Published:Updated:

என்ன விலை மரமே !

படம்: வீ.சிவக்குமார்

பசுமைக் குழு

விற்பனை

##~##

 10.10.13 தேதியிட்ட 'பசுமை விகடன்’ மரப்பயிர்கள் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில், 'என்ன விலை மரமே’ என்ற தலைப்பில் மரங்களின் விலை விவரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டிருந்தோம். விலை விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதை, தஞ்சாவூர் சண்முகம், கடலூர் அருண்பாபு உள்ளிட்ட வாசகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் வனத்துறை என ஒவ்வொரு தரப்பிலிருந்தும் சொல்லப்படும் ஒவ்வொரு மாதிரியான தகவல்கள்... ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் ஒவ்வொரு மாதிரியான விலை; ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக் கூடிய உத்தேச விலை... என்று பலவாறான தகவல்களும் சேர்ந்து, ஒன்றாகக் கலந்து இடம்பிடித்ததுதான் விலை முரண்பாடுகளுக்குக் காரணம். அத்தோடு, மரங்களின் வயது மற்றும் தரத்துக்கு ஏற்பவும் விலையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி தெளிவுபடுத்தப்படாததும் இதற்கு ஒரு காரணம்.

மரங்களுக்குக் குறிப்பிட்ட விலை நிர்ணயம் இல்லாதது குறித்து, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரிப் பேராசிரியர் பார்த்திபனிடம் கேட்டபோது, ''மலைவேம்பு, சவுக்கு, பெருமரம், சூபாபுல், தைலம், குமிழ், சிசு ஆகிய ஏழு வகையான மரங்களே தமிழகத்தின் 70% நிலங்களில் பயிரிடப்படுகின்றன. காகித ஆலைகள், பிளைவுட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஏழு வகை மரங்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்துள்ளது எங்கள் கல்லூரி.

என்ன விலை மரமே !

தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், மூங்கில், வேங்கை, வேம்பு ஆகிய மரங்கள் 30% அளவிலேயே வணிகரீதியாகப் பயிரிடப்படுகின்றன. இந்த மரங்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலை கிடைக்கிறது. இந்த மரங்களுக்கு, குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லாததால், வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறார்கள். தேக்கு மரத்துக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்'' என்று சொன்னார்.

விவசாயிகளுக்குப் பெருத்த சந்தேகம் ஏற்படுவது செஞ்சந்தனம் மரத்தின் விலையில்தான். இதைப் பற்றி பேசிய ஓய்வுபெற்ற உதவி வனப் பாதுகாவலர் ரா. ராஜசேகரன்,

''மரங்களின் அறுவடைக்கு அவற்றின் வயதைப் பார்ப்பதைவிட, மரங்கள் முற்றியிருப்பது முக்கியம். முறையான மண்வளம், பாசனம், பராமரிப்பு இருக்கும் இடங்களில் மட்டுமே வயதுக் கணக்கு சரியாக வரும். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தென்பகுதியில் வளரும் செஞ்சந்தன மரங்களில் மட்டுமே சேகு உருவாகிறது. மற்றப் பகுதிகளில் எதிர்பார்க்கும் அளவுக்கு உருவாவதில்லை.

என்ன விலை மரமே !

ஒரு சந்தன மரத்தில் இத்தனை கிலோ சேகு கிடைக்கும் என்று சொல்வது ஒரு தோராயமான கணக்காக இருக்குமே தவிர, துல்லியமான கணக்கைச் சொல்ல முடியாது. தரத்தைப் பொருத்து கிலோ 600 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை சந்தன மரத்தின் சேகுக்கு விலை கிடைக்கும். சந்தன மரத்தின் சேகுவை வனத்துறை மூலமாக மட்டுமே விற்பனை செய்ய முடியும்'' என்றவர்,

என்ன விலை மரமே !

''பொதுவாக மரங்களின் விற்பனை விலையைப் பொறுத்தவரை, ஊருக்கு ஊர் நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம்... மர விற்பனை முறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான். எனவே, விவசாயிகள் தாங்களாக முயற்சி எடுத்து பல இடங்களிலும் விசாரித்து, விலை நிலவரங்களைத் தெரிந்து கொண்டு விற்பனை செய்யும்போதுதான் லாபமடைய முடியும்'' என்றும் சொன்னார்.

விலையைப் பற்றிய தெளிவை உருவாக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மர வியாபாரிகள், வனத்துறை அலுவலர்கள், மரசாகுபடி விவசாயிகள் என பலதரப்பிலும் விசாரித்து, அவர்கள் தந்த விவரங்களின் அடிப்படையில் உத்தேச விலைப் பட்டியல் ஒன்றை இங்கே வெளியிட்டுள்ளோம்.

முக்கிய குறிப்பு: விலைகள் எந்த நேரமும் மாறலாம். எனவே, இப்பட்டியலை, ஒரு வழிகாட்டியாக மட்டுமே கையாளவும்.

தொடர்புக்கு,
பேராசிரியர். பார்த்திபன்: 94435-05844
ராஜசேகரன்: 94424-05981