Published:Updated:

இனியாவது..?

இனியாவது..?

அனைவருக்கும், பசுமை வணக்கம்!

##~##

திரும்பியப் பக்கமெல்லாம்... 'கோமாரி' பற்றிய பேச்சாகவே இருக்கிறது. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டுமே பல ஆயிரம் மாடுகள் பரிதாபமாக இறந்திருக்கின்றன தமிழகத்தில், நோய்த் தாக்குதல் என்பது, இயற்கையின் சதிராட்டம்தான். பருவநிலை மாற்றத்தின்போது புறப்பட்டு வரும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளிடம் சிக்கி, பரிதாபநிலைக்கு ஆளாகின்றன கால்நடைகள். அதற்காக, மொத்தப் பழியையும் இயற்கையின் மீதே போட்டுவிட்டு, தப்பிக்க முடியுமா என்ன?

பருவநிலை மாற்றத்தின்போது நம்மையும்தான் தாக்குகின்றன நுண்ணுயிரிகள். உடனே... 'சுடுதண்ணி சாப்பிடு, ஆவி பிடி, ரசம் வெச்சு சாப்பிடு, டாக்டர்கிட்ட போ...' என்றெல்லாம் அக்கறைகளை

இனியாவது..?

அடுக்குகிறோம். 'கொசுக்கள் பரவினால்... மலேரியா, டெங்கு பரவலாம்... உஷார்!' என்று நடிகர்-நடிகைகளை வைத்து விளம்பரப் படங்களையெல்லாம் வெளியிடுகிறது அரசாங்கம். ஆனால், மாடுகள் என்று வரும்போது... நம்மில் பலரும் சுத்தமாகக் கண்டுகொள்வதே இல்லை. நோய்த் தாக்குதல் பாதிப்பு பெரிய அளவில் வடிவெடுத்தபிறகும்... 'ம்... மாடுதானே' என்கிற அலட்சியப் போக்கே அரசாங்கத்திடமும் இருக்கிறது!

மாடுகளை வெறும் பாலுக்காக மட்டுமே நாம் வளர்க்க ஆரம்பிக்கவில்லை. அவைதான் விவசாயத்தின் முக்கிய ஆதாரமான சத்துக்கள் நிறைந்த தொழுவுரத்தைக் கொடுக்கும் தொழிற்சாலைகள். 'மாட்டுப் பொங்கல்' ஒன்று போதும்... இந்த உண்மையை உலகுக்கு எடுத்து வைக்க! ஆனால், ஒருகட்டத்தில் இயற்கை உரத்துக்கான தேவை குறைந்தபிறகு, பால் கொடுக்கும் இயந்திரங்களாக மட்டுமே மாடுகளைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினோம், நிலத்தடி நீரையும் கெடுத்தோம். விளைவு... கிராமங்களில்கூட 'மினரல் வாட்டர்...' பாட்டில்கள் பளபளக்கின்றன. ஆனால், வாயில்லா ஜீவன்கள்? கழிவுநீரும்... கண்டகண்ட நீரும் கலந்திருக்கும் நீர்நிலைகளில்தானே அவற்றின் தாகசாந்தி நடக்கிறது. இப்படிப்பட்ட நீரைக் குடிப்பதால் மாடுகளுக்கு மட்டுமல்ல, அவற்றின் பாலைக் குடிக்கும் நமக்கும்கூட பாதிப்புதான். எனவே, சுயநலத்தோடாவது... சுகாதாரமான நீரை மாடுகளுக்குக் கொடுக்க, இனியாவது உறுதியேற்போம்.

ஆசிரியர்