Published:Updated:

ஓடையில் மிதந்து வந்த ஆபத்து..!

ஓடையில் மிதந்து வந்த ஆபத்து..!

ஓடையில் மிதந்து வந்த ஆபத்து..!

ஓடையில் மிதந்து வந்த ஆபத்து..!

Published:Updated:
##~##

உதவியாளரின் உடல்நல பாதிப்பாலும், ஓய்வில்லாதப் பயணங்களாலும் சின்ன இடைவெளிக்குப் பிறகு, உங்களோடு பேசுகிறேன். என் நெஞ்சுக்கு நெருக்கமான தோழர்கள், பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மோட்ராகி பணியில் எங்களோடு வந்து இணைந்து கொண்ட இன்னொருவர்... ஜான் பிரிட்டோ. பண்ணைப் பணிகள் வழக்கம் போல போய்க் கொண்டிருந்தன. ஒரு நாள் பகல் ஒரு மணிக்கு சேசுராசபுரம் தேவாலயத்தில் இருந்து ஒலிப்பெருக்கி மூலமாக... 'ஊரிலே கொள்ளை, கொலை ஓடி வாங்க’ என அபயக்குரல் கேட்டது. நான், பிரிட்டோ, பெரியநாயகசாமி மூவரும் ஓடினோம். கொஞ்ச நேரத்திலேயே கூட்டமாக மக்கள் திரண்டு விட்டனர். வன இலாகா அதிகாரிகளும், அவர்களுடன் வந்த அடியாட்களும் சிறை பிடிக்கப்பட்டிருந்தார்கள். அது... 'சார்’ விவகாரத்தில் அருள்தந்தை லூர்துசாமியுடன் ஏற்பட்ட மோதலால், சேசுராசபுரம் இளைஞர் மன்றத்துடன் எங்கள் தொடர்பு அறுந்து கிடந்த நேரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த இளைஞர்கள், மன்றத்துக்காக ஒரு குடிசை எழுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த நேரம் பெய்த கனமழையில், ஓடையில் மிதந்து வந்துள்ளது, எட்டடி நீளமுள்ள ஒரு மரத்துண்டு. 'கொட்டகை அமைக்க பயன்படுமே’ என்று அதை கரை சேர்த்திருக்கிறார்கள்.

இதைத் தெரிந்து கொண்டு பணம் பறிக்க நினைத்த ஒரு வனக்காப்பாளர், இளைஞர்களிடம் தண்டம் கேட்டுள்ளார். 'அதை நாங்கள் வெட்டவில்லை. ஆதலால் தண்டம் கொடுக்கத் தேவையில்லை’ என்று இளைஞர்கள் மறுத்துள்ளனர். விரக்தியுடன் சென்ற வனக்காப்பாளர், அடுத்த ஊர்க்காரர் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு மரத்துண்டை எடுத்துச் செல்ல ஒப்புதல் தந்து விட்டார். பக்கத்து ஊர்க்காரர் மரத்துண்டை ஏற்றிச் செல்ல வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 'பக்கத்து ஊர்க்காரர்களைப் பகைக்க வேண்டாம்’ என்று இளைஞர்கள் சொன்னதைத் தொடர்ந்து, மரத்தை எடுக்காமல் சென்றுவிட்டார் அந்த நபர். விவரம் அறிந்த வனக்காப்பாளர் மேலிடத்தில் புகார் செய்ததன் விளைவுதான் அன்றையக் கலவரம்.

ஓடையில் மிதந்து வந்த ஆபத்து..!

ஒரு ரேஞ்சர், இரண்டு வனவர், நான்கு காப்பாளர், இருபது அடியாட்கள் என ஒரு லாரியில் வந்து, கையோடு கொண்டு வந்த கரி மூட்டையை கீழே கொட்டி... கண்ணில் பட்ட எல்லோரையும் அடித்து 'மரத்தை எரித்துக் கரியாக்கியது யார்..?’ என்று கேட்டு லாரியில் ஏற்றியிருக்கிறார்கள். அதைப் பார்த்த ஓர் இளைஞன்தான் தேவாலயத்துக்குள் புகுந்து... 'கொள்ளை, கொலை' என அலறியிருக்கிறான். பதறி ஓடிவந்த அனைவரும் லாரியில் வந்தவர்களை மடக்கிப் பிடித்து சிறை வைத்தார்கள். 'அரசு அலுவலர்களை சிறை வைப்பது அரசாங்கத்தின் கோபத்தைத் தூண்டி விடும்’ என்பதை உணர்ந்த வழிகாட்டிகள், 'சேசுராசபுரத்துக்குள் புகுந்து, வழியில் சென்றவரை எல்லாம் பிடித்து, அடித்து லாரியில் ஏற்றிய குற்றத்தை ஒப்புக் கொள்கிறோம்’ என்று எழுதி, அதிகாரிகளைக் கையப்பமிடச் சொன்னார்கள். அதற்கு, அவர்கள் சம்மதிக்கவில்லை.

ஓடையில் மிதந்து வந்த ஆபத்து..!

நிலைமை விபரீதமாக மாறி விடாமல் இருக்க, மேலிடங்களுக்கு தந்தி கொடுக்க ஏற்பாடானது. முதலமைச்சர், வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வனப் பாதுகாவலர், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்... என அனைவருக்கும் தந்தி கொடுக்கப்பட்டு, 'வன அதிகாரிகள் பகல் பொழுதில் ஊருக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தினர்’ என்ற உண்மை பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆனாலும், உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொழுது போய்விட்டதால், 'லாரி சக்கரத்தில் உள்ள காற்றைப் பிடுங்கி விடுங்கள். அதிகாரிகளுக்கு இங்கேயே சாப்பாடு போடுவோம் அவர்கள் விடிந்ததும் கையப்பம் இட்டுவிட்டுச் செல்லட்டும்’ என்று ஒலிப்பெருக்கியில் திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டது. 'இரவு முழுவதும் காட்டுக்குள் இருப்பது ஆபத்தானது’ என்பதை உணர்ந்த லாரியில் வந்த அதிகாரிகள், நாங்கள் சொன்னபடி, எழுதிக்கொடுத்து, கையப்பமிட்டு, தருமபுரி திரும்பினர்.

அடுத்த நாள் வந்த செய்தி, எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரும்பிச் சென்றவர்கள், அவர்களது சீருடையை கிழித்துக் கொண்டு கை, கால்களில் கட்டு போட்டுக் கொண்டு, 'சேசுராசபுரம் மக்கள் எங்களை அடித்துக் காயப்படுத்தினார்கள்’ என்று காவல்துறையில் புகார் கொடுத்து இருந்தார்கள். 'இப்படியும் ஒரு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியும்’ என்று அறிந்தபோது நாங்கள் திடுக்கிட்டோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism