Published:Updated:

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு
"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு

"வேலையை விடுறது பறவையின் விடுபடலுக்குச் சமமானது!" - நம்மாழ்வார் வாக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ந்திய மண்ணில், தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதைப் பார்த்துச்சென்றவர்களுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த இடம், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாருக்குத்தான். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள சிற்றூரில் ஏப்ரல், 6-ம் தேதி பிறந்தவர். இன்று நம்மாழ்வாரின் 79-வது பிறந்தநாள். "செலவைக்கூட்டுகிற எந்த ஆராய்ச்சியும், வானம் பார்த்த விவசாயிக்குப் பயன்படாது" என்ற அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எதிராகக் கருத்துக்களை விதைக்கும்போது நம்மாழ்வார் செய்துகொண்டிருந்த பணி 'அரசு வேலை'. 1966-ம் ஆண்டு கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக தனது பணியினைத் தொடங்கியவர். மேற்கண்ட கருத்தை சொன்னது பருத்தி ஆராய்ச்சிக் கூடத்தின் வாராந்திர கூட்டத்தில், அக்கருத்தை ஆண்டு அறிக்கையில் சேர்க்க வேண்டும் என நம்மாழ்வார் வலியுறுத்துகிறார். ஆனால், அக்கருத்தை ஏற்றுக் கொண்ட அவர்களால், ஆண்டு அறிக்கையில் சேர்க்க ஏற்றுக் கொள்ளவில்லை. அக்கருத்தை ஆராய்ச்சி நிலையத்தின் மற்ற அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு காரணம், 'நமது ஆராய்ச்சி சரியில்லை என்று நாமே சொன்னால், இந்த ஆராய்ச்சி நிலையத்தை இழுத்து மூடிவிடுவார்கள். பின்னர் அனைவரும் விரிவாக்கப் பணியாளராக வெயிலில் அலைய வேண்டியதுதான்'. இந்தச் செயலானது மனதளவில் நம்மாழ்வாரை நொறுக்கிப் போடுகிறது.

'எதற்காக இந்தச் செயலை செய்கிறோம் என்ற துளியளவு அக்கறையும் இல்லாமல், வெயிலில் பயணிப்பதற்கு பயந்து பொய்யையே கட்டி அழப்போகின்ற கூட்டத்தில் நாமும் ஒருவனாக இருக்க வேண்டுமா? நம்முடைய நலனுக்காக என்றைக்குச் சமரசம் ஆகிறோமோ... அப்போது இருந்தே தீமையின் திசையில் கால்வைக்கத் தொடங்குகிறோம்' என மனம் வருந்துகிறார். மறுநாள் தன்னுடைய நேரடி உயரதிகாரியான மீனாட்சியின் முன்பாக சென்று அமர்கிறார். அப்போது அவர் சொன்ன ஒரே வார்த்தை 'நான் என் வேலையை விடப் போகிறேன்'. அதற்கு அதிகாரி மீனாட்சி கேட்ட கேள்வி 'வெளீயில போய் என்ன செய்வீர்கள்?' என்பதுதான். அதற்கு நம்மாழ்வார் அப்போது சொன்ன பதில் 'என் உறவினர், நண்பர்கள் நிலத்தில் வேலை செய்வேன்' என்பதுதான். அதன்பிறகு நடைபெற்ற வாதங்களில் உயர் அதிகாரியின் வார்த்தைகள் நம்மாழ்வாரைக் கட்டிப்போடுகின்றன. ஆனால், மேலும் மூன்று ஆண்டுகள் பணியினை தொடர்ந்தவர், 1969-ம் ஆண்டு வேலையை உதறிவிட்டு விடைபெறுகிறார். இதனை நம்மாழ்வார் சொல்லும்போது, "பறவைக்குச் சமமான விடுபடல் அது" என்பார்.

ஒரு விவசாய மாணவனாக, ஆராய்ச்சி நிலைய மேலாளராக நம்மாழ்வார் பயின்ற படிப்பினைகள் ஏராளம். விவசாயம் என்பது எப்படி இருக்க வேண்டும். நாம் அதனை எப்படிக் கையாள வேண்டும். இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது விவசாயம் என்பது உள்ளிட்ட பல கருத்துக்களுக்கு அவர் விடை தெரிந்து வைத்திருந்தார். அந்தப் படிப்பினையும், அங்கு அவர் மேலாளராக மட்டுமல்லாமல், துணை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இவர் காவிரி ஆற்றங்கரையில் முப்போகம் விளைவித்த பெருமையுடைய பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜப்பானிய விவசாயி மற்றும் சிந்தனையாளர் 'மசனோபு ஃபுக்கோக்கா'-வின் இயற்கை விவசாய கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடு முழுவதும் பயணங்கள் மேற்கொண்டவர். நம் நாட்டு வேப்பிலைக்கான காப்புரிமையை ஜெர்மனி சென்று மீட்டு வந்தவர்.

கரூர் மாவட்டத்தில் கருமான்பட்டி என்ற இடத்தில் 'வானகம்' என்ற பண்ணையை அமைத்தார். தன்னுடைய மூன்றாண்டுக் கால செயலால் கரடாக இருந்த நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் நிலமாகவும் பல்லுயிர் வாழும் கானகமாகவும் மாற்றினார். பசுமை விகடன் இதழில் இவர் எழுதிய கருத்துக்கள் மற்றும் தொடர்கள் அதிகமான ரசாயன விவசாயிகளிடம் இயற்கை விவசாய கருத்துக்களை கொண்டுபோய்ச் சேர்த்தது. மரபணுமாற்ற விதைகளுக்கு எதிரான போராட்டம், டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டம் எனப் பல போராட்டங்களை நடத்தி இயற்கை வளத்தைக் காத்த விஞ்ஞானி. இயற்கை விவசாய வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் எனில், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை, 2013-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி, ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. வாழும் காலம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தனது வாழ்வின் முழுப்பகுதியையும் செலவிட்டவர். அவர் மறைந்திருந்தாலும், அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்பதற்குச் சான்று, இன்று அதிகமான விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்குத் திரும்பியிருப்பதுதான். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவர். இயற்கையைக் காத்த, இயற்கை ஜோதியின் பிறந்த நாள் இன்று. 'காலம் கடந்து நிற்கட்டும் இந்த பசுமைப் போராளியின் சரித்திரம்'.

-துரை.நாகராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு