Published:Updated:

சமவெளியிலும் சளைக்காமல் வளரும் மிளகு!

கன்றுகள்... ஆலோசனைகள்... பயிற்சிகள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எஸ்.ராஜாசெல்லம்

இந்திய மிளகுக்கு... உலக மரியாதை உண்டு.  உணவுக்கு சுவையூட்டும் பொருளாக மட்டுமல்லாமல், மருந்தாகவும் பயன் தரக்கூடியது என்பதுதான் காரணம்!

மலைப்பிரதேசங்களில் ஆண்டு முழுக்க நிழல் மற்றும் குளுமை இருக்கும் இடங்களில், உயர்ந்த மரங்களின்மீது படர்ந்தவாறு வளர்வதுதான் மிளகின் இயல்பு. அதனால்தான் பெரும்பாலும் மலைப்பகுதி எஸ்டேட்களில் மிளகு பயிர் செய்யப்படுகிறது.

சமவெளியிலும் சளைக்காமல் வளரும் மிளகு!
##~##

நிழல் மற்றும் குளுமையானச் சூழல் இருந்தால்... சமவெளியிலும்கூட மிளகு சாகுபடி செய்யமுடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் ஆங்காங்கே மிளகு சாகுபடி நடக்கிறது. என்றாலும், அது சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக இல்லை. அதற்குக் காரணம், மிளகுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? என்ன விலை? எப்படி பயிரிடுவது? நன்றாக வளருமா? என்பது போன்ற சந்தேகங்கள், விவசாயிகளிடம் நிறைந்திருப்பதுதான்.

அதை நிவர்த்தி செய்யும்விதமாக நம்மிடம் பேசினார், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் அருள்மொழியான்.

''சமவெளிப் பகுதியில் விளையும் நெல்லை, தொடர் முயற்சிகளின் விளைவாக மலைப்பகுதியிலும் விளைவிக்க முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கின்றனர். அப்படியென்றால்... மலையில் விளையும் மிளகை மட்டும் ஏன் சமவெளியில் விளைவிக்க முடியாது? மிளகு, வெற்றிலை இரண்டுமே 'பைபரேஸி’ குடும்பத்தைச் சேர்ந்தத் தாவரங்கள். இரண்டையும் 'பங்காளி’ என்றே சொல்லலாம்! வெற்றிலை, சமவெளியில் சக்கைப் போடு போடுகிறபோது, மிளகு விளையாதா? என்கிற கேள்விகள் எங்களுக்கு எழவே, அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

சமவெளியிலும் சளைக்காமல் வளரும் மிளகு!

ஆண்டு முழுக்க நிழல் கிடைக்கும் இடம் என்றால்... அது தென்னை மற்றும் பாக்கு தோப்புகள்தான். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தென்னை மற்றும் பாக்கு சாகுபடி நடக்கிறது. இந்தத் தோப்புகளில் சொட்டுநீர் அல்லது வாய்க்கால் பாசனம் மூலம் தொடர்ந்து ஈரப்பதமும் காக்கப்படுகிறது. அதனால், பட்டுக்கோட்டை-பேராவூரணி பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டோம். அதில் நல்ல பலன் கிடைத்தது. அதனால்தான் தென்னை விவசாயிகளுக்கு உபரி வருமானத்துக்காக மிளகு பயிரிட பரிந்துரை செய்கிறோம்.

தென்னை என்றால், ஒரு மரத்துக்கு இரு கன்றுகள் வீதமும்... பாக்கு என்றால் ஒரு மரத்துக்கு ஒரு கன்று வீதமும் மிளகை நடவு செய்ய வேண்டும். மிளகுக் கொடிகள் இந்த மரங்களைப் பற்றிக் கொண்டு வளர்ந்துவிடும்.

தென்னையின் அடிப்பகுதியில் வேர்கள் இறுக்கமாக இருக்கும் என்பதால், மரத்திலிருந்து இரண்டரை முதல் மூன்று அடி தூரம் தள்ளித்தான் மிளகுக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதேசமயம் கொடிகள் மரத்தை எட்டிப் பிடிக்க, ஏதுவாக சிறு குச்சிகளை அருகில் ஊன்றி வைக்க வேண்டும். கொடிகள் தென்னை மரத்தில் படர ஆரம்பித்தபின் அவற்றை எடுத்துவிட்டு, தரையோடு தரையாகக் கொடியை வைத்து, மண்ணால் மூடி மரத்துக்கு அருகில் இருந்தே கொடி முளைத்து ஏறுவது போல செய்துவிட வேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் கொடிப்பகுதியில் புதிய வேர்கள் உருவாகும்.

மிளகுக்கென தனிப் பராமரிப்பு, பாசனம், உரம் என எதுவும் தேவையில்லை. தென்னைக்குப் பாய்ச்சும் நீரும், இடப்படும் உரமுமே போதுமானது. நடவு செய்த ஐந்தாம் ஆண்டில் இருந்து பலன் கிடைக்கத் தொடங்கும். தொடக்கத்தில் ஒரு செடிக்கு 100 கிராம் அளவில் மகசூல் கிடைக்கும். ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, அதிகபட்சம் ஒரு மரத்துக்கு ஒரு கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

சமவெளியிலும் சளைக்காமல் வளரும் மிளகு!

சிறப்பாகப் பராமரித்தால்... மலைப்பிரதேசங்களில் கிடைக்கும் மகசூலில் 80% அளவுக்கு சமவெளியில் எடுக்க முடியும்'' என்ற அருள்மொழியான்,

''ஒரு மிளகுக் கன்று மூன்று ரூபாய் என்று குறைந்த விலையில்  விற்பனை செய்து வருகிறோம். மிளகின் உற்பத்தியைப் பெருக்கவும், சமவெளியிலும் மிளகை விளைவிக்க முடியும் என்பதைக் கண்கூடாக மெய்ப்பிக்கவும்தான் விலையைக் குறைத்து விற்பனை செய்கிறோம். மிளகு சாகுபடி குறித்தப் பயிற்சியையும் வழங்குகிறோம். தொழில்நுட்ப ஆலோசனை தேவைப்படுவர்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்.

இப்போது, தஞ்சாவூர், பொள்ளாச்சி, கரூர், ஈரோடு... ஆகிய பகுதி விவசாயிகள் ஆர்வத்தோடு தென்னை, பாக்குத் தோட்டங்களில் மிளகை நட்டுப் பராமரிக்கிறார்கள். விரைவிலேயே, இது மற்ற விவசாயிகள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும்'' என்றார், நம்பிக்கையுடன்.

ஏற்காடு, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் வழிகாட்டுதல்படி மிளகு சாகுபடி செய்துள்ளவர்களில், இதய சிகிச்சை நிபுணரான டாக்டர். பாலகிருஷ்ணனும் ஒருவர். சேலம் மாவட்டம், கோனேரிப்பட்டியில் உள்ள தன்னுடைய 12 ஏக்கர் பாக்குத் தோட்டத்தில் மிளகுக் கன்றுகளை சமீபத்தில் நடவு செய்துள்ளார். தோட்டத்தைப் பராமரித்து வரும் மேனேஜர் பெருமாள், அதைப் பற்றி நம்மிடம் பேசினார்.

''12 ஏக்கர் பாக்குத் தோட்டத்துல பரவலா 150 தென்னை மரங்களும் இருக்கு. ஒரு பாக்கு மரத்துக்கு ஒரு மிளகுக் கன்று வீதம் எட்டாயிரம் கன்றுகள நட்டிருக்கோம். பாக்கு மரத்தின் அடிப்பகுதியில் இருந்து அரை அடி முதல் ஒரு அடி வரை இடைவெளி விட்டு மிளகுச் செடியை நடணும். ஆத்து ஓரமா எங்க தோட்டம் இருக்கறதால பாசன வசதிக்கு பஞ்சமில்ல. எப்பவுமே ஈரப்பதம் இருக்குற மாதிரி பார்த்துக்குவோம்.

தென்னை, பாக்கு, மிளகுனு எல்லா பயிர்களுக்குமே கோழி எரு, கரும்புச் சக்கை கம்போஸ்ட், தொழுவுரம்தான் போட்டு பராமரிக்கிறோம். இப்போ செடிகள் செழிப்பா வளர்ந்து நல்லாவே கொடி ஏற ஆரம்பிச்சிடுச்சு. நிச்சயமா நல்ல மகசூல் எடுக்க முடியும்னு தோணுது'' என்றார் நம்பிக்கையோடு!

படங்கள்: க. தனசேகரன், எம். விஜயகுமார்

தொடர்புக்கு
ஏற்காடு, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,
தொலைபேசி: 04281-222456.
பெருமாள், அலைபேசி: 93454-13007.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு