Published:Updated:

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'!

ஓவியம்: ஹரன்

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'!

ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு
நம்மாழ்வார்

##~##

அரங்க நாடகங்களுக்கு மேடை நாடகங்களைப் போல அதிகம் செலவு பிடிக்கவில்லை. வீதிகளையே அரங்கமாக்கிக் கொண்டதால்... மூன்றாம் அரங்க நாடகம், 'வீதி நாடகம்’ என்று அழைக்கப்பட்டது. ஒப்பனை தேவையில்லை, வசனகர்த்தா தேவையில்லை, ஒலிப்பெருக்கித் தேவையில்லை, பெரிய கற்பனை தேவையில்லை... சமூகத்தில் நடக்கிற சம்பவங்களை அப்படி அப்படியே நாடகமாக்குவதுதான், இதன் முக்கிய அம்சம்.

வேட்டியை வரிந்து கட்டி நடிகர்கள் களம் இறங்குவார்கள். மக்களின் மத்தியில் வளையமாக நின்று அரங்கம் ஏற்படுத்திக் கொள்வார்கள். ஒரு கட்டியக்காரர் முன்வந்து வளையமாகச் சுழன்று, மக்களுக்கு முன்நின்று, 'நாங்கள் உங்களைப் போன்றவர்கள் எங்களது உடல், குரல், மனம் மூன்றையும் மூலதனமாக்கி நாடகத்தை நிகழ்த்துகிறோம். அமைதி காத்து நாடகத்தில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று சொல்லி அமர்வார்.

நடிகர்கள் வளையமாக மக்களை நோக்கி நிற்பார்கள். ஒருவர், 'நீங்கள் பார்க்கப் போகும் நாடகம்’ என்று ஆரம்பிப்பார். மற்றவர்கள் அனைவரும் நாடகத்தின் பெயரைக் குறிப்பிடுவார்கள். நாடகத்தின் பெயர் 'குப்பைத்தொட்டி’ என்றால், பலத்தக் குரலில் 'குப்பைத்தொட்டி, குப்பைத்தொட்டி, குப்பைத் தொட்டி’ என்று பத்து பேரும் குரல் கொடுக்கும்போது... செய்தி எல்லோரையும் சென்றடையும். பார்வையாளர்கள் அமைதியாக உட்கார்வார்கள்.

முதல் காட்சியில் நடிப்பவர்கள் எழுந்து நிற்பார்கள். மற்றவர்கள் தங்கள் உடல்களை வளைத்தும் மடக்கியும் காட்சிகளை உருவாக்குவார்கள். ஒரு வீட்டின் முகப்பு, ஏர் மாடு, கிணறு, குப்பைத்தொட்டி, காவல் நிலையம் என்று எதை வேண்டுமானாலும் உருவாக்கிக் காட்ட முடியும். பாடல் வரிகளை சேர்ந்தோ தனித்தோ பாடுவார்கள். முக்கியம் என்று பட்ட வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடுவார்கள். வசனம் எப்போதும் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் பேசுவதை நிறுத்தி, ஓசையிலோ அல்லது சைகையிலோ உணர்த்த வேண்டியதை உணர்த்தி விடுவார்கள். இதற்கு குறைந்தது ஒரு வாரம் பயிற்சியும், பயிற்சி இயக்குநர்களும் தேவை. பயிற்சி முடிந்ததும் நடிகர்கள் அனைவரும் நாடகம் பற்றி விமர்சிக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்.

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'!

வீதி நாடகம் குறித்து, இதற்கு மேல் விவரிப்பதற்கு, இங்கே இடம் போதாது. வீதி நாடகங்களைப் போலவே சிறு பத்திரிகைகளும் சமூகப் பணியாளர்களுக்கு கை கொடுத்தன. கும்பகோணத்தில் இருந்து 'எழுச்சி’ என்ற இதழ் வெளியானது. குடும்பம் அமைப்பு 'ஊற்று’ என்ற இதழை தட்டச்சில் பதிவு செய்து வெளியிட்டது. திண்டுக்கல்லிருந்து 'தடம்’, மதுரையிலிருந்து 'நிஜங்கள்’ ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. அனைத்துமே, சமூகத்தில் நிகழும் முரண்பாடுகளை வெளிக்கொண்டு வந்தன. ஆங்காங்கே மக்கள் ஒன்று திரண்டு ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் பாடகர்களும் உருவானார்கள். இத்தகைய விஷயங்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களிலும் நடந்தன.

1983-ம் ஆண்டு மத்திய அரசு திடீரென்று விழித்துக் கொண்டது போல் செயல்பட்டு, மக்களுடைய விழிப்பு உணர்வு, அரசியல் எழுச்சியாக மாறிவிடாமல் பார்த்துக் கொண்டது. 'நடுவண் அரசின் ஒப்புதல் பெறாமல், யாரும் அந்நிய நாட்டு நிதியுதவி பெற முடியாது. அரசு சார்ந்த எந்த ஒரு அதிகாரியும் எந்த ஒரு நிறுவனத்தின் அலுவலகத்துக்குள்ளும் புகுந்து சோதனையிடலாம்' என்றெல்லாம் சட்டத்தைத் தீட்டியது. சுருங்கச் சொல்ல வேண்டுமேயானால் எல்லா செயல்பாட்டுக் குழுக்களையும் அரசு தனது விரிவாக்கப் பணியாளராக மாற்றிக்கொண்டு விட்டது. செயல்பாட்டுக் குழுக்களின் கூட்டமைப்பு, தனது பாதையைத் திருத்தி அமைத்துக் கொண்டது. அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு மாற்றாக, 'மருத்துவம், காடு வளர்ப்பு, வேளாண்மை, கல்வி, கிராமத்தொழில் இப்படி பல துறையிலும் சமூகத்துக்கு இசைவான மாற்று முறைகளை உருவாக்குவது, கூட்டமைப்பைக் களைத்து விடுவது’ என்று முடிவெடுத்தோம். நான் தேர்ந்தெடுத்த துறை... இயற்கை வேளாண்மை!

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'!

அது 1983-ம் ஆண்டு. அப்போது தமிழ்நாடு இரண்டு பேரிடர்களைச் சந்தித்தது. கோடைக் காலத்தில் வறட்சி அதிகமாக இருந்தது. மழைக் காலத்தில் வெள்ளம் அதிகமாக இருந்தது. ஒரே ஆண்டில் எதிர் எதிரான இரண்டு பேரிடர்களை சந்தித்தோம். வறட்சியால், கிராமத்து மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்புத் தேடி வெளியூர் செல்ல ஆரம்பித்தனர். நிதி வழங்கும் நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து நான்கு ஊர்களில் குடிநீர் குளங்களை ஆழப்படுத்தினோம். இதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக வட்டார கலைக்குழுவிடம் பொறுப்பைக் கொடுத்து, வறட்சி குறித்து பல ஊர்களிலும் நாடகம் போட்டோம். மக்கள் மத்தியில் இருந்து, நிர்வாகக் குழுக்களை அமைத்தோம். அவர்களைக் கொண்டே கருவிகள் வாங்கி வரச் செய்தோம்.

'எங்கு இளைஞர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்’ என்று பார்த்தபோது, நான்கு ஊர்கள் நமது கவனத்துக்கு வந்தன. அந்த நான்கு ஊர்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் ஊரின் குடிநீர் குளங்களை ஆழப்படுத்திக் கொண்டனர். மழைக் காலம் வந்தபோது குளங்களில் நீர் நிறைந்தது. மக்கள் உற்சாகமடைந்தனர்.

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய, 'இம்சை அரசு'!

ஆனால், மூன்றே மூன்று தினங்களில் பெய்த மழை, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (இன்றைய தஞ்சாவூர் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்) வரலாறு காணாத வெள்ளத்தைத் தோற்றுவித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களிலும் திருமண மண்டபங்களிலும் குடியேறினார்கள். வெள்ள நேரத்தில் ஒதுங்குவதற்காக கட்டப்பட்ட மண்டபங்கள் காலியாகவே கிடந்தன. மக்களிடம், 'ஏன் வெள்ள நிவாரணக் கூடங்களுக்குச் செல்லவில்லை?’ என்று கேட்டேன். 'அந்தக் கூடங்களுக்கு போகும் வழியில் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது’ என்றனர். 'பிறகு எதற்காக அங்கு இந்தக் கூடங்களைக் கட்டினார்கள்?’ என்று கேட்டதற்கு... 'அங்குதான் அரசு புறம்போக்கு நிலம் இருந்தது’ என்றனர். மக்கள் பங்கெடுப்பு இல்லாத நலத்திட்டங்கள், மக்களுக்கு உதவாமல்தான் போகும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு!

வெள்ளம் வடிவதற்கு பல நாட்கள் ஆயின. ஒன்பது நாட்களுக்குப் பிறகு, நானும் நண்பர்களும் ஒரு ஊருக்குப் போனோம். மார்பளவு தண்ணீரில் நடக்க வேண்டியிருந்தது. பல நிலங்களில் சாய்ந்து கிடந்த நெல் பயிரின் மீது மண் மூடிக் கிடந்தது. எங்கு நோக்கிலும் கண்ணீர் வடிக்கும் உழவர்களைக் காண முடிந்தது. ஊரை விட்டு வெளியே வந்தபோது, தலை நரைத்து, தோல் சுருங்கிய மூதாட்டி ஒருவரைச் சந்தித்தோம். அநேகமாக அவருக்கு தொண்ணூறு வயது இருக்கலாம். அந்த மூதாட்டி சொன்னது இதுதான்-

'என்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு வெள்ளத்தை இதற்கு முன்பு கண்டதில்லை’

தொடர்ந்து மழை பெய்ததால், மக்கள் ஊர் திரும்புவதற்கு அதிக நாள் பிடித்தது. அரசு கொடுத்த சிறிதளவு தொகையைக் கொண்டு மக்கள் காலத்தை ஓட்டினர். தமிழகத்தில் செயல்பட்ட பல தொண்டு நிறுவனங்களின் களப் பணியாளர்களை வரவழைத்து, வெள்ள நிவாரணப் பணியை நம்மால் சிறப்பாக செய்ய முடிந்தது.

'ஒரே ஆண்டில் வறட்சியும், வெள்ளமும் ஏன் மாறி மாறி வருகிறது..?’ என்ற கேள்வி தமிழ்நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், 'ஜிஷ்வீஸீ ஞிவீsணீstமீக்ஷீ’ என்று வர்ணிக்கப்பட்ட 'இரட்டைப் பேரிடர்’ வருவதற்கான காரணம் 'மரம் இல்லாததுதான்’ என்ற பதில் கிடைத்தது. மரம் இல்லை. ஆதலால் சூரியன் பூமியைத் தாக்கி, வறட்சியை உண்டு பண்ணுகிறது. மரம் இல்லை, அதனால் மழை வழிந்து ஓடி, வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. அதனால், 'நிறைய மரங்களை நட வேண்டும்’ என்ற சிந்தனை எங்கள் நெஞ்சத்தில் புகுந்தது.

 - இன்னும் பேசுவேன்...