Published:Updated:

''நல்லா யோசிங்க ப.சி... மக்கள் மனச பிடிக்கறது ஈஸி''

நிதி அமைச்சருக்கு கோவணாண்டி யோசனை ஓவியம்: ஹரன்

கோவணாண்டி

முறையீடு

##~##

கண்ணு ரெண்டும் குருடான பிறகும், சூரிய நமஸ்காரம் செய்யுற மாதிரி நடிச்சுட்டுருக்குற வெள்ளை வேட்டி கட்டின தமிழன், சிவகங்கை சீமான், காங்கிரஸ் கட்சியோட நிரந்த நிதி மந்திரி... இப்படி பல ரூபங்கள் காட்டுற ப. சிதம்பரம் ஐயாவுக்கு, வணக்கம் சொல்லிக்கறான், உங்க பாசக்கார கோவணாண்டி!

''கதர் கட்சியே கதிகலங்கிப் போற அளவுக்கு திடீர்னு 'புரட்சி’ அவதாரம் எடுத்துட்டார் ப.சி. மனுஷன் எடுத்துவிட்ட ஒரே அறிக்கையில, அந்தக் காலத்து ரோமாபுரி ராசா சீஸர் அலறுன மாதிரி, 'யூ டூ மிஸ்டர் சிதம்பரம்?’னு கதர்ச் சட்டைகளே கதறுதுங்கடா''னு உங்க கதையைத்தான் ஓயாம உள்ளூர்ல 'தண்டோரா' போட்டுட்டிருக்காரு... எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியார். அதைப் பத்தி உங்ககிட்ட நாலு வார்த்தை சொல்லலாம்னுதான், ரொம்ப நாளைக்கப்புறம் இந்தக் கடுதாசி!

''அப்படி என்னத்த பெருசா சொல்லிட்டாரு உங்க ப.சி.?''னு கேட்டா... மனுஷன் பொங்குறாருங்க.

''கதர் கட்சியோட பாரம்பரியம் என்னனு தெரியாம பேசாதடா. பொய்யைக்கூட உண்மையாட்டம் பேசுறது; கோஷ்டி கோஷ்டியா இயங்குறது; பதவிக்காக சட்டையைக் கிழிச்சுக்கறதுனு அந்தப் பாரம்பரியம், வேற எந்தக் கட்சியில இருக்கு? அப்படிப்பட்ட இடத்துல உக்கார்ந்துகிட்டு... உண்மையை, 'உண்மை'னு நொம்ப தெகிரியமா சொல்லியிருக்காருல்ல... பாராட்ட வேணாமா?''னு எம்மேலயே எரிஞ்சு விழறாருனா... பார்த்துக்கோங்க.

ராகுல் காந்தியோட கனவுத் திட்டமான, 'குளத்துல கும்மியடிக்குற 100 நாள் வேலை திட்ட'த்தையே, ''உருப்படாத திட்டம்'’னு ஒரக்க சொல்லிட்டீங்களாமே! ''இந்திரா குடியிருப்புத் திட்டம், ஊழல் பெருச்சாளிகளோட கூடாரம். அதுக்கு ஒதுக்குற பணத்த... இன்ஜினீயர்களும், கான்ட்ராக்ட்காரங்களும் ஆட்டையப் போட்டுடறாங்க. இந்தத் திட்டங்களுக்கெல்லாம் ஒதுக்குற நிதி தெண்டம். இனியும் இப்படி ஊதாரித்தனமா செலவு செய்ய முடியாது. பட்ஜெட்ல இதுக்கான நிதியை நறுக்கப் போறேன்''னு கிடுக்கிப்பிடி போட்டுட்டீங்களாமே!

கேக்க கேக்க... புல்லரிக்குதுங்க!

''இது ஏழைகளுக்கான திட்டம், இதுல 'கை’ வெச்சா... தேர்தல்ல ஜனங்க, நம்ம 'கை’ யில 'மை’ வெக்க மாட்டாங்க. தலையிலதான் கை வெப்பாங்க''னு மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மகாராணிகிட்ட... அதுதான் சோனியாகிட்ட போய் பத்தவெச்சும் நீங்க அசரலையாமே!

''நல்லா யோசிங்க ப.சி...  மக்கள் மனச பிடிக்கறது ஈஸி''

''அடுத்த பட்ஜெட்டுல, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள்ள கொண்டு வரணும். இல்லாட்டி, ரூபாய் மதிப்பு ரொம்ப சரிஞ்சு போயிடும். வரவுக்கு மேல செலவு செய்யுற நாடு... சீக்கிரம் திவாலாகிடும். அப்பறம் நம்மள எந்த நாடும் சீண்டாது. இது புரியாம, ஜெய்ராம் ரமேஷ் பேசுறார். யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’'னு... பின்னி எடுத்துட்டீங்களாமே!

ஆனா, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் ஐயா..? அதாவது, இதையெல்லாம் நீங்க நல்ல வாயால சொல்லுறீங்களா... இல்ல, வேற வாயால சொல்லுறீங்களா? ஏன்னா... கொஞ்ச நாளைக்கு முன்ன தான், 'ரூபாய் மதிப்பு சரிவது பற்றிக் கவலை வேண்டாம். ரூபாய்க்கே தெரியும்... எந்த இடத்தில் நிற்பது, நிலைப்பது என்று'னு சொன்னீங்க. இப்ப வேற மாதிரி பேசறீங்களே... ஒருவேளை அது வேற வாயா இருக்குமோங்கற சந்தேகத்துலதான் கேக்கறேன்... தயவு செஞ்சு தப்பா நெனச்சுக்காதீங்க.

ஆமா... இத்தனை நாளா இந்தியாவுலதானே இருந்தீங்க. அப்ப இதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா? 'நூறு நாள் வேலை உறுதித் திட்டம், உருப்படாத திட்டம். விவசாயத்தை ஒழிக்கற திட்டம்’னு விவசாய சங்கத் தலைவர்கள் எல்லாம் நாடு முழுக்க கரடியா கத்திட்டேதானே இருக்காங்க. ஆனா, கமிஷனுக்கு ஆசைப்படற உள்ளூர் அரசியல்வியாதிங்க... செத்துப் போனவங்களையெல்லாம் எழுப்பி, கணக்கு காட்டி, காசு பண்றதுலயே குறியா இருக்குதுங்க. அதையெல்லாம் கட்டுப்படுத்தாம, 'இளவரசர் திட்டத்த உலகமே புகழாரம் சூட்டுது’னு புளங்காகிதம் அடைஞ்சீங்க... இப்ப மட்டும் எதுக்காக எதுத்து நிக்கறீங்க?

''சலுகைனு சொல்லிக்கிட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வருஷா வருஷம் 5 லட்சம் கோடிக்கு மேல் அள்ளி வீசுறாங்க. அப்படியிருக்கறப்ப... 100 நாள் திட்டம், இந்திரா குடியிருப்புத் திட்டம்னு ஏழைகளுக்கு ஒதுக்குற 40 ஆயிரம் கோடியில ஒண்ணும் இந்தியப் பொருளாதாரம் சரிஞ்சுடாது. ஆனாலும், இப்படி ப.சி-க்கு திடீர் ஞானோதயம் வந்ததுதுக்குப் பின்னால... ஏதாச்சும் ஒரு அமெரிக்கக்காரனோ... ஆஸ்திரேலியாக்காரனோ இருப்பான்கிறதுல சந்தேகம் இல்ல''னு எங்க வாத்தியார் சொல்றத ஒதுக்கித் தள்ள முடியலீங்க.

ஐயா... உங்களோட பாழாபோன அரசியலால... பாழா போயிட்டிருக்கறது... எங்க விவசாயமும், நாட்டோட எதிர்காலமும்தான். எல்லா கட்சிக்காரங்களும் சேர்ந்து, கண்டதுலயும் அரசியல் பண்ணி, நாட்டையே நாசமாக்கிட்டீங்க. மக்களுக்கு சோறு போடுற விவசாயத்துலயும் கை வெக்கறீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா?

100 நாள் வேலை திட்டம் வேணாம்னு சொல்லல. அதுல ஆயிரத்தெட்டு நொட்ட... நொடை இருக்குதே அதைத்தான் வேணாம்னு சொல்றோம். இருநூறு நாள் வேலை திட்டமாகூட மாத்துங்க. ஆனா, இதன் மூலமா விவசாய வேலைகளுக்கு வில்லங்கம் வராத மாதிரி பார்த்துக்கோங்க. இந்த திட்டம் மூலமா, விவசாயமும் வளர்ற வகையில மாத்துங்க. ஏழை, பாளைகளுக்கு இந்திரா குடியிருப்புத் திட்டம் சரிதான். ஆனா, அதை வெச்சு கட்சிக்காரங்களும் கான்ட்ராக்ட்காரங்களும் லாபமடையாம பார்த்துக்கோங்க.

தலைக்கு மேல வெள்ளம் போக ஆரம்பிச்சாச்சு. இனியாவது, நிஜமாவே வேஷத்தையெல்லாம் கலைச்சுட்டு... இந்த நாதியத்த விவசாயிகளும், ஏழை-பாளைகளும் வாழற மாதிரி யோச்சிச்சு முடிவு பண்ணுங்க ப.சி. அப்பதான் அடுத்தத் தேர்தலுக்கு மக்கள் மனசுல இடம் பிடிக்கறது ஈஸி!

- இப்படிக்கு,
கோவணாண்டி