Published:Updated:

ஜெயலலிதா 'உயர்த்திய' கரும்பு விலை... விவசாயிகளுக்கு நாமம்... ஆலைகளுக்கு லாபம்!

கு. ராமகிருஷ்ணன்

ஜெயலலிதா 'உயர்த்திய' கரும்பு விலை... விவசாயிகளுக்கு நாமம்... ஆலைகளுக்கு லாபம்!

கு. ராமகிருஷ்ணன்

Published:Updated:

பிரச்னை

##~##

''கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2013-14-ம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு அறிவித்திருக்கும் 2,100 ரூபாயுடன், கூடுதலாக 550 ரூபாயைச் சேர்த்து வழங்க உத்தரவிடுகிறேன். இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 2,650 ரூபாய் கிடைக்கும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மனமகிழ்ச்சியை அளிக்கும்'' என்று ஒரு அறிவிப்பை டிசம்பர் 21 அன்று வெளியிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைப்பது போலவும், ஆங்காங்கே இனிப்புகளைப் பரிமாறிக் கொள்வது போலவும், அவருடைய 'ஜெயா டி.வி'-யில படங்களாகக் காட்டப்பட்டுக் கொண்டிருக்க...

''எல்லாமே ஏமாற்று வேலை. கடந்த ஆண்டு கொடுத்ததிலேயே தற்போது நூறு ரூபாயைக் குறைத்துவிட்டது தமிழக அரசு. ஆனால், அள்ளிக் கொடுத்துவிட்டது போல செய்தி பரப்புகிறார்கள்'' என்று சீறுகிறார் தஞ்சாவூர் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச்செயலாளர் 'சுவாமிமலை' சுந்தரவிமலநாதன்.

ஜெயலலிதா 'உயர்த்திய'  கரும்பு விலை... விவசாயிகளுக்கு நாமம்... ஆலைகளுக்கு லாபம்!

''சில ஆண்டுகளுக்கு முன்பு, 'ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்காத கருணாநிதி, முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார், ஜெயலலிதா. 'நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் தருவேன்’ என தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதியும் அளித்தார். ஆனால், அவர் முதல்வராகப் பொறுப்பேற்று, இரண்டரை ஆண்டுகள் ஆகியும், கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக முடிவு எடுக்க, ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆலைகள், அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தைக்கூட இதுவரையிலும் நடத்தவில்லை. ஆனால், தன்னிச்சையாக அவரே விலையை அறிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் விலையாக 1,700 ரூபாயும், தமிழக அரசின் ஆதரவு விலையாக 550 ரூபாய், போக்குவரத்து செலவுக்காக 100 ரூபாய் ஆகமொத்தம் 2 ஆயிரத்து 350 ரூபாய் கிடைத்தது. இதுவே மற்ற மாநிலங்களில் 2 ஆயிரத்து 500 ரூபாய், 2 ஆயிரத்து 800 ரூபாய் என கூடுதலாகத்தான் கிடைத்தது.

2013-14-ம் ஆண்டுக்கு மத்திய அரசின் விலையாக 2 ஆயிரத்து 100 ரூபாய் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் தன்னுடைய ஆதரவு விலையை அறிவிக்காத தமிழக அரசு, தற்போது 2,650 ரூபாய் என்று உயர்த்திக் கொடுத்திருப்பது போல ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உண்மையில், கடந்த ஆண்டைவிட 100 ரூபாயைக் குறைத்துதான் கொடுத்துள்ளது தமிழக அரசு. அதாவது, போக்குவரத்து செலவுடன் சேர்த்து 650 ரூபாயைக் கொடுத்த தமிழக அரசு, தற்போது போக்குவரத்து செலவுடன் சேர்த்து 550 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது. அப்படியிருக்க, இதை எப்படி உயர்த்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியும்?'' என்று நியாயமான கேள்வியை முன் வைத்தவர்,

ஜெயலலிதா 'உயர்த்திய'  கரும்பு விலை... விவசாயிகளுக்கு நாமம்... ஆலைகளுக்கு லாபம்!

''தமிழ்நாட்டைப் போலவே 9.5% சர்க்கரைக் கட்டுமானம் உள்ள உத்தரபிரதேசத்தில், ஒரு டன் கரும்புக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் அறிவிக்கப்பட்டுவிட்டது. கர்நாடகா மாநிலத்தில், 2 ஆயிரத்து 650 ரூபாய் கொடுக்கப்படுகிறது. வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி உள்ளிட்டவற்றை அங்குள்ள சர்க்கரை ஆலைகளே ஏற்றுக் கொள்கின்றன. தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கு வெட்டுக்கூலியாக 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விவசாயி செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த விலை கரும்பு விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாது. வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி செலவுகளை சர்க்கரை ஆலைகள் ஏற்றுக் கொள்ளவும், கரும்புக்கான விலையை உயர்த்தவும்... முத்தரப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்!

