Published:Updated:

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

கு. ராமகிருஷ்ணன், காசி. வேம்பையன்படங்கள்: கே. குணசீலன், வீ. சிவக்குமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'இயற்கை விவசாயம்' என்கிற ஜெயபேரிகையைக் கையில் எடுத்து, கடந்த நாற்பதாண்டுகளாக தமிழ் மண்ணில் முழங்கிக் கொண்டிருந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், டிசம்பர் 30 அன்று இயற்கையோடு இயற்கையாகக் கலந்துவிட்டார்! தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுக்க இருக்கும் அவருடைய அபிமானிகள் மற்றும் ஆதரவாளர்களை, இது கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது!

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'
##~##

''ரசாயனத்தில் விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உட்கொள்வதால்தான் மக்கள் நோயாளிகளாகி, சீக்கிரமே வாழ்வை இழக்கிறார்கள். இயற்கை விவசாயம்தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும்'' என்று நாடு கடந்தும் குரல் கொடுத்து வந்தவர், நம்மாழ்வார்.

விவசாயத்தை, விவசாயிகளே வேண்டா வெறுப்பாகப் பார்த்த நிலையில்... சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இளைஞர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்... என பல தரப்பினரையும் விவசாயத்தை நோக்கி ஓடி வரச் செய்தவர், நம்மாழ்வார்.

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பயணித்திருக்கும் நம்மாழ்வார், பல்வேறு பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள், போராட்டங்கள் என்று பலவற்றையும் முன்னெடுத்திருக்கிறார். குறிப்பாக, மரபணு மாற்றப்பட்ட விதைகள், பூச்சிக்கொல்லி நச்சுகளைத் தயாரித்து சந்தைப்படுத்தும், அசுர பலமிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி போராடியிருக்கிறார்.

இறப்பதற்கு முன்பாகக்கூட, களத்தில்தான் நின்றிருந்தார் இந்தப் பசுமைப் போராளி! ஆம், காவிரிப் பாசனப் பகுதியில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. 'இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இங்குள்ள விளைநிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறிவிடும்’ எனப் பதைபதைத்து, கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கனமழையிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோதுதான், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்காடு கிராமத்தில், டிசம்பர் 30-ம் தேதி இயற்கையோடு கலந்தார் நம்மாழ்வார்.

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

இறுதி நிமிடங்கள்...!

டிசம்பர் 30 அன்று இரவு, 'நம்மாழ்வார் இயற்கை எய்தி விட்டார்’ என்று பசுமை விகடனுக்கு வந்த செய்தி, ஆசிரியர் குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இது உண்மையாக இருக்கக்கூடாது’ என்றே மனம் பதைபதைத்தது. மீண்டும் மீண்டும் சிலரைத் தொடர்பு கொண்ட போது, அது உண்மை என்பது உறுதியானது. தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், விவசாயிகள் நம்மைத் தொடர்பு கொண்டு அழுகையும், ஆற்றாமையுமாக விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.

அன்று இரவே, அவருடைய உடலை... கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சுருமான்பட்டியில் அவர் உருவாக்கியிருக்கும் 'வானகம்' உயிர்ச்சூழல் பண்ணைக்குக் கொண்டு செல்ல குடும்பத்தாரும், உடன் இருந்தவர்களும் முடிவு செய்தனர். ஆனால், 'பசுமை விகடன்’ ஆசிரியர் குழு ஆலோசனை செய்து, 'உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும்... அவருடைய உடலை புத்தாண்டு தினத்தில் விதைக்க வேண்டும்’ என்று குடும்பத்தாரிடம் பேசினோம். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

தமிழகத்தின் மையப்பகுதி திருச்சி என்பதால், அங்கே நம்மாழ்வாரின் உடலை வைத்தால் விவசாயிகளும் பொதுமக்களும் வருவதற்கு வசதியாக இருக்கும் என்கிற எண்ணத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனை செல்போனில் தொடர்பு கொண்டோம். நள்ளிரவு 12.30 மணி என்ற போதும், போனை எடுத்துப் பேசியவர், தகவல்கேட்டு மிகுந்த அதிர்ச்சியானதோடு.... 'எந்த இடத்துல வைக்கணும்னு சொல்லுங்க... ஏற்பாடு செய்றேன்’ என்று பரிவோடு சொன்னார். ஆனால், 'தஞ்சாவூரிலேயே வைக்கலாமே’ என நம்மாழ்வாரின் குடும்பத்தார் விரும்ப... பிறகு, தஞ்சாவூர், பாரத் கல்லூரி தாளாளர் புனிதா கணேசனின் அனுமதி பெற்று, கல்லூரி வளாகத்தில் நம்மாழ்வாரின் உடல் வைக்கப்பட்டது.

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பாக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பையன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து 'வானகம்' பண்ணைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நம்மாழ்வாரின் உடல், அங்கே ஏற்கெனவே அவர் தேர்வு செய்து சொல்லியிருந்த இடத்தில் விதைக்கப்பட்டது! அந்த இடத்தில் வேப்ப மரக்கன்று ஒன்றும் அவருடைய குடும்பத்தாரால் நடப்பட்டது!

முன்னதாக, வானகம் பண்ணைக்கு சாரை சாரையாகத் திரண்டு வந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அனைவருமே கலங்கிப் போய்த்தான் நின்றனர். கூட்டம் கூட்டமாக, ஆங்காங்கே நின்று கொண்டு விவசாயிகள் பேசிக் கொண்டிருந்தனர். தர்மபுரியைச் சேர்ந்த கேழ்வரகு விவசாயி அருண் உள்ளிட்டோர் ஓரிடத்தில் நின்றிருக்க... அங்கே 'பசுமை விகடன்' ஆசிரியர் குழுவினரும் மற்றும் சிலரும் இருந்தனர்.

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

அப்போது பேசிய அருண், ''இனி, நம்மாழ்வார் இடத்துக்கு யார் வருவாங்க... நம்மளையெல்லாம் யார் வழி நடத்துவாங்க...'' என்றொரு கேள்வியை முன்வைத்தார். அப்போது 'பசுமை விகடன்' ஆசிரியர் சொன்ன பதில்-

''இதென்ன கேள்வி... இனி நாம் ஒவ்வொருவருமேதான் நம்மாழ்வார். கடைசி வரை, நம் ஒவ்வொருவர் பின்னாலும் நம்மாழ்வார் வந்து கொண்டே இருப்பார் என்று எத்தனைக் காலத்துக்கு எதிர்பார்க்க முடியும்? அவர் அடிக்கடி சொல்வது என்ன? 'நீங்கள் ஒவ்வொருவருமே ஒரு இயற்கை வேளாண் விஞ்ஞானியாக வடிவெடுக்க வேண்டும். நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் செய்யத் தேவையில்லை. 'அரியானூர்' ஜெயச்சந்திரன், நெல்லு விதைச்சுருக்கார்... போய் பாருங்கனு சொல்றேன். 'முருகமங்கலம்' சம்பந்தம் பிள்ளை, சீமை காட்டாமணியை தன் உரமாக்கியிருக்கார்... போய் பாருங்கனு சொல்றேன். அங்க போய் பார்த்து, அவங்க பயன்படுத்தியிருக்கற தொழில்நுட்பங்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்புடையதா இருந்தா... பின்பற்றுங்க. இல்லைனா... உங்க பாணியிலயே விவசாயத்தைச் செய்யுங்க. அவரு சொன்னாரு... இவரு சொன்னாருனு எதையும் செய்யாதீங்க. நீங்களா சிந்திச்சி, தற்சார்போட விவசாயம் செய்யுங்க' என்பதைத்தானே முக்கியமாக முன்வைப்பார் நம்மாழ்வார். அப்படியிருக்க... தொடர்ந்து நீங்கள், இன்னொரு நம்மாழ்வாரைத் தேடிக் கொண்டிருந்தால் எப்படி?'' என்றார் ஆசிரியர்.

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'
'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

அருகிலிருந்த 'திண்டுக்கல்' வெள்ளைச்சாமி, ''ஆமாம்... எத்தனைக் காலத்துக்கு இப்படியே இருப்பீங்க. இப்படியே இருந்தா, அது நம்மாழ்வார் ஐயாவுக்கு செய்யுற மரியாதையும் இல்லை. அவர் இத்தனை நாளா பாடுபட்டதுக்கும் அர்த்தமும் இல்லை. இனிமே இயற்கை விவசாய ஜோதி நம்ம ஒவ்வொருத்தர் கையிலயும்தான். நாமெல்லாருமே நம்மாழ்வாரா மாறி... அவர் சார்புல அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதுதான்'' என்று சொல்ல... சுற்றியிருந்த அனைவருமே ஆமோதித்தனர்.

ஆம், இயற்கை விவசாய ஜோதி, இனி நம் ஒவ்வொருவரின் கைகளிலும்தானே!    

<<<<<>>>>>

மண்ணுக்கும் மக்களுக்கும்!

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், இளங்கலை விவசாயம் பயின்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பணியாற்றினார். இங்கு செய்யப்படும் ஆய்வுகள் எல்லாம் விவசாயிகளுக்குப் பலன் தராதவை என வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அரசுப் பணியை உதறித் தள்ளிவிட்டு, முழுமையாக இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

இனியெல்லாம் இயற்கையே!

'பசுமை விகடன்' முதல் இதழ், 2007 ஜனவரி 26 அன்று கோயம்புத்தூரில் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வுக்கு ஆர்வத்துடன் தலைமை ஏற்ற நம்மாழ்வார், அன்றிலிருந்து, 'பசுமை விகடனும் தானும் வேறல்ல’ என்றே கூறி வந்தார். 'என்னுடைய வேலையை எளிமையாக்கியிருக் கிறது பசுமை விகடன்' என்று, தான் பங்கேற்ற பெரும்பாலான கூட்டங்களிலும் அவர் சொல்லத் தவறியதில்லை. தொடர் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்று பசுமை விகடனில் எழுதி வந்தார். 'இனியெல்லாம் இயற்கையே’ என்ற தலைப்பில் 'பசுமை விகடன்’ சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடான நேரடி களப்பயிற்சிகளுக்கு, தானே தலைமை ஏற்று தொடர்ந்து நடத்தினார். கருத்தரங்குகள், விவசாயக் குழுக்கள், மகளிர் குழுக்களுக்கான பயிற்சிகள்... என 'பசுமை விகடன்’ நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தட்டாமல் பங்கேற்று விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்.

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

நம்மாழ்வாருக்கு என்ன ஆச்சு?

'ஐயாவுக்கு உடம்பு சரியில்லைனதும்... மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்திருக்கலாம். தப்பு பண்ணிட்டாங்க...’, 'மீத்தேன் வாயுவுக்கு எதிரானப் பிரசாரப் பயணத்துக்காக, இந்த வயசுல நம்மாழ்வாரைப் போட்டு இப்படி அலைக்கழிச்சுருக்கக் கூடாது...’ என்றெல்லாம் ஆதங்கக் குரல்கள் கேட்கின்றன தற்போது. தன்னுடைய கடைசி நாளன்று பிச்சினிக்காடு கிராமத்தில் நம்மாழ்வார் தங்கியிருந்தது... விவசாயி லெனின் வீட்டில்தான். அன்று என்ன நடந்தது என்பது பற்றி லெனின் மகன் ஏங்கல்ஸ்ராஜா இங்கே பேசுகிறார்...

''ஐயா, அலோபதி மருத்துவத்தைக் கடுமையா சாடினார். 'தமிழ்நாட்டின் முன்னோடி இயற்கை மருத்துவரான வெள்ளிமலையை ஆஸ்பத்திரியில சேர்த்து ஆபரேசன் பண்ணி, கொன்னுட்டாங்க. வேதாத்திரி மகரிஷியை, ஆஸ்பத்திரியில சுவாசக் குழாயைப் போட்டு சாகடிச்சுட்டாங்க. அதுமாதிரி எனக்கு நடந்துடக் கூடாது’னு அடிக்கடி சொல்லுவாரு. 2012-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாசம், வயித்துல கட்டி வந்து, ரொம்ப கஷ்டப்பட்டப்பக்கூட, ஆஸ்பத்திரிக்குப் போக மறுத்துட்டார்.

'இயற்கை விவசாயம் செய்யுங்க’னு நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். நிலமே இல்லாம போயிட்டா, அப்புறம் எங்க விவசாயம் செய்றது? அதனால, மீத்தேன் எடுக்கறதுக்கு எதிரா... கிராமம் கிராமமா போயி, ஒவ்வொரு வீடா கதவைத் தட்டி, 'நிலத்தை வித்துடாதீங்க’னு கெஞ்சியாவது தடுக்கப் போறேன். இந்தப் போராட்டத்துல நான் இறந்து போனாலும், மீத்தேன் எடுக்குறதைத் தடுத்து நிறுத்திடணும்’னு சொல்லிக்கிட்டே இருந்தார். இந்தப் பிரசாரப் பயணத் திட்டத்தையும் அவர்தான் உருவாக்கினார். 'ஓய்வெடுத்துக்குங்க’னு நாங்க சொன்னதுக்கு, 'என் உடம்பு இங்க இருந்தாலும், மனசு அங்கேயேதான் இருக்கும்’னு சொல்லிட்டாரு.

'இயற்கை விவசாய ஜோதி... இனி, உங்களிடம்!'

27-ம் தேதி, வெள்ளிக்கிழமை, முதுகுத் தண்டுவடத்துல இருந்த சின்னக் கட்டி, தானா உடைஞ்சு, அடுத்தடுத்த நாட்கள்ல நல்லா காய்ஞ்சி, புண் ஆற ஆரம்பிச்சிடுச்சு. ஆனா உடல் சோர்வா இருந்தாரு. திங்கள்கிழமை காலையில சத்துமாவுக் கஞ்சி குடிச்சாரு. காய்கறி சூப் குடிச்சாரு. இட்லியை நாட்டுச்சர்க்கரையிலயும், தயிர்லயும் தனித்தனியா தொட்டு சாப்பிட்டாரு. அன்னிக்கு முழுக்க ஓய்வுலதான் இருந்தார். தேங்காய் எண்ணெய் தடவி, தலைமுடியை சீவிவிட சொன்னார். மீசையையும் சீவிவிட சொன்னார். எப்பவும் கம்பீரமா இருக்கணும்னு ஆசைப்படுவார். அன்னிக்கும் அதேமாதிரிதான் இருந்தார். லேசா மூச்சுத்திணறல் இருந்துச்சு, 'தானாக சரியாயிடும்’னு ஐயா நம்பினார்.

ராத்திரி 8 மணிக்கு தேங்காய் பால் குடிச்சாரு. 8.20-க்கு உயிர் பிரிஞ்சிடுச்சு. கடைசி வரைக்குமே நிதானத்தோடதான் இருந்தார். சுயநினைவோடு இருக்கறவரை, அவரோட விருப்பத்துக்கு மாறாக, எப்படி ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியும்?'' என்றார், ஏங்கல்ஸ் ராஜா.

நம்மாழ்வாரின் மகள் மீனாவிடம் பேசினோம். ''என் கணவர் அலோபதி டாக்டர்தான். எங்க சொந்தக்காரங்க இன்னும் பலபேரு டாக்டரா இருக்காங்க. ஆனா, எங்க அப்பா, அந்த வைத்தியத்துக்கு ஒப்புக்கல. தன்னோட முடிவுல கடைசிவரை உறுதியா இருந்துட்டாரு. 'ஸ்கேன் பண்ணி பார்க்கலாம்’னு சொன்னதுக்குக்கூட ஒப்புக்கல'' என்று சொல்லி அவர் அழ, மனைவியைத் தேற்றிய டாக்டர். பாலசஞ்சீவி,

''யாராலயுமே அவரை சம்மதிக்க வைக்க முடியல. அவர் மேல பற்று உள்ள அலோபதி டாக்டர்கள் பலரும், பல தடவை செக்கப்புக்கு கூப்பிட்டுப் பார்த்துட்டாங்க. அத்தனைப் பேரையுமே தன் கருத்தை ஏத்துக்குற அளவுக்குப் பேசி சமாளிச்சுட்டாரு. அவரோட மனசைக் கொஞ்சம்கூட மாத்த முடியலை'' என்றார்.

 நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...

நம்மாழ்வாரின் வாழ்க்கையைப் பற்றி, அவர் கையாலேயே தொடராக எழுத வைக்க வேண்டும் என்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பேசினோம். சந்தோஷமாக ஒப்புக் கொண்டவர், 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தலைப்பில் இதுவரை 38 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். 39-வது அத்தியாயத்தையும் எழுதிக் கொடுத்து விட்டார். அது, அடுத்த இதழில் வெளியாகும்.

நம்பிக்கையை விதைத்தார்!

பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளில் நீண்டநேரம் தொடர்ச்சியாகப் பேசக்கூடிய நம்மாழ்வார், சாப்பாட்டைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார். அவருடன் இருப்பவர்கள் வற்புறுத்தித்தான் உணவருந்த வைப்பார்கள். தான், செல்லும் கிராமங்களில், விவசாயிகளின் வீடுகளிலேயே தங்கிவிடுவார். இயற்கை விவசாயப் பயிற்றுநர்களை ஒடுக்குவதற்காக, கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் மன்றச் சட்டத்தை முறியடித்து, விரட்டியதிலும் இவருடைய பங்கு முதன்மையானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு