Published:Updated:

50 மாணவர்கள்... 10 ஆயிரம் விதைப் பந்துகள்... அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி முயற்சி!

50 மாணவர்கள்... 10 ஆயிரம் விதைப் பந்துகள்... அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி முயற்சி!
50 மாணவர்கள்... 10 ஆயிரம் விதைப் பந்துகள்... அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி முயற்சி!

50 மாணவர்கள்... 10 ஆயிரம் விதைப் பந்துகள்... அரசுப் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சி முயற்சி!

“பந்து என்று சொன்னால், முன்னாடி எல்லாம் நாங்க விளையாடுற கிரிக்கெட் பந்துதான் ஞாபகத்துக்கு வரும். இப்போ, விதைப் பந்துதான் முதல்ல நினைவுக்கு வருது" என்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் சுந்தரமூர்த்தி, தன் கையில் இருக்கும் விதைப் பந்தை கிரிக்கெட்டில் பௌலிங்க் போடுவதுபோல செய்துகாட்டினான்.

தருமபுரியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் வழியில் இருக்கிறது, பள்ளப்பட்டி கிராமம். அங்கே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கையே ஐம்பதுதான். ஆனால், தங்கள் பள்ளியை முயற்சியால் முன்னோடிப் பள்ளியாக மாற்றி, எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார்கள். இரண்டே வாரத்தில், 10 ஆயிரம் விதைப் பந்துகள் தயார்செய்து அசத்திவிட்டார்கள். மாவட்டத்தின் கல்வி அதிகாரிகள், இந்தப் பள்ளியைப் பாராட்டு மழையால் நனைத்து வருகின்றனர்.

"விதைப் பந்து எப்படி ரெடி பண்றது தெரியுமா?" என்று ஆர்வமுடன் முன்வந்தார் எட்டாம் வகுப்பு மாணவி, சி.விமலி. ''தெரியலையே... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்' என்றோம்.

"முதலில் களிமண் அல்லது செம்மண்ணை, தூசு இல்லாமல் எடுத்துக்கணும். அதோடு, பசுஞ்சாணம், இயற்கை உரம் இரண்டையும் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் கலந்து பிசையணும். அதைக் கையில் எடுத்துகிட்டு, ஒரு விதையை நடுவில் வைத்து, எலுமிச்சம்பழம் அளவுக்கு உருட்டணும். அழகான பந்து மாதிரி ஆகிடும். அதை, அன்றைக்கு முழுக்க நிழலிலேயே காயவைக்கணும். அடுத்த நாள், வெயிலில் காயவைக்கணும். அப்போதான் உருண்டையில் வெடிப்பு விழாமல் இருக்கும். இதுதான் விதைப் பந்து செய்ற விதம்" என்று தன் சொற்களாலே விதைப் பந்தை கண் முன் உருவாக்கிக்காட்டினார் விமலி.

"இந்த முயற்சிக்கு வித்திட்டது, எஃப்.ஏ செயல்பாடுதான் என்றால் நம்பமுடிகிறதா?" என்ற கேள்வியோடு பேச ஆரம்பித்தார், ஆசிரியர் குணசேகரன். இவர்தான் மாணவர்களின் விதைப் பந்து முயற்சிக்கு காரணகர்த்தா. சுட்டி விகடன் எஃப் ஏ பக்கங்களில் தொடர்ந்து பங்களித்து வருபவர்.

"சுற்றுச்சூழல் பற்றிய பாடத்துக்கு, விதைப் பந்து செய்வதற்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றுத்தந்தேன். பத்தோ, இருபதோ விதைப் பந்துகளைச் செய்துவருவார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், அடுத்த நாளே 500 விதைப் பந்துகளைத் தயார்செய்து வந்திருந்தனர். அதனால் உற்சாகமாகி, ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களையும் செய்யவைத்தேன். நான் கனவிலும் எதிர்பார்த்திராத

அளவுக்கு மாணவர்கள் தன்னார்வத்தோடு ஆயிரக்கணக்கில் விதைப் பந்துகளைத் தயார்செய்து வந்தார்கள். இந்த விஷயத்தை நம் பள்ளியைக் கடந்தும் வெளியே கொண்டுசெல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதற்காக, மாணவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தந்ததும், பத்தாயிரட்துக்கும் அதிகமான விதைப் பந்துகளைத் தயார்செய்துவிட்டனர்.

விதைப் பந்துகளைப் பொதுமக்களிடம் தரலாம் என மாணவர்களிடம் கூறினேன். ஒரு மாணவி, இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றையும் தரலாம் என்ற யோசனையைச் சொன்னார். உடனே அதற்கான வாசகங்களை எழுதி, அச்சடிக்கத் தந்தேன். தருமபுரி பேருந்து நிலையத்துக்குச் சென்று, அங்கே வருபவர்களிடம் விதைப் பந்துகளைத் தந்தோம். ஒகேனக்கல் சுற்றுலா செல்லுபவர்களிடமும் இவற்றைக் கொடுத்தோம்" என்கிறார் ஆசிரியர் குணசேகரன்.

"விதைப் பந்துகளை எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லவே இல்லையே?" என்றதும், ஆசிரியரை முந்திக்கொண்டு பேசினான் ச.அஸ்வின் என்ற மாணவன்.

"நாம பஸ்ல அல்லது டூ வீலர்ல போகும்போது, சாலை ஓரங்களில் இந்த விதைப் பந்துகளை வீசினால் போதும். ஆறு மாதங்கள் வரை இதில் உள்ள விதை முளைப்பதற்குத் தயாராக இருக்கும். அதற்குள் நிச்சயம் மழை பெய்யும் இல்லையா? அப்போது விதைகள் முளைச்சுடும். நான் சைக்கிளில்தான் ஸ்கூலுக்கு வருவேன். அப்படி வரும்போது தினமும் ஒரு விதைப் பந்தை வீசுவேன்" என்றான்.

அஸ்வினைப் பாராட்டிய ஆசிரியர் குணசேகரன், "அஸ்வின் மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவரும் இந்த முயற்சியில் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால்தான் பேருந்தில் துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பதோடு, பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில்களை அளிக்கின்றனர். வழக்கமாக, செடி நடுவதைத்தானே செய்வீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். இயற்கையைப் பாதுகாக்க பல வழிகளில் இதுவும் ஒரு வழி. விதைப் பந்தில் என்னவிதமான விதைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் கேட்கிறார்கள். சென்ற ஆண்டு வீசிய புயல்காற்றில், வெளிநாட்டு மர வகைகளே அதிகம் விழுந்தன. நம் நாட்டு மரங்களான வேம்பு, புளி, பூவரசு ஆகியவை உறுதியாக நின்றன. அதனால், நம் நாட்டு மரங்களின் விதைகளையே விதைப் பந்துகளில் வைத்திருக்கிறோம்'' என்றார்.

தங்களின் முயற்சி சரியாகவும் முழுமையாகவும் சென்று சேர வேண்டும் என, துண்டுப் பிரசுரத்திலும் ஒரு புதுமை செய்திருக்கிறார்கள். பேருந்தில் நம்மிடம் ஏதேனும் ஒரு பிரசுரத் தாளைத் தந்தால் என்ன செய்வோம்? படித்துவிட்டு, கிழித்துவிடுவோம். இதை உணர்ந்த மாணவர்கள், தாங்கள் தயாரித்த பிரசுரத்தில்..

* இதைப் படித்துமுடித்ததும் வழக்கம்போல கசக்கி தூக்கி எறியாமல் அடுத்து யாருக்கேனும் கொடுத்து, முயற்சியைத் தொடரச் சொல்லுங்கள். ஏனென்றால், இந்தக் காகிதத்தை மீண்டும் தயாரிக்க, மரம் வெட்டவேண்டி வரும். இந்த நோட்டீஸ், குறைந்தது 50 நபர்களையாவது சென்றடைந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்"

எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்தைக் கவனித்துச் செயல்படுகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள், இயற்கையைப் பாதுகாக்கும் உறுதியோடு களம் இறங்கியிருப்பது ஆரோக்கியமானது. சுற்றுச்சூழலை நேசிக்கும் பண்பு, இளம் தலைமுறையினரிடம் வேர்கொண்டிருப்பதை மனம் திறந்து பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமை.

- வி.எஸ்.சரவணன்.

அடுத்த கட்டுரைக்கு