Published:Updated:

ஆட்கள் பிரச்னைக்கு அடேங்கப்பா தீர்வு...

வியக்க வைக்கும் வேளாண் இயந்திரக் குழு! காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன்

பிரீமியம் ஸ்டோரி

சங்கம்

##~##

விவசாயம் நலிந்து வருவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று... வேலையாட்கள் தட்டுப்பாடு. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்பவை, வேளாண் கருவிகள்தான். ஆனால், கருவிகள் என்றதும், அனைத்துமே கைக்கு எட்டும் தூரத்தில் கிடைத்துவிடுவதில்லை. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, பெரு விவசாயிகள் பலருக்கும்கூட இவை எட்டாக்கனியே! ஆம், நினைத்த உடனேயே, கிடைத்துவிடுவதில்லை என்பதோடு, இவற்றுக்கான வாடகையும் அதிகமாகவே இருக்கிறது.

இத்தகையச் சூழலில், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கும் விடை கொடுக்கும் விதத்தில் வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது... தமிழக வேளாண் பொறியியல் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கும் அற்புதத் திட்டம்! வேளாண் கருவிகளை இயக்குவதற்கும் மற்றும் பழுது பார்ப்பதற்கும் கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தருவதுதான் இந்தத் திட்டம்!

இதற்கான பயிற்சியை முடித்திருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 இளைஞர்கள், வாலாஜாபேட்டையை, தலைமையிடமாகக் கொண்டு... 'பசுமை வேளாண் இயந்திர மயமாக்கல் சங்கம்’ என்பதை ஆரம்பித்திருப்பதோடு... தங்கள் பகுதியிலிருக்கும் விவசாயிகளுக்கு, கருவிகள் மூலமாக கைகொடுத்து தாங்கிக் கொண்டிருக்கின்றனர்!

ஆட்கள் பிரச்னைக்கு அடேங்கப்பா தீர்வு...

தக்காங்குளம் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதற்காக வந்திருந்த இந்தக் குழுவினரைச் சந்தித்தபோது... குழுவின் செயல்பாடுகள் பற்றி பேசிய அதன் தலைவர் ஸ்ரீனிவாசன், ''எங்க சங்கத்துல இருக்கற எல்லாருக்கும் அரை ஏக்கர்ல இருந்து... நாலு ஏக்கர் வரை நிலமிருக்கு. ஆனா, வருஷம் முழுக்க நிலத்துல வேலை இருக்காதுங்கறதால... பொழுது வீணாத்தான் போயிட்டு இருந்துச்சு. அப்பதான், 'விவசாய இயந்திரங்கள் பராமரிக்கறதுக்கும், பழுது பார்க்கறதுக்கும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச ஐம்பது இளைஞர்களுக்கு ஆறு மாச பயிற்சி கொடுக்கப்படும்'னு 2011-ம் வருஷம் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் அறிவிச்சாங்க. உடனே பயிற்சியில சேர்ந்தோம். டிராக்டர், ரோட்டோவேட்டர், பவர் டில்லர், பவர் வீடர்...னு நிறைய கருவிகளை முழுமையா 'ரிப்பேர்’ பார்க்க கத்துக்கொடுத்தாங்க. நடவு, சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப் பாசனம் அமைக்கறதையும் சொல்லிக் கொடுத்தாங்க. இதுக்காக தினமும் 80 ரூபாய் ஊக்கத்தொகையும் கொடுத்தாங்க. இப்படித்தான் நாங்க 16 பேரும் பயிற்சி எடுத்துக்கிட்டோம்.

நாங்கள்லாம் ஒண்ணு சேந்து, போன வருஷம் சங்கத்தை ஆரம்பிச்சு, பதிவும் செஞ்சோம். சங்கம் மூலமா, சுத்துப்பட்டுல இருக்குற விவசாயிகளோட தேவைகளைப் பூர்த்தி செஞ்சுட்டுருந்தோம். எங்க செயல்பாடுகளைப் பார்த்த பொறியியல் துறை அதிகாரிங்க, முழுமையான மானியத்துல... அதாவது இலவசமாவே 4 பவர் டில்லர்,  4 நெல் நடவு இயந்திரம், 4 பவர் வீடர்னு மொத்தம் 12 இயந்திரங்களைக் கொடுத்திருக்காங்க. கண்ணமங்கலம், பணப்பாக்கம், சோளிங்கர், வாலாஜானு நாலு ஊர்களைச் சுத்தி இருக்கறவங்கள வெச்சு, சங்கத்தை நாலு குழுக்களா பிரிச்சு... ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பவர் டில்லர், ஒரு நடவு இயந்திரம், ஒரு பவர் வீடர்னு பிரிச்சு கொடுத்திருக்கோம்'' என்ற ஸ்ரீனிவாசனைத் தொடர்ந்தார், சங்கத்தின் கௌவரத் தலைவர் மணி.

ஆட்கள் பிரச்னைக்கு அடேங்கப்பா தீர்வு...

''எங்க சங்கம் மூலமா, உழவு செய்யுறதுல இருந்து களை எடுக்குறது வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்றோம். பவர் டில்லர் மூலமா சேற்று உழவு செய்றதுக்கு ஒரு மணி நேரத்துக்கு 225 ரூபாய் வாங்கு றோம். தனியார் ஆளுங்க 300 ரூபாயில இருந்து, 350 ரூபாய் வரை வாங்கறாங்க. நெல் விவசாயிங்க, எங்ககிட்ட விதையைக் கொடுத்துட்டா, நாங்களே நாத்து விட்டு, அதை அவங்க வயல்ல நடவு செஞ்சு கொடுத்துடறோம். இதுக்கு, ஏக்கருக்கு 2,500 ரூபாய் வாங்குறோம். தூரம் அதிகமா இருந்தா, கூடுதலா பணம் வாங்கிக்குவோம். தேவையான நாட்கள்ல நாங்களே வந்து களை களையும் எடுத்துக் கொடுத்துடுவோம். பவர் வீடர் மூலமா களை எடுக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய் கட்டணம். இவ்வளவு குறைவா ஏன் கட்டணங்களை வசூலிக்கிறோம்னா... கருவிகள் எல்லாமே, வேளாண்மை பொறியியல் துறைமூலமா எங்களுக்கு இலவசமா கிடைச்சுருக்கறதாலதான்.

மொத்த வருமானத்துல பெட்ரோல், டீசல், பராமரிப்புனு எல்லா செலவும் போக, குழுவுல இருக்கிற 16 பேருக்கும், சராசரியா மாசம் 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமா கிடைக்குது. சங்கத்துல உறுப்பினரா இருக்கற எல்லாரும் மாசம் 500 ரூபாயை நிரந்தர சேமிப்பாவும், 100 ரூபாயை சந்தா தொகையாவும் கட்டுறோம்'’ என்று சொன்னார்.

ஆட்கள் பிரச்னைக்கு அடேங்கப்பா தீர்வு...

இதைப் பற்றி பேசிய வேலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் இன்பநாதன், ''வேலூர், திருச்சி, திருவாரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு இடங்களில், எழுதப் படிக்க தெரிந்த கிராமப்புற இளைஞர் களுக்கு வேளாண் கருவிகள் பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சிகளை வழங்குகிறோம். 2011-ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 50 பேர் 6 மாத காலம் பயிற்சி எடுத்துக் கொண்டனர். கடந்த ஆண்டு, தலா 25 நபர்கள் கொண்ட இரண்டு குழுக்களுக்கு, மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கியிருக்கிறோம்.

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 15 லட்சம் மதிப்புடைய கருவிகளை, சிறந்த வேளாண் இயந்திரமயமாக்கல் குழுக்களுக்கு 100 சதவிகித மானியத்தில் கொடுக்கிறோம். ஒவ்வொரு குழுவின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, சிறப்பான குழுக்களைத் தேர்வு செய்த பிறகே கருவிகளை வழங்குகிறோம். அதன்பிறகும் இந்தக் குழுக்களைத் தொடர்ந்து தொடர்பிலேயே வைத்திருக்கிறோம். தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். இதுபற்றி மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள், அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் வேளாண் பொறியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று வழிகாட்டினார்.

தொடர்புக்கு:

ஸ்ரீனிவாசன், செல்போன்: 90254-57628
மணி, செல்போன்: 99438-28629
இன்பநாதன், செல்போன்: 94424-56894.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு