Published:Updated:

'விர்...விர்..' விலையேற்றம்....

வறட்சியில் உரியும் வெங்காய அரசியல்....ஆர். குமரேசன். ஜி. பழனிச்சாமி படங்கள்: வீ. சிவக்குமார்

அலசல்

##~##

'நாயைக் கண்டா கல்லைக் காணோம்... கல்லைக் கண்டா நாயைக் காணோம்’ என்பது போலத்தான் விவசாயமும். விலை இருந்தால் விளைச்சல் இருக்காது... விளைச்சல் இருந்தால் விலை இருக்காது. சமீப நாட்களாக, டீக்கடை

பெஞ்ச் முதல் நாடாளுமன்றம் வரை பரபரப்பாகப் பேசப்படும் விஷயம்... வெங்காய விலையேற்றம். ஒரு கிலோ சின்ன வெங்காயம், நூறு ரூபாயைத் தாண்டி நிற்கிறது. விவசாயத்தின் மீதும், விவசாயிகளின் மீதும் அக்கறை காட்டாத அரசுகள், வெங்காய விலையேற்றத்தைக் கண்டு மிரண்டு நிற்கின்றன. பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கையைப் பிசைந்து கொண்டுள்ளன. இந்நிலையில், இப்பிரச்னை குறித்து, துறை சார்ந்தவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இங்கே இடம் பிடித்துள்ளன.

சாகுபடிப் பரப்பு குறைந்ததுதான் காரணம்!

வெங்காய சாகுபடி குறித்த நெடிய அனுபவம் வாய்ந்த திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 'அக்ரி’ பரமேஸ்வரன், ''வெங்காயம், ஒரு மென்மையான பயிர். ஈரப்பதமானக் காற்று வீசும் சீதோஷ்ணம் உள்ள பகுதிகளில்தான் நல்ல மகசூலைக் கொடுக்கும். வடிகால் வசதி கொண்ட, தண்ணீர் தேங்கி நிற்காத, சரளை கலந்த மண்ணில் மட்டுமே நன்றாக வளரும். உவர்ப்பு மற்றும் காரத்தன்மை கொண்ட பாசன நீர் இதற்கு ஆகாது.

'விர்...விர்..' விலையேற்றம்....

ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களிலும்; தமிழ்நாட்டில் பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், நாமக்கல், ராசிபுரம், துறையூர் ஆகிய பகுதிகளிலும் வெங்காயம் அதிகம் விளைகிறது. இதில் 'பல்லாரி’ வெங்காயம், பல்லடம், ஆலங்குளம் பகுதிகளில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஏக்கரிலும், சின்ன வெங்காயம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரிலும் பயிர் செய்யப்பட்டு வந்தது.

பொய்த்துப் போன பருவமழை, கட்டுபடியாகாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு, பாசன நீர்ப்பற்றாக்குறை, தரமற்ற விதைகள், விதைத் தட்டுப்பாடு, விதை விலையேற்றம்... உள்ளிட்ட பல காரணங்களால் படிப்படியாக வெங்காய சாகுபடிப் பரப்பு குறைந்து விட்டது. சில சமயங்களில் கட்டுபடியாகாத விலை கிடைத்து, பெருத்த நஷ்டம் ஏற்படுவதால், வெங்காய

'விர்...விர்..' விலையேற்றம்....

சாகுபடியில் தீவிரம் காட்டிய விவசாயிகள் பலரும் மாற்றுப்பயிருக்கு மாறி விட்டனர்.

ஆனால், வெங்காயம் எப்போதுமே லாப பயிர்தான். இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் அளவில் வைத்துக் கொண்டு தாங்களே உழைக்கும் விவசாயிகள், பட்டம் தவறாது வெங்காயத்தைப் பயிரிடுவார்கள். அத்தகைய விவசாயிகளுக்கு, தற்போது நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. இந்த விஷயத்தை, மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் கட்டுபடியாகிற வகையில் திட்டங்களைத் தீட்ட வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

பேஞ்சு கெட்டது அங்கே... காஞ்சு கெட்டது இங்கே!

''இந்த வருஷம் வெங்காய விலை உச்சத்துக்குப் போனதுக்கு முக்கியமான காரணம் மழை. வடமாநிலங்கள்ல அளவுக்கு அதிகமா பேஞ்சு வெள்ளம் வந்து பல லட்சம் ஏக்கர்ல வெங்காயம் அழுகி நாசமாயிடுச்சு. அதேநேரத்துல, தமிழ்நாட்டுல மழை இல்லாததால சாகுபடிப் பரப்பு குறைஞ்சுடுச்சு. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஏக்கர்ல பயிரானது, இப்போ, 25 ஆயிரம் ஏக்கர்ல மட்டும்தான் பயிராயிருக்கு. அதனாலதான் விலை தாறுமாறா ஏறிக்கிடக்கு. இந்த போகத்துல சாகுபடி செய்ற அளவுக்கு மழை பெஞ்சுருக்கு. கிணத்துலயும் தண்ணி இருக்கு. ஆனாலும் வெங்காய விதை விலை எகிறிப்போய்க் கிடக்கறதால நிறைய பேர் சாகுபடி பண்ண முன்வரல. சாம்பார் வெங்காய விதை ஒரு கிலோ 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் மேல போயிடுச்சு. இது 7 ஆயிரம் ரூபாய் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை. காய் வெங்காயத்தோட (நேரடி விதைப்புக்கு) விலை ஒரு கிலோ 100 ரூபாய். ஒரு ஏக்கருக்கு 700 கிலோ விதைக்காய் வேணும். ஒரு ஏக்கருக்கு விதையை மட்டும் 70,000 ரூபாய்க்கு கொள்முதல் பண்ண முடியுமா? அதனாலதான், நிறைய பேர் தவிர்த்துட்டாங்க. அதனால, வர்ற வருஷமும் டிமாண்ட்தான் இருக்கும். அரசாங்கம் ஏதாவது செஞ்சு, வெங்காய சாகுபடிப் பரப்பை அதிகரிக்கற வரைக்கும் பிரச்னை தீராது'' என்கிறார், 40 ஆண்டுகளாக வெங்காய வியாபாரத்தில் அனுபவம் கொண்ட திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த கே.கே. ராமசாமி.

தனி வாரியம் வேணும்!

'விர்...விர்..' விலையேற்றம்....

முன்னோடி வெங்காய சாகுபடியாளரும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவருமான என்.எஸ். பழனிச்சாமி, ''பெரிய வெங்காயம், வளமான தோட்டத்தைவிட, தரிசு நிலத்துலதான் நல்ல மகசூலைக் கொடுக்கும். வெங்காயம் பயிராகிட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலத்தை, காற்றாலை மின்சார உற்பத்திக்களமா மாத்திட்டிருக்காங்க. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புது ரக சின்ன வெங்காய விதைகளைக் கண்டுபிடித்து, தாய் விதைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துடுது. அதனாலதான், விதைக்காக விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் கையேந்திட்டிருக்காங்க. பெரிய வெங்காய விதை பத்தி இதுவரை எந்த ஆராய்ச்சியும் பல்கலைக்கழகத்தில் நடக்கல. பெரிய வெங்காய விதையை கர்நாடக மாநிலத்துல இருந்துதான் வாங்க வேண்டியிருக்கு. வெங்காய விதையை மானிய விலையில் அரசாங்கமே விவசாயிகளுக்குக் கொடுக்கணும். அதிகம் விளையுற பகுதிகள்ல சேமிப்புக் கிடங்குகள் அமைக்கணும். வெங்காய உற்பத்தியைக் கூட்டவும், கட்டுப்படியான விலை கிடைக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும் வெங்காயத்துக்காக தனி வாரியம் அமைக்கணும்'' என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு,
'அக்ரி’ பரமேஸ்வரன்,
செல்போன்: 98439-07878
கே.கே.ராமசாமி, செல்போன்: 94433-84985
மோகன்ராஜ், செல்போன்: 97151-55252
செல்வராஜ்,
செல்போன்: 93459-41301

 நாங்களே செய்கிறோம்... விதை உற்பத்தி!

''என்னதான் விலை எகிறினாலும், வெங்காய விதை பத்தி எங்களுக்குக் கவலையே இல்ல. காரணம், எங்களுக்குத் தேவையான விதைகளை, எங்க நிலத்துலயே நாங்க உற்பத்தி செய்துக்கிறோம்'' என்கிறார்கள், தாராபுரம் வட்டம் குங்குமம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்-சித்ரா தம்பதி.

'விர்...விர்..' விலையேற்றம்....

''பெல்லாரி, சின்ன வெங்காய வெள்ளாமையில கொடிகட்டி பறந்த ஊருங்க இது. என்னதான் தண்ணி பஞ்சம் வந்தாலும்... பருவமழை கிடைக்கும்கிற நம்பிக்கையில ஒரு ஏக்கர்லயாவது வெங்காயத்தை நடவு செஞ்சுடுவோம். செலவைப்பத்தி கவலைப்படாம லாரி தண்ணியை வாங்கி ஊத்தியாவது வெள்ளாமை எடுத்திடுவோம். ஆனா, எங்களுக்கு ஒரே பிரச்னை விதைதான். நல்ல விதைகளைத் தேடி ஆந்திரா வரை அலைஞ்சுருக்கோம். சமயத்துல போலி விதைகள் கிடைச்சு, முதலுக்கே மோசமாகிடும். இதையெல்லாம் மனசுல வெச்சுத்தான் விதை உற்பத்திய நம்மளே செய்துடலாம்னு இறங்கிட்டோம். ஏக்கருக்கு குறைஞ்சபட்சம் 250 கிலோ விதை கிடைக்கும். இந்த வருஷம் ஊர் பூரா விதைக்கு ஏக டிமாண்ட். ஆனா, எங்க. கைவசம் தேவையான விதை இருக்கறதால, கவலையில்லாம இருக்கோம். விதை விற்பனை உரிமத்தையும் முறைப்படி வாங்கிட்டோம். தேவைக்குப் போக மீதியை உள்ளூர் விவசாயிங்களுக்கு வித்துடுவோம்'' என்கிறார்கள் இந்தத் தன்னம்பிக்கைத் தம்பதி!

 நம்பினார் கெடுவதில்லை..!

பல்லடம் அடுத்துள்ள கள்ளகிணறு கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரியா, ''வருஷா வருஷம் நாலு ஏக்கர்ல சின்ன வெங்காயம் நடவு செய்வோம். இந்த வருஷம் 45 சென்டுலதான் போட முடிஞ்சுது. அந்தளவுக்கு வறட்சி. கிணத்துல கெடச்ச கொஞ்ச தண்ணியை வெச்சு நாத்து நடவு செஞ்சதுல 4 டன் வெங்காயம் அறுவடையாச்சு.

'விர்...விர்..' விலையேற்றம்....

கிலோ 50 ரூபாய்னு வித்ததுல ரெண்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைச்சுது. வழக்கம் போல நாலு ஏக்கர்ல போட்டிருந்தா, பெரிய தொகை கிடைச்சுருக்கும்'' என்றபடியே மீதமிருந்த வெங்காயத்தை கையில் அள்ளிக் காட்டிய சிவப்பிரியா, ''ஏதோ ஒரு வருஷம் வெலை கிடைக்காமல் போச்சுனு வெசனப்பட்டு, அடுத்த போகத்துல நடவு செய்யாம விட்டுடறாங்க சிலர். அப்படி செய்யாம, தொடர்ந்து கொஞ்சம் நிலத்துலயாவது பயிர் செஞ்சா... நிச்சயம் கைகொடுக்கும்'' என்கிற ஆலோசனையையும் சொன்னார்.

 3 மாதம் சேமிக்கலாம்!

போதிய விலை கிடைக்காத காலங்களில் வெங்காயத்தை சேமித்து வைப்பது பற்றி சில விஷயங்களைச் சொல்கிறார், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மாபட்டியைச் சேர்ந்த வெங்காய விவசாயி செல்வராஜ். ''அறுவடை செஞ்ச உடனே வந்த விலைக்கு விக்காம, நல்ல விலை கிடைக்கும்போது விக்கிறதுதான் புத்திசாலித்தனம்.

'விர்...விர்..' விலையேற்றம்....

பூமியிலிருந்து 1 அடி உயரத்துக்கு பட்டறை போட்டு சேமிச்சு வெச்சா... மூணு மாசம் வரை தாக்கு பிடிக்கும். 3 அடி அகலம், நாலரை அடி உயரம், தேவைகேத்த நீளத்துல காத்து நுழைஞ்சு வெளிய போற மாதிரி மூங்கில் படல் அமைக்கணும்.

 பக்கவாட்டுல கல்தூண் அல்லது கம்புகளை நட்டு, அதுக்கு இடையில மூங்கில் படலை வெச்சி கட்டணும். கூரை, கூம்பு வடிவத்துல இருக்கணும். அப்பதான் மழை பெய்ஞ்சாலும் சாரல் அடிக்காது. முன்னயெலாம் சீமை ஓட்டுலதான் கூரை அமைச்சாங்க. இப்ப தகரம், பிளாஸ்டிக் கூரைகள் வந்துடுச்சு. பட்டறையில சேமிக்க கோ-4 ரகம்தான் ஏத்தது. கோ-5 ரகத்தை பட்டறையில சேமிக்க முடியாது. சேமிக்கணும்னு முடிவு பண்ணிட்டா, காயை நல்லா விளையவிட்டு, தாள் முழுக்க மடங்கின பிறகுதான் அறுவடை செய்யணும்'' என்றார்.

'விர்...விர்..' விலையேற்றம்....