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், ''ரங்கராஜன் குழுவின் பரிந்துரையின்படி, சர்க்கரை விற்பனை வெளியீட்டு அனுமதி முறையை மத்திய அரசு நீக்கி விட்டது. இதனால், சர்க்கரை ஆலைகள் தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப போட்டி போட்டுக் கொண்டு, ஒரே சமயத்தில் சர்க்கரையை விற்பனை செய்தன. இதை, மொத்த வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதனால்தான், ஒரு கிலோ சர்க்கரையின் விலை 28 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. 'இந்த விலை சரிவு காரணமாக, தங்களுக்கு நஷ்டம் நேர்ந்துள்ளது’ எனவும், 'இதனால் கரும்பு விலையை உயர்த்தித் தர முடியாது’ எனவும் ஆலைகள் முரண்டு பிடிக்கின்றன.

ஜெயலலிதா 'உயர்த்திய'  கரும்பு விலை... விவசாயிகளுக்கு நாமம்... ஆலைகளுக்கு லாபம்!

ஆலைகள் கூடுதல் விலை தரவில்லை என்றால், அதனை ஈடுகட்டும்விதமாக ஒரு டன் கரும்புக்கு 300 ரூபாயை தமிழக அரசு கூடுதலாகத் தர வேண்டும். இதற்கு தமிழக அளவில் 500 கோடி ரூபாய்தான் செலவாகும். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இப்படி சர்க்கரை விலை வீழ்ச்சி அடைந்தபோது, டன்னுக்கு 20 ரூபாய் கொடுத்ததை இந்த சமயத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்'' என்று வரலாற்றைச் சுட்டிக்காட்டினார்.

இதையெல்லாம் 'வாழும் வரலாறு'கள் புரிந்து கொள்ளுமா?!

 ''ஆலைகளின் தவறுக்கு விவசாயிகள் பலிகடா''

'கரும்புக்கான விலையை ஏற்றித்தர வேண்டும்; பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி... டிசம்பர் 12-ம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள், தலைநகர் டெல்லியில் குவிந்து போராட்டம் நடத்தினர்.

ஜெயலலிதா 'உயர்த்திய'  கரும்பு விலை... விவசாயிகளுக்கு நாமம்... ஆலைகளுக்கு லாபம்!

இதைப் பற்றிப் பேசிய இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் விருதகிரி, ''கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய், நிலுவையில் உள்ளது. இதைப்பற்றி கண்டுகொள்ளாத மத்திய அரசு, ஆலைகளுக்கு வட்டி இல்லாத கடனாக 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. இக்கடனை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு தவணையாக ஆலைகள் திருப்பிச் செலுத்தினாலே போதுமாம். இக்கடனுக்கான வட்டியை வங்கிகளுக்கு மத்திய அரசு கொடுத்துவிடும். விவசாயிகளைக் கண்டுகொள்ளாத அரசு, ஆலைகளுக்கு இப்படி சலுகைகளை வாரி வழங்குவது மிகப்பெரிய அநியாயம்.

'உற்பத்திச் செய்த சர்க்கரை, விற்பனையாகாமல் தேக்கமடைந்து கிடப்பதால்தான், விவசாயிகளுக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியவில்லை’ என சர்க்கரை ஆலைகள் கண்ணீர் வடிக்கின்றன. 2012-13-ம் ஆண்டுக்கான நாட்டின் மொத்த சர்க்கரைத் தேவை, 230 லட்சம் டன். ஆனால், தேவையை விட அதிகமாக 88 லட்சம் டன் சர்க்கரையைக் கூடுதலாக உற்பத்தி செய்துவிட்டார்கள்.

இதுவே விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள கோகோ கோலா, பெப்சி, ஃபேன்ட்டா, காட்பரீஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தேவைக்கு வெளிநாடுகளில் இருந்து 17 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்தன. சர்க்கரை வியாபாரிகளும் இப்படி இறக்குமதி செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதையெல்லாம் மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. இப்படியாக மத்திய அரசு, சர்க்கரை ஆலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை செய்யும் தவறுகளுக்கு, விவசாயிகளை பலிகடா ஆக்குகிறார்கள்'' என்று சீறியவர்,

''இடுபொருட்களின் விலை, வேலையாள் கூலி, பொதுவான விலைவாசி... உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்து விட்டதால், ஒரு டன் கரும்புக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.