Published:Updated:

வந்துவிட்டது... மரக்காப்பீட்டுத் திட்டம்...

மறந்து விடாதீர்கள்... மறந்தும் இருந்து விடாதீர்கள்..! ஞா. சுதாகர் படங்கள்: ர. சதானந்த்

வந்துவிட்டது... மரக்காப்பீட்டுத் திட்டம்...

மறந்து விடாதீர்கள்... மறந்தும் இருந்து விடாதீர்கள்..! ஞா. சுதாகர் படங்கள்: ர. சதானந்த்

Published:Updated:
##~##

''பல்வேறு விழிப்பு உணர்வுகளுக்கு பிறகு, மரப்பயிர் சாகுபடி தமிழகம் முழுவதும் அதிகரித்து கொண்டிருந்த சமயம்... திடீரென தாக்குதல் நடத்திய 'தானே’ புயல், மர சாகுபடி விவசாயிகளின் நம்பிக்கையை தவிடு பொடியாக்கியது. பல்லாண்டு கால மரங்களும் கண்முன்னே சாய, செய்வதறியாது திகைத்த விவசாயிகள்... மரப்பயிர் மீதிருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்தனர். அப்போதுதான் எங்களுக்கு இத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டிய அவசியம் புரிந்தது'' என்கிறார், இந்தியாவிலேயே முதன் முறையாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் மரப்பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை வடிவமைப்பதில் பங்கு பெற்றிருக்கும்... மேட்டுப்பாளையம், அரசு வனக்கல்லூரிப் பேராசிரியர், முனைவர். பார்த்திபன்!

மரப்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு தித்திப்பதாக அமைந்துள்ள இத்திட்டம் பற்றி மேலும் விவரங்களைத் தரும்படி கேட்டபோது... ''இந்திய அரசின் திருத்தியமைக்கப்பட்ட வனக்கொள்கையின்படி, இயற்கைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அதனால், அங்குள்ள மரங்களை வெட்டவோ... பயன்படுத்தவோ முடியாது. இதனால்தான் வேளாண் காடுகளைச் சார்ந்த தொழிற்சாலைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மொத்தம் 700 காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்துவிட்டது... மரக்காப்பீட்டுத் திட்டம்...

35 ஒட்டுப்பலகை தயாரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. சிறிய அளவிலான தீக்குச்சித் தொழிற்சாலைகளும் பல உள்ளன. இவை அனைத்தும் மரங்களைச் சார்ந்தே உள்ளன. இதற்காக விவசாயிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இங்குதான் எங்களுடைய வேலையும் ஆரம்பிக்கிறது'' என்ற பார்த்திபன், தொடர்ந்தார்.

வந்துவிட்டது... மரக்காப்பீட்டுத் திட்டம்...

''மரங்கள் தேவைப்படும் தொழிற்சாலைகள் எங்களைத் தேடி வரும்போது... மர சாகுபடி விவசாயிகளை அணுகி, இரு தரப்பையும் ஒப்பந்த முறையில் இணைக்கிறோம். இதன் மூலம், ஒப்பந்த காலத்தில் அந்த விவசாயிக்குத் தேவையான விதை, இடுபொருட்களுடன் சந்தை விலையையும் நிர்ணயித்துத் தருகிறோம். இதன் மூலம் விவசாயி முழு லாபம் அடைவதுடன், இடைத்தரகர்களையும் குறைக்க முடியும். இவ்வாறு மரப்பயிர் சாகுபடி பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் எங்களுக்கு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, தானே புயல்தான். கிட்டத்தட்ட பல காலம் பராமரித்து வளர்த்த மரங்கள், ஒரு சில நிமிடங்களில் வேரோடு சாயும்போது முழு நஷ்டம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டுதான், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை வடிவமைத்தோம்'' என்ற பார்த்திபன் மேற்கொண்டும் விவரித்தார்.

ஏழு மரங்களுக்கு காப்பீடு!

வந்துவிட்டது... மரக்காப்பீட்டுத் திட்டம்...

''கல்லூரியின் இயக்குநர் முனைவர். துரைராசு தந்த முழு ஒத்துழைப்பைப் பயன்படுத்தி... உமேஷ் கண்ணா, சேகர், வித்யாவதி ஆகியோர் அடங்கிய எங்கள் குழு மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர் புத்தன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்தத் திட்டம், தற்போது இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட 'தேசிய வேளாண்மை புதுமைத் திட்டம்’ மூலம் செயல்வடிவம் பெற்றுள்ளது. முதல் கட்டமாக, சவுக்கு, யூகலிப்டஸ், மலைவேம்பு, சவுண்டல் (சூபாபுல்), குமிழ், சிசு, பெருமரம் ஆகிய ஏழு வகை வணிக ரீதியான மரங்களுக்கு மட்டும், தற்போது காப்பீடு வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இவை ஏழு வருடங்களுக்குள் பயன் தரும் மரங்கள். மற்ற மரங்களுக்கும் காப்பீடு வசதிக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தீப்பிடித்தல், அரசாங்கத் திட்டங்களுக்காக மரங்கள் வெட்டப்படுதல், இடி, மின்னல், வனவிலங்குகளால் சேதம், நோய்களால் சேதம், கலவரங்களால் சேதம், வெள்ளம் போன்ற இயற்கைக் காரணிகள் உள்ளிட்ட ஏழு வகையான காரணங்களுக்கு இழப்பீடு உண்டு. இத்திட்டத்தில் உள்ள நிறை மற்றும் குறைகளை விவசாயிகளிடம் கேட்டறிந்து, மேம்படுத்தவும் முடி வெடுத்துள்ளோம்'' என்ற பார்த்திபன்,

''இத்திட்டத்தில் விவசாயிகளையும் காப்பீடு நிறுவனங்களையும் ஒன்றிணைப்பதுதான் எங்கள் கல்லூரியின் குறிக்கோள். இதுபோக, பங்கு பெறும் விவசாயிக்கு, அவர் நடவு செய்யும் மரங்களின் வகையைப் பொருத்து, உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு தரப்படும். நாங்கள் 10% அளவுக்கு கூடுதல் மதிப்பீடைக் கொடுப்பதால், இடத்துக்கு இடம் மாறுபடும் உற்பத்திச் செலவை ஈடு செய்ய முடியும். எனவே மரப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள்... இந்தத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அழைத்தார்.

தொடர்புக்கு, முனைவர். பார்த்திபன்,
செல்போன்: 94435-05844
யுனைடெட் இந்தியா இன்ஷ§ரன்ஸ் நிறுவனம்,
தொலைபேசி: 044-28575404/304

 பயனாளிகளாக இருக்கும் விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்..?

ராமநாதன், சிவகங்கை: ''நான் 15 ஏக்கரில் குமிழ் மரங்களை சாகுபடி செய்துள்ளேன். தற்போது ஒரு ஏக்கருக்கு காப்பீடு செய் துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் உற்பத்தி செலவு. இன்ஷூரன்ஸுக்கு ஆண்டு பிரீமியம் 700 ரூபாய். புயல், மழை, வறட்சி என்று நஷ்டம் வந்தால், அதை ஈடுகட்ட இந்த காப்பீடு உதவும்.'’

ராமன், புதுக்கோட்டை: ''ஒரு ஏக்கர் தைல மரத்தை, காகித ஆலையிடம் ஒப்பந்தம் செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு 29,000 ரூபாய் செலவாகிறது. இன்ஷூரன்ஸுக்கு பிரீமியம் 350 ரூபாய். இதை அந்த ஆலையே கட்டிவிடுகின்றது.

பிரீமியத்தை, ஆண்டுதோறும் செலுத்தாமல், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்தால்... நன்றாக இருக்கும்.''