Published:Updated:

அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை

அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை
அழிக்கப்பட்ட சீமைக்கருவேலம்... வீசப்பட்ட விதைப்பந்துகள்..! திருச்சி மாணவர் படை

சீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்து மாநிலம் முழுவதுமே ஏற்பட்டுள்ள விழிப்புஉணர்வைத் தொடர்ந்து பல்வேறு தன்னார்வலர்களும், இளைஞர்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள்.

எல்லாக்குழந்தைகளும், பள்ளிக்கு புத்தகப்பைகளை தூக்கிச் செல்வது வழக்கம்; ஆனால் திருச்சி வையம்பட்டியை அடுத்த ஓந்தம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களோ, கடந்த ஒரு மாதமாக புத்தகப்பை மற்றும் வேருடன் பிடுங்கிய சீமைக்கருவேல மரச்செடிகளை எடுத்துச்செல்கிறார்கள்.  இந்தப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால் மட்டும், கடந்த ஒருமாதத்தில் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரங்கள் சிறிய அளவில் இருக்கும் போதே அழிக்கப்பட்டுள்ளன.  

திருச்சி  மணப்பாறை, வையப்பட்டி அருகில் உள்ளது ஓந்தப்பட்டி கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துரைராஜுக்கு, கடந்த 20-ம் தேதி, கலெக்டரிடமிருந்து சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மெயிலைப்பார்த்த தலைமை ஆசிரியர், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜசேகரன், தமிழாசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோரை அழைத்து பேசினார்.

அதன்பிறகு நடந்ததை ஆசிரியர் ராஜசேகரனே கூறுகிறார்,

“கலெக்டரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் குறித்து தலைமை ஆசிரியர், எங்களிடம் ஆலோசித்தார். இதுகுறித்து, மாணவர்களிடம் கொண்டு சென்று 'மாற்றம்' உண்டாக்க வேண்டும் என நினைத்தோம்.. அடுத்த நாள் காலை, பள்ளி இறைவணக்க நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர் சிவக்குமார், சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினார். அடுத்து 6 முதல் 9 வரை படிக்கும் மாணவர்களிடம் இதுபற்றிக் கூறினோம். 'நம்மால் பெரிய மரங்களை அழிக்க முடியாவிட்டாலும் கூட, சின்ன சின்ன கருவேலங்கன்றுகளை அழிக்க வேண்டும். உங்களில் யார் அதிகமான சீமைக்கருவேல மரங்களை அகற்றிக் கொண்டு வருகின்றார்களோ, அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும்' என அறிவித்தோம்" என்கிறார்.

“இப்படி நாங்கள் அறிவித்த அடுத்த நாள், மாணவ-மாணவிகள் ஆர்வமாக கருவேலமரங்களின் செடிகளை வேரோடு பிடுங்கிக் கொண்டுவந்தார்கள். யார் அதிகமாகக் கொண்டுவருகின்றார்கள் என பதிவு செய்து வருகிறோம். அடுத்து ஆர்வத்தோடு, சீமைக்கருவேலமரங்களை அழித்துக் கொண்டுவரும் மாணவர்களுக்கு, சொந்த செலவில், பென்சில், பேனா, டிசர்ட், பவுச் என வாங்கிக்கொடுக்க ஆரமித்தோம். இந்த முயற்சிக்கு சக ஆசிரியர்களான, ராஜசேகரன், சிவக்குமார், சார்லஸ் மைக்கேல்ராஜ், பவானி, சாந்தி, முனியசுவாமி, அழகு சுப்பிரமணியன்  என அனைவரும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக்கொண்டார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து சென்றோம். அப்போதுதான் சீமைக்கருவேல செடிகளை அழிப்பதோடு மட்டுமில்லாமல் அடுத்து  என்ன பண்ணுவது என திட்டமிட்டோம்.

அப்போதுதான் விதைப்பந்துகள் குறித்த சிந்தனை வந்தது. எங்கள் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சார்லஸ் மைக்கேல்ராஜ், கடந்த இரண்டுவருடங்களாக 'விதைக்கு உயிர் கொடுப்போம் திட்டம்' எனும் பெயரில் விதைகளை, சாணத்துக்குள் வைத்து விதைப்பந்துகளை உருவாக்கி  5 லட்சத்துக்கும் மேற்பட்ட விதைகளை தமிழகம் முழுவதும் விதைத்து வருகின்றார். அவரின் உதவியோடு, மாணவர்களுக்கு விதைப்பந்துகளைக் கொடுத்து, சீமைக்கருவேலம் மரங்களை அழிப்பதோடு மட்டுமில்லாமல் விதைப்பந்துகளையும் வீசிவிட்டு வரச்சொன்னோம்.

இப்போது மாணவர்கள், சீமைக்கருவேல மரக்கன்றுகளை அழிக்கும் கையோடு, விதைப்பந்துகளையும் தூவிவிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 1.46 லட்சம் மரங்களை அழித்திருக்கும் மாணவர்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான விதை பந்துகளை வீசியிருக்கிறார்கள். அதில் பாதி வளர்ந்தாலே போதும். விதைப்பந்துகளை, மரக்கன்றுகளைப்போல நடத்தேவையில்லை; குழி வெட்ட வேண்டியதில்லை; விதைகள் பருவ மழைக்கு முன்பாக நடப்படுவதால் 3 மாதங்களில் முளைத்து விடும். மீதக் காலங்களில் அவ்வப்போது பொழியும் மழையால் வளர ஆரம்பிக்கும்" எனப் பெருமையுடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் துரைராஜ்.

இவர்களின் பணிகளைக் கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நேரில் அழைத்து வாழ்த்தியிருக்கிறார். அதோடு பள்ளிக்கல்வி செயலாளர், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் தனித்தனியே தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியுள்ளனர். 

"நல்ல விஷயங்களுக்கு நிறையபேர் துணையாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையோடு பணியாற்றுகிறோம்" என்கிறார் தலைமை ஆசிரியர். 

இதுபற்றி பேசிய 6ம் வகுப்பு மாணவன் கிஷோர் ராஜ், “எங்க சார், சீமைக்கருவேலம் மரத்தோட தீமையை பத்தி எங்ககிட்ட சொன்னதோடு, 'இப்பவே நாம குடிக்கத் தண்ணியில்லாமல் கஷ்டப்படுறோம். இந்த மரங்களை அழிக்கலைன்னா இதைவிட மோசமாக கஷ்டப்படுவோம்'னு சொன்னாரு. அன்னைக்குப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும், அப்படியே இதை அப்பாக்கிட்ட சொன்னேன். நல்ல விஷயம் செய்யுடான்னு சொல்லிட்டாரு. அடுத்தநாள், சுமார் 2,000 செடியோட பள்ளிக்கூடத்துக்கு போனேன். சாருங்க, எல்லாத்துக்கும் மத்தியில் எனக்கு பேனா கொடுத்தாங்க. ரொம்பப் பெருமையாக இருந்துச்சு. 

அடுத்து  9-ம் வகுப்பு படிக்கும் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா, தீபிகா, ராகவி, யுவஸ்ரீ என நிறையபேர் செடிகள் பறிச்சாங்க. அவங்களை விட அதிகமாகச் செடிகளை பறிக்கணும்னு நினைத்து, பறிச்சேன். இதுவரை 10,000-க்கும் அதிகமான சீமைக் கருவேலமரச் செடிகளை பறித்து இருக்கிறேன் சார். ஸ்கூல்லயே அதிகமான செடிகளைப் பறித்து டீசர்ட், பவுச் பரிசு வாங்கியிருக்கேன். நாளைக்கு நமக்கு குடிக்க தண்ணி கிடைக்கணும்னா இந்த மரங்களை அழிக்கணும் சார்” அதனாலதான், படிக்கிற நேரங்கள் போக மற்ற நேரங்களில் சீமைக்கருவேல மரங்களை அழிக்கிறேன்" என்கிறான் மழலை மொழியில்.

நாளைய சமூகத்திற்கு கேடு செய்யும் சீமைக்கருவேலச் செடிகள், இங்கே பிடுங்கப்படுகின்றன; நாளைய தலைமுறையான குழந்தைகளிடம் நல்லெண்ணங்கள் விதைக்கப்படுகின்றன. இந்த அரசுப்பள்ளி நம் சமூகத்திற்கு கற்றுத்தரும் பாடம் வியப்பானது!

- சி.ய.ஆனந்தகுமார் 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்.