Published:Updated:

பயிற்சி கொடுத்த பரிசு...!

வெகுமதி கொடுத்த வெண்பன்றி !

பயிற்சி கொடுத்த பரிசு...!

வெகுமதி கொடுத்த வெண்பன்றி !

Published:Updated:
பயிற்சி கொடுத்த பரிசு...!
##~##

''பசுமை விகடன் வாங்கினதும், முதல்ல 'தண்டோரா' பகுதியைத்தான் பார்ப்பேன். அதுல, கால்நடை வளர்ப்புப் பயிற்சி சம்பந்தமா அறிவிப்பு வந்திருந்தா... உடனே அந்தப் பயிற்சிக்கு ஆஜராகிடுவேன். அப்படிக் கத்துக்கிட்டுத்தான், இப்போ பன்றி வளர்ப்புல இறங்கியிருக்கேன்'' என்று குதூகலப்படுகிறார், சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த கோட்டைமுத்து.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரத்தி கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சிறுதாமூர். அங்குதான், கோட்டைமுத்துவின் வெண்பன்றிப் பண்ணை இருக்கிறது. பசுமைப் போர்த்திய நெல் வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பண்ணையில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த கோட்டைமுத்துவைச் சந்தித்தோம்.

'எலெக்ட்ரிக் பொருள்கள் தயாரிக்கிற கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தேன். அங்க செக்யூரிட்டியா வேல செஞ்ச பொன்னுரங்கம் மூலமா, 2009-ம் வருஷத்துல 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. முதன்முதல்ல அதை படிச்சப்போ... எனக்குள்ள இவ்வளவு மாற்றத்தை அது ஏற்படுத்தும்னு நான் நினைச்சுகூட பாக்கல. விவசாயம், கால்நடைனு நிறைய விஷயங்கள் இருந்ததால தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுதான் எனக்கு விவசாயம் மேல அதிக ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. நிறைய கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான் தம்பியோடு சேர்ந்து விழுப்புரம் பக்கத்துல அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