தொடர்

காய்கறிகளை மிஞ்சும் காளான்!

##~##

பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி இதுவரைப் பார்த்தோம். அடுத்ததாக, காளான் பற்றி பேசுவோம்.

இயற்கை நமக்கு அளித்த, ஆச்சரியமிக்க, இனிய படைப்பு... காளான்கள். சுவையால், நிறத்தால், மணத்தால், வடிவத்தால் பன்னெடுங்காலமாக மனித இனத்தை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன, இந்தக் காளான்கள். 'சாங்’ என்ற விஞ்ஞானி, காளான் பற்றி குறிப்பிடும்போது... 'இது இலைகளைத் தோற்றுவிப்பதில்லை. பூக்களைத் தருவதில்லை. ஆனாலும், காய்கனிகளைப் போன்றே விதவிதமான அழகிய வடிவங்களோடு காட்சி அளிக்கிறது. உணவாக மட்டுமின்றி, மருந்தாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும், அலங்காரப் பொருட்களாகவும் பல வகைகளிலும் பயனளிக்கிறது. இயற்கையின் பல்வேறு படைப்புகளில்... காளான், விந்தையிலும் விந்தையானது’ என்கிறார்.

வடிவங்கள் ஏராளம்!

'இடி, மின்னலுக்கு பயந்து, மழைக்காலத்து வேலியோரப் பூக்களாய், இது மறைந்து வாழ்கிறது’ என முன்பு உவமை சொல்வார்கள். ஆனால், தற்போது மிகுந்த மரியாதையோடு வரவேற்கப்பட்டு, லாபம் தரும் தொழிலாகவே காளான் வளர்த்தெடுக்கப்படுகிறது. இது பூஞ்சண வகையைச் சேர்ந்த, பச்சையமில்லாத கீழ்நிலைத் தாவரம். நன்கு மட்கிய அங்ககப் பொருட்களில் பூஞ்சண இழைகளாகப் படர்ந்திருந்து, மழை பெய்யும்போது நிலவக்கூடியச், சூழலில், மிகவேகமாக வளர்கிறது. இந்தப் பூஞ்சண இழைகள், சில வகை நொதிப்பொருட்களைச் சுரந்து, இலை போன்ற அங்ககக் கழிவுகளைச் சிதைத்து, அவற்றிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்து உயிர் வாழ்கின்றன.

காய்கறிகளை மிஞ்சும் காளான் !

காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் காணப்படுகின்றன. பொதுவாக சிப்பி, கிழங்கு, குடை உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் இவற்றைக் காணலாம். வைக்கோல் காளான்களின் அடிப்பகுதியில் கிண்ணம் போன்ற அமைப்பு இருக்கும். மொட்டுக் காளான்களில் தண்டின் நடுப்பகுதியில் வட்ட வடிவத்தட்டு போன்ற அமைப்பு இருக்கும். இதுபோல் இன்னும் ஏராளமான ரகங்களும் உண்டு!

ஆரம்ப காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி... கல்குவாரி, இருட்டான குகை போன்ற இடங்களில் காளான்களை வளர்த்தனர். அறிவியல் வளர்ச்சி அடைந்த பிறகு, மனிதத் தேவைக்கேற்றாற்போல் காளான் உற்பத்தி செய்யும் முறைகள் கண்டறியப்பட்டன. 19-ம் நூற்றாண்டில் மொட்டுக்காளான்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டன. 1917-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பால்க் என்பவர் 'பிளிரோட்டஸ்’ எனும் சிப்பிக்காளானை பெரிய மரத்துண்டுகளில் வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தினார். மைசூரில் உள்ள மத்திய உணவு ஆராய்ச்சி மையத்தில் பானோ மற்றும் ஸ்ரீவாஸ்தவா ஆகிய விஞ்ஞானிகள், சிப்பிக்காளானை முதன்முதலில் வைக்கோலில் வளர்த்து சாதனை படைத்தனர். 1975-ம் ஆண்டு நெல் மற்றும் கோதுமை வைக்கோலில் சிப்பிக்காளானை வியாபார முறையில் வளர்த்து காட்டினார்கள், ஜான்டைக் மற்றும் அரங்கசாமி ஆகிய விஞ்ஞானிகள்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் சீரிய முயற்சியால்... சிப்பிக்காளானில் கோ-1, ஏ.பி.கே-1, ஊட்டி-1, எம்.டி.யு-2, பிளிரோட்டஸ் பிளாட்டிபஸ் ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பால் காளானில்,ஏ.பி.கே.-2, மொட்டுக்காளானில் ஊட்டி-1, ஊட்டி-2 ஆகிய ரகங்களும் அறிமுகப்படுத்தப் பட்டன.

காய்கறிகளை மிஞ்சும் காளான் !

உடலுக்கு அருமருந்து!

காளானைப் பக்குவப்படுத்தி விதவிதமான உணவு வகைகள் தயாரிக்கலாம். இது மனித உடலுக்கு பல வகைகளிலும் தொண்டு செய்கிறது. ஆற்றலை அள்ளித் தருகிறது. சீனர்கள், இதை அருமருந்தாகவே போற்றுகின்றனர். கிரேக்க நாட்டில் போர் வீரர்களுக்கு வலிமையூட்டும் உணவாக காளான் வழங்கப்பட்டது. ரோமானியர்கள் காளான்களை கடவுளுக்கு உணவாகப் படைத்தனர். காளானில் கஷாயம் தயாரித்து அருந்தினால்... நச்சுக் காய்ச்சல், அம்மை, காலரா போன்ற நோய்கள் வராது. காளானை உலர்த்தி, தூள் செய்து, அதை தேங்காய் எண்ணெயில் குழப்பி, அடிபட்ட காயம், புண் போன்றவற்றில் தடவினால் குணமாகிவிடும். ரத்த நாளங்கள் வெட்டுப்பட்டு, ரத்தம் பீறிட்டு தொடர்ச்சியாக வெளியேறும் சூழ்நிலையில், உலர்த்தப்பட்ட காளான் தூளை வைத்தால் உடனே நிற்கும். புற்றுநோய், காக்காவலிப்பு, நரம்புக் கோளாறு உள்ளிட்ட இன்னும் பல நோய்களுக்கான மருந்துகளில் முதன்மைப் பொருளாக காளான் பயன்படுத்தப்படுகிறது. காளானில் இருந்து தயாரிக்கப்படுகிற தைலம், இதயநோய், கண்வீக்க நோய் ஆகியவற்றைக் குணப்படுத்துவதற்கான மேல்பூச்சாகவும் பயன்படுகிறது.

காய்கறிகளைவிட, காளானில் புரதச்சத்து பல மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் ஸ்பெஷல் உணவாகவே காளான் இடம்பெற தொடங்கி விட்டது. அசைவ உணவு போன்ற சுவையையும், நறுமணத்தையும் இது தருவதால், பலரும் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். காளான் உற்பத்தி மற்றும் இதைச் சார்ந்த உணவுத் தயாரிப்புத் தொழில்களில் விவசாயிகள் பெருமளவில் ஈடுபட வேண்டும். இதை உற்பத்தி செய்ய... இடம், தண்ணீர், மனிதஉழைப்பு, காலம், செலவு உள்ளிட்ட அனைத்துமே மிக குறைவாகத் தான் தேவைப்படும்.

குறுகிய கால சேமிப்புக்கான முறைகள்!

'எல்லாம் சரி... காளான் மிக சீக்கிரத்தில் தரமிழந்து விடுமே... இதை எப்படிச் சமாளிப்பது?’ என நீங்கள் கேட்கலாம். இதற்கும் வழி முறைகள் உள்ளன.

பாலித்தீன் பையின் மொத்தப் பரப்பில் 40% அளவு இடத்தில் துளைகளை இட்டு அந்தப் பையில் ஓரிரு நாட்களுக்கு காளான்களைச் சேமிக்கலாம். துளையிடப்படாதப் பைகள் என்றால், 5 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் மூன்று நாட்கள் வரை கெடாமல் சேமிக்கலாம். 0.1% சிட்ரிக் அமிலம் (எலுமிச்சைச்சாறு) கலந்த கரைசலில் காளானை நனைத்து, ஈரம் உலர்ந்த பிறகு சேமித்து வைத்தால், ஓரிரு நாட்களுக்கு நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

அறுவடைக்கு 18 மணி நேரத்துக்கு முன்பாக, காளான் மீது 1% தேன் கலந்த தண்ணீர் தெளிக்க வேண்டும். அறுவடை செய்ததும் ஈரத்தை உலர்த்தி, 100 'கேஜ்’ தடிமன் கொண்ட, துளையிடப்பட்ட பாலிதீன் பைகளில் இட்டு 3 டிகிரி முதல் 5 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு குளிர்ச்சியான நிலையில் சுமார் 21 நாட்கள் வரை எடை குறையாமல், தரம் கெடாமல் சேமித்து வைக்கலாம். சுமார் 65 டிகிரி முதல் 68 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை கொண்ட கொதிநீரில், 4 முதல் 5 நிமிடம் வரை காளானை வைத்திருந்து, வெளியில் எடுத்ததும் 0.5% எலுமிச்சைச்சாறு கலந்த தூய்மையான நீருக்குள் 8 முதல் 10 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

'இவ்வளவுதானா... நீண்ட காலத்துக்குச் சேமிக்க முடியாதா?' என்றுதானே கேட்கறீர்கள். தாராளமாக முடியும். இதைப் பற்றி தொடர்ந்து பேசுவோம்.

- மதிப்புக்கூடும்...