மஞ்சள் மகிமை!

மதிப்புக் கூட்டும் மந்திரம்! லாபத்தைப் பெருக்கும் லட்டு தொடர்! 12முனைவர். க. அழகுசுந்தரம்

Published:Updated:
##~##

 ழங்கள் மற்றும் காய்கறிகளின் தரத்தை மேம்படுத்துவது, முருங்கை, வாழை, மா, நெல்லி ஆகியவற்றிலிருந்து மதிப்புக் கூட்டும் பொருட்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து இதுவரைப் பார்த்தோம். இங்கே மஞ்சள் பற்றிப் பேசுவோம்.

இந்திய கலாசாரத்தில் முதன்மையான மற்றும் முக்கியப் பொருளாக விளங்கும் மஞ்சள், சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமை மிக்கது. இது, இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. கணிசமான மழையில் செழித்து வளரும் தன்மை கொண்டது. மஞ்சள் நன்றாக வளர்வதற்கு, 20 முதல் 30 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை தேவை. உலக உற்பத்தியில் ஏறத்தாழ 78 சதவிகித மஞ்சள், இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மூன்றே முக்கால் லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 7.18 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, இது மேலும் அதிகரிக்கவே செய்திருக்கும். காரணம்... கரும்பு, மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளில் கணிசமானோர், கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடிக்கு மாறியிருப்பதுதான்.

இந்தியாவின் மஞ்சள் உற்பத்தியில் ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. அங்கு, 38% மஞ்சள் உற்பத்தி செய்யப்படுவதால், 'இந்தியாவின் மஞ்சள் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் 15 சதவிகிதமும், ஒரிசாவில் 14 சதவிகிதமும் மேற்கு வங்காளத்தில் 8 சதவிகிதமும் மஞ்சள் உற்பத்தி நடக்கிறது. இதில், ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால், உலகளவில் இந்திய மஞ்சளுக்கான விற்பனைச் சந்தை பரந்து விரிந்து கிடக்கிறது.

மஞ்சளில் காணப்படும் 'குர்குமின்’ என்கிற வேதிப்பொருள், புற்றுநோய், அல்சர், நீரிழிவு நோய், மூட்டு வீக்கம்... போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துத் தயாரிப்புகளில் பிரதான பங்கு வகிக்கிறது. புரதம், கார்போ-ஹைட்ரேட், கொழுப்புச்சத்து, வைட்டமின்-சி, மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்டவையும் நிறைந்திருக்கின்றன. மனித உடலுக்கு நன்மை செய்யக்கூடிய மிகமுக்கிய வேதிப்பொருட்களும் மஞ்சளில் உள்ளன.

இந்தியாவில்... குறிப்பாக தமிழகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முக்கிய மருந்தாக மஞ்சள் பயன்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருந்துகள், கிருமிநாசினிகள், முகப்பூச்சுகள் தயாரிக்கவும், சாயத்தொழிற்சாலைகளில் நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் ஏற்றுமதியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் மஞ்சள்தூள் போடாமல் சமையல் இல்லை என்கிற அளவுக்கு தவிர்க்க முடியாத அத்தியாவசிய உணவுப் பொருளாகவே விளங்குகிறது.

இப்படி மஞ்சளுக்கான சந்தை பரந்து விரிந்திருந்தாலும்... நம் நாட்டில் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் செல்வந்தர்களாக இன்னும் மாறிவிடவில்லை. மஞ்சளை மையப்பொருளாகக் கொண்டுள்ள தொழில் அதிபர்கள்... செழிப்பாகவே இருக்கிறார்கள். காரணம், பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்களை அவர்கள் சிறப்பாகக் கையாளுவதுதான். விவசாயிகளும் இந்தத் தொழில்நுட்பங்களைக் கையில் எடுக்க வேண்டும். அறுவடை செய்த மஞ்சளை அப்படியே விற்பனை செய்து விடக்கூடாது. அதனை தரம் மிக்க, பார்ப்பதற்கு கவர்ச்சிகரமான மஞ்சளாக மாற்றி விற்பனை செய்தால்... கூடுதல் விலை கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட மஞ்சள் தூளாக தயார் செய்து, பாக்கெட், பிளாஸ்டிக் டப்பாக்கள், டின்களில் அடைத்து, பலவித அளவுகளில் விற்பனை செய்தால் பெருமளவில் லாபம் ஈட்டலாம்.

மஞ்சள் மகிமை!

மஞ்சள் பதப்படுத்தும் தொழில்நுட்பம்!

அறுவடை செய்த பிறகு, மஞ்சள் கிழங்கையும், விரலி மஞ்சளையும் பிரித்தெடுத்து, தனித்தனியாகத்தான் பதப்படுத்த வேண்டும். சுருக்கமுள்ள மஞ்சளைத் தவிர்த்து, மற்றவற்றை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். மஞ்சளை இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கொதிநீரில் மூழ்கும் வண்ணம் வேக வைக்க வேண்டும். கொதிநீரில்

1% அளவுக்கு எலுமிச்சை கலந்த உப்பு சேர்க்க வேண்டும். 46 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களுக்கு வேக வைத்தால், இறுதி நிலையில் மிருதுத் தன்மையுடன் நல்ல மணம் மற்றும் நிறம் அதிகரித்து காணப்படும். வேக வைக்கும் நேரம் அதிகரித்தால், மஞ்சளின் நிறம் குறைந்துவிடும். நேரம் குறைந்தால், உலர வைக்கும் போது முறுமுறுப்புத்தன்மையுடன் காணப்படும். எனவே, சரியான நேரத்தைக் கடைபிடிப்பது மிக அவசியம்.

வேக வைத்த மஞ்சள் துண்டுகளை, மூங்கில் பாயில் 6 சென்டி மீட்டர் முதல்7 சென்டி மீட்டர் தடிமனுக்கு ஒரே சீராகப் பரப்பி, சூரிய வெப்பத்தில் 10 முதல் 16 நாட்களுக்கு உலர வைக்க வேண்டும். தடிமன் அதிகமாக இருந்தால், மஞ்சளின் நிறம் குன்றி விடும். எனவே, இதில் கவனம் தேவை. சூரிய வெப்பத்தில் உலர வைக்கும்போது இரவு நேரத்தில் குவியலாகக் குவித்து, நன்கு மூடி வைக்க வேண்டும். சூரிய வெப்பத்தில் உலர வைப்பது, ஒரு வழிமுறையாக இருந்தாலும்கூட, இதில் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதைவிட, மின் உலர்த்தியில் உலர வைப்பது சிறப்பானது. 60 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் உலர வைக்க வேண்டும்.

உலர்த்தப்பட்ட மஞ்சள், கரடுமுரடாகவும், செதில்களுடனும், சிறுசிறு வேர் பிசிறுகளோடும் காணப்படும். வெளித்தோற்றத்தை மெருகேற்ற மற்றும் மிருதுவாக்க, இதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் மஞ்சளைத் தேய்க்கலாம். இந்த இயந்திரத்தை கையினால் சுழற்றும் போது அதன் உட்பகுதியில் உள்ள சல்லடை போன்ற தட்டில் அதிவேகமாக மஞ்சள் தேய்க்கப்பட்டு மெருகேற்றப்படுகிறது. தற்போது மின்விசையினால் இயக்கக்கூடிய நவீன இயந்திரங்களும் வந்து விட்டன.

சந்தை விலை நிர்ணயத்தில் மஞ்சளின் நிறமும் ஒரு காரணியாக இருக்கும். மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து, மெருகேற்றப்பட்ட மஞ்சளின் மீது தெளிப்பதன் வாயிலாக நல்ல நிறம் கிடைக்கும். இதுபோல் பதப்படுத்தி, மெருகேற்றி, நிறமேற்றப்பட்ட மஞ்சளுக்கு பல மடங்கு கூடுதல் விலை கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு தரம் குறையாமலும் இருக்கும்.

பதப்படுத்தப்பட்ட மஞ்சள் தூள் தயாரிப்பு!

வேக வைத்து, உலர வைக்கப்பட்ட மஞ்சள் துண்டுகளை மேலும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மின் அரவையிலிட்டு அரைத்து, சல்லடையில் மூன்று அல்லது நான்கு முறை சலித்து, அதன் பின் 'பேக்’ செய்யலாம். பதப்படுத்தப்பட்ட மஞ்சள் தூள் நீண்ட நாட்களுக்கு தரம் குறையாது. மஞ்சள் தூள் தயாரிக்கும் சிறிய அளவிலான தொழிற்கூடங்களைத் தொடங்கி, நேரடியாக விற்பனை செய்யும் முயற்சிகளில் மஞ்சள் விவசாயிகள் இறங்க வேண்டும். புதிய முயற்சிகள்தான் புது வாழ்வு தரும்!

- மதிப்புக்கூடும்...