Published:Updated:

சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்...

அரை ஏக்கர் உளுந்து... அரை ஏக்கர் காய்கறி... கு. ராமகிருஷ்ணன் படங்கள்: கே. குணசீலன்

பிரீமியம் ஸ்டோரி

தொழில்நுட்பம்

##~##

''வழக்கமான சாகுபடி வழிமுறைகளோடு நின்று விடாமல், அனுபவம் மற்றும் அறிவாற்றல் மூலமாக... அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டால்தான், விவசாயத்தில் கூடுதல் பலன்களைப் பெறமுடியும்''

-இப்படி வேளாண் அறிஞர்கள் சொல்வதை, தனது பண்ணையில் நடைமுறைப்படுத்தி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... தஞ்சாவூர் மாவட்டம், உச்சிமாஞ்சோலை, முருகன். உளுந்து மற்றும் காய்கறி சாகுபடிகளில் இவர் கடைபிடிக்கும் சில தொழில்நுட்பங்கள், இப்பகுதியைச் சேர்ந்த பலரையும் புருவம் உயர்த்த வைக்கிறது!

பச்சைப் பசேலென செழிப்பாக காட்சி அளிக்கும் காய்கறித் தோட்டத்தில், முருகனை சந்தித்தோம்... ஓர் அறுவடை வேளையில்!

''புதுக்கோட்டை மாவட்டம், பல்லவராயன்பட்டித£ன் சொந்த ஊர். ஐ.டி.ஐ. படிச்சுட்டு, தனியார் கம்பெனியில வேலை பார்த்தேன். ஆனா, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்கிறதால... விவசாயத்துலதான் நாட்டம் அதிகமா இருந்துச்சு. வேலையை விட்டுட்டு, நானும் மனைவியும் இந்த ஊருக்கு வந்து தங்கி, மூணு ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சு, பத்து வருஷமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கோம்.

'பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகு, ரசாயனத்தைக் குறைக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு வருஷமா, ஒரு ஏக்கர்ல மட்டும் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். மீதி ரெண்டு ஏக்கர்ல தீவனப்பயிர் இருக்கு. இதையும் சீக்கிரமே முழுமையான இயற்கை விவசாயத்துக்கு மாத்திடுவேன். தினமும் சாயங்கால நேரத்துல கடை போட்டு, நானே நேரடியா காய்கறிகளை விற்பனை பண்றேன். இயற்கைக் காய்கறிங்கறதால... தேடி வந்து வாங்கிட்டு போறாங்க. இப்போ, நிரந்தரமான வாடிக்கையாளர்களும் கிடைச்சுட்டாங்க'' என்று அசத்தலான அறிமுகம் தந்த முருகன், தொடர்ந்தார்.

சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்...

''இது செம்மண்ணும் மணலும் கலந்த இருமண்பாடு நிலம். இயற்கை விவசாயம் செஞ்சுட்டு இருக்குற நிலத்துல... அரை ஏக்கர்ல காய்கறிகளும், அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா நெல்லும் பயிர் பண்ணியிருக்கேன். இயற்கை விவசாயத்துல முதல் பயிரா உளுந்துதான் போட்டேன். பத்து டன் மாட்டு எரு, ஒரு டன் ஆட்டு எரு மட்டும் போட்டதுல... நல்ல மகசூல். வழக்கமா, உளுந்து விதையைத் தெளிச்சுட்டு, பாத்தி கட்டிதான் தண்ணீர் பாய்ச்சுவாங்க. ஆனா, உளுந்துக்கு அந்தளவுக்கெல்லாம் தண்ணீர் தேவையே இல்லை. பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுனா, மண் இறுகிப் போயி, காற்றோட்டம் பாதிக்கப்படும். களைகளும் அதிகமா மண்டும். தண்ணியில முங்குறதால விதைகளோட வளர்ச்சியும் பாதிக்கும்.

பாசனத்தில் உள்ள சூட்சமம்!

உளுந்தைப் பொருத்தவரை விதைகளைத் தெளிக்கத்தான் செய்யணும். ஆனா, அதிகமா தெளிக்கறதால, நெருக்கமாதான் செடி வளரும். இது, செடிகளுக்குத் தேவையான சூரிய வெளிச்சம், காற்றோட்டம் இல்லாம செய்துடும்கிறதால... வளர்ச்சியும் பாதிக்கும். அதனால... ஏக்கருக்கு 5 கிலோ விதைங்கிற கணக்குல தெளிச்சுட்டு... பார் கலப்பையை ஓட்டி, ஒரு அடி இடைவெளியில 2 அடி அகலத்துக்கு பார் எடுத்தேன். பார் மேல விதைகள் ஏறிடுச்சு. பாருக்கு பார் இருக்குற இடைவெளியை வாய்க்காலா பயன்படுத்தி, தண்ணீர் பாய்ச்சினேன். வாய்க்கால்ல மட்டுமே தண்ணி பாய்ஞ்சதால...

சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்...

அறுவடை வரைக்கும் பார்ல இருக்குற மண் பொலபொலப்பாவே இருந்துச்சு. வாய்க்கால்ல மட்டும்தான் அங்கொண்ணும் இங்கொண்ணுமா களைகள் இருந்துச்சு. போகுற போக்குல அதைப் பிடுங்கிப் போட்டுடுவேன். இந்த மாதிரி வாரம் ஒரு தண்ணிதான் கொடுத்தேன். பார்ல எப்பவும் ஈரம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. தெளிப்புக்கு வேப்ப எண்ணெய், மீன் அமிலம் மட்டும்தான் பயன்படுத்தினேன். 60 நாள்ல நல்லா வளர்ந்து... ஏக்கருக்கு

4 குவிண்டால் மகசூல் கிடைச்சுது. நான் சாகுபடி செய்தது... 60 நாள் வயசு கொண்ட ரகம். இதுவே,

90 நாள் வயசு கொண்ட ரகமா இருந்தா... எட்டு குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுருக்கும்.

எங்க பகுதியைப் பொருத்த வரைக்கும் இது நல்ல மகசூல்தான். அதுவும் இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் சாகுபடியில இவ்வளவு கிடைச்சது பெரிய விஷயம். பாத்தி கட்டி தண்ணி பாய்ச்சும் போது அதிகளவுல களை மண்டும். தண்ணியும் வீணாகும். ஏக்கருக்கு எட்டு கிலோவுல இருந்து... பத்து கிலோ வரைக்கும் விதைகள் தேவைப்படும். ஆனா, நான் 5 கிலோ விதையிலயே... இத்தனை மகசூல் பார்த்தது நிறைய பேரை ஆச்சர்யப்பட வெச்சுடுச்சு. உளுந்து, கொஞ்சம்கூட பொக்கு இல்லாம... திரட்சியா இருந்துச்சு. அதனால, ஒரு கிலோ

70 ரூபாய்னு விலை கிடைச்சுது. நேரடியா விற்பனை செஞ்சுட்டேன். 28 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. செலவு போக...

18 ஆயிரம் ரூபாய் கையில கிடைச்சது'' என்ற முருகன், காய்கறி சாகுபடி பற்றி பேசினார்.

ஒரே பாரில் செடியும் கொடியும்!

''அரையடி ஆழத்துக்கு வாய்க்கால் எடுத்து அதுல, மாட்டு எருவைப் போட்டுடுவேன். பக்கத்துலயே இன்னொரு வாய்க்கால் தோண்டி, அந்த மண்ணை வெச்சு, மாட்டு எரு கொட்டின வாய்க்காலை மூடி... அதுல வரிசையா காய்கறி விதைகளை விதைச்சுடுவேன். மண்ணுக்கடியில எரு இருக்கறதால, அதுல முளைச்சு செடிகளுக்கு வேர் வழியா தடையில்லாம சத்து கிடைச்சுட்டே இருக்கும். ஈரமும் மண்ணுக்குள்ள இருந்துட்டே இருக்கும். அதனால, வாரத்துக்கு ஒரு தடவை தண்ணி பாய்ச்சினாலே போதும். பாரோட ஒரு ஓரத்துல செடி வகை காய்கறியும், இன்னொரு ஓரத்துல கொடி வகை காய் கறியும் மாத்தி மாத்தி பயிர் பண்ணியிருக்கேன். வெண்டை, கொத்தவரை, புளிச்சக்கீரை, பாகல், குட்டைப் புடலை, பொரியல் தட்டை, பீர்க்கன்னு நிறைய காய்கள் இருக்கு. கொடிகளுக்கு மட்டும் வரிசைப் பந்தல் போட்டிருக்கேன். வேலி ஓரத்துல பூசணி, சுரை இருக்கு.

சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்...

அரை ஏக்கர்ல எல்லா காய்களும் சேர்த்து, தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு மகசூலாகுது. ஒரு கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்றேன். புளிச்சக்கீரை, பூசணி, சுரைக்காய் மூலமாவும் அப்பப்ப வருமானம் வருது. எல்லாம் சேர்த்து மாசத்துக்கு 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. செலவுபோக, காய்கறியில மாசம் 10 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது'' என்று சொன்ன முருகன், நிறைவாகச் சொன்னது-

''அரை ஏக்கர் காய்கறியிலேயே மாசம் 10 ஆயிரம் ரூபாய் லாபம்கிறது... என்னைப் பொறுத்தவரைக்கும் தெம்பு தர்ற விஷயம்தான்!''  

தொடர்புக்கு,
முருகன்,
செல்போன்: 94866-06351
.

'இப்படித்தான் செய்ய வேண்டும், சாகுபடி!’

இயற்கை முறையில் அரை ஏக்கர் நிலத்தில் காய்கறி மற்றும் ஒரு ஏக்கர் நிலத்தில் உளுந்து சாகுபடிக்காக முருகன் மேற்கொள்ளும் தொழில்நுட்பம் இதோ-

உளுந்து சாகுபடி: மேலே சொன்னபடி உளுந்தை விதைத்த பிறகு, பார் எடுத்துக் கொள்ள வேண்டும். விதைப்பிலிருந்து 20 மற்றும் 30-ம் நாட்களில் 50 லிட்டர் தண்ணீரில், ஒன்றரை லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 32-ம் நாள், 60 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமிலம்; 42-ம் நாள், 80 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி மீன் அமிலம்; 52-ம் நாள், 100 லிட்டர் தண்ணீர்ல 500 மில்லி மீன் அமிலம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 60-ம் நாளுக்கு மேல் உளுந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

சின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய பெரிய பலன்கள்...

காய்கறி சாகுபடி: மேலே சொன்னபடி, வாய்க்கால் வெட்டி, காய்கறி விதைகளை ஊன்றிக் கொள்ள வேண்டும். செடிகள் வளரத் தொடங்கும் போது, 60 லிட்டர் தண்ணீரில் 900 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்த 10 நாட்கள் கழித்து 60 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் கரைசலையும், ஜீவாமிர்த கரைசலையும் 10 நாட்கள் இடைவெளியில் மாற்றி, மாற்றி தெளிக்க வேண்டும்.  

ஊட்டமேற்றிய உரம்: 150 கிலோ மாட்டு எருவில், தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ -பாக்டீரியா, ஒரு கிலோ சூடோமோனஸ் ஆகிய வற்றைக் கலந்து, லேசாக ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து, 2 நாட்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். தனியாக 5 கிலோ கடலைப் பிண்ணாக்கை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து அதை மாட்டு எரு கலவையில் இட்டு, 80 கிலோ ஆட்டு எருவையும் சேர்த்துப் பிசைய வேண்டும். ஊட்டமேற்றிய இந்த தொழுவுரத்தை மாதம் ஒரு முறை ஒவ்வொரு செடிக்கும் அருகில் 4 விரல்கிடை இடைவெளியில், ஓர் அங்குல ஆழத்துக்கு குழி எடுத்து, 50 கிராம் அளவுக்கு வைக்க வேண்டும்.

பழ ஈக்கள்: சிறிய பிளாஸ்டிக் டப்பாவில், 20 கிராம் கருவாட்டுத் தூளை இட்டு, கால் பங்கு தண்ணீர் ஊற்றி, ஆங்காங்கு தொங்கவிட்டால்... பழ ஈக்கள் வாசனையில் கவரப்பட்டு, தண்ணீரில் விழுந்து இறந்துவிடும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு