Published:Updated:

1200 ஏக்கர் ஸ்வாஹா...

அனல் மின்நிலையத்துக்கு எதிராக, அனல் கிளப்பும் விவசாயிகள்! த. ஜெயகுமார் படங்கள்: ஜெ. முருகன்

பிரச்னை

##~##

'படிக்கறது ராமாயணம்... இடிக்கறது பெருமாள் கோயில்...' என்பார்கள். இதை மிகமிகச் சரியாக செய்து கொண்டிருப்பவை... நம்முடைய மத்திய-மாநில அரசுகள்தான்!

'அரசின் எந்தத் திட்டத்துக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது. விவசாயம்தான் இந்த நாட்டின் உயிர் மூச்சு. விவசாயத்தை அழித்துவிட்டு, வளர்ச்சிப் பணிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது’ என்றெல்லாம் மேடைதோறும் முழங்குகிறார்கள் ஆட்சியிலிருப்பவர்கள். ஆனால், 'பேருந்து நிலையம் கட்ட விவசாய நிலம் கையகப்படுத்தும் கோப்பு', 'நீதிமன்றம் கட்டுவதற்காக பாசன ஏரியைக் கையகப்படுத்தும் கோப்பு' என பலமாதிரியான கோப்புகளில் கையெழுத்துப் போட்டுவிட்டே மேடைக்கு வருகிறார்கள் என்பதுதான் வேதனை! இந்த வரிசையில் தற்போது இடம்பிடித்து நிற்கிறது... 'செய்யூர் அனல்மின் நிலையத் திட்டம்'.

4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த அனல் மின்நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள சித்தார்காடு கிராமத்தை மையமாக வைத்து, சுமார் 1,200 ஏக்கர் பரப்பில் அமையவிருக்கிறது. நிலக்கரியை இறக்கும் துறைமுகம், கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரியைக் கொண்டு செல்ல வழி, அனல்மின் நிலையக் கழிவுச் சாம்பலைக் கொட்டும் இடம் என பல தேவைகளுக்காக... செய்யூரைச் சுற்றியுள்ள பாளையூர், தண்ணீர்பந்தல், வெடால், கெங்கதேவன் குப்பம், விளம்பூர், கடற்கரை கிராமங்களான பனையூர் பெரியக்குப்பம், சின்னக்குப்பம் பகுதிகளில் விவசாய நிலங்கள், ஏரிகள், தரிசு மற்றும் மேய்ச்சல் நிலங்கள் என்று ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தும் வேலைகள் துவங்கியுள்ளன. இதனால், மக்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.

1200 ஏக்கர் ஸ்வாஹா...

அதிக நிலங்கள் பறிபோகக்கூடிய சூழ்நிலையில் இருக்கும் வெடால் கிராமத்தைச் சேர்ந்த விஜயலிங்கம், ''அஞ்சு ஏக்கர் நிலம் வெச்சு, நெல், வேர்க்கடலை, கம்பு, கேழ்வரகுனு பயிர் செஞ்சுட்டுருக்கேன். அதுலயே தென்னந்தோப்பும் இருக்கு. 2011-ம் வருஷம் ஒரு நோட்டீஸ் வந்துச்சு. அதுல, 'செய்யூர் அனல்மின் நிலையத்துக்காக நிலத்த கையகப்படுத்த போறோம். ஒரு சென்டோட விலை 6 ஆயிரத்து 500 ரூபாய், ஒரு ஏக்கருக்கு 6.5 லட்சம் ரூபாய் கொடுப்போம்’னு இருந்துச்சு. எனக்கு தூக்கிவாரிப் போட்டுடுச்சு. இன்னிக்கு தேதிக்கு ஒரு சென்ட் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல விலை போகுது. ஆனா, இவங்க கொடுக்கற சொற்ப பணத்தை வெச்சுக்கிட்டு, வேற எங்கேயாவது இப்படி தோட்டத்தை வாங்க முடியுமா? இந்த நிலத்தை வெச்சுதான் எங்க குடும்பமே வயித்தைக் கழுவிட்டிருக்கு. எடுத்தேதான் ஆகணும்னா உரிய விலையையாவது கொடுக்கணும்ல'' என்றார், ஆதங்கத்துடன்.

1200 ஏக்கர் ஸ்வாஹா...

''ஆண்டுக்கு ரெண்டு போகம் விளையுற செம்மண் கலந்த நிலம். நெல், வேர்கடலை, கேழ்வரகுனு அருமையா விளையும். இதை வெச்சுதான் பசங்களையெல்லாம் படிக்க வெச்சேன். ஒரு கிணத்த வெட்டி, பம்ப்செட் போட்டு, நிலத்தைத் தயார் பண்றதுக்கு 25 லட்ச ரூபாய் செலவாகுது. கடந்த மூணு வருஷத்துல விவசாயத்துல மட்டும் நாலு லட்சம் ரூபாய் சம்பாதிச்சுருக்கேன். அப்படிப்பட்ட நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டா... எப்படி?'' என்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த தேவகண்ணு.

கங்கதேவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், ''மேய்ச்சல் நிலத்தையும்கூட எடுத்துக்கப் போறாங்களாம். எங்க வாழ்வாதாரத்துக்கு ஒரு மாற்று வழி பண்ணிட்டுதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்போம்'' என்றார், ஆவேசமாக.

1200 ஏக்கர் ஸ்வாஹா...

'பெரியக்குப்பம், சின்னக்குப்பம் ரெண்டுக்கும் இடையில இருக்கிற ஒண்ணரை கிலோமீட்டர் இடைவெளியில துறைமுகம் அமைக்கப் போறதா சொல்றாங்க. இங்கதான் படகுகள நிறுத்தி வெச்சு, மீன்கள புடிச்சுட்டு வந்து விக்கிறோம். இந்தப் பகுதில துறைமுகம் அமைச்சா, கடல்ல மீன்கள் கிடைக்குமா, நிம்மதியா வசிக்கிற இடமா இது இருக்குமா?னு தெரியல. எங்களுக்கு எந்தத் தகவலையும் முறையா கொடுக்காம அதிகாரிங்க அவங்க பாட்டுக்கு செயல்படறாங்க. எங்களுக்கு தொழிலே மீன் புடிக்கிறதுதான். அதுல மண்ணை அள்ளிப் போட்டுட்டா... நாங்க எப்படி பொழைக்கிறது?'' என்று விம்முகிறார்,  பெரியக்குப்பம் மீனவர் மாரிமுத்து.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், ''இந்தத்

1200 ஏக்கர் ஸ்வாஹா...

திட்டத்துக்காக கையகப்படுத்த இருக்குற மொத்த நிலத்துல 342.62 ஹெக்டேர் நிலம் முழுக்க விவசாயம் நடக்குது. இதுல ஏரிகள், நீர்நிலைக் குட்டைகளும் அடக்கம். இது அமைஞ்சா, பக்கத்துல இருக்குற நிலங்களுக்கும் பாதிப்பு. 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்துக்காக, ஒரு நாளைக்கு

45 ஆயிரம் டன் நிலக்கரியை எரிக்கப் போறாங்க. அதிலிருந்து வெளியேறும் சாம்பல், வாயு எல்லாமே பயிர்களுக்கு, மனிதர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கு எல்லாத்துக்குமே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். குடிதண்ணீர், நிலம், காற்றுனு இந்தப் பகுதியோட சூழலே மொத்தமா பாதிப்புக்கு உள்ளாகும். அதனால, சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத வகையில மின்சாரம் தயாரிக்கறதுக்கு என்ன வழினு அரசாங்கம் யோசிக்கணும்'' என்றார்.

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் பாஸ்கரனிடம் கேட்பதற்காக பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால், மணலுக்கு அட்சயப்பாத்திரமாக இருக்கும் பாலாற்று மணலை விற்பனை செய்வதில் இருக்கும் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, அரசாங்கத்துக்கு பணம் பண்ணும் வேலைகளிலயே முழுவீச்சில் அவர் ஈடுபட்டிருப்பதால், நம்மால் அவரை நெருங்கவே முடியவில்லை.

அட, அருங்காட்சியகம்!

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களிலிருந்து வெளிவரும் கழிவுகள் மூலமாகவே, பலவித பயன்களைப் பெறுவதற்கான நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. இதையெல்லாம் கற்றுக் கொடுப்பதற்காகவே சென்னை, நுங்கம்பாக்கத்தில் அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'சூசியம்' (suseum Sustainable Museum)என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், கழிவு மேலாண்மை மற்றும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துதல் பற்றியெல்லாம் எளிமையாக விளக்கம் தருகிறார்கள்.

1200 ஏக்கர் ஸ்வாஹா...

இ.ஐ.ஏ (EIA - Energy Alternatives India) என்ற மாற்று எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் தொழில் உதவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தின் துவக்க விழா, நவம்பர் 15 அன்று நடைபெற்றது. அப்போது பேசிய அந்த நிறுவனத்தின் இயக்குனர் நரசிம்ம சந்தானம், ''சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்பு உணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். பேப்பர், சணல் கயிறு, பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற தேவையற்றப் பொருட்களைக் கொண்டு சின்னச்சின்ன கைவினைப் பொருட்களைச் செய்யும் முறைகளை இங்கு கற்றுத்தர இருக்கிறோம். இந்த அருங்காட்சியகத்தை அனைத்துத் தரப்பு மக்களும் இலவசமாக பார்வையிட வரலாம்'' என்று அழைப்பு வைத்தார்.

- ரெ.சு. வெங்கடேஷ்