Published:Updated:

மரத்தடி மாநாடு : உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்!

மரத்தடி மாநாடு : உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்!

மரத்தடி மாநாடு : உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்!

மரத்தடி மாநாடு : உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்!

Published:Updated:

ஓவியம்: ஹரன்

##~##

அன்று சீக்கிரமே வந்துவிட்ட 'காய்கறி’ கண்ணம்மா... மரத்தடித் திட்டில் கூடைகளை இறக்கி வைத்து, தானும் அமர்ந்திருந்தார். அங்கும் இங்குமாக கொஞ்சம் ஆக்ரோஷத்தோடு 'வாத்தியார்' வெள்ளைச்சாமி நடந்து கொண்டிருக்க... புல்லுக்கட்டை சைக்கிள் கேரியரில் வைத்து தள்ளிக் கொண்டே வந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னய்யா.... என்னாச்சு. ஏன் இப்படி அடிபட்ட புலி கணக்கா... அங்கயும் இங்கயும் உலாத்திக்கிட்டிருக்கே...?!'' என்று வாத்தியாரைப் பார்த்துக் கேட்டார்.

ஏரோட்டியை உற்றுப் பார்த்த வாத்தியார்... ''ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுஷன கடிச்ச கதையால்ல இருக்கு'' என்று உறுமினார்.

இதைக் கேட்டதுமே, 'அட, நாம என்னத்த தப்பு பண்ணிட்டோம்... இந்த ஆளு, இந்த முறை முறைக்கிறானே!' என்று மனதுக்குள்ளேயே முணுமுணுத்த ஏரோட்டி, எச்சில் விழுங்கினார்.

''எப்ப பார்த்தாலும், 'செல்போன், கேமரா எல்லாம் ரொம்ப கம்மியான விலையில கிடைக்குது... சீனாக்காரன், சீனாக்காரன்தான்யா'னு ஓயாம நீதானே பீத்திப்பே. இப்படி பெரிய பெரிய கம்பெனிகளோட தயாரிப்புகளையெல்லாம் டூப்ளிகேட் தயாரிச்சு, உலக அளவுல உலாத்த விட்ட சீனாக்காரன், இப்ப நம்ம தலையிலயும் கை வைக்க ஆரம்பிச்சுட்டான்யா. போலியா உரங்களையும் தயாரிச்சு அனுப்பிட்டிருக்கானுங்க'' என்று வாத்தியார் சொல்ல...

''அட கட்டையில போறவனுங்களா... அங்க சுத்தி, இங்க சுத்தி நம்மகிட்டயும் வந்துட்டானுங்களா இந்த பாம்பு சூப் பார்ட்டிங்க...'' என்ற ஏரோட்டி, ''விஷயத்தை கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுமய்யா'' என்றார்.

''போன வாரத்துல காரைக்கால்ல இருக்குற தனியார் துறைமுகத்துக்கு, 50 ஆயிரம் டன் ரசாயன உரம், சீனாவுல இருந்து வந்து இறங்கியிருக்கு. அதுல 13 ஆயிரம் டன் உரத்தை தமிழ்நாட்டுல நிறைய கடைகளுக்கு சப்ளை பண்ணியிருக்காங்க. அதுல பொட்டாஷ், யூரியா, சூப்பர் சத்துக்கள் சமவிகிதத்துல இல்லையாம். எரிமலைக் குழம்புச் சாம்பல், சமையல் உப்பு இதையெல்லாம் கலப்படம் செஞ்சுருக்காங்களாம். இதை வயலுக்குப் போட்டா... மண்ணே வீணா போயிடுமாம். இந்த விஷயம் வெளியில கசிய... டெல்டா விவசாயிங்க, 'அந்த உரத்துக்குத் தடை விதிக்கணும்’னு கோரிக்கை வெச்சுருக்காங்க. பரிசோதனை பண்ணி பாத்தப்போ, 'தரமில்லாத உரம்’கிறது தெரிஞ்சுருக்கு. ஆனாலும், நிறைய இடத்துல இந்த உரத்தை வாங்கி வயல்ல தெளிச்சுட்டங்களாம் விவசாயிங்க. ராமநாதபுரம் மாவட்டத்துல மட்டும் 67 டன் அளவுக்கு இந்த போலி உரம் இருக்கறத இதுவரைக்கும் கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த மாவட்டத்துல, இந்த உரத்தை விற்பனை செய்றதுக்கு தடை போட்டிருக்காங்களாம். 'அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக் கிட்டுதான், இந்த உரத்தைப் புழக்கத்துல விட்டிருக்காங்க'ன்னும் ஒரு பேச்சு இருக்கு'' என்றார், வாத்தியார்.

மரத்தடி மாநாடு :  உரத்திலும் சீன சரக்கு... விவசாயிகளே உஷார், உஷார்!

''பின்னே... ஊசி இடங்கொடுக்காட்டி, நூலு எப்படி நுழைய முடியும். எல்லாம் இந்த அநியாயக்கார அதிகாரிங்களும், அரசியல்வாதிகளும் கூட்டணி போட்டுக்கிட்டு செய்ற வேலையாத்தான் இருக்கும். இவனுங்க கைவண்ணம் இல்லாம, இங்க எது அசையும்?'' என்று கைகளை முறித்து சாபம் விட்டார் காய்கறி.

''இந்த சீனாக்காரனுங்களால... நம்ம நாட்டு பட்டுக்கூடு விலை திடீர் திடீர்னு இறங்கி, நொம்பலத்தைக் கொடுத்திட்டிருக்கு'' என்ற ஏரோட்டி தொடர்ந்தார்.

''நம்ம நாட்டுல பட்டுக்கூடு உற்பத்தி அதிகமா இருந்தாலும், பட்டுத்துணி நெய்றதுக்குத் தேவையான கச்சா பட்டு அதிகளவுல உற்பத்தி ஆகறதில்லையாம். சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்றாங்களாம். இப்படி இறக்குமதி செய்ற பட்டுக்கான வரியை, மத்திய அரசு திடீர் திடீர்னு குறைச்சு, உத்தரவு வேற போட்டுக்கிட்டிருக்காம். இப்படி வரியைக் குறைக்கும்போதெல்லாம் இறக்குமதி அதிகமாகி, இந்தியாவுல வெண்பட்டுக்கூடுகளோட விலை சரியுறதே வாடிக்கையா இருக்கு.

'இறக்குமதி வரியைக் குறைக்கக் கூடாது’னு ரொம்ப நாளா விவசாயிகள் கேட்டுட்டு இருக்காங்க. இப்போ, மத்திய பட்டு வாரியத்தின் சார்பாவும் 'இறக்குமதி வரியை

25 சதவிகிதத்துக்குக் கீழ குறைக்கக்கூடாது’னு கோரிக்கை வெச்சுருக்காங்க. இதுக்குப் பிறகு கொஞ்சம்போல அசைய ஆரம்பிச்சுருக்கற மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்கறதா சொல்லியிருக்காம். அதனால, 'இனி வெண்பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை கிடைக்கும்’ங்கிற எதிர்பார்ப்புல இருக்காங்க, பட்டு விவசாயிங்க'' என்றார், ஏரோட்டி.

''நம்மகிட்டயும் ஒரு பட்டு சங்கதி இருக்கே!'' என்ற வாத்தியார்,

''மத்திய பட்டு வாரியத்தோட மானிய உதவியில, பல்லடம் பகுதியில துவங்கின 'ஆட்டோமெட்டிக் ரீலிங் யூனிட்’ல முழு உற்பத்தி செய்றதுக்கான நடவடிக்கைகளை எடுத்துருக்காங்களாம். இந்தத் தொழிற்சாலை இயங்கினா, ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கிலோ வெண்பட்டுக் கூடுகள் தேவைப்படுமாம். அதனால, விற்பனைக்கு கர்நாடக மாநிலத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை மாறணும்னு சொல்றாங்களாம் அதிகாரிங்க'' எனச் சொல்லிவிட்டு, அடுத்த செய்தியையும் தானே சொல்ல ஆரம்பித்தார்.

''கோமாரி நோய் பரவினதால தமிழ்நாட்டுல 'மாட்டுச்சந்தையைக் கூட்டக்கூடாது’னு தடை விதிச்சுருக்காங்க. கிட்டத்தட்ட அம்பது நாளைக்கு மேலா சந்தைகள் இல்லாததால மாடு வாங்கவோ... விற்கவோ முடியாம, விவசாயிங்க தவிச்சிக்கிட்டு இருக்காங்களாம். ஒவ்வொரு சந்தையிலயும் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வியாபாரம் முடங்கி கிடக்காம். குறிப்பா, பொள்ளாச்சி சந்தையில வாரத்துக்கு பத்து கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்குமாம். மொத்தமும் முடங்கினதால... தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம், மாடு ஓட்டும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம், மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கம்னு பல சங்கங்கள் கைகோத்து, போராட்டத்துல இறங்கப் போறாங்களாம்'' என்றார், வாத்தியார்.

கூடையிலிருந்து ஆளுக்கு இரண்டு சப்போட்டா பழங்களை எடுத்துக்கொடுத்த காய்கறி, அதை சுவைத்துக் கொண்டே ஒரு செய்தியைச் சொன்னார்.

''போன வருஷம் அரிசிக்குத் தட்டுப்பாடு வந்ததால... நிறைய வியாபாரிகள் பக்கத்து மாநிலங்கள்ல இருந்து அரிசியை வாங்கி பதுக்கி வெச்சு, அதிக விலைக்கு வித்தாங்க. இந்த வருஷம் நெல் கொள்முதல் இப்போதான் ஆரம்பிச்சுருக்குது. வரத்து அதிகமா இருக்கறதால, அரிசி விலை குறையும்னு எதிர்பார்ப்பு இருக்கு. அதனால, அரிசியைப் பதுக்கி வெச்சுருந்த வியாபாரிகள்லாம், 'ஒரு மூட்டை அரிசி வாங்குனா இலவசப் பரிசு’னு சொல்லி, பழைய இருப்பையெªல்லாம் கரைக்க ஆரம்பிச்சுருக்காங்க. குறிப்பா, தர்மபுரி மாவட்டத்துலதான் இது அதிகமா நடக்குதாம்.

ஒரு மூட்டை அரிசியோட, ஐந்து லிட்டர் குக்கர், ஒரு கடாய் அல்லது, 5 லிட்டர் சன் ஃப்ளவர் ஆயில், 3 கிலோ கோதுமை மாவு, ஒரு ப்ளாஸ்டிக் டப்னு கவர்ச்சிகரமா விளம்பரம் பண்ணி, கலக்கிக்கிட்டிருக்காங்களாம். தர்மபுரியில மளிகைக்கடை வெச்சுருக்குற என்னோட கொழுந்தன், நேத்து செல்போன்ல பேசுனப்ப சொன்னார்'' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் காய்கறி.

'பாருடா... உனக்கு வெளியூர் சேதி சொல்றதுக்கும் ஆள் வெச்சுருக்கியா?'' என்று ஏரோட்டி கலாய்க்க...

''அதெல்லாம் இருக்கட்டும்... போன தடவை நான் போட்ட புதிர் கணக்குக்கு விடை கண்டுபிடிச்சியா?'' என்று கேட்டார், காய்கறி.

''ஆஜானபாகுவான ஒரு ஆள், கடைக்குப் போய் ஒரு வாழைப்பழம் ஒரு ரூபாய்னு பதினஞ்சு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கறார். 'சாப்பிட்டு விட்டு தோலைக் கொண்டு வந்து கொடுத்தா... மூணு தோலுக்கு ஒரு பழம் தர்றேன்’னு கடைக்காரர், சொல்றார். அந்த ஆள், கடையிலேயே நின்னு பழத்தையெல்லாம் சாப்பிட்டுட்டு, தோலைக் கொடுத்துக் கொடுத்து பழம் வாங்குறார். அப்போ மொத்தம் எத்தனை பழம் அவர் சாப்பிட்டுருப்பார்ங்கறதுதானே உன் கேள்வி.

அவர், 22 பழம் சாப்பிட்டுருப்பார். காசு கொடுத்து வாங்கினது 15 பழம். 15 தோலைக் கொடுத்து வாங்குனது 5 பழம். அதுல மூணு தோலைக் கொடுத்து 1 பழம் வாங்குறார். ஏற்கெனவே கையில இருக்குற 2 பழம், இப்ப வாங்குன 1 பழம் மூணோட தோலையும் கொடுத்து 1 பழம் வாங்கிடுறார். ஆக, 15 5 1 1=22 சரியா... யாருகிட்ட, நாமள்லாம் அந்த ராமனுஜனுக்கே கணக்கு கத்துக் கொடுக்கற பரம்பரையாக்கும்'' என்று துண்டை உதறினார், ஏரோட்டி.

''சரிசரி... நீ கணக்குல புலிதான் ஒப்புக்குறோம். இப்ப நான் ஒரு கணக்கு போடுறேன். அதுக்கு விடை கண்டுபிடி பாப்போம்.. 'காய்ஞ்சு போன ஒரு குளத்துல ஊத்து உடைச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி பெருகுது. இன்னிக்கு ஊறுன தண்ணி மாதிரி, ரெண்டு மடங்கு தண்ணி அடுத்த நாள் ஊறுது. அதே மாதிரி ரெண்டு மடங்கு தண்ணி அடுத்த நாள் ஊறுது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஊறி... முப்பது நாள்ல குளம் நிறைஞ்சுடுது. அப்போ, பாதிக்குளம் நிறைய எத்தனை நாள் ஆகியிருக்கும்?'' என்று வாத்தியார் சொல்லி நிறுத்த, மனதுக்குள் கணக்குப் போட்டபடியே காய்கறி, கூடையைத் தூக்க... முடிவுக்கு வந்தது, அன்றைய மாநாடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism