ஒலிம்பிக் போட்டியில வெற்றி பெற்றவங்களுக்கு 'ஆலிவ்’ மர இலையை சூட்டுற மாதிரி, நம்ம நாட்டுல ராஜாக்கள் ஆட்சி செஞ்ச காலத்துல வெற்றியின் அடையாளமா வாகை மரத்தோட பூவைத்தான் சூட்டுவாங்களாம். அதனாலதான் 'வெற்றி வாகை’ங்கிற சொல்லே உருவாச்சுனு சொல்றாங்க.

ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல்னு பலவிதமான பயன்களைக் கொடுக்கக்கூடிய மரம் இது. ஏரி, குளத்தை சுத்தி நட்டு வெச்சா... மண்ணரிப்பைத் தடுக்கறதோட பாதுகாப்பு அரணாவும் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு