Published:Updated:

கொலைகார கோமாரி...இயற்கை முறையில் எளிய தீர்வு!

படங்கள்: சொ. பாலசுப்ரமணியன் த. ஜெயகுமார்

பிரச்னை

##~##
சமீபகாலமாக கால்நடை விவசாயிகள் பீதியோடு உச்சரிக்கும் வார்த்தை... 'கோமாரி'. 'எப்ப வருமோ, என்ன ஆகுமோ’ என்ற அச்சத்துடனேயே மாடுகளைப் பராமரித்து வருகிறார்கள். கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் தொடங்கிய கோமாரி... தற்போது கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைக் கடந்து, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல ஆயிரம் மாடுகளை காவு கொண்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மாட்டுச் சந்தைக்கு தடைகூட விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்தான் என்றில்லை... கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் கோமாரி நோய்த் தாக்குதலுக்கு மாடுகள் பலியாகியுள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் இதன் தாக்குதல் அதிகம். எல்லைப்புறத்திலிருக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஆகஸ்ட் மாதமே தொடங்கிவிட்ட கோமாரி, தற்போது விஷ்வரூபம் எடுத்திருக்கிறது. மூன்று மாதங்களில் ஆயிரக்கணக்கான மாடுகளை காவு வாங்கி விட்டது. இதற்கென இருக்கும் இங்கிலீஷ் மருந்துகள் எல்லாம் பல் இளித்துவிட்ட நிலையில், என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டுள்ளது, கால்நடைப் பராமரிப்புத் துறை.

இந்நிலையில், கோமாரி நோய் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்குவதற்காக... நவம்பர் 13-ம் தேதி, கால்நடைக்களுக்கான மரபுசார் மூலிகை மருத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலைத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர். குமாரவேலு தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில், தஞ்சாவூரில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர். புண்ணியமூர்த்தி, சொன்ன தகவல்களும், பாரம்பரிய வைத்திய முறைகளும் கால்நடை விவசாயிகள் வயிற்றில் பால் வார்ப்பவை.

கொலைகார கோமாரி...இயற்கை முறையில் எளிய தீர்வு!

காற்றில் பரவும் கோமாரி..!

''பருவநிலை மாறுகிற காலங்களில் வைரஸ் கிருமிகள் பரவுவதால்தான் பல தொற்றுநோய்கள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் வருகின்றன. குறிப்பாக, வெயில் காலத்திலிருந்து மழைக்காலமாக மாறும்போது, பாதிப்பு அதிகமாக இருக்கும். இயற்கையிலேயே இதுபோன்ற சுழற்சி  இருக்கிறது. கால்நடைகள், பெரும்பாலும் வெட்டவெளியிலேயே இருப்பதால், எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றன. கோமாரி நோயும் வைரஸால் பரவும் தொற்றுநோய்தான். இந்த வைரஸ் கிருமிகள், காற்றின் வழியாக நீண்ட தொலைவுக்குப் பரவக்கூடியவை'' என்று அறிமுக உரை கொடுத்த புண்ணியமூர்த்தி, நோய்க் கான அறிகுறிகளைப் பற்றிச் சொன்னார்.

கொலைகார கோமாரி...இயற்கை முறையில் எளிய தீர்வு!

தடுப்பூசி அவசியம்!

''கோமாரி நோய் கண்ட மாடுகளுக்கு, வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும். இந்த அறிகுறிகள் இருந்து, இரண்டு நாட்கள் கவனிக்காமல் விட்டால் கூட, மாடுகள் இறந்துவிடும். இதுபோன்ற நோய் பரவும் காலங்களில் நோய் வருகிறதோ, இல்லையோ... தடுப்பூசி போட்டு கொள்வது நல்லது. அப்படியே போடாவிட்டாலும் பரவாயில்லை. இயற்கைத் தடுப்பு முறைகளை சரியாக செய்தால்கூட போதுமானது.

பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகே, செல வில்லாத இந்த இயற்கை மூலிகை மருத்துவத்தை சொல்லிக் கொடுத்து வருகிறோம். இதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை. வீட்டுச் சமையலறையில் இருக்கும்

கொலைகார கோமாரி...இயற்கை முறையில் எளிய தீர்வு!

10 பொருட்கள், தோட்டம், வயல்களில் இருக்கும் 10 தாவரங்கள் இவையே போதுமானவை. இவற்றை வைத்தே மழைக்கால கோமாரி நோயை எளிதாக குணப்படுத்தி விடலாம்'' என்று நம்பிக்கை தந்தவர், அதைப் பற்றி விரிவாகவும் விளக்கினார்.

கோமாரி வாய்ப்புண்!

''தலா 10 கிராம் சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை எடுத்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, மிக்ஸி அல்லது அம்மியில் அரைக்க வேண்டும். கூடவே பூண்டு-4 பல், மஞ்சள் தூள்-10 கிராம் (2 ஸ்பூன்), வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை- 30 கிராம் ஆகியவற்றைக் கலந்து, மீண்டும் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் அரை மூடி தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பிசைந்து, மூன்று விரல்களில் எடுத்து, மாட்டின் கடவாய்ப் பகுதியில் வைத்து, வாயின் மேல்பாகத்தைப் பூசுவதுபோல் கையை வெளியில் எடுக்க வேண்டும். மாட்டுக்கு மேல்வாயின் முன்பகுதியில் பற்கள் இருக்காது. அதனால் கடித்து விடும் என்று பயப்படத் தேவையில்லை. இது ஒருவேளைக்கான அளவு. இதுமாதிரி தினமும் 3 வேளை, அதிகபட்சம் 5 நாட்களுக்குக் கொடுத்து வந்தால், வாய்ப்புண் இருக்கும் இடமே தெரியாமல் ஓடிவிடும்.

கோமாரி கால் புண்!

250 மில்லி நல்லெண்ணெயில், பூண்டு-4 பல், மஞ்சள் தூள்-2 ஸ்பூன், வேம்பு, துளசி, குப்பைமேனி, மருதாணி இலைகள் தலா 1 கைப்பிடி போட்டு, 10 நிமிடங்கள் சூடு படுத்தி... கொஞ்சம் ஆற வைத்து, லேசான சூட்டில் நூல் துணி அல்லது பஞ்சில் நனைத்து, மாட்டின் கால் நகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புண், புழுக்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை புண் மீது படும்படி மேற்புறமும், கீழ்புறமும் தாராளமாகவிட வேண்டும். பாதிக்கப்பட்ட கால் தவிர மற்ற கால்களுக்கும் இவ்வாறு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், கால்புண் ஆறி விடும்.

கொலைகார கோமாரி...இயற்கை முறையில் எளிய தீர்வு!

கோமாரிக் காய்ச்சல்!

கோமாரி நோயுடன் காய்ச்சலும் இருந்தால்... வெற்றிலை-4, சீரகம், மிளகு, தனியா விதை ஆகியவற்றில் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-3, முருங்கை இலை-1 கைப்பிடி, நிலவேம்பு இலை-10 அல்லது 5 கிராம் நிலவேம்புப் பொடி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, நாக்கில் தடவிவிட வேண்டும். இது ஒரு வேளைக்குரிய அளவு. இதுபோல ஒரு நாளைக்கு 5 முறை கொடுக்க வேண்டும். மேற்சொன்ன அளவுகள் ஒரு மாட்டுக்கானவை. இந்த அளவு மருந்தை, ஆறு ஆடுகளுக்குக் கொடுக்கலாம்' என்று சொல்ல, மனநிறைவோடு விவசாயிகள் விடைபெற்றனர்.  

கொலைகார கோமாரி...இயற்கை முறையில் எளிய தீர்வு!

தொடர்புக்கு:

மரபுசார் மூலிகைவழி கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தஞ்சாவூர். தொலைபேசி: 04362-204009.
செல்போன்: 98424-55833.
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், தொலைபேசி: 044-27452371