Published:Updated:

மோட்ராகியிலிருந்து தஞ்சாவூருக்கு..!

ஓவியம்: ஹரன்

மோட்ராகியிலிருந்து தஞ்சாவூருக்கு..!

ஓவியம்: ஹரன்

Published:Updated:

நம்மாழ்வார்
வரலாறு

##~##

 'சேசுராசபுரம் கிராமத்தில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய வன்முறை குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவரும், கன்சர்வேட்டரும் வந்து பொது விசாரணை நடத்த வேண்டும்’ என்ற எங்கள் கோரிக்கையை, ஆட்சியர் அலட்சியப்படுத்தினார். 'என்னுடைய பணியாளரை அடிப்பது... என்னையே அடிப்பது போலத்தான்’ என்று வெளிப்படையாகப் பேசினார். ஓசூர் நீதிமன்றத்தில் வாய்தா, வாய்தா... என வழக்கை இழுத்தடித்துக் கொண்டு இருந்தார்கள். ஏழை மக்கள் 65 கிலோ மீட்டர் தூரம் வேலையை விட்டுவிட்டு, பயணம் செய்து திரும்புவதே பெரிய தண்டனையாக இருந்தது. பங்குத் தந்தைக்கு வழக்கை எடுத்து நடத்துவதில் ஆர்வம் இல்லை. பெங்களூருவில் இருந்த 'இந்தியன் சமூக நிறுவனம்' அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனாலும், பிரச்னை முடியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கிராமத்து மக்கள், முன்பெல்லாம் அடக்க ஒடுக்கமாகவும், பணிவுடனும் சொன்னதைக் கேட்டு கொண்டுதான் இருந்தார்கள். வெள்ளைச் சட்டை போட்டவர்கள் நாலு பேர் வந்த பிறகுதான் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் உரிமை களைப் பற்றி பேசுகிறார்கள். வன அலுவலர் களை எதிர்த்து, கேள்வி கேட்கிறார்கள். இப்பொழுது அதிகாரிகளின் உடையைக் கிழித்து, அடித்து, காயப்படுத்தி இருக்கிறார் கள்’ என்று கதையை திசை திருப்பினார்கள் அதிகாரிகள்.

இதுபோன்ற பிரச்னைகளால்... மோட்ராகி கிராமத்தைவிட்டு வெளியேற முடிவு செய் தோம். இந்த சமயத்தில், இரண்டு ஊர்களில் தடுப்பணை கட்டியதோடு, 32 தோட்டங்களில் மல்பெரி வளர்த்து பட்டுபுழு வளர்க்க வைத்திருந்தார் ஆஸ்வால்டு!

மோட்ராகியிலிருந்து தஞ்சாவூருக்கு..!

இந்தியன் சமூக நிறுவனம் மூலமாக பெரிய நாயகசாமி, ஜான் பிரிட்டோ என்ற இருவர் எங்களுக்கு அறிமுகமானார்கள். ஆஸ்வால்டு, நான், மற்ற இருவருமாக இருந்த இந்த நால்வர் குழு... 'தஞ்சாவூர் மாவட்டத்தில் பணி செய்யலாம்’ என முடிவெடுத்து, மோட்ராகி மக்களிடம் பிரியாவிடை பெற்றுப் புறப்பட்டோம். முதலில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் சென்று வேலையைத் தொடங்கினார் பெரிய நாயகசாமி. சமூகத்தை ஆய்வு செய்வதில் அவர் தனிப்பயிற்சி பெற்றவர். இங்கே திருச்சி-தஞ்சாவூர் தொடர்வண்டிப் பாதைக்கு தெற்கே உள்ள பகுதியில் மழை குறைவு. சுருக்கமாகச் சொன்னால்... மாவட்டத்திலேயே வறுமைப்பட்ட மக்கள் வாழும் பகுதி. இங்கே பணியாற்ற முடிவு செய்த நாங்கள் தொடர்பு கொண்ட முதல் இளைஞர்... வளப்பக்குடி, ஜீவானந்தம். அரசியல் கட்சிகளின் பிரசாரத்தில் பங்குகொண்ட அனுபவம் கொண்டவர். சிறந்த கபடி வீரர்!

ஜீவானந்தம் மூலமாக பக்கத்து ஊர் இளைஞர்களைத் தொடர்பு கொண்டோம். எந்த ஒரு ஊரிலும் இரண்டு பேருக்கு மேல் ஒன்று சேர்க்க முடியவில்லை. வளப்பக்குடியில் மட்டும் ஐந்தாறு இளைஞர்கள் தேறினார்கள். அந்த கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு... காலியாக இருந்த ஒரு வீட்டை அலுவலகமாக மாற்றி, இளைஞர்களுடன் கூடிப் பேசினோம். முன்னேற்றம் சரியான பாதையில் செல்ல, ஒரு நிறுவனம் தேவையென முடிவு செய்தோம். 'மக்கள் சகோதர, சகோதரிகளாக வாழ்வதற்கு ஒரு தாய் வயிற்றில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை’ என்கிற உண்மையை உணர்த்தும் விதத்தில் எங்கள் நிறுவனத்துக்கு 'குடும்பம்’ என பெயர் சூட்டினோம். நிர்வாகப் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பின்னணியிலிருந்து வழி நடத்த முடிவு செய்தேன்.

அரசு அலுவலகங்களுக்குச் சென்று வேளாண் திட்டங் கள், கால்நடைப் பராமரிப்பு போன்றவற்றை கற்று வர ஏற்பாடு செய்தோம். வெளியில் போய் வருவதில் மகிழ்ச்சியடைந்தார்கள். கிடைத்த புதிய நண்பர்களைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். இந்தக் காலகட்டத்தில்... கல்லூரியில் படித்து பட்டம் பெற்று வெளியேறிய இளைஞர்கள், வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கியதால்... மாநிலம் எங்கும் கிராம முன்னேற்றப் பணியில் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். அன்னிய நாட்டு அறக்கொடையைப் பெற்று, அமைப்புகள் பல உருவாகி செயல்பட்டன. பல பெயர்களிலிருந்த சிறுசிறு குழுக்கள் ஒரு பேரியக்கத்தோடு தங்களை ஈடுபடுத்தி வந்தன. சமூகப் பொருளாதார மாற்றங்கள் வராமல், மனித சமுதாயம் மேம்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, மாற்றத்துக்கான கருவிகளாக செயல்பட வேண்டுமென முடிவு செய்தோம். இந்த அமைப்புக்கு 'செயல்பாட்டுக் குழுக்களின் கூட்டமைப்பு’ (Federation of Action Groups) என்று பெயர் சூட்டினோம்.

மோட்ராகியிலிருந்து தஞ்சாவூருக்கு..!

1982-ம் ஆண்டில் இந்த அமைப்பில் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு... பிறகு, தலைமைப் பொறுப்புக்கும் வந்தேன். சென்னை முதல் கன்னியாகுமரி வரை உறுப்பினர்கள் இருந்தாலும்... கூட்டமைப்பில் இருந்த குழுக்களின் எண்ணிக்கை இருபத்தைந்துக்கு மேல் அதிகரிக்கவில்லை. மாநிலம் முழுவதும் முறைசாரா கல்விப் பணி நடைமுறைக்கு வந்தது. முன்னிரவுப் பொழுதில் மக்களை ஒருங்கிணைத்து, 'ஒன்றாகக் கற்போம், எல்லாரும் கற்போம்’ என்ற பாணியில் கல்வியைக் கொண்டு செல்வதுதான் முறைசாரா கல்வி. பிரேசில் நாட்டுத் துறவி 'பாலோ ஃப்ரேரொ’ கண்டு உணர்த்திய முறை இது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், ஏராளமாக களத்தில் இருந்தார்கள். பெரிய அளவில் நிதி பெற்ற சாதிய அமைப்புகளும், கிறிஸ்தவ நிறுவனங்களும் நிறைய இருபால் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, பால்மாடு வளர்ப்பது, பிளாஸ்டிக் கூடை முடைவது, கிராமங்களில் கைத்தொழில் வளர்ப்பது... போன்ற பணிகளையே மேற்கொண்டார்கள்.

எங்கள் கூட்டமைப்பு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக களப்பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தது. இந்தக் காலகட்டத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மூன்றாம் அரங்க நாடகங்கள்... வழக்குக்கு வந்தன. மேற்கு வங்க மாநிலத்தில் பாதல் சர்க்கார் தலைமையில் பரவலாக்கப்பட்ட மூன்றாம் அரங்க நாடகங்கள், தமிழக இளைஞர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. கொடைக்கானல் மலையில் செயல்பட்ட 'கெட்ஸ்’ நிறுவனத்தின் தலைவர், சிவா சாந்தகுமார், இதில் முனைப்பாகச் செயல்பட்டார். மதுரையில் இருந்து இலவச சட்ட உதவிக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர், 'நீதியரசர்’ பகவதி போன்றவர்களின் உதவியோடு 'சோக்கோ’ நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்பட்டது. அதனுடன் தன்னை இணைத்துக் கொண்ட ஃப்ரான்சிஸ், மிகச்சிறந்த நாடகக் கலைஞராகத் தேர்ச்சி பெற்றார். 'குடும்பம்’ அமைப்பைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ, ராஜேந்திரன் இருவரும் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர்கள். ராமசாமியிடம் பயிற்சி பெற்றவர்கள். செயல்பாட்டுக் குழுக்களிடம் மூன்றாம் அரங்க நாடகம் புகுந்தவுடன், குழுக்களின் செயல்பாடு... புதிய பரிமாணத்தைத் தொட்டது!

- இன்னும் பேசுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism