Published:Updated:

40 ஏக்கரில் இயற்கைப் பழப் பண்ணை !

"பராமரிப்பு, தண்ணீர், பணச்செலவு...எல்லாமே குறைவு...வருமானமோ எப்போதுமே நிறைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என்.சுவாமிநாதன்,
இ.கார்த்திகேயன்

 பளிச்... பளிச்...

தொழுவுரம் மட்டுமே போதும்.
தொடர் வருமானம்.

''குறைவான பராமரிப்பு, குறைவான தண்ணீர், குறைவான சாகுபடிச் செலவு... ஆனால், வருமானம் மட்டும் நிறைவாக இருக்கக்கூடிய பயிர்கள் வேண்டுமா... நெல்லி, சப்போட்டா, மா, கொய்யா, எலுமிச்சை போன்ற தோட்டக்கலைப் பயிர்களைக் கையில் எடுங்கள்'' என்கிறார் நாற்பது ஏக்கரில் மா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, தென்னை என சாகுபடி செய்து வரும் தென்னம்பட்டி முருகேசன்!

40 ஏக்கரில் இயற்கைப் பழப் பண்ணை !
##~##

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரிலிருந்து மணியாச்சி போகும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தென்னம்பட்டி. பிரதான சாலையிலிருந்து விலகி ஜிலுஜிலுவென வீசும் காற்றோடு சிறிது தூரம் பயணித்தால் வருகிறது, முருகேசனின் பண்ணை. ஒற்றைக்காதில் கம்மல், முறுக்கிவிட்ட மீசையோடு பண்ணையார் தோரணையில் அமர்ந்திருந்த முருகேசனை சந்தித்தோம்.  

மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கியவர், 'பாரம்பரியமான விவசாயக் குடும்பம்தான் எங்களுது. சின்ன வயசுலருந்தே அப்பா கூட தோட்டத்துக்குப் போய் விவசாயத்தைப் பாத்துக்குவேன். மொத்தம் நாற்பது ஏக்கர் செம்மண் பூமி இருக்கு. ஆரம்பத்துல மிளகாய், கத்திரி, வெண்டை, தக்காளி, சிறுதானியங்கள்னு குறுகிய காலப் பயிர்களைத்தான் சாகுபடி செஞ்சோம். அப்பறம் வேலையாள் பிரச்னை, தண்ணி பிரச்னையால மரப்பயிர் சாகுபடிக்கு மாறிட்டேன்.

ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். பூமி சூடாகுறது, ஓசோன் ஓட்டைனு சில விஷயங்களக் கேள்விப்பட்டதும்... இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். அஞ்சு வருஷமா முழுக்க இயற்கை விவசாயம்தான்'' என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டவர்,

பூச்சி, நோய் தாக்குதல் இல்லை!

''இப்போ 10 ஏக்கர்ல நாட்டுரகக் கொய்யா; 15 ஏக்கர்ல என்.ஏ.-7, காஞ்சன், கிருஷ்ணா, பி.கே.எம்.-1, பி.கே.எம்.-2, பி.எஸ்.ஆர்னு எல்லா ரகங்கள்லயும் நெல்லி; 5 ஏக்கர்ல பி.கே.எம்.-1 ரக சப்போட்டா; 5 ஏக்கர்ல அல்போன்சா, காலப்பாடு, செந்தூரா, நீலம், இமாம்பசந்த்னு பல ரகங்கள்ல மா, 5 ஏக்கர்ல நாட்டு ரக எலுமிச்சை இருக்கு. வரப்போரமா தென்னை வெச்சிருக்கேன். முழுக்க சொட்டு நீர் போட்டிருக்கேன். எல்லா பயிர்களுக்கும் பராமரிப்பு ஒண்ணுதான். சோதனைக்காக கொஞ்சம் சாத்துக்குடியையும் நடவு செஞ்சிருக்கேன்.

40 ஏக்கரில் இயற்கைப் பழப் பண்ணை !

எலுமிச்சை நட்டு ரெண்டரை வருஷம் ஆச்சு. மா, சப்போட்டா நட்டு மூணு வருஷம் ஆச்சு. கொய்யா, நெல்லி... நாலு வருஷம் ஆச்சு. இயற்கைக்கு மாறினதுக்கு அப்பறம் உடை மரமா இருந்த காட்டு பூமி... இப்போ சொர்க்கமா மாறியிருக்கு. ஒரு சொட்டு ரசாயன உரம்கூட தோட்டத்துக்குள்ள வந்துடக் கூடாதுனு கவனமா இருக்கறதாலயோ... என்னவோ... என் தோட்டத்துல பூச்சி, நோய்த் தாக்குதல் சுத்தமா இல்லை'' என்ற முருகேசன், மரப்பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

மரப்பயிர்களுக்கு புரட்டாசிப் பட்டம்!

''மரப்பயிர்களை நடவு செய்ய புரட்டாசி மாதம் ஏற்றது. சட்டிக் கலப்பையால் ஒரு உழவு செய்து நிலத்தை 30 நாட்கள் ஆறவிட வேண்டும். பிறகு, ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை டில்லர் மூலம் உழ வேண்டும். எந்தப் பயிராக இருந்தாலும், இரண்டரை அடி சதுரம் இரண்டரை அடி ஆழத்துக்கு குழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இடைவெளியில் இருக்குது, கூடுதல் மகசூல்!

எலுமிச்சைக்கும் நெல்லிக்கும் 21 அடி இடைவெளியில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கன்றுகள் தேவைப்படும். கொய்யாவுக்கு 18 அடி இடைவெளி தேவை. ஏக்கருக்கு 130 கன்றுகள் வரை தேவைப்படும். மாவுக்கு 32 அடி இடைவெளி தேவை. ஏக்கருக்கு 42 கன்றுகள் தேவைப்படும்.   சப்போட்டாவுக்கு 20 அடி இடைவெளி தேவை. ஏக்கருக்கு 110 கன்றுகள் தேவைப்படும்.  

இந்த இடைவெளிகள் வழக்கத்தை விடக் கூடுதலானவைதான். ஆனால், அதிக இடைவெளி கொடுத்து பயிர்களை நடவு செய்யும்போது நல்ல பலன் கிடைக்கிறது. அந்த இடைவெளியில்தான் நமது வருமானமே அடங்கியிருக்கிறது என்றுகூட சொல்லலாம். அதிக இடைவெளி விடும்போது போதுமான சூரிய ஒளி கிடைப்பதோடு, பக்கக் கிளைகளும் அதிகமாக வெடித்து வரும். அதன் மூலம் மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

வேர்ப்புழுவுக்குக்  கற்றாழை!

தேவையான அளவு இடைவெளியில் குழிகளை எடுத்த பிறகு, ஒவ்வொரு குழியிலும் 100 கிலோ களிமண், 25 கிலோ தொழுவுரம், சிறு சிறு துண்டுகளாக வெட்டிய இரண்டு சோற்றுக் கற்றாழைச் செடிகள் ஆகியவற்றைப் போட்டு, மேல் மண்ணால் குழியை மூடி விட வேண்டும். சோற்றுக் கற்றாழையைப் போடுவதால் வேர்ப்பூச்சிகள் தாக்குவதில்லை.

ஆண்டுக்கொரு முறை தொழுவுரம்!

பிறகு, சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொண்டு பத்து நாட்கள் தினமும் குழியை நனைய விட வேண்டும். பிறகு, குழியின் மத்தியில் ஒரு அடி ஆழத்துக்குப் பறித்து, கன்றுகளை நடவு செய்து, மேல்மண்ணைக் கொண்டு மூடி, வட்டப்பாத்தி அமைக்க வேண்டும். நடவு செய்த ஆறாவது மாதத்தில் ஒவ்வொரு கன்றுக்கும் இரண்டு கிலோ தொழுவுரம் இட வேண்டும். தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை தொழுவுரம் கொடுத்து வர வேண்டும். மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து, தொழுவுரத்தின் அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நெல்லியில் இரண்டு முறை மகசூல்!

நடவு செய்த நான்காவது மாதம் நெல்லி பூக்கத் தொடங்கும். முதல் மூன்று ஆண்டுகள் வரை அந்தப் பூக்களை உதிர்த்து விட வேண்டும். அதன் பிறகு காய்க்க விட்டால் அதிக மகசூல் கிடைப்பதோடு, காய்களும் ருசியாக இருக்கும். நெல்லியில் வெயில் காலங்களில் 'எருக்களைப் பூச்சி’ என்ற ஒரு வகை பூச்சிகளின் தாக்குதல் வரலாம். அப்போது மரத்தின் அடிப்பாகம் வெண்மையாக மாறிவிடும். அந்த மரங்களின் மீது 13 லிட்டர் தண்ணீரில், 50 மில்லி வேப்பெண்ணெயைக் கலந்து தெளிக்க வேண்டும். அதற்குக் கட்டுப்படாவிட்டால் 13 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் மைதா மாவு, 25 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். நெல்லியில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஒரு முறை; ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம்.

40 ஏக்கரில் இயற்கைப் பழப் பண்ணை !

கொய்யாவில் ஆண்டு முழுவதும் மகசூல்!

கொய்யா, நடவு செய்த இரண்டாவது ஆண்டில் இருந்து பலன் கொடுக்கத் தொடங்கும். ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் மகசூல் கிடைக்கும். வளமான மண்ணாக இருந்தால், ஆண்டு முழுவதும்கூட மகசூல் எடுக்கலாம். ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் பக்கக் கிளைகளைக் கையால் கிள்ளி விடவேண்டும்.

சப்போட்டா மூன்றாவது ஆண்டிலிருந்து காய்க்கத் தொடங்கும். அதேபோல மாமரமும் மூன்றாம் ஆண்டிலிருந்துதான் காய்க்கத் தொடங்கும். நாட்டு எலுமிச்சையில் இரண்டாவது ஆண்டிலிருந்தே மகசூல் கிடைக்கத் தொடங்கினாலும்... ஐந்தாம் ஆண்டுக்கு மேல்தான் நல்ல மகசூல் கிடைக்கும்.

நெல்லி வருமானமே பராமரிப்புக்கு போதும்!

சாகுபடிப் பாடம் முடித்த முருகேசன் வருமானம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

''கொய்யாவுல ஒரு மரத்துல வருஷத்துக்கு 100 கிலோ காய்க்கு மேல கிடைக்குது. பத்து ஏக்கர்ல இருக்கற 1,200 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 120 டன் வரை காய் கிடைக்குது. குறைஞ்சபட்சமா கிலோவுக்கு 6 ரூபாய் விலை கிடைக்குது. அதன் மூலமா வருஷத்துக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.  

நெல்லியில போன வருஷம் 25 டன் மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம், வருஷத்துக்கு ரெண்டரை லட்ச ரூபாய்னு குத்தகைக்கு விட்டுட்டேன். சப்போட்டாவில் வருஷத்துக்கு 5 டன் வரை மகசூல் கிடைக்கும். எப்படியும் சராசரியா கிலோவுக்கு 5 ரூபாய் விலை கிடைச்சிடுது.

மா, எலுமிச்சை ரெண்டும் இப்பதான் கொஞ்சம், கொஞ்சமா காய்க்க ஆரம்பிச்சுருக்கு. நெல்லி கொடுக்குற வருமானமே வயல் பராமரிப்புக்கும், வேலையாள் சம்பளத்துக்கும் போதுமானதா இருக்கு. மீதி கிடைக்கிறது எல்லாமே லாபம்தான். அது தவிர மற்ற வருமானம் மொத்தமும் லாபம்தான். இப்போதைக்கு 40 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 9 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. எல்லாம் காய்க்க ஆரம்பிச்சுடுச்சுனா... கண்டிப்பா இதைப் போல ரெண்டு மடங்கு வருமானம் கிடைக்கும்'' என்றார், உற்சாகமாக.

படங்கள்: ஏ. சிதம்பரம்
தொடர்புக்கு முருகேசன், அலைபேசி: 98421-46454.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு