நெல்லியில் இருக்கு... நிறைந்த பலன்!
##~##

பழங்கள் மற்றும் காய்கறிகளின் தரத்தை மேம்படுத்துவது, முருங்கை, வாழை, மாம்பழம் ஆகியவற்றிலிருந்து மதிப்புக்கூட்டும் பொருட்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள், தொழில்நுட்பங்கள் பற்றி பார்த்தோம். அடுத்ததாக நெல்லி பற்றி பார்ப்போம். மனித உடலுக்கு நீடித்த இளமையை வாரி வழங்கும் வல்லமை கொண்டது நெல்லிக்கனி. இது 'கனிகளின் அரசன்’ என்றே அழைக்கப்படுகிறது.

நெல்லிக்கனியின் மகத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய காலத்திலிருந்தே தமிழர்கள் பறைசாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய நிலை..? மற்ற பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் காட்டும் ஆர்வத்தில், சிறு அளவுகூட நெல்லி சாப்பிடுவதில் காட்டுவதில்லை. துவர்ப்பு மற்றும் புளிப்புத் தன்மையோடு இருப்பதால், நெல்லியை பெரும்பாலான மக்கள் முற்றிலுமாக ஒதுக்குகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ தங்கள் உடலுக்கு தாங்களே வஞ்சனை செய்து கொள்கிறார்கள்.  கால்சியம், பாஸ்பரஸ், புரதம், பீட்டாகரோட்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புகள், மாவுச்சத்து, ரிபோஃபிளேவின், தயாமின்... என மனிதர்களின் ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் நெல்லியில் அடங்கியிருக்கின்றன.

நெல்லியில் இருக்கு... நிறைந்த பலன்!

வைட்டமின்-சி மற்றும் டேனின் ஆகியவை இதில் நிறைந்து காணப்படுகின்றன. 'நெல்லிச்சாறை தனியாகவோ, பாகற்காய் சாறு அல்லது தேனோடு கலந்து அருந்தினால்... புற்றுநோய் கட்டுப்படும்’ என்கிறார்கள், மருத்துவர்கள். புற்றுநோயாளிகளுக்கு இதனைப் பரிந்துரை செய்தும் வருகிறார்கள். நெல்லி, ஆயுர்வேத மருத்துவத்திலும் மிகச்சிறந்த பங்கு வகிக்கிறது. நெல்லி சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். செரிமானத் தன்மையும் கூடும். குளிர்ச்சித்தன்மை அதிகமாக இருப்பதால், ரத்தச் சுத்திகரிப்புக்குப் பெருந்துணை புரிகிறது நெல்லி. வைட்டமின்-சி குறைவால் ஏற்படும் 'ஸ்கர்வி' எனும் பல் ஈறு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மையும் நெல்லிக்கு உண்டு.

இத்தனை அற்புதங்கள் அடங்கி இருந்தாலும் கூட, இதன் சுவை ஈர்ப்புடையதாக இல்லாமல் இருப்பதால், இதை சாதாரணமாக சாப்பிட, பெரும்பாலான மக்கள் விருப்பம் காட்டுவதில்லை. இதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால், கண்டிப்பாக விற்பனை வாய்ப்பு வெற்றிகரமாக அமையும்.

நெல்லி ஜாம்!

நெல்லியில் உள்ள துவர்ப்புத் தன்மையைப் போக்குவதற்கு 8 சதவிகித உப்புக் கரைசலில் 2 நாட்கள் வைக்க வேண்டும். பிறகு, 10 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வைத்து எடுக்க வேண்டும். ஆவியில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். கொட்டையை நீக்கிய பிறகு, சதைப்பகுதியை நன்கு மசிய வைத்து கூழாக்க வேண்டும். நெல்லிக் கூழுடன் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு கலந்து காய்ச்ச வேண்டும். சர்க்கரையின் அளவு 68.5 டிகிரி பிரிக்ஸ் அடையும்போது, சூடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். அல்லது கரண்டியில் எடுத்துப் பார்த்து, தாள் போன்ற பதம் வந்ததும் சூடுபடுத்துவதை நிறுத்திவிட வேண்டும். இந்தப் பதத்தில் நெல்லி ஜாம் தயாராகி விடும். இதை, காற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்யலாம்.  

நெல்லியில் இருக்கு... நிறைந்த பலன்!

நெல்லி பவுடர்!

நெல்லியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்தே நெல்லி பவுடர் தயார் செய்து விடலாம். இதனைக் குளிர்ந்த நீரில் கலந்து, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஜூஸாகவும் அருந்தலாம். சாதாரண தண்ணீர் அல்லது பாலில் கலந்தும் அருந்தலாம். இது உடல் சோர்வை நீக்குவதோடு, உடலின் வறட்சித் தன்மையையும் போக்கும். தினமும் 3 கிராம் நெல்லி பவுடருடன் 8 கிராம் முதல் 9 கிராம் நெய் சேர்த்து சாப்பிட்டால், தோல் வியாதிகள் நாளடைவில் குணமாகும்.

நெல்லிக்கனி ஸ்குவாஷ்!

நெல்லிக்கனியை நன்றாகக் கழுவி, 10 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த நெல்லியை குளிர்ந்த நீரில் இட்டு கொட்டைகளை நீக்க வேண்டும். சதை பாகத்தை மின் அரவை இயந்திரத்திலிட்டு அரைத்து, வடிப்பான் மூலம் சாறை வடிகட்டி தனியே வைக்க வேண்டும். தண்ணீர், சர்க்கரை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை கலந்து, சர்க்கரை கரையும் வரை சூடுபடுத்தி, வடிகட்டி... நெல்லிக்கனிச் சாறுடன் நன்கு கலந்து, காற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் நிரப்பினால், நெல்லக்கனி ஸ்குவாஷ் தயார். இதை அருந்தினால், கண் உபாதைகள் நீங்கும். உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

நெல்லியில் இருக்கு... நிறைந்த பலன்!

இஞ்சி கலந்த நெல்லி ஸ்குவாஷ்!

நெல்லிச் சாறுடன் இஞ்சி, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு தயார் செய்து வடிகட்டி, இஞ்சி-நெல்லிச் சாறுடன் கலந்து, காற்று நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்யலாம். இது செரிமானத் தன்மையை அதிகரித்து, பசியைத் தூண்டும். சளி மற்றும் இருமலைக் கட்டுப்படுத்த இது மிகச்சிறந்த மருந்தாகும். குளிர்காலத்தில் இதனை அருந்தினால், உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும்.

தயார் நிலை நெல்லி பானம்!

நெல்லிக்காயை வேக வைத்து, மின் அரவை இயந்திரத்திலிட்டு, அரைத்து, மெல்லியத் துணியில் வடிகட்டி, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையுடன் தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து சூடுபடுத்தி ஆறிய பிறகு, நெல்லிச் சாறு கலந்து, 80 டிகிரி சென்டிகிரேட் அளவு வெப்பநிலையில் 5 நிமிடம் சூடுபடுத்த வேண்டும். இதனை, கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டில்களில் காற்று நீக்கி நிரப்ப வேண்டும். இது நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.

இதே முறையில் நெல்லி-இஞ்சி தயார் நிலை பானமும் தயாரிக்கலாம். நெல்லி சுபாரி, நெல்லி இனிப்பு கேண்டி, நெல்லி ஃபிரிசர்ஸ், நெல்லி மசாலா கேண்டி, நெல்லி இஞ்சி கேண்டி, நெல்லித்தூள் கரன், நெல்லி ஜாம், நெல்லி சாஸ், நெல்லி கண்டா (நெல்லி இனிப்பு மசாலா ஜாம்)... என நெல்லியில் இருந்து இன்னும் ஏராளமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம். இவை அனைத்துமே பல்வேறு நோய்களைத் தீர்க்கக்கூடிய மகத்தான மருத்துவ குணம் கொண்டவை. அதேசமயம் சுவை மிக்கதாகவும் இருப்பதால், மக்களிடம் இவற்றைக் கொண்டு செல்வது மிகவும் எளிது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!    

-மதிப்புக் கூடும்.

 நெல்லியின் வேறு பெயர்கள்!

தமிழ் மற்றும் மலையாளத்தில் நெல்லி என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கூஸ்பெர்ரி, தெலுங்கில் ஆம்லாகாமு, பஞ்சாபியில் அமோல்பால், வங்காளம் மற்றும் ஒரியா மொழியில் ஆம்லா, ஹிந்தியில் ஆன்லா, சமஸ்கிருதத்தில் தாத்ரி, தாத்ரிபாலா, அம்லாக்கி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

நெல்லியில் பனராசி, பிரான்சிஸ், சக்கையா என மூன்று முக்கிய ரகங்கள் உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நரேந்திரா தேவ் வேளாண் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்... நெல்லியில் என்.ஏ-5 (நரேந்திரா ஆன்லா-5), என்.ஏ-6, என்.ஏ.-7, என்.ஏ-10, கிருஷ்ணன், காஞ்சன் என பல புதிய ரகங்களை உருவாக்கியுள்ளது.

குஜராத்தில் பி.எஸ்.ஆர்.-1 என்ற நெல்லி ரகம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல்லி உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத் என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நெல்லி விளைகிறது. மூலிகை சார்ந்த அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் நெல்லி பயன்படுத்தப்படுகிறது.