Published:Updated:

ஏக்கருக்கு 4 லட்சம்... நெகிழ வைக்கும் நேரடி விற்பனை...

முத்தான வருமானம் தரும் முல்லை! மகசூல் காசி. வேம்பையன் படங்கள்: ச. வெங்கடேசன்

##~##

தான் வாடினாலும்... எப்போதும் தன்னை சாகுபடி செய்யும் விவசாயிகளை வாட வைப்பதில்லை, மலர்கள்...

 - அனுபவ மலர் விவசாயி ஒருவர் சொன்ன வாசகம் இது. 'அது எந்த விதத்திலும் பொய்யில்லை’ என்று முகம் மலர்கிறார், வேலூர் மாவட்டம், ரஸ்லாபாக்கம், மகாலிங்கம்! இவர், காட்பாடியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் லத்தேரி கிராமத்தில் மலர் சாகுபடி செய்து வருகிறார். பூ விற்பனையையும் நேரடியாக மேற்கொண்டு, அப்பகுதி விவசாயிகளுக்கு முன்னோடியாகவும் இருக்கிறார்.

கரும்பிலிருந்து காய்கறி!

பச்சைக் கம்பளம் விரித்தது போலிருக்கும் மகாலிங்கத்தின் முல்லைத் தோட்டம் தேடிச் சென்றபோது... மனைவி, மருமகள் என குடும்பத்தினர் சகிதமாக நம்மை அன்புடன் வரவேற்றவர், ''அரசாங்க வேலையில சேரணும்கிறது என்னோட சின்ன வயசு ஆசை. அதுக்காகவே பி.எஸ்சி படிச்சுட்டு, வேலை தேட ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷமா அலைஞ்சும் கிடைக்கல. அந்த கோபத்துல எல்லா சர்டிஃபிகேட்டையும் கிழிச்சுப் போட்டுட்டு... குடும்பத் தொழிலான விவசாயத்துல இறங்கிட்டேன். வழக்கமா கரும்பு, நெல், வாழைனு அப்பா சாகுபடி செய்வார். அதுல கணக்கு பாத்தா... வரவுக்கும், செலவுக்கும் பெரும்பாலும் சரியா போயிடும்.

ஏக்கருக்கு  4 லட்சம்... நெகிழ வைக்கும் நேரடி விற்பனை...

நான் விவசாயத்துல இறங்கினதும், வழக்கமான பயிர்களை விட்டுட்டு, கத்திரி, வெண்டை, முள்ளங்கினு காய்கறிகளை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். அதுலயும் சொல்லிக்கற மாதிரி வருமானம் இல்லை. அதனால, வருமானம் அதிகம் கிடைக்கிற பயிர்களைத் தேட ஆரம்பிச்சேன். அது 1979-ம் வருஷம். அப்போ, என்னை மாதிரியே தேடல்ல இருந்த சிலரோட தொடர்பு கிடைச்சுது. நாங்க பத்து பேர் ஒண்ணா சேந்து, தமிழ்நாடு முழுக்க சுத்தி, பல விவசாயிங்ககிட்ட பேசினோம். எங்க பகுதி மண், சீதோஷ்ணம், கிடைக்கிற தண்ணீர் அளவு எல்லாத்தையும் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு... 'மா, கொய்யா, சப்போட்டா மாதிரியான பழ மரங்களையும், முல்லைப்பூவையும் செஞ்சா லாபகரமா இருக்கும்’னு நிறைய விவசாயிங்க அறிவுரை சொன்னாங்க'' என்று சொல்லும்போது மகாலிங்கத்தின் முகம் வேகமாக மலர்கிறது.

ஏக்கருக்கு  4 லட்சம்... நெகிழ வைக்கும் நேரடி விற்பனை...

கை கொடுத்த முல்லை!

தொடர்ந்தவர், ''நாங்க எல்லாருமா கொய்யா, எலுமிச்சை, முல்லை மூணையும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம். ஆனா, வறட்சிக்கு கொய்யா தாக்கு பிடிக்கல. அதனால, மூணாம் வருஷமே கொய்யா மரங்களை வெட்டிட்டேன். எலுமிச்சை நல்லா வந்தாலும், இங்க சரியா விற்பனை பண்ண முடியாததால, ஏழு வருஷம் கழிச்சு அதையும் கழிச்சுட்டேன். ஆனா, ஒன்றரை ஏக்கர்ல இருந்த முல்லைப்பூ கை விடல. நல்ல வருமானம் கொடுத்துச்சு. அதனால, 'இந்தப் பகுதிக்கு இதுதான் ஏத்தது’னு மத்த விவசாயிங்ககிட்ட எடுத்துச் சொல்லி... அவங்களுக்கும் நானே நாத்து உற்பத்தி பண்ணிக் கொடுத்து கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர்ல முல்லைப்பூவை சாகுபடி செய்ய வெச்சேன்.

இப்போ, 6 ஏக்கர் சொந்த நிலம், 10 ஏக்கர் குத்தகை நிலம்னு... மொத்தம் 16 ஏக்கர்ல விவசாயம் செய்றேன். 70 சென்ட்ல மஞ்சள், நாலரை ஏக்கர்ல மல்பெரி, ரெண்டரை ஏக்கர்ல சப்போட்டா, ஒரு ஏக்கர்ல தீவனச்சோளம், 70 சென்ட்ல பட்டன் ரோஸ், ஒண்ணரை ஏக்கர்ல சம்பங்கி, நாலு ஏக்கர்ல முல்லை இருக்கு. மீதி இடத்துல பட்டுப்புழுக்கான கொட்டகை, ஆட்டுக்கொட்டகை எல்லாம் இருக்கு'' என்று முல்லைப்பூ சாகுபடிக்கு, தான் வந்த கதை சொன்ன மகாலிங்கம், அடுத்தக் கட்டமாக இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதையை ஆரம்பித்தார்.

வழிகாட்டிய பேராசிரியர்!

''2000-ம் வருஷத்துக்கு முன்னவரைக்கும் ரசாயன விவசாயம்தான். ஒரு முறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பாஸ்கரை சந்திச்சேன். அப்ப, 'ரசாயனம், பூச்சிக்கொல்லிகளால மண்வளம் கெட்டுப் போயிடும்’னு சொன்னவர், இயற்கை விவசாயம் பத்தியும் எடுத்துச் சொன்னார். அப்பறம்தான், ரசாயனத்தைக் குறைச்சுக்கிட்டு கோழி எரு, உயிர் உரங்கள்னு மாறினேன். இப்ப எங்க வீட்டுல அரிசி இருக்கோ இல்லையோ... தோட்டத்துல பஞ்சகவ்யா கரைசல் எப்பவுமே இருக்கும். இப்போ, கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இயற்கை விவசாயம்தான். கொஞ்சமாதான் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்துறேன்'' என்றவர், முல்லை சாகுபடி செய்யும் விதத்தைச் சொன்னார். அது அப்படியே பாடமாக இங்கே...  

ஏக்கருக்கு 3,000 செடிகள்!

ஏக்கருக்கு  4 லட்சம்... நெகிழ வைக்கும் நேரடி விற்பனை...

'முல்லை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். செம்மண், களிமண், கரிசல்மண் ஆகியவை ஏற்றவை. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடவுக்கு ஏற்ற மாதங்கள். தேர்வு செய்த நிலத்தை களைகள் இல்லாத அளவுக்கு நன்கு உழுது... இறுதியாக, ஏக்கருக்கு 15 டன் தொழுவுரம், 250 கிலோ ஜிப்சம், 250 கிலோ சூப்பர்-பாஸ்பேட் என்ற கணக்கில் கொட்டி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு வரிசை, அடுத்து 6 அடி இடைவெளியில் ஒரு வரிசை, அடுத்து 3 அடி இடைவெளியில் ஒரு வரிசை, அடுத்து 6 அடி இடைவெளியில் ஒரு வரிசை, அடுத்து 3 அடி இடைவெளியில் ஒரு வரிசை இருப்பது போல மாற்றி மாற்றி அளந்து.. ஒவ்வொரு வரிசையிலும் குழிக்குக் குழி 3 அடி இடைவெளி இருக்குமாறு, ஒரு கன அடி அளவுக்கு குழிகள் எடுக்க வேண்டும் (ஏக்கருக்கு 3 ஆயிரம் குழிகள் எடுக்கலாம்). இதற்கு 'இணை நடவு முறை’ என்று பெயர். குழியை ஒரு வாரம் ஆறப்போட்டு,

10 லிட்டர் தண்ணீரில், 300 மில்லி பஞ்சகவ்யா கலந்து... 8 மாத வயது கொண்ட முல்லைப் பதியன்களை, அக்கரைசலில் நனைத்து, குழியில் நடவு செய்ய வேண்டும்.

முதல் ஆண்டில் 500 கிலோ மகசூல்!

மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். 7-ம் நாளில் புதுத்துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும். பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் கட்டினால், போதுமானது. 20-ம் நாளுக்கு பிறகு, 6 மாதங்களுக்கு பவர் வீடர் மூலமாகக் களைகளை அகற்ற வேண்டும். 60-ம் நாளில் ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ கோழி எரு வைத்து, கொத்திவிட வேண்டும். 20-ம் நாளில் இருந்து, தொடர்ச்சியாக, 20 நாட்களுக்கு ஒரு முறை டேங்குக்கு (10 லிட்டர்) 300 மில்லி பஞ்சகவ்யா, தலா 10 மில்லி வீதம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 10 டேங்குகள் தேவைப்படும். முதல் ஆண்டில், பூச்சித்தாக்குதல் பெரிய அளவில் இருக்காது. அதனால் பூச்சிக்கொல்லிகளுக்குத் தேவையிருக்காது. 5-ம் மாதத்துக்குப் பிறகு, மொட்டு அரும்பி மகசூலுக்குத் தயாராகும். ஒரு ஏக்கரில் இருந்து, தினம் இரண்டு கிலோ முதல் மூன்று கிலோ வரை பூ எடுக்கலாம். முதல் ஆண்டு என்பதால், 450 கிலோ முதல் 500 கிலோ அளவுக்கு மட்டும்தான் மகசூல் கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் கூடும்.

கவாத்து... கவனம்!

ஏக்கருக்கு  4 லட்சம்... நெகிழ வைக்கும் நேரடி விற்பனை...

வழக்கமாக, டிசம்பர் மாதத்தில் மகசூல் முடிவடையும். ஜனவரி மாதத்தில் பலரும் கவாத்து செய்து விடுவார்கள். ஆனால், அப்படிச் செய்யாமல்... ஒரு மாதம் விட்டு பிப்ரவரி மாதத்தில் கவாத்து செய்தால், மகசூல் கூடுகிறது. முதல் ஆண்டு கவாத்தின்போது, மண்ணுக்கு மேல் செடிகள் அரையடி உயரம் இருக்குமாறு விட்டு, மேல்பகுதியை வெட்டிவிட வேண்டும். இரண்டாவது ஆண்டு கவாத்து செய்யும் போது ஒரு அடி உயரம் விட்டு வெட்ட வேண்டும். அதையடுத்து வரும் ஆண்டுகளில் கவாத்து செய்யும்போது, ஓர் அடி ஓர் அங்குலம், ஓர் அடி இரண்டு அங்குலம் என்று ஒவ்வொரு அங்குலமாகத்தான் கூட்டிக் கொண்டே வர வேண்டும். கவாத்து செய்த செடிகளில் 'பென்சில்’ தடிமனுக்குக் குறைவாக உள்ள கிளைகள், பச்சைத்தண்டு உள்ள பாகங்கள் அனைத்தையும் நீக்கவேண்டும். தொடர்ந்து டேங்குக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, தலா 10 மில்லி சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேம், 20 மில்லி வேப்பண்ணெய், 10 மில்லி இயற்கை ஒட்டுத்திரவம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க  வேண்டும். முதல் இரண்டு மாதங்களுக்கு 10 நாட்கள் இடைவெளியிலும், அதன்பிறகு 20 நாட்கள் இடைவெளியிலும் இக்கலவையைத் தொடர்ந்து தெளித்து வர வேண்டும்.

கவாத்து செய்த 20-ம் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 250 லிட்டர் தண்ணீரில், 5 கிலோ கடல்பாசி உரம், 10 லிட்டர் பஞ்சகவ்யா, தலா ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், வேம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றிவிட வேண்டும். கவாத்து செய்த 45-ம் நாளில் இருந்து, பூவெடுக்க ஆரம்பிக்கும். 45, 105, 165-ம் நாட்களில் பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களை இட வேண்டும். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் என ஆண்டுக்கு இரண்டு முறை 10 டன் கோழி எரு, 500 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிலத்தில் இறைத்து, களைகளைக் கொத்திவிட வேண்டும். நூற்புழு, செம்பேன் ஆகியவை தாக்கினால், பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.'

சாகுபடிப் பாடம் முடித்த மகாலிங்கம் நிறைவாக, ''ஏப்ரல் மாசம் தொடங்கி, டிசம்பர் வரைக்கும் பூ எடுக்கலாம். ரெண்டாம் வருஷத்துல இருந்து முழு மகசூல் கிடைக்க ஆரம்பிச்சுடும். ஒரு ஏக்கரில் தினமும் 20 கிலோவுல இருந்து 25 கிலோ வரை பூ கிடைக்கும். சராசரியா ஒரு செடியில இருந்து வருஷத்துக்கு 2 கிலோ பூ கிடைக்கும். 3 ஆயிரம் செடியில இருந்து சராசரியா 6 டன் பூ கிடைக்கும். ஒரு கிலோ முல்லைப் பூ 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகுது. சராசரியா கிலோவுக்கு 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டா... 6 டன்னுக்கும் வருஷத்துக்கு 6 லட்ச ரூபாய் கிடைக்கும். எல்லா செலவும் போக, 4 லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம்!'' மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார்.

 ''பூச்சிகளுக்கு இயற்கை முறையிலேயே தீர்வு இருக்கு...''  

முல்லைச் செடிகளில் பூச்சி மேலாண்மை பற்றி பூச்சியியல் துறை வல்லுநர்

நீ. செல்வம் சொன்ன தகவல்கள்...

ஏக்கருக்கு  4 லட்சம்... நெகிழ வைக்கும் நேரடி விற்பனை...

''முல்லைச் செடிகளில் தேவைக்கு அதிகமான பச்சை நிறம் இருந்தால், நுனி மொக்குப்புழு (நூற்புழு) அதிகமாக தாக்கும். ரசாயன உரம் இடும்போது வேப்பம் பிண்ணாக்கையும் கலந்து இட்டால், செடிகள் கரும்பச்சை நிறம் அடையாது. ரசாயன உரங்களைத் தவிர்த்து அதற்கு மாற்றாக, கடலைப்பிண்ணாக்கு, மண்புழு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல கடைகளில் விற்கப்படும் வேப்பம் பிண்ணாக்கில் வீரியம் குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. அதனால், நாமே இடித்துப் பயன்படுத்தினால், பலன் சிறப்பாக இருக்கும். தவிர, செடிகளை கவாத்து செய்ததும், முதல் வாரம் சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி கரைசல்; அடுத்த வாரம் பஞ்சகவ்யா என தெளிப்பதுதான் சரி. அனைத்தையும் ஒன்றாகக் கலக்கும்போது நுண்ணுயிர்கள் செயல்படாமல் போக வாய்ப்புள்ளது.

நுனி மொக்குப் புழுக்கள் தாக்கப்பட்ட செடிகளில், இலைகள் 'வெல்வெட்’ போல மாறி இருக்கும். சிலந்தி வலை நூல் போல மொக்குப் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த அறிகுறிகளை வைத்து, புழுவின் தாக்குதலை அறியலாம். ஆரம்பநிலைத் தாக்குதல் என்றால், வேப்பங்கொட்டை-பூண்டுக் கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம். அதிகத் தாக்குதல் என்றால், மிளகாய்-பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். செம்பேன் சாறு உறிஞ்சும் வகையைச் சேர்ந்தது. இது தாக்கினால், வேப்பங்கொட்டை-பூண்டுக் கரைசலைத் தெளித்தாலே போதுமானது''

தொடர்புக்கு: நீ.செல்வம், செல்போன்: 94435-38356.

 ''நாமளே விற்பனையில இறங்கினா... கூடுதல் லாபம்!''

முல்லைப்பூ சாகுபடி செய்வதோடு, சொந்தமாக கமிஷன் கடையும் நடத்தி வருகிறார், மகாலிங்கம். அதைப் பற்றிப் பேசியவர், ''முல்லைப்பூவை, விற்பனை செய்ய வேலூர் கொண்டு போறப்போ... வியாபாரிகள் எல்லாம் சிண்டிகேட் போட்டுக்கிட்டு விலையைக் குறைச்சு ஏமாத்தினாங்க.

நாங்க, கண்டுபிடிச்சு சண்டை போட்டப்போ... கொஞ்ச நாள் ஒழுங்கா பணம் கொடுத்தவங்க, திரும்பவும் ஏமாத்த ஆரம்பிச்சாங்க. 'பூ சாகுபடி பத்தி எதுவுமே தெரியாத வியாபாரிகள், கொள்ளை லாபம் பார்க்குறாங்க. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்ற நாம நஷ்டப்படுறதா?’னு நாங்களே வியாபாரியா மாற முடிவு பண்ணி... 'வடஆற்காடு மாவட்ட மலர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு’ உருவாக்கினோம் (தற்போது, வடஆற்காடு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு வேலூர், திருவண்ணாமலை என செயல்பட்டு வருகிறது). நாங்க பூ விக்கிறதுக்கு வேலூர்ல கடை வாடகைக்கு கேட்டப்போ, மத்த வியாபாரிகள் தலையிட்டு தடங்கல் செய்தாங்க. கலெக்டரைப் பார்த்து பேசி, கடையைப் பிடிச்சோம். அதனால, எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பிச்சுது. அப்பறம், 'நாம பூ விக்கறதுக்காக எதுக்கு இவ்வளவு தூரம் அலையணும்’னு யோசிச்சு 'அவங்கவங்க உற்பத்தி செய்ற ஊர்லயே விப்போம்’னு முடிவு பண்ணினோம். நான், லத்தேரியிலயே கடை ஆரம்பிச்சேன்.

என் தோட்டத்துப் பூ மட்டுமில்லாம, மத்தவங்ககிட்டயும் கொள்முதல் பண்ணி, திருப்பதி, பெங்களூர், சென்னை, கல்லூர், புத்தூர்னு பல ஊர்களுக்கு அனுப்பிட்டிருக்கேன். இப்ப இங்க மட்டும் 16 கமிஷன் கடைகள் இருக்கு. அந்த அளவுக்கு முல்லைப்பூ சாகுபடி இந்தப் பகுதியில பெருகி இருக்கு'' என்கிறார் பெருமிதமாக!

வேப்பங்கொட்டை பூண்டுக் கரைசல்!

வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)... காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில்

24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்கிற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.

பச்சை மிளகாய் பூண்டுக் கரைசல்!

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து,

3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து, 10 லிட்டர் அளவுக்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 100 கிராம் காதி சோப்பைக் கரைத்துவிட வேண்டும். இதை, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

தொடர்புக்கு,

மகாலிங்கம்,

செல்போன்: 94434-87770.