Published:Updated:

சம்பங்கி, கோழிக்கொண்டை, செம்மறி...

சிக்கன விவசாயம்... சிறப்பான வருமானம்! மகசூல் ஜி. பழனிச்சாமி படங்கள்: க. ரமேஷ்

##~##

  'எந்த ஒரு விஷயத்தையும், தெளிவாகத் திட்டமிட்டு செய்தால்... வெற்றி மேல வெற்றிதான்' என்பதற்கு உதாரணமாக... சந்தோஷ மணம் வீசும் சம்பங்கி, 'பளபள’ வண்ணம் காட்டும் பட்டுப்பூ (கோழிக்கொண்டை) என மலர் சாகுபடியில் சிறப்பான வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறது... மூர்த்தி-ஜெயசித்ரா தம்பதி!

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அடுத்துள்ள அம்மாபாளையம் கிராமத்தில், முழுக்க கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி, இதை சாதித்துக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதியிடம் பேசப் பேச... 'சின்னச்சின்ன நுணுக்கங்களைக்கூட எத்தனை அழகாக உள்வாங்கிக் கொண்டு, அதையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தி, சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்' என்கிற பெருமை நமக்கு மேலிடுகிறது!

பூமியிலிருந்து பெய்யும் மழையாக, சம்பங்கி வயலில் சுழன்று சுழன்று பாசன நீரைத் தூவிக் கொண்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி (தெளிப்பு நீர்) பாசனக் கருவிகள் மற்றும் கோழிக்கொண்டைப்பூ வயலில் ஆங்காங்கே நெளியாத பாம்புகளாகக் கிடக்கும் சொட்டு நீர்ப் பாசனக் குழாய்கள்... இதையெல்லாம் கைநீட்டும் தம்பதி, ''இதுங்க மட்டும் இல்லாம போயிருந்தா... நாங்களும் எப்பவோ விவசாயத்தை விட்டு வெளியேறியிருப்போம். இதுதாங்க சத்தியமான உண்மை'' என்கிறது ஏக நெகிழ்ச்சியுடன்!

சம்பங்கி, கோழிக்கொண்டை, செம்மறி...

தொடர்ந்து பேசிய மூர்த்தி, ''எங்களுக்கு இந்த இடத்துல 8 ஏக்கர் நெலம் இருக்கு. இது ரொம்ப வறட்சியான பகுதி. மழை வந்தா... சோளம், நிலக்கடலைனு விதைப்போம். சில வருஷமா சரியான மழை இல்லாததால... பாட்டன், பூட்டன் வெட்டின கிணறும் வத்திப் போச்சு. நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்துக்குப் போயிடுச்சு. சரினு, 900 அடி ஆழத்துக்கு போர்வெல் போட்டோம். அதுலயும் குறைவான தண்ணிதான். மாடு, கன்னு... கொஞ்சம் தென்னை மரம் இதுக்கு மட்டும்தான் போதுமானதா இருந்துச்சு. இந்த நிலையில, 'தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிற போர்வெல் தண்ணியை வெச்சு, சொட்டு நீர், பட்டாம்பூச்சிப் பாசன முறைகள் மூலமா பணப்பயிர்கூட சாகுபடி செய்யலாம்'னு பசுமை விகடன்ல படிச்சு தெரிஞ்சுகிட்டோம் அதன்படிதான் சம்பங்கி ஒரு ஏக்கர், கோழிக் கொண்டை ஒரு ஏக்கர்னு சாகுபடி செய்துட்டிருக்கோம்.

குறைவான அளவே கிடைக்கிற போர்வெல் தண்ணியை சேமிச்சு வெக்கிற மாதிரி சிமெண்ட் தொட்டி கட்டினோம். சம்பங்கி வயலுக்கு பட்டாம்பூச்சி பாசனக் கருவிகளையும், கோழிக்கொண்டைப் பூவுக்கு சொட்டுநீர்க் குழாய்களையும் அமைச்சோம். பட்டாம்பூச்சி பாசனக் கருவிகளை, கம்பெனி மூலமா அமைச்சா... 30% கூடுதல் செலவாகும். அதனால, 'பசுமை விகடன்'ல பேட்டி கொடுத்திருந்த அனுபவ விவசாயிகளைத் தொடர்புகொண்டு, அவங்க ஆலோசனைப்படி நானும் என் மனைவியும் கடைகள்ல இருந்து, நேரடியா வாங்கி பொருத்திட்டோம். ஏக்கருக்கு 180 தெளிப்புக் கருவிகள் தேவைப்படும். 5 அடி உயரமுள்ள குச்சிகளை நட்டு, 'நாசில்’களை அதுல பொருத்திட்டோம். பம்ப்செட்டை போட்டுவிட்டா... '180’ பட்டாம்பூச்சிக் கருவிகளும் 'சர்சர்’னு சாரல் மழையா செடிங்க மீது தெளிக்குது.

சம்பங்கி, கோழிக்கொண்டை, செம்மறி...

கோழிக்கொண்டைச் செடிகளுக்கும் வேர்ப்பகுதியில பாசனம் கொடுக்கிற சொட்டுநீர்க் கருவிகளை நாங்களே பொருத்திட்டோம். கோழிக்கொண்டைப் பூ, வெல்வெட் மாதிரி ரொம்ப மென்மையான இதழ்களைக் கொண்டது. அதுக்கு பட்டாம்பூச்சி பாசனம் சரிப்பட்டு வராது. அதனாலதான், அதுக்கு மட்டும் சொட்டு நீர்'' என்ற மூர்த்தி,

''பூ விவசாயத்தை இயற்கை முறையில செய்யுறது கொஞ்சம் சிரமமான காரியம்னு பரவலா சொல்வாங்க. நாங்க பெருமுயற்சி எடுத்து, அதை செய்துட்டு வர்றோம். எல்லாம் பசுமை விகடன் சொல்லித் தந்த தைரிய பாடம்தான்'' என்று தெம்பாகச் சொல்லிவிட்டு, சம்பங்கி மகசூல் பக்கம் பேச்சைத் திருப்பினார்.

அது பாடமாக இங்கே விரிகிறது...

'சம்பங்கி, கிழங்கு வகை மலர்ச்செடி. சித்திரை, வைகாசிப் பட்டத்தில் நடவு செய்வது மிகவும் உகந்தது. ஏக்கருக்கு

200 முதல் 300 கிலோ விதைக் கிழங்குகள் தேவைப்படும். திருவண்ணாமலையில் இருந்து வரவழைத்து, நடவு செய்தேன். போக்குவரத்துச் செலவோடு சேர்த்து, 25,000 ரூபாய் ஆனது. நடவுக்கு முன், நிலத்தின் மண் பொலபொலப்பாக மாறும்படி,  இரண்டு முறை கோடை உழவு செய்யவேண்டும். தொடர்ந்து, 10 டிராக்டர் தொழுவுரத்தை அடியுரமாகக் கொட்டி, பரவலாக இறைத்து சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, மண்வெட்டி கொண்டு, 3 அடி இடைவெளி பார் அமைத்து, வரப்பு நனையும்படி பாசன நீரைப் பாய்ச்சி, வடிந்து சுண்டியபின் இரண்டுக்கு இரண்டு அடி இடைவெளியில் கிழங்குகளை நடவு செய்யவேண்டும்.

விதைக் கிழங்கு தேர்வு என்பது மிகமுக்கியம். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பலன்கொடுத்த செடிகளின் கிழங்குகளைத்தான் தோண்டி எடுத்து பயன்படுத்த வேண்டும். முன்னதாக விதைக் கிழங்குகளை பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, விதைநேர்த்தி செய்வது அவசியம்.

100 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து, அதில் விதைக் கிழங்குகளை 5 நிமிடம் வரை ஊறவைத்து, நடவு செய்வேண்டும். இது, வேர்அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவதோடு, செடிகள் ஊக்கமுடன் வளரவும் உறுதுணை புரியும்.

சம்பங்கி, கோழிக்கொண்டை, செம்மறி...

கிழங்கில் இருந்து பிரதான செடி ஒன்றும், அதைச் சுற்றிலும் கிளைச் செடிகளும் வளர்ந்து பூ பூக்கும். நடவுசெய்த 90 நாளில், பிரதான செடியில் பூ அறுவடை செய்யலாம். தொடர்ந்து, 180 நாளில் கிளைச்செடிகள் பூக்கத் தொடங்கும். 90 நாளில் இருந்து, 180 நாட்கள் வரை ஒரு ஏக்கரிலிருக்கும் பிரதான செடிகளிலிருந்து நாள் ஒன்றுக்கு மொத்தம் மூன்று கிலோ அளவில் பூப்பறிக்க முடியும். 180 நாட்களுக்குப் பிறகு பக்கக் கிளைகளில் இருந்தும் பூக்கள் கிடைப்பதால், சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 கிலோ வரை அறுவடை செய்யலாம். தொடர்ந்து, 3 ஆண்டுகள் வரை தொடர் மகசூல் தரும் மலர்ப் பயிர் இது.'

மகசூல் பாடம் முடித்த மூர்த்தி, ''சாயந்திர வேளைகள்ல பூக்களைப் பறிக்கறதுக்கு முன்ன, பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமா செடிகள் லேசாக நனையறதா, பறிக்கற பூ காலை வரைக்கும் வாடாம இருக்கும். மொத்தத்தையும் ஆரம்பத்துல திருப்பூர் பூ மார்க்கெட்டில் கொடுத்துட்டிருந்தேன். என் தோட்டத்து பூ பளபளனு இருக்கறதோட... பெரிசாவும், நல்ல வாசத்தோடயும் இருக்கறதும்... மூணு நாள் வரை வாடாம இருக்கறதும் பலரையும் ஆச்சர்யப்பட வெச்சுடுச்சு. இதைப் பார்த்துட்டு, டிபார்ட்மென்ட் ஸ்டோர்காரங்க (பழமுதிர்ச்சோலை), சந்தை விலையைவிட கூடுதலா கொடுக்கறதா சொல்லிக் கேட்டாங்க. அதனால இந்த ரெண்டு வருஷமா தினமும் அவங்களுக்குத்தான் நேரடியா கொடுக்கிறேன்.

சந்தையோட தேவை அதிகமா இருக்கறப்ப கிலோ 450 ரூபாய் வரைகூட விலைபோகும். அந்தப் பருவத்துல மகசூல் குறைவாக இருக்கறதும், ஒரு காரணம். குறைந்தபட்ச விலையா, கிலோ 100 ரூபாய் வரை கிடைக்கும். சராசரியா 100 ரூபாய்னு வெச்சுக்கலாம். அதேபோல, சராசரியா தினமும் 25 கிலோ வீதம், வருஷத்துக்கு 7 முதல் 8 டன் பூ கிடைக்குது'' என்று மூர்த்தி சொல்ல,

''சொட்டு நீர், பட்டாம்பூச்சிப் பாசனம் இதையெல்லாம் அமைக்கறது தொடங்கி... உரம், பூச்சிவிரட்டி தயாரிச்சு தெளிக்கறது.. தினமும் பூக்களைப் பறிச்சு, சந்தைக்குக் கொண்டு போறதுனு எந்த வேலைக்கும் சம்பள ஆட்கள் வெச்சுக்கல. தோட்டத்துலயே வீடுகட்டி குடியிருக்கறதால... வீட்டு வேலையையும் நாங்களே பார்த்துக்கிறோம்.

டிராக்டர் உழவு, தொழுவுரம், பார் பாத்தி, நீர்ப் பாசனக் கருவிகள், விதைக்கிழங்கு, வேப்பெண்ணெய் எல்லாம் சேர்த்து, 1 லட்சம் ரூபாய் செலவு பிடிக்குது. இயற்கை வழியில மலர் சாகுபடி செய்யறதால உற்பத்திச் செலவு ரொம்ப குறைவுதான். பாசனக் கருவி வாங்கினதுதான் பெரிய செலவு. ஏக்கருக்கு 35,000 ரூபாய்க்கு வாங்கினோம் (5 வருஷம் வரைகூட, பழுதில்லாமல் இந்தக் கருவி இயங்கும்). நாங்க உற்பத்தி செய்யுற பூ எல்லாம் முதல் தர வரிசையில வர்றதால.... செலவு போக, 5 லட்ச ரூபாய்க்கும் மேல சம்பங்கிப் பூவுல மட்டுமே வருமானம் கிடைக்குது'' என்று ஜெயசித்ரா நிறுத்த...

''கோழிக்கொண்டைப்பூ பத்தி சொல்ல மறந்துட்டேன்'' என்ற மூர்த்தி,

''90 நாட்கள் மட்டுமே மகசூல் தரக்கூடிய ஒரு போகப் பயிர் இது. நாற்றங்கால்ல

15 நாள், பூத்து வர்றதுக்கு 35 நாள்னு மொத்தம் 50 நாள்ல மகசூலுக்கு வந்துடும். வாரம் ரெண்டு, மூணு முறை பறிக்கலாம். ஏக்கருக்கு மொத்தமா 3 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியா ஒரு கிலோ 15 ரூபாய் விலையில விற்பனை செஞ்சாலே... 45 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும். செலவு

15 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் லாபமா கையில நிக்கும்'' என்று சொன்னார்,

நிறைவாக ''குறைவான தண்ணியில, நிறைவான விவசாயம் செய்யறதுக்குக் கைகொடுக்கறது... பட்டாம்பூச்சிப் பாசனமுறை; இயற்கை வழி விவசாயத்தால இணையில்லாத லாபத்தை எடுக்கற வித்தையைக் கத்துத் தந்தது... பசுமை விகடன். இலவசமாவே களை எடுக்கறதோட... எருவையும் கொடுக்குதுங்க செம்மறி ஆடுகள்... இத்தனை உதவிகளும் ஒண்ணா சேர்ந்து... சிக்கன விவசாயத்துல சிறப்பான வருமானத்தை எங்களுக்குத் தந்திட்டிருக்கு'' என்று ஒரே குரலாக நெகிழ்வு காட்டி, விடை கொடுத்தது இந்த மூர்த்தி-ஜெயசித்ரா விவசாயத் தம்பதி!

 வேப்பெண்ணெய் புகை... பூ வாடலுக்குப் பகை!

பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன. தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள் நன்கு நனைவதால்... பேன், அசுவிணி மாதிரியான பூச்சித் தாக்குதல் தடுக்கப்படுகிறது. மாதம் ஒரு முறை, 100 லிட்டர் தண்ணீரில் சுத்தமான வேப்பெண்ணெய் 2 லிட்டர் அளவுக்குக் கலந்து புகைபோல் தெளிப்பதன் மூலமாக பூவாடல் நோய் கட்டுப்படுகிறது.

மூவிலைக் கரைசல்!

வேப்பிலை, ஊமத்தை இலை, எருக்கன் இலை  என இம்மூன்று இலைகளும் கைக்கு எட்டும் தூரத்துக்குள்ளாகவே கிடைக்கக் கூடிய இலைகள். இவை மூன்றையும் தலா 10 கிலோ அளவில் பறித்துவந்து, அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் சேர்த்து ஊறவைக்க வேண்டும். தொட்டி நிழலில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. தினமும் ஒரு முறை இதைக் கலக்கிவிட்டு வந்தால்... ஐந்தாம் நாள், அடர் பச்சை நிறத்தில் தொட்டி தண்ணீர் மாறியிருக்கும். இந்தக் கரைசலை வடிகட்டி, சொட்டுநீர் பிரதானக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள வெஞ்சர் கருவி மூலம் செலுத்தி, பட்டாம்பூச்சிக் கருவி மூலமாக பாசனம் செய்யவேண்டும். இந்த மூவிலைக் கரைசல், பூச்செடிகளைத் தாக்கும் அனைத்துப் பூச்சிகளையும் விரட்டி அடிப்பதுடன், வேர்அழுகல் நோய் வராமலும் தடுக்கும். மாதம் இரு முறை இந்த மூவிலைக் கரைசலைக் கொடுக்கலாம். இதை, காலை அல்லது மாலை வேளைகளில், மட்டுமே கொடுக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தெம்பு தரும் தேங்காய் தண்ணீர்!

பூக்கள் ஒரே சீராகவும், அதேசமயம் பெரிதாகவும் வளர்ந்து இருந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். இதற்கு தேங்காய் தண்ணீர் வைத்தியம் கை கொடுக்கும். முற்றிய தேங்காயின் தண்ணீர் 50 லிட்டர் அளவு எடுத்துக் கொண்டு, மாதம் இரண்டு தடவை தெளிப்புநீர் வழியே செடிகள் நன்றாக நனையும்படி கொடுக்க வேண்டும். இதிலுள்ள இனிப்புத் தன்மை, தேனீக்களை அதிக அளவில் செடிகளின் பக்கம் ஈர்த்து, அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துவதால், அழகான பெரிய பூக்கள் கிடைக்கின்றன.

மூர்த்தியின் தோட்டம் இருக்கும் பகுதியில் கொப்பரை உற்பத்தி செய்யும் உலர்களங்கள் இருப்பதால், அங்கு உடைக்கப்படும் தேங்காய் தண்ணீர் இலவசமாகவே அவருக்குக் கிடைத்துவிடுகிறது. பிரபலமான கோயில், ஹோட்டல் என்று தேங்காய்கள் பெரிதாகப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டால், தேவையான தேங்காய் தண்ணீரைப் பெற முடியும்!

 செம்மறி ஆடுகள் தரும் மூன்றுவித லாபம்!

 ஆட்டு எரு: 'மாட்டு எரு மறுவருஷம் பிடிக்கும்... ஆட்டு எரு அப்பவே பிடிக்கும்' என்றொரு பழமொழி உண்டு. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை, நம்மாழ்வார் பயிற்சி மூலமாக உணர்ந்திருக்கும் இந்தத் தம்பதி... இதை சிறப்பாகப் பயன்படுத்தியும் வருகிறது.

இதைப் பற்றி பேசும் மூர்த்தி... ''உரம் போடுறதோட, களையையும் எடுக்குற வேலையைச் செய்துட்டு... சம்பளமே வாங்கிக்காத ஜீவன்கள்தான் செம்மறி ஆடுகள். காலையில 9 மணி தொடங்கி, சாயங்காலம் 4 மணி வரைக்கும் சம்பங்கி, கோழிக்கொண்டை வயலுக்குள் தலைகவிழ்த்திட்டு மாங்கு மாங்குனு இணைபிரியாம மேஞ்சுட்டே இருக்கும். வயல்ல முளைக்கிற களைகளைத் தின்னு அழிச்சுட்டே இருக்கும். அதுபோக பொழுதன்னிக்கும் அதுக போடுற புழுக்கைகள் பூச்செடிகளுக்கு நேரடி உரமா போய்ச் சேர்ந்துடும். மற்றபடி அதுகள கிடையில அடைச்சு வைக்கும்போது, கிடைக்கிற ஆட்டு எருவையும் கொண்டுவந்து, வருஷம் இரண்டு தடவை வடகிழக்கு பருவமழைக்கு முன்னதா செடிக்கு 5 கிலோ வீதம் கொடுத்துடுவோம். இந்த உரம், மழையில நல்லாவே வேலை செஞ்சு, பெரிய பூக்களா மலர வைக்கும்.

10 செம்மறியாட்டுக் குட்டிகளை தலா 2,500 ரூபாய் விலையில், மொத்தம் 25,000 ரூபாய் கொடுத்து வாங்கி, பூ வயல்ல மேய விடுறோம். 5 மாதம் மேய்ஞ்ச பிறகு, தலா 5,000 ரூபாய்னு விற்பனை செய்றோம். பிறகு, புதுசா 10 குட்டிகளை வாங்கி வந்து மேய விடுறோம். ஆக, வருஷத்துக்கு 20 செம்மறி ஆடுகள விற்பனை செய்றது மூலமா... 50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது. கூடவே களை எடுக்குற செலவு 10 ஆயிரம், எருச் செலவு 5 ஆயிரம் ரூபாய் மிச்சமாகுது. ஆகமொத்தம் செம்மறி ஆடுங்க மூலமா 65 ஆயிரம் ரூபாய் கிடைக்குது'' என்கிறார் கண்களில் குஷிபொங்க!  

தொடர்புக்கு,
மூர்த்தி,
செல்போன்: 97904-95966.