Election bannerElection banner
Published:Updated:

ஜக்கி சொல்வதை மோடி கேட்கலாம்... இயற்கை கேட்காது..! #SaveForest

ஜக்கி சொல்வதை மோடி கேட்கலாம்... இயற்கை கேட்காது..! #SaveForest
ஜக்கி சொல்வதை மோடி கேட்கலாம்... இயற்கை கேட்காது..! #SaveForest

ஜக்கி சொல்வதை மோடி கேட்கலாம்... இயற்கை கேட்காது..! #SaveForest

என் பள்ளிக்கூட நாட்களில் நான் இருந்த 2006-ம் ஆண்டு. என் ஞாயிற்றுக்கிழமைகள் இப்படியாக கழியும். காலை 7 மணியளவில் என் சைக்கிளை எடுப்பேன். அது நானே பெயிண்ட் அடித்து வைத்திருந்த பச்சை நிற "த்ரில்லர்" மாடல் சைக்கிள். என்னுடன் சில நண்பர்களும் இணைந்து கொள்வார்கள். அவரவர் வீட்டிலிருந்து சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு சைக்கிள் மிதிக்கத் தொடங்குவோம். எங்கள் பயணம் கோவை "குற்றாலத்தை" நோக்கியதாக இருக்கும். 

டவுன்ஹால், செல்வபுரத்தைக் கடந்தால் நகரத்தின் அத்தனை சாயல்களும் சாயம் வெளுத்து, பசுமைப் போர்த்திய கிராமங்களைக் காண்போம். பேரூரில் கூழ் குடிக்க ஒரு பிட் ஸ்டாப். பேரூரைக் கடந்து மாதம்பட்டி அருகே போகும்போது, தோட்டத்தில் இருந்து பறித்துச் சாப்பிடும் திருட்டு திராட்சைகளுக்காக ஒரு நிறுத்தம். அந்த சமயங்களில் கோவையில் மண்டையைப் பிளக்கும் வெயில் அரிதிலும் அரிது. இப்படியாக சைக்கிளை மிதித்தபடியே சாடிவயலை அடைவோம். அங்கு தண்ணீர் மேல் ஓடும் ஒரு தரைத் தள பாலம் இருக்கும். அதில் சைக்கிளைக் கழுவிவிட்டு செக்போஸ்ட்டில் தலைக்கு 5 ரூபாய் வீதம் டிக்கெட் எடுத்து கோவை குற்றாலத்தில் சிறப்பான குளியல் போட்டு திரும்புவோம். அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமை... இருட்டுப்பள்ளம் அருகே தண்ணீர் குடிக்க நிறுத்தினோம்.

"டேய்... இதுக்குள்ள ஒரு கோவில் இருக்கு. சூப்பரா இருக்கும் போலாம்டா"

"கோவிலுக்கா? வேணாண்டா... கடுப்பா இருக்கும்"

"கோயில்னா இது வழக்கமான கோவில் இல்லடா. மலையடிவாரத்துல ரொம்பவே அழகா இருக்கும். தியானம்லா பண்ணலாம். ஈஷா..."

" ஓ... சரி போலாம்"

சிறுவாணி ரோட்டிலிருந்து அந்த மேட்டைக் கடந்து, நடுவே ஒரு பாலத்தைக் கடந்து, வலது புறமிருக்கும் ஒரு பாம்புப் புற்றைக் கடந்து... வளைந்து, நெளிந்து செல்லும் அந்த சாலையில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனோம். மழைச் சாரலிட தொடங்கியது. தென்னந்தோப்புகளைக் கடந்தோம். ஒரு அழகான மலைச்சாரல் தெரிந்தது. உற்சாகமடைந்தோம். வேகமாக சைக்கிளை மிதித்தோம். 

அடர் வனங்கள் நிறைந்த மலையின் அடிவாரத்தில், அந்த ஒரேயொரு கட்டடம் தெரிந்தது. முன்னால் இருந்த தூணில் மூன்று மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. சாதியும், மதமும், கடவுளும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத எனக்கு இயற்கையான அந்தச் சூழல் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அமைதியாக உள்ளே நுழைந்தோம். அந்த பெரிய சிவலிங்கத்தைச் சுற்றி சின்னச் சின்ன குகைகள் போன்று உட்காரும் இடமிருந்தன. கண்களை மூடி உட்கார்ந்தேன். அற்புதமான அனுபவமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து எத்தனையோ தடவைகள் ஈஷாவுக்குப் போயிருக்கிறேன். சூரியகுண்டம் வந்தது, கேண்டின் வந்தது, சந்திர குண்டம் வந்தது, லிங்க பைரவி வந்தது, பெரிய நந்தி வந்தது, சிறிய அளவிலான ஆதி யோகி வந்தார். இதோ இப்போது 112 அடி உயர ஆதி யோகி வருகிறார், 5.7 அடி உயர நரேந்திர மோடியும் வருகிறார். ஈஷாவின் ஒவ்வொரு அடி வளர்ச்சியிலும், இயற்கையின் பல நூறடி வீழ்ச்சி இருக்கிறது என்பதை சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களே மறுக்க முடியாது. 

இன்று ஈஷாவை எதிர்ப்பவர்கள் எல்லாம், அன்று ஈஷாவை ஆதரித்தவர்கள் தானே? என்ற கேள்வி சமூகவலைதளங்களில் கொதிப்போடு கேட்கப்படுகிறது. சரி தான்... அன்று இயற்கையின் மடியில் இருந்த ஈஷாவை ஆதரித்த  சிறு கூட்டம்... இன்று இயற்கையின் கருவறுத்து உருவெடுத்திருக்கும் ஈஷாவை ஆதரிக்கும் பெருங்கூட்டத்தை எதிர்ப்பதில் ஒன்றும் தவறில்லையே. இது இயற்கையின் முரணும் அல்லவே. சைக்கிளில் வந்தவர்களை ஆதரித்த ஈஷா, இன்று பி.எம்.டபிள்யூக்களில் வருபவர்களை மட்டுமே ஆராதிக்கிறது. மனம் அல்ல... பணம் தான் சிவனின் ஆசியையும், அருளையும் வழங்குகிறது.

இந்தியாவின் இன்றைய ஈஷாவும், ஐரோப்பாவின் இன்றைய ஐஸ்லேண்டும் ஒரு புள்ளியில் இணைகிறது. 3.5 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு சிறு நாடு ஐஸ்லேண்ட். பனி சூழ் உலகு. 9-ம் நூற்றாண்டில் கார்தாஸ் வாவார்ஸன் என்ற ஸ்பானிய ஊர்சுற்றி தான் முதன் முதலாக ஐஸ்லேண்டைக் கண்டுபிடிக்கிறார். அழகான நாடு. அளவான வளங்கள். அமைதியான மக்கள். மனிதர்கள் அதிகம் கால் பதித்திடாத இடங்களுக்கு பயணிக்க கோடிகளில் செலவழிக்கும் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. ஒரு இடம் உலக மக்களை ஈர்க்கும் சுற்றுலாத்தலமாக மாறும் பின்னணியில் சர்வதேச அரசியல் இருக்கிறது. அந்த அரசியலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பலியானது ஐஸ்லேண்ட். 

3.5 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட ஐஸ்லேண்டுக்கு வருடத்துக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான டூரிஸ்ட்டுகள் வருகின்றனர். 2008ல் ஐஸ்லேண்ட் பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. அதைச் சமாளிக்க அரசாங்கம் டூரிஸத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. மனிதத்தடம் படாத எத்தனையோ பகுதிகள் ஐஸ்லேண்டில் இருக்கின்றன. இந்த நிலப்பரப்புக்கு இது தான் உகந்தது என இயற்கை சில விதிகளை விதித்திருக்கிறது. அதைப் பணம் உடைக்கிறது. 

அளவான வளங்களை சுரண்டி அதிகப்படியான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. பனிமலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் ஜியோ-தெர்மல் மற்றும் ஹைட்ரோ பவர் தான் ஆற்றலுக்கான அடிப்படை. தற்போது, மின் சக்தி, எரி சக்திக்கான தட்டுப்பாடு பெருமளவு அதிகரித்திருக்கிறது. சமீபகாலங்களில் ஏற்படும் அதிகப்படியான எரிமலை வெடிப்புக்குக் காரணம் டூரிஸத்தின் வளர்ச்சிதான் என்று சொல்லப்படுகிறது. எரிமலை சாம்பல்கள் மண்ணில் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதால், இயற்கையாகவே MOSS எனும் சிறு செடிகளின் போர்வை மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை வழியாக இருந்து வந்தது. அந்த சிறு செடிகளில் ஒருவரின் காலடி பட்டால் கூட, அவை இறந்துவிடும். இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு, நிலச்சரிவும் ஏற்படுகிறது. காலம் காலமாய் அமைதியாக வாழ்ந்து வந்த ஐஸ்லேண்ட் மக்களுக்கு, திடீரென தங்கள் நிலங்களில் குவியும் இந்தக் கூட்டம் உளவியல் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. ஐஸ்லேண்டின் டூரிஸம் பட்ஜெட், சூழலியல் பட்ஜெட்டை விடவும் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. 

