Published:Updated:

10 ஆண்டுகளில் ஏக்கருக்கு 3 லட்சம்...

தரிசு நிலத்திலும் வருமானம் கொடுக்கும் வேம்பு...!

வாழ்க மரம்... வளர்க பணம்! லாபம் கூட்டும் கைகாட்டி தொடர் 

வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.
 இரா.ராஜசேகரன்

பளிச்... பளிச்...

ஏக்கருக்கு 96 கன்றுகள்.
எல்லா இடங்களுக்கும் ஏற்றவை.

தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடிய மரம் வேம்பு. தெய்வமாக மதித்து மக்கள் வழிபடும் பெருமை வேம்புக்கு மட்டுமே உண்டு. காற்றிலுள்ள நச்சுகளை உறிஞ்சிக் கொள்வதோடு, மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களையும் தீர்க்கும் வல்லமை படைத்தவை வேப்ப மரங்கள். வீடுகளுக்குத் தேவையான நிலை, கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கும் இம்மரம் பயன்படுவதால் இதை 'ஏழைகளின் தேக்கு’ என்றும் அழைக்கிறார்கள்.

10 ஆண்டுகளில் ஏக்கருக்கு 3 லட்சம்...

தரிசு, மானாவாரிக்கு ஏற்றது!

##~##

வேம்பு வெறும் நிழலுக்காக, மருத்துவத்துக்காக மட்டுமே வளர்க்கப்படும் மரமல்ல.... வணிகரீதியாகவும் வளர்த்து லாபம் பார்க்கலாம். அனைத்து வகை மண்ணிலும் வளர்ந்தாலும், கரிசல் மண்ணில் நன்றாக வளரும். நீர் தேங்கும் இடங்களில் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். இறவை, மானாவாரி இரண்டு முறைகளிலும் இதைப் பயிர் செய்யலாம். இறவையில் ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் மழைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 15 அடி, வரிசைக்கு வரிசை 30 அடி இடைவெளியில் மூன்று கன அடி அளவில் குழியெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 96 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் 1 கிலோ மண்புழு உரம், 30 கிராம் வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்), 1 கிலோ தொழுவுரம், 15 கிராம் அசோஸ்பைரில்லம், 15 கிராம் பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட்டு, அதன்பிறகு கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

தண்ணீர் வசதியுள்ள இடங்களில், நடவு செய்த முதல் ஆண்டு வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். அதன்பிறகு அவ்வப்போது மரத்தைக் காய விடாமல் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் ஒவ்வொருக் கன்றைச் சுற்றியும் 10 அடி சுற்றளவுக்கு ஒரு அடி உயரத்தில் வட்ட வடிவில் கரை அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். நன்றாக நிழல் கட்டும் வரை ஊடுபயிராக கம்பு, சோளம், கடலை, தட்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம்.

மரம்

10 ஆண்டுகளில் ஏக்கருக்கு 3 லட்சம்...

4 ஆயிரம்!

வேப்ப மரம் நடவு செய்த 5 அல்லது 6 ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பழங்கள் இருக்கும். நிலத்தின் தன்மைக்கேற்ப 8 வயதுள்ள மரத்தில் சுமார் 5 முதல் 10 கிலோ விதையும், 10 வயதுள்ள மரத்தில் சுமார் 10 முதல் 15 கிலோ

10 ஆண்டுகளில் ஏக்கருக்கு 3 லட்சம்...

விதையும் கிடைக்கும். பழங்கள் கீழே விழுந்த பிறகு சேகரிப்பதை விட, மரத்தில் பழமாக இருக்கும் போதே சேகரித்தால்... அதிக மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ விதை  குறைந்தபட்சம் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கணக்கின்படி ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக ஏக்கருக்கு சுமாராக 5 ஆயிரம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். 10 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் ஒரு வேப்ப மரம், 4 ஆயிரம் ரூபாய் வரை விலைபோக வாய்ப்பிருக்கிறது. ஒரு ஏக்கரிலுள்ள 96 மரங்கள் மூலமாக 3,84,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இது தற்போதைய விலைதான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும்.

புன்னகைக்கும் புஞ்சை!

வேப்ப மரத்தை 11 ஏக்கரில் மானாவாரியாகப் பயிரிட்டுள்ள விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, நாராயணன் என்ன சொல்கிறார்?

''மொத்தம் 13 ஏக்கர் கரிசல் காடு இருக்கு. அதில் 11 ஏக்கர்ல வேம்பு, 2 ஏக்கர்ல புளி நடவு செஞ்சிருக்கேன். நடவு செஞ்சி 3 வருஷமாச்சு. செடிக்குச் செடி 25 அடியும், வரிசைக்கு வரிசை 20 அடியும் இடைவெளி விட்டு நடவு செஞ்சி மரத்தைச் சுத்திக் குழியெடுத்து வெச்சிருக்கேன். ஒரு ஏக்கர்ல 87 மரம் இருக்கு. பெய்ற மழைத் தண்ணியை வெச்சே அம்சமா வளந்திருக்கு மரம். வேலைக்கு ஆள் கிடைக்காததால பழத்தைச் சேகரிக்குறது இல்ல.

பெருசா வருமானத்தை எதிர்பார்த்து இதை வளர்க்கல. புஞ்சையைச் சும்மா போட்டு வெக்க மனசில்லாமத்தான் நட்டு வெச்சேன். ஒரு மரம் 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் வரைக்கும் விலை போகும்னு சொல்றாங்க. 4 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும், 87 மரம் மூலமா 3,48,000 ரூபாய் வருமானமா கிடைக்கும். புஞ்சையில இந்த வருமானம் வேறெந்த பயிர்லயும் கிடைக்காது.''

நம்புங்கள்... நாராயணன் சொல்வதை! தரிசாக இருக்கும் இடங்களில் எல்லாம் வேம்பை நட்டு, சூழலையும் காத்து, வருமானத்துக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

- தழைக்கும்

விலை மதிப்பு அதிகம்!

 இந்தியாவில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் வேம்பு அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. 'அசாடைரக்டா இண்டிகா’ (Azadirachta indica) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வேம்பு, மருத்துவத்திலிருந்து கட்டட வேலைகள் வரை பயன்படுகின்றது. வேப்பங் கொட்டையில் கிடைக்கும் 'அசாடைரக்டின்’ (Azadirachtin) என்ற வேதிப்பொருள் அதிக விலை மதிப்புள்ளது.

 படங்கள்: என்.ஜி. மணிகண்டன்
தொடர்புக்கு நாராயணன்,
அலைபேசி : 97872-60791.

அடுத்த கட்டுரைக்கு