ஆலைகளா... அப்பாவிகளா?
##~## |
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
கர்நாடகாவில் கரும்பு விவசாயி பூச்சிக்கொல்லி குடித்து தற்கொலை...
உத்தரபிரதேசத்தில் கரும்பு விவசாயி தூக்கில் தொங்கினார்...
-இனிப்புப் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் பற்றி, இப்படிப்பட்ட துயரச் செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
'ஒரு டன் கரும்புக்கு மூன்றாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என்று தமிழ்நாட்டிலும், விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில், கொஞ்சம்கூட அசைவதாகக் காணோம்.
வழக்கமாக அக்டோபர் மாதம் கரும்பு அரவை சீசன் தொடங்கிவிடும். அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, முத்தரப்புக் கூட்டம் நடத்தி, நடப்பு ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் விலையை மாநில அரசுகள் அறிவிக்கும். மாதங்கள் கடந்தும், இது எதுவுமே இதுவரை நடக்கவில்லை. அதனால், ஆலைகளும், அலட்சியமாக உள்ளன. ஆனால், கரும்பு விளைந்து நிற்கும் வயல்காட்டில், காவல் காத்துக் கொண்டிருக்கும் விவசாயிதான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
'ஒரு டன் கரும்புக்கு மூன்றாயிரம் கொடுக்கலாம்தான். ஆனால், சர்க்கரையை மத்திய அரசு இறக்குமதி செய்வதால், சர்க்கரை விலை குறைந்துவிட்டது. அதனால், விவசாயிகள் கேட்கும் விலையை எங்களால் கொடுக்க முடியவில்லை' என்று ஆலைகள் தரப்பில் சொல்கிறார்கள்.
அதேசமயம், 'கரும்பை வைத்து, சர்க்கரையை மட்டுமே இந்த ஆலைகள் உற்பத்தி செய்வதில்லை. மொலாசஸ், எரிசாராயம், மின்சாரம், காகிதம் உள்ளிட்ட உபபொருட்கள் பலவற்றையும் தயாரிக்கின்றன. இவற்றின் மூலமாகவே ஆலைகளுக்கு நிறைய லாபம் வருகிறது. ஆனால், எங்களை வஞ்சிப்பதையே அவை வாடிக்கையாக வைத்திருக்கின்றன' என்று குற்றம்சாட்டுகிறார்கள்... விவசாயிகள்!
இந்த நிலையில், விவசாயிகளின் கூக்குரலுக்கு செவிமடுத்து, '1 டன் கரும்புக்கு 2,800 ரூபாய் வழங்கப்படும்' என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது உத்தரபிரதேச அரசு.
தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது. ஆலைகளின் பக்கமா... அப்பாவி விவசாயிகளின் பக்கமா?
ஆசிரியர்