மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீங்கள் கேட்டவை

"அகர் மரம், தமிழ்நாட்டில் வளருமா ?

 புறா பாண்டி

 ''எனது மானாவாரி நிலத்தில் டிராக்டர் மூலம் பல முறை உழவு செய்தாலும், கொழிஞ்சிச் செடிகள் அடர்த்தியாக முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு?''

இரா. இராசப்பன், ஊத்துப்பட்டி.

இயற்கை விவசாய ஆலோசகர் ஏங்கல்ஸ் ராஜா பதில் சொல்கிறார்.

''கொழிஞ்சி என்பது அருமையான உரச் செடி. இதைத் தங்களுடைய நிலங்களில் முளைக்க வைப்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அப்படியிருக்க, உங்கள் வயலில் இயற்கையாகவே அவை வளர்ந்து நிற்கும் நிலையில், அவற்றை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 நீங்கள் கேட்டவை
 ##~##

நிலத்தில் வளரும் களைகளை வைத்துதான், நிலத்தின் வளத்தை அளவிடுவார்கள். கொழிஞ்சிச் செடிகள் முளைத்துக் கிடக்கும் நிலம்தான் முதல் வகை நிலம். கரந்தைச் செடிகள் முளைத்துள்ள நிலம் இரண்டாம் வகை. எருக்கு போன்ற செடிகள் முளைத்துள்ள மீதி நிலங்கள்தான் மூன்றாம் வகை. இவற்றை கடைநிலம் என்றும் சொல்வார்கள்.

இதை வைத்துப் பார்க்கும்போது உங்கள் நிலம் நல்ல வளமுள்ள நிலம் என்று தெரிகிறது. கொழிஞ்சியை நீங்கள் களைச்செடியாகப் பார்க்காதீர்கள். அவை, வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனைக் (தழைச்சத்து) கிரகித்து, மண்ணை வளமாக்கும் வேலையைச் செய்கின்றன என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

எள், உளுந்து... போன்ற பயிர்களை சாகுபடி செய்யும்போது அவற்றுக்குப் போட்டியாக கொழிஞ்சி வளர்ந்து நிற்கும். இது 120 நாட்கள் வயது கொண்ட பயிர். இவற்றின் விதைகள் நிலத்தில் கொட்டும் வரை வயலில் விட்டு வைக்கக்கூடாது. விதைகள் கொட்டி விட்டால், மீண்டும் முளைத்து வந்து விடும்.

 நீங்கள் கேட்டவை

அதனால் விதைகள் முற்றுகிற சமயத்தில் அறுவடை செய்து களத்துமேட்டில் கொட்டி காய வைத்து விதைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் கொழிஞ்சி மீண்டும் முளைத்து வருவது தடுக்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கொழிஞ்சி விதை 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு நல்ல கிராக்கியும் இருக்கிறது. அதனால் விதை விற்பனை மூலம் கணிசமான லாபம் பார்த்து விடலாம்.

பொதுவாக முதன்மைப் பயிர் அறுவடை முடிந்தவுடன், வயலை வெயிலில் காயப் போடக் கூடாது. அதுபோன்ற சமயங்களில் இயற்கையாகவே முளைத்து வரும் கொழிஞ்சி போன்ற செடிகள்தான் நிலத்துக்கு பசுமை மூடாக்காக அமைகின்றன. இயற்கையாக கொழிஞ்சி முளைக்காத நிலங்களில் கொழிஞ்சி விதைகளை விதைத்து, நிலத்தை வளமாக்கலாம்.''

''நான் நகரத்தில் வசிக்கிறேன். வீட்டின் சுற்றுச்சுவர் ஓரம் காலி இடம் உள்ளது. அங்கு மரம் வளர்க்க விரும்புகிறேன். எந்த வகையான மரத்தை வளர்க்கலாம்?''

ஏ. நிதின், சென்னை-92

செங்கல்பட்டு, வீட்டுத்தோட்ட ஆலோசகர் ரசூல் பதில் சொல்கிறார்.

''நகரத்தில் உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பில் அதிக ஆர்வம் உண்டு. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஏதாவது மரமோ, செடியோ நிச்சயம் இருக்கும். இட வசதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வீட்டுத் தோட்டம்கூட போடுவதுண்டு. அதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்கள் சுவற்றின் ஓரம் உள்ள இடத்தில் மரம் வளர்க்கிறார்கள். ஆனால், மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் கவனம் தேவை.

 நீங்கள் கேட்டவை

சுவற்றில் இருந்து பத்து அடி தூரத்துக்குள் வளர்ப்பதாக இருந்தால், மென்மையான வேர்களை உடைய முருங்கை, சீத்தா, ராம் சீத்தா, பப்பாளி... போன்ற மரங்களை நடவு செய்யலாம். இவற்றின் வேர்கள் அதிகமாகப் படர்வதில்லை. இருபது அடி இடைவெளியே இருந்தால்... சுவற்றில் இருந்து பத்தடி தள்ளி மா, மாதுளை, கொய்யா... போன்ற மரங்களை நடவு செய்யலாம். மாங்கன்றுகளில் பி.கே.எம்-1, காலாபாடு... போன்ற குட்டை ரகங்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

'பத்து அடி இடைவெளிதான் உண்டு. ஆனால், மா, கொய்யா, சப்போட்டா... போன்ற மரங்களைத்தான் வளர்க்க வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கும் ஒரு வழி உண்டு. சுவற்றில் இருந்து மூன்று அடி தள்ளி இரண்டு அடி ஆழத்தில் நீளவாக்கில் கால்வாய் எடுக்க வேண்டும். இடவசதியைப் பொறுத்து நீளத்தைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இந்தக் கால்வாயின் இன்னொரு புறத்தில் மரங்களை நடும்போது வேர்கள் வீட்டின் சுவரைப் பாதிக்காமல் கீழ் நோக்கிச் சென்றுவிடும். வீடுகளின் அருகில் மரம் மற்றும் செடிகளை வளர்ப்பதற்கு இதுபோன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன.''

தொடர்புக்கு, அலைபேசி: 94445-06810

''அகர்பத்தி தயாரிக்க உதவும் அகர் மரம் வளர்க்க விரும்புகிறேன். இது தமிழ்நாட்டில் வளருமா?''

எம். பிச்சை பிள்ளை, ஆனந்தக்குடி.

அகர் மர சாகுபடியில் ஈடுபட்டு வரும் வந்தவாசியைச் சேர்ந்த கனகராஜ் பதில் சொல்கிறார்.

''அகர் மரத்தில் இருந்து எடுக்கப்படும் 'அகர்’, ஊதுபத்தி உட்பட சுமார் 500 வகையான வாசனைப் பொருட்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தை தனியார் நிலங்களில் வளர்க்க எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. பெரும்பாலும், இந்த மரம் வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. சர்வதேச அளவில் இதற்கு அதிக தேவை உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கட்டை 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கட்டைகளில் இருந்து எண்ணெய் தான் வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

 நீங்கள் கேட்டவை

நடவு செய்த 7 ஆண்டுகளில் ஒரு மரத்தில் இருந்து 3 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இந்த மரத்தை கால்நடைகள் உண்பதில்லை. தவிர, குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. தமிழ்நாட்டில் இந்த மரம் அற்புதமாக வளர்கிறது. ஆனால், தென்னை, பாக்கு... போன்ற நிழல் கொடுக்கும் மரங்கள் உள்ள தோட்டங்களில் மட்டும்தான் வளர்க்க முடியும்.

தற்சமயம் இம்மரக் கன்றுகள் குறிப்பிட்ட தனியார் நர்சரிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் மழைக் காடுகள் ஆராய்ச்சி மையம் (Rain Forest Research Institute) உள்ளது. இங்கு அகர் மரம் குறித்த ஆய்வுகள் செய்யப்படுகின்றன.''

தொடர்புக்கு: Rain Forest Research Institute, P. Box No. 136, Jorhat, Assam, India.Phone: 0376-2350273/ 74.

''ஆடுகளை எந்த வயதில் விற்பனை செய்ய வேண்டும்? பொதுவாக இறைச்சி என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது?''

ம. கோபிநீலன், சிறுமுகை.

திருப்பூர் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.ஆர். செல்வராஜ் பதில் சொல்கிறார்.

''ஆட்டிறைச்சியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. விரைவாகப் பணம் வேண்டும் என்பதற்காக ஐந்து மாதக்குட்டிகளைக்கூட இறைச்சிக்கு அனுப்புகிறார்கள். 'குட்டி ஆட்டின் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. ஆனால், அறிவியல் ரீதியாக இது தவறு. சுமார் 12 மாதங்கள் வயது கொண்ட ஆட்டில் மட்டும்தான் போதுமான சதைப் பிடிப்பும், கொழுப்பும் இருக்கும். இளம் வயது ஆட்டில் கொழுப்பு இருக்காது. எலும்பின் எடைதான் அதிகமாக இருக்கும். தவிர, இறைச்சியில் அதிக நீர்த்தன்மையும் இருக்கும். எனவே, இளம் வயது ஆடுகளை இறைச்சிக்கு அனுப்பக் கூடாது.

 நீங்கள் கேட்டவை

12 முதல் 16 மாத வயது கொண்ட ஆட்டின் இறைச்சி மிருதுவாகவும், சாறுத்தன்மை கொண்டதாகவும், வாசனையுடனும் இருக்கும். 16 மாதங்களைத் தாண்டினால் இறைச்சியின் தன்மை மாறி சுவையும் குறையும்.

 நீங்கள் கேட்டவை

ஆட்டிறைச்சியின் விலை, இடத்துக்குத் தக்கபடி மாறுபாடுகளுடன் உள்ளது. சென்னை, கோவை, மதுரை... போன்ற நகரங்களில் குறைந்தபட்சம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராமப்புறங்களில் 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.''

தொடர்புக்கு: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருப்பூர். தொலைபேசி: 0421-2248524.

''எனது கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்ய விரும்புகிறேன். யாரைத் தொடர்பு கொள்வது?

கே.வி. சண்முகம், ஈரோடு.

'ஓரியண்டல் இன்சூரன்ஸ்’ நிறுவனம் ஆடு, மாடு, கோழிகளுக்கு காப்பீடு செய்கிறது. மிகக்குறைந்தக் கட்டணத்தில் காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.  இலவச தொலைபேசி எண்:  1800-1026425.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே 'புறா பாண்டி' சும்மா 'பறபற'த்துக் கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை

'நீங்கள் கேட்டவை'

பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2
என்ற முகவரிக்கு தபால் மூலமும் pasumai@vikatan.com என்ற முகவரிக்கு
இ-மெயில் மூலமும்   PVQA (Space)உங்கள் கேள்வி (Space) உங்கள் பெயர் டைப் செய்து 562636 என்ற எண்ணுக்கு செல்போன் மூலமும் அனுப்பலாம்.