உலகம் முழுக்க மிகப் பெரிய வெற்றிபெற்ற "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" டிவித் தொடர் ஐஸ்லேண்டைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான். அதன் வெற்றிக்குப் பிறகு, ஐஸ்லேண்டுக்கு வருகைத் தரும் டூரிஸ்டுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டூரிஸ்டுகளாக வரும் 15 லட்சம் பேருக்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுக்கான செலவுகளை, வரியாக கட்டி வருகிறார்கள் ஐஸ்லேண்டின் 3.5 லட்சம் மக்கள். இப்படியாக பல இன்னல்களை இயற்கையும், அதன் மக்களும் சந்தித்து வருகின்றனர். ஐஸ்லேண்டுக்கு டூரிஸம் என்றால், ஈஷாவை சுற்றிய பகுதிக்கு ஆன்மிகம். ஐஸ்லேண்ட் ஒரு நாடு, ஈஷா இருப்பதோ சில ஆயிரம் ஏக்கரில்... இதை எப்படி ஒப்பிட முடியும்?. நிச்சயம் முடியும்.  எங்கோ தமிழகத்தின் மூலையில் இருக்கும் ஈஷாவுக்கு நாட்டின் பிரதமரை வரவழைக்கும் சக்தி படைத்தவர்களால் இந்த நாட்டில் எதையும் செய்ய முடியும். வெகுஜன மக்களை ஏமாற்ற தந்திரமான பேச்சிருக்கிறது. அரசியல்வாதிகளை அடக்க மந்திரமான பணமிருக்கிறது.

ஈஷாவின் வளர்ச்சியை ஆரம்பக் காலங்களில் இருந்து பார்த்தவர்களுக்கும், சமீபகாலங்களில் ஈஷாவுக்கு வருகைத் தரும் கூட்டத்தை உணர்ந்தவர்களுக்கும், மத்தியில் பாஜகவின் ஆட்சிக்குப் பிறகு, சத்குருவின் தாடியைக் கடந்து தெரியும் அந்த சிரிப்பை உணர்ந்தவர்களுக்கும் இந்த ஒப்பீடு எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் இருக்கும்.

ஈஷா அழித்த பாம்புகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையிலான பாம்பின் மரச் சிற்பங்களையும், கற்சிலைகளையும் ஈஷா வளாகத்தில் வைத்து இயற்கையிடம் சமரசம் பேச நினைக்கிறார்களா? இயற்கைத் தந்த மரங்களை அழித்துவிட்டு... எங்கோ, ஏதோ மரங்களை நட்டு இயற்கையின் சமநிலையை எட்ட நினைக்கிறீர்களா ஜக்கி? நல் வாழ்வு, நல் உணவுப் பற்றி பேசுகிறீர்கள்...வாசப்படியில் இருக்கும் பிறை நிலா உணவகத்தில் ப்ரைடு ரைஸ், சில்லி கோபி போன்ற உணவுகளைப் பரிமாற அனுமதிக்கிறீர்கள். எதை அடைய நினைக்கிறீர்கள் வாசுதேவ்? 

ஒபாமாவும், ட்ரம்பும், மோடியும் உங்களின் நண்பர்களாக இருக்கும்போது, சத்தியம் நீங்கள் சட்டத்தை மீறியிருக்க முடியாது. சட்டம் உங்கள் சொல் கேட்கும். இயற்கை நிச்சயம் உங்கள் சொல்லைக் கேட்காது என்பதை என்று உணர்வீர்கள் "பத்ம விபூஷண்" சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களே?

 - இரா. கலைச் செல்வன்.

படங்கள் - தி. விஜய்
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு