Published:Updated:

'வர்தா' புயல் தமிழகத்தை என்ன செய்யும்? வானிலை மைய இயக்குநரின் பேட்டி

Vikatan Correspondent
'வர்தா' புயல் தமிழகத்தை என்ன செய்யும்? வானிலை மைய இயக்குநரின் பேட்டி
'வர்தா' புயல் தமிழகத்தை என்ன செய்யும்? வானிலை மைய இயக்குநரின் பேட்டி

இதோ வருகிறது நாடா புயல் என்று சில வாரங்களுக்கு முன் பரபரப்புக் கிளம்பியது. கடைசியில் ‘புஸ் என்றாகிவிட்டது. அடுத்து... வருகிறது வர்தா புயல் என்ற செய்தி பரபரப்பாக வட்டம் அடித்து, இதோ நெருங்கிக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் விசாகப்பட்டினம், காக்கிநாடா பக்கம் போய்விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், கொஞ்சம் லெப்டில் வளைத்து சென்னையை நோக்கித் திரும்பிவிட்டது. வட தமிழகத்தைத்தான் வர்தா தாக்கவிருக்கிறது. இதனால் மழைகொட்டித் தீர்க்கும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.  

இப்படி தமிழ்நாட்டில் வானிலையில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும் நம் நினைவுக்கு வந்துநிற்கும் ஒரு கட்டடம் சென்னையில் இருக்கும் மண்டல வானிலை ஆய்வு மையம். ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம், கடந்த 141 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. வானிலை அறிக்கை செய்திகளாக மட்டுமே நம்மிடம் பதிந்திருக்கும் மையத்தின் உள்ளே நடக்கும் பணிகள் ஏராளம்.

இந்த ஆண்டு பருவமழை வருமா, வராதா எனத் தமிழக மக்களும் நீர்நிலைகளும் காத்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், தற்போதைய புயல் எச்சரிக்கை மைய இயக்குனரான பாலச்சந்திரனைச் சந்திக்கச் சென்றோம். வழக்கம்போல, வானிலை அறிக்கையை ஊடகங்களுக்கு தந்துகொண்டிருந்தவர், நிருபர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகப் பதில் சொல்லிவிட்டு, தொலைக்காட்சி நேரலைகளில் இருந்து விடைபெறும் வரை காத்திருந்தோம். அதன் பிறகு, நம்முடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதில்களைத் தந்தார் பாலச்சந்திரன்.

அவருடனான உரையாடலிலிருந்து...


நாளை கரையை கடக்கும் வர்தா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்?

நாளை மதியம் சென்னை அருகே வர்தா புயல் கரையைக் கடக்கும் போது மிக அதிகமாக காற்று வீசும். அப்போது வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக அதிக கனமழையும் பெய்யும். அப்போது காற்றின்  வேகம் 80-90 கி.மீ வரை இருக்கும். இன்று முதல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்

ஒரு மழை அல்லது புயல்... இவற்றை இந்த வானிலை ஆய்வு மையம் எப்படிக் கையாள்கிறது?

சென்னை வானிலை ஆய்வு மையம் 1875-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தென்மண்டலத்தில் அமைந்திருக்கும் இந்த மையத்தின் கீழ் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. வானிலை முன்னறிவிப்பு செய்வது, விவசாயம், கடற்படை, விமானங்கள் ஆகியோருக்கு வானிலை நிகழ்வுகளை அளிப்பது, பொதுமக்களுக்கு வானிலை நிலவரங்கள் மற்றும் புயல் எச்சரிக்கை செய்வது போன்ற பல்வேறு விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம். வருடத்தின் எல்லா நாட்களிலும் எங்கள் பணி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். இந்த அலுவலகத்தில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல இடங்களில் எங்கள் நிபுணர்கள் அளவீடுகளை எடுத்து வருகின்றனர். 
வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, 2 மணி நேர முன்னறிவிப்பு, 5 நாட்கள் முன்னறிவிப்பு, 30 நாட்கள் கணிப்பு, பருவகால கணிப்புகள் என வகைகள் உண்டு. நாங்கள் இங்கே செய்வது 5 நாட்கள் முன்னறிவிப்பு. அடுத்த 5 நாட்களில் வானிலையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படும் என்பதை மட்டுமே எங்களால் சொல்ல முடியும். 30 நாட்களுக்கான கணிப்புகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருக்கும் மையத்தால் கணிக்கப்படும்.

பல நேரங்களில் உங்களது கணிப்புகள் பொய்யாகி விடுகிறதே?

பொய்யாகிறது என சொல்ல முடியாது. எங்கள் கணிப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஏனெனில் அதுதான் வானிலை. அது எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. மாறிக்கொண்டே இருப்பதுதான் அதன் இயல்பு. வானிலை மாற்றங்கள் என்பது ஏதேனும் ஒரு விஷயத்தால் மட்டுமே நடப்பதில்லை. காற்றின் வேகம், காற்றின் ஈரப்பதம், கடலின் வெப்பநிலை, காற்றின் திசை, புயல் என பல விஷயங்கள் உண்டு. இவற்றில் எது மாறினாலும், அது இன்னொன்றை பாதிக்கும். எனவே, வானிலையை உலகில் எங்குமே துல்லியமாகச் சொல்லவிட முடியாது. அதுவும் நாம் இருப்பது வெப்பமண்டலப் பகுதி. தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகள் மூலமாக துல்லியத் தன்மையின் அளவை வளர்த்துக் கொண்டு வருகிறோம். அவ்வளவுதான்.

பல நாடுகளில் வானிலையைத் துல்லியமாகக் கணிக்கிறார்களே?

உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். அமெரிக்காவில் 1942-ம் ஆண்டு முதல், ஆய்வு விமானங்கள் மூலமாக வானிலை அளவுகளை எடுத்து வருகின்றனர். அதாவது இந்த விமானங்களை, வானில் இருக்கும் மேகங்களுக்குள் செலுத்தி, அங்கிருந்து தகவல்களை சேகரித்து வானிலை முன்னறிவிப்பு செய்கிறார்கள். 2015-ம் ஆண்டு அவர்கள் கணித்த புயலின் திசை முழுவதுமே மாறிவிட்டது. இவர்கள் விமானம் மூலம் கணித்த அளவைவிட எல்லா அளவுகளும் நிஜத்தில் இருமடங்கு இருந்தது. கணிப்பே மாறிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் என்னிடம் சொன்னது, அதுதானே இயற்கைÕ என்கிற ஒரே பதில்தான். அவர்களின் கணிப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். வானிலை மாற்றங்கள் எல்லா இடங்களிலும் மாறிக்கொண்டேதான் இருக்கும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன். தொழில்நுட்பத்தின் உதவியோடு நாம் எல்லாவிதத்திலும் சிறப்பாகவே செயல்படுகிறோம். அதில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் பல தடவை துல்லியமாகக் கணித்திருக்கிறோம். பல புயல்களை கணினிகள் மூலமாக மிகமிகத் துல்லியமாக கணித்துக் கூறியுள்ளோம். தற்போது நம்முடைய கணிப்புகளின் வெற்றிவிகிதம் அதிகரித்துவிட்டது. நம் கணிப்புகளின் வெற்றி, 80% முதல் 90% ஆகும். பிழைகள் ஏற்படுவதற்கு வானிலை மாற்றங்களில் ஏற்படும் தினசரி, வார, மாத, பருவகால மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

உங்களது கணிப்புகளில் செயற்கைக்கோள்களின் பங்கு என்பது என்ன?

இன்சாட் 3D, 3A மற்றும் கல்பனா ஆகிய செயற்கைகோள்கள் தகவல்களைத் தருகின்றன. அத்துடன் மேலும் சில ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களும் தகவல்களைக் கொடுக்கின்றன. கடலோரக் காற்று, கடலோர வெப்பநிலை, கடல் புயல் போன்ற தகவல்களை இந்தச் செயற்கைகோள்கள் வானில் இருந்து கொடுக்கும். தரையில் இருந்து சுமார் 36000 கி.மீ உயரத்தில் இருந்து இது செயல்படும். அதேசமயம் நிலத்தில் ரேடார்கள் மூலமாகப் புயலின் திசையைக் கண்காணிப்போம். புயல் நம்மை நெருங்கி 400 கி.மீ என்ற அளவு வந்தவுடன் ரேடார் மூலமாக அதனைக் கண்காணிப்போம். இது இன்னும் துல்லியமான தகவல்களைக் கொடுக்கும்.


பருவமழை என்பது சமீபகாலங்களில் சரியான காலங்களில், சராசரி அளவுகளில் பெய்வதில்லை. பருவமழை மாற்றங்களுக்கு என்ன காரணம்?

இந்த ஆண்டைப் பொறுத்தவரை பருவ மழையானது குறைவாகப் பெய்துள்ளது உண்மைதான். இந்த வடகிழக்குப் பருவமழையானது தமிழகத்துக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் காலத்துக்குள் கிடைக்கும். இதன் தன்மையைப் பொறுத்தவரை, இது எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது. ஒரு மாதம் அதிகமாகப் பெய்யும். ஒரு மாதம் குறைவாக இருக்கும். கடந்த மாதம் மழையே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால், டிசம்பர் துவங்கியதும் மழை ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் பெய்யும் மழையில் 60% மழை இந்த வடகிழக்குப் பருவமழை மூலமாகத்தான் கிடைக்கும். எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்து இதுதான் நிலை என சொல்ல முடியாது.


கடந்த ஆண்டு வெள்ளம் வந்தது. உடனே அது புவி வெப்பமயமாதல் காரணமாகத்தான் வந்ததா எனக் கேட்டனர். சிலர் எல் நினோ காரணமா என்றனர். என்னைப் பொறுத்தவரை இவை அனைத்தும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் வானிலை மாற்றங்கள் என்பது ஏதேனும் ஒரு காரணத்தால் மட்டுமே நிகழ்வதில்லை. அதற்கு பல்வேறு விஷயங்கள் கூடிவர வேண்டும். 

அப்படியெனில் இந்த ஆண்டு பருவமழை தாமதமானதற்கும், குறைந்தற்கும் என்ன காரணம்?

அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதலாவது வலிமை குறைந்த லா நினா. இதனால் பசிபிக் பகுதியில் வெப்பம் குறைந்துவிட்டது. அதேபோல இந்தியக் கடல் இருமுனையில் வீசும் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசினால் நமக்கு பயன் கிடைக்கும். இந்த முறை மேற்கில் இருந்து, கிழக்கு நோக்கி வீசிவிட்டது. அதேபோல இந்த ஆண்டின் தென்மேற்கு பருவ மழைக் காலமும் அக்டோபர் 14-ம் தேதிக்குள் முடியாமல், அக்டோபர் 28-ம் தேதி வரை நீண்டுவிட்டது. அத்துடன் கியான்ட் புயலும் நமது பகுதிகளில் இருந்த ஈரப்பதத்தை மியான்மர் நோக்கி இழுத்து சென்றுவிட்டது. இதனால்தான் இந்த தாமதம். ஏற்கெனவே சொன்னது போல வானிலை என்பது நிரந்தரமானது அல்ல. இந்த நாளில் மழை வரவேண்டும் என சொல்லி அதற்குக் கட்டளை இட எல்லாம் முடியாது அல்லவா?


மக்களை அச்சமூட்டக் கூடாது என்பதற்காக, ஆபத்தான வானிலை அறிவிப்புகளை சொல்லாமல் நிறுத்துவதுண்டா?

இல்லவே இல்லை. எங்களுடைய நோக்கமே மக்களுக்கு முன்னறிவிப்புகளை கொடுத்து எச்சரிக்கை செய்வதுதான். ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போதோ, அல்லது பேரிடர் ஏற்படும்போதோ என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு விதிமுறைகளே உள்ளன. நாங்கள் அதன்படிதான் செயல்படுகிறோம். அதை நாங்கள் கட்டாயம் பின்பற்றுகிறோம். ஒவ்வோர் ஆண்டும் அந்த விதிமுறைகள் காலத்துக்கு ஏற்ப நவீனப்படுத்தப்படும். 
உண்மைகளுக்குத்தான் ஆதாரம் வேண்டும். வதந்திகளுக்கு ஆதாரம் தேவையில்லை. எனவே புயல் பற்றிய வதந்திகள் நிறையவே வருகின்றன. அதேசமயம், இங்கே ஒரு விஷயத்தை கோரிக்கையாகவே வைக்கிறேன். புயல் தொடர்பாக வதந்திகளை நிச்சயம் யாரும் பரப்பாதீர்கள். ‘சார்... புயல் வரப்போகிறது என செய்தி வருகிறது. என் மகள் திருமணத்தை நிறுத்தி விடவா, எனது அறுவை சிகிச்சையை தள்ளி வைத்துக்கொள்ளவா, வீடு மாறிடலாம் என இருக்கிறேன்’ என்றெல்லாம் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். மக்களின் இந்த அச்சம் மிகுந்த வேதனையானது. எனவே இந்த விஷயத்தில் கண்டிப்பாக வதந்திகளைப் பரப்பாதீர். ப்ளீஸ்! உங்களுக்கு சரியான தகவலை, சரியான நேரத்தில் சொல்லத்தான் நாங்கள் இருக்கிறோம்.

இந்தப் புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் என்ன?
 

புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஏற்கெனவே பல மேலை நாடுகளில் இருக்கிறது. புயல்களை இனம் கண்டு கொள்ள எளிதாக இருப்பதற்காகவே இந்த நடைமுறை. அதற்கு முன்னால் புயல் கரையைக் கடக்கும் ஊரின் பெயரை அதற்கு சூட்டுவோம். ஆனால், ஒரே ஊரில் இரண்டு புயல்கள் வரும். அதேபோல வெளிநாடுகளில் சில நாடுகளில் ஒரே சமயத்தில் மூன்று புயல்கள் ஒன்றாக வரும். அப்போதெல்லாம் அவற்றை வகைப்படுத்துவது இன்னும் கடினம். எனவே இந்த சிக்கல்களை தீர்க்கவே பெயர் வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு சார்க் அமைப்பில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை 8 நாடுகள் இணைந்து இந்தப் பெயர்களை வழங்கின. இந்தப் பெயர்கள் வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல்களில் ஏற்படும் புயல்களுக்கு சூட்டப்படும். ஒரு நாடு 8 பெயர்களை வழங்கவேண்டும். அப்படி தற்போது 64 பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் 45 பெயர்கள் தற்போது முடிந்து விட்டது. சமீபத்தில் வந்த நாடா புயல் 45-வது பெயர்கொண்ட புயலாகும். 46 வது புயல் ‘வர்தா’. இந்த 64 பெயர்களும் முடிவடைய இருக்கும் நிலையில், மீண்டும் அனைத்து நாடுகளும் இணைந்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கும்.

என்ன பெயர் வைக்க வேண்டும் என ஏதாவது விதிமுறைகள் உள்ளதா?

புயலின் பெயரானது சிறியதாக, எளிதாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதேபோல எந்த மத, இன, நாட்டு பிரிவினைரையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. நம்முடைய மொழியில் வைக்கும் பெயரானது, மற்றொரு நாட்டின் மற்றொரு மொழியில் மோசமான அர்த்தங்களை தந்தால் அதுவும் நிராகரிக்கப்பட்டு விடும்.

இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 8 பெயர்களுமே பஞ்ச பூதங்களை குறிப்பவை. (அக்னி, ஆகாஷ், பிஜிலி, ஜல், லெஹர், மேக், சாகர், வாயு. இதேபோல மற்ற ஏழு நாடுகளும் பெயர்களை வழங்கியுள்ளன.

இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள புயல்கள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன?

இந்த ஆண்டில், இந்தியாவைப் பொறுத்தவரை 3 புயல்கள் வந்துள்ளன. அப்படி வந்த ரோனு, கியான்ட் மற்றும் நாடா ஆகிய மூன்று புயல்களுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் புயல்கள் மட்டுமே மழையைத் தராது. புயல்களை விடவும் அதிகமாக மழை கொடுக்கும் வானிலை நிகழ்வுகளும் உள்ளன. நிறுத்தி, நிதானமாக மழை கொடுக்கும் வானிலை மாற்றங்கள்தான் நமக்கும் நல்லது.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பெருமழை வருமோ மக்கள் மத்தியில் ஒரு பயம் இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

ஒருமுறை விபத்து நடந்துவிட்டால், அதற்கு பிறகு நாம் அதிக கவனத்தோடு இருப்போம் என்பது உண்மைதான். ஆனால் எங்களைப் பொறுத்தவரை இது அறிவியல். இயக்குனராக நான் மட்டுமே உலகுக்குத் தெரியலாம். ஆனால், எங்கள் கணிப்புகளுக்குப் பின்னர் ஏராளமானோரின் பங்களிப்பும், உழைப்பும் இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், யாராக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் ஒரே வானம்தான். ஒரே கடல்தான். இங்கிருந்துதான் அனைத்து புயல்களுமே வருகின்றன. எல்லா புயல்களில் இருந்தும் நாங்கள் பாடம் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு புயலும் எங்களுக்கு ஒரு படிப்பினைதான். இயற்கையின் அழகே அதுதானே!” என்று விடைகொடுக்கிறார் பாலச்சந்திரன்.

- ஞா.சுதாகர்