Published:Updated:

உலகின் முதல் பிளாஸ்டிக் பொருள் இங்குதான் எங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது..!

கார்க்கிபவா
உலகின் முதல் பிளாஸ்டிக் பொருள் இங்குதான் எங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது..!
உலகின் முதல் பிளாஸ்டிக் பொருள் இங்குதான் எங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது..!

ஃபேஸ்புக் இல்லாத ஒரு நாளை நம்மால் கடத்த முடியும். பைக் எடுக்காமல், சினிமா பார்க்காமல், கெட்ட வார்த்தை பேசாமல்… இன்னும் பல விஷயங்கள் இல்லாமல் ஒரு நாள் நம்மால் வாழ முடியும். பிளாஸ்டிக்கே பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள்.

காலையில் நாம் பல் விளக்கும் பிரஷ்ஷில் தொடங்குங்கள். இரவில் மொபைல் சார்ஜ் போடுவது வரை யோசியுங்கள். பிளாஸ்டிக் இல்லாத ஒரு நாள் சாத்தியமா?

அப்படி ஏன் இருக்க வேண்டும்? எப்போதுமே பிளாஸ்டிக் இந்த உலகில் இருந்து கொண்டுதானே இருக்கிறது என்ற சந்தேகம் வரலாம். நிச்சயம் இல்லை. பிளாஸ்டிக்கே இல்லாத உலகில் பிறந்த சிலர் இன்னமும் இந்த பூமியில் உயிரோடுதான் இருக்கிறார்கள். பல லட்சம் வயதான பூமியில், பல ஆயிரம் ஆண்டுகள் மனிதர் வாழும் பூமியில், பிளாஸ்டிக் பிறந்தது இப்போதுதான். ஆனால், அது வாழப்போவது எப்போதும்தான்.

ஆமாம். முண்டாசுக் கவிஞன் பாரதி பயன்படுத்திய பிளாஸ்டிக் சீப்பு இன்னமும் இந்த பூமியில்தான் இருக்கும். 

எப்படி வந்தது இந்த பிளாஸ்டிக்?

இதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமான ஒரு கதையில், பிளாஸ்டிக்குக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருள் யானைத் தந்தம். 19-ம் ஆண்டு பிற்பகுதியில், பில்லியர்ட்ஸ் விளையாட தந்தத்தால் ஆன பந்துகளையே பயன்படுத்திவந்தார்கள். அதற்கு மட்டுமல்ல; பொதுவாக தந்தம் பயன்படுத்துவது அதிகமாக இருந்த காலம். இப்படியே போனால், இருக்கின்ற யானைகள் போதாது என நினைத்தார்கள். அதற்கு மாற்றுப்பொருள் ஒன்று தேவை என்ற நிலை வந்தது. அப்போது கண்டுபிடிக்கப்பட்டது தான்… பிளாஸ்டிக்.

பிளாஸ்டிக் ஒன்றும் தேக்கு மரமில்லை.அது வளர அதிக காலம் தேவைப்படவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே பிளாஸ்டிக் சீப்புகள் மலிவாக கிடைத்தன. சட்டை பொத்தான்கள் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டன. ஆனால், அப்போதும் பிளாஸ்டிக் கேரி பேகுகள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறையவில்லை. பின், எப்போது அப்படி ஆனது தெரியுமா? இரண்டாம் உலகப்போரின் போதுதான்.

உலகப்போர் நடந்த சமயத்தில் தான் பிளாஸ்டிக்கின் தேவையும் அதிகரித்தது. தயாரிப்பும் அதிகரித்தது.  மிலிட்டிரி பொருட்கள் பல, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டன. விலை மலிவு, தயாரிக்க எளிது என பல காரணங்கள் அதற்கு இருந்தன. போரின் முடிவில், பிளாஸ்டிக் நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது. ஆனால் தேவை? அதனால் மிலிட்டிரி பேரல் செய்த பிளாஸ்டிக் நிறுவனங்கள் பார்பி பொம்மை செய்ய ஆரம்பித்தன. தங்கள் லாபத்தை மெயிண்டெயின் செய்ய, பிளாஸ்டிக்கை எல்லா ஏரியாக்களிலும் நுழைத்தன.

எந்த ஒரு விஷயம் பிரச்னைக்கு தீர்வாக ஆனதோ, அதே விஷயம் 100 ஆண்டுகளில் பிரச்னை ஆனது. பாரதி பயன்படுத்திய சீப்பு மட்டுமல்ல… இதுவரை தயாரிக்கப்பட்ட எல்லா பிளாஸ்டிக்குமே இன்னமும் இருக்கின்றன. இன்னும் 500 ஆண்டுகளாவது அது அப்படியேதான் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் அளவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இப்போதெல்லாம் பறவைகள் கூட தனது கூடுகளை பிளாஸ்டிக் கொண்டுதான் கட்டுகின்றனவாம்.  பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் சுற்றும் பிளாஸ்டிக் கவர்களின் அளவு, பிரான்ஸ் நாட்டை விடவும் பெரிது என்கிறார்கள்.

நிச்சயம் நம்மால் எதாவது செய்ய முடியும். ஒருநாள் முழுவதும் பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லைதான். ஆனால், கடைக்கு சென்றால் கையில் துணிப்பை எடுத்து செல்ல முடியும். பிளாஸ்டிக்கால் ஆன தட்டுக்கு பதில் வேறு ஒரு பொருளால் ஆன தட்டை வாங்க முடியும். கண்ட இடத்தில் பிளாஸ்டிக் பைகளை தூக்கிப்போடாமல் இருக்க முடியும். நாம் செய்யும் இந்த சின்ன சின்ன விஷயங்கள் நமக்கு மட்டுமல்ல; நாம் வசிக்கும் தெருவுக்கு மட்டுமல்ல; நாம் வாழும் இந்த பூமிக்கே மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.

செய்வீர்களா?

- கார்க்கிபவா