Published:Updated:

அடுக்குமாடி குடியிருப்பில், அசத்தல் தேனீ வளர்ப்பு!

பா. வேலுமணி படங்கள்: மு.ரா. நிவாஸ்

பயிற்சி

##~##

'அவள் விகடன்’, 'பசுமை விகடன்’ மற்றும் 'கோவில்பட்டி பசுமை இயக்கம்' ஆகியவை இணைந்து வழங்கும் 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ எனும் புதுமைப் பயிற்சி... கடந்த 27.10.13 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்!

பசுமை இயக்கத்தைச் சேர்ந்த காளிதாஸ் வரவேற்க, ஜி. ரமேஷ் தலைமை ஏற்க... கோவில்பட்டி உதவி ஆட்சியர் டாக்டர். கே. விஜயகார்த்திகேயன், ''இந்த அவசர யுகத்தில், விவசாயம் செய்ய ஆர்வம் இருந்தும் நிலம் இல்லாதவர்களுக்கு, வரப்பிரசாதம்தான் மாடித் தோட்டம். நம் முன்னோர்கள் வீட்டின் முற்றத்திலும், கொல்லையிலும் செய்ததை... இன்றைக்கு தொட்டி வைத்து, மாடிகளில், பால்கனிகளில் செய்கிறோம்'' என்று அழகாக ஆரம்பித்து வைத்தார்.

முன்னோடி வீட்டுத் தோட்ட விவசாயியான கோயம்புத்தூர்

அடுக்குமாடி குடியிருப்பில், அசத்தல் தேனீ வளர்ப்பு!

வின்சென்ட், முன்னோடி தேனீ பண்ணையாளர் தளவாய்புரம் ஜெயக்குமார், காளான் வளர்ப்பில் கலக்கும் திண்டுக்கல் கவிதா மோகன்தாஸ் ஆகியோர், வீட்டிலும் விவசாயம் செய்வது எப்படி என்பதை, தங்களுடைய அனுபவத்திலிருந்தே பகிர்ந்து கொண்டவிதம்... பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஈர்த்தது!

தேனீ வளர்ப்பைப் பற்றி சொல்லிக் கொடுத்த தளவாய்புரம் முன்னோடி தேனீ பண்ணையாளர் ஜெயக்குமார், ''தோட்டங்கள்ல மட்டுமில்ல... பெருநகர அடுக்குமாடி குடியிருப்புகள்லகூட தேனீக்களை வளர்க்க முடியும். அதுக்கு ஏத்த மாதிரி சுவர்ல தொங்க விடுற மாடல்ல பெட்டி இருக்கு. இதை சுவத்துல தொங்க விட்டுட்டா போதும். தேனீக்கள் வெளிய போய் உணவு எடுத்துட்டு திரும்பவும் உள்ள வந்துடும். இந்த பெட்டியில கண்ணாடி இருக்கறதால.. பெட்டிக்குள்ள இருக்கற தேனீக்களோட செயல்பாடுகளை கண்காணிக்கவும் முடியும். மரங்கள் இருக்கற பகுதியில குடியிருக்கறவங்க... இந்தப் பெட்டிகள் மூலமா தேன் உற்பத்தி செய்யலாம். மாசம் ஒரு கிலோ அளவுக்கு தேன் எடுக்கலாம். அலங்கார மீன்களை வளக்குற மாதிரி... தேனீக்களையும் வளர்த்து வருமானம் பாக்கலாம்'' என்று வழிகாட்டினார்.

''இது ரொம்பவும் பயனுள்ள பயிற்சி. இதுக்காக விகடன் குழுமம் மற்றும் பசுமை இயக்கத்துக்கு நன்றி'' என்றபடி கலைந்தனர் மக்கள்!