பிரீமியம் ஸ்டோரி

மாத்தி யோசி

ஓவியம்: ஹரன்

##~##

'கண்டு கொள்வாய் சொல்லுகிறேன்
உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
வந்து உன் மனையில் வைத்திருந்தால்,
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
நன்றான நாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்’

- இப்படி பாட்டா பாடி வெச்சுருக்காங்க நம்ம நாட்டு, சித்தர் பெருமக்கள். இந்தப் பாட்டோட பொருள்... 'ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு போன்ற மூலிகைகளை வீட்டுல வளர்த்தா... அந்த இடத்தைப் பாம்பு நெருங்காது’ன்றதுதான். இந்த மூலிகைகளுக்கு, பாம்புகளை அண்ட விடாம செய்ற சக்தி இருக்கு. இன்னிக்கும் கிராமங்கள்ல, வீட்டுக் கொல்லைப்புறத்துல இதுகள வளர்க்கற பழக்கம் இருக்கு.

'பாம்புத் தொல்லையா... கவலையை விடுங்க. கின்னிக்கோழி வளருங்க... பாம்புங்க கிட்ட வராது’னு யாராவது சொல்றதை, காத்து வாக்குல கேட்டிருப்பீங்க. இது முழுக்க உண்மை இல்லைங்கறதுதான் முக்கியமான சேதி. ஏன்னா, பாம்புகளை விரட்டற அளவுக்கு கின்னிக் கோழி ஒண்ணும் சூரப்புலி கிடையாது. பாம்பைப் பார்த்துட்டா, கின்னிக் கோழிங்க 'க்கெ... கெக்... கெக்....’னு கூச்சல் போடும். பாம்பு மட்டுமில்லாம, பண்ணைக்குள்ள ஆடு, மாடு, மனுஷன்னு புதுசா யாராவது வந்தா... கின்னிக் கோழிங்க சத்தம் போடும். ஏறத்தாழ நாய் செய்யற வேலையைத்தான், இந்தக் கோழிங்க செய்யும். இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து, ஒருவேளை பாம்பு பின்வாங்கலாம்... அந்த சத்தத்தைக் கேட்டு, நாம உஷாராகி பாம்புகளை விரட்டலாம்... அவ்வளவுதான்.

மண்புழு மன்னாரு!

கோழிகளை கொத்தி திங்கிற நோக்கத்துல எல்லாம் பாம்புங்க எப்போதும், பண்ணைக்குள்ள வராது. கோழிக் கழிவுகள சுத்தம் செய்யாம குப்பையும் கூளமா போட்டிருந்தா... அங்க புழு, பூச்சிங்க உருவாகும். அதை வெச்சு, எலி மாதிரியான பிராணிங்க குடியேறும். எலியைத் தேடி பாம்பு வந்து சேரும். அதனால, கோழி வளர்க்கற இடத்தை சுத்தபத்தமா வெச்சுகிட்டாலே, பாம்புங்களுக்கு அங்க வேலை கிடையாதுங்க.

பூகம்பம், சுனாமி... மாதிரியான இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே தெரிஞ்சுக்குற சக்தி, பாம்புகளுக்கும் இருக்கு. பூகம்பம் நடக்கப் போற பகுதியில புத்தை விட்டு, அவசரம் அவசரமா வெளியேறுற பாம்புங்க... பரபரப்பா அங்க, இங்கனு சுத்திக்கிட்டு இருக்கும். இதை உன்னிப்பா கவனிச்சா, நாமளும் தப்பிச்சுக்க முடியும். இப்படிப்பட்ட ஜீவராசிகளோட நடவடிக்கைகளையெல்லாம் கவனிச்சுதான் வாழ்க்கையை நகர்த்தியிருக்காங்க, நம்ம முன்னோருங்க.

மண்புழு மன்னாரு!

கால்நடைங்க அடிக்கடி பாம்புக் கடிக்கு ஆளாகும். கடிபட்ட கால்நடைங்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகளைப் பத்தி விவசாயிங்க தெரிஞ்சு வெச்சுக்கறது நல்லது. செம்மறி ஆடும், பன்றியும் பாம்புக் கடிக்கு அஞ்சாது. ஏன்னா, செம்மறி ஆடு, பன்றி இதுங்களோட தோல் பகுதி கடினமா இருக்கும். அதனால, விஷம் இறங்காது. அதேநேரத்துல... காம்புப் பகுதியில பாம்பு கடிச்சுடுச்சுனா... ஆபத்துதான். அதனால, எந்தப் பகுதியில கடிபட்டிருக்குனு கவனிச்சு வைத்தியம் செய்யணும்.

மாடுகளைப் பொருத்தவரைக்கும் மேய்ச்சல் நேரத்துலதான் கடிபட வாய்ப்பு அதிகம். புல் மேயும்போது முகம், தலை, கழுத்துப் பகுதியிலதான் கடிபடும். சிலசமயம் கால் பகுதியில கூட கடிபட வாய்ப்பு இருக்கு. விஷப்பாம்பு கடியா இருந்தா, இடைவெளி விட்டு ரெண்டு பல்லுங்க தெரியும். இதை வெச்சு கண்டுபிடிச்சு... உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். விஷமில்லாத பாம்பா இருந்தாலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிடறது புத்திசாலித்தனம். மனுஷங்களுக்கு எப்படி சிகிச்சை தர்றோமோ... அது போலத்தான் கால்நடைகளுக்கும். எக்காரணத்தைக் கொண்டும், கடிபட்ட ஆடு, மாடுகளை நடக்க வைக்கக் கூடாது. கடிபட்ட இடத்துல லேசா கட்டுப்போட்டு, கடிபட்ட இடம், இதயத்துக்குக் கீழ்ப்புறமா இருக்கற மாதிரி படுக்க வெச்சு... காலம் கடத்தாம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டா, உயிரைக் காப்பாத்திட முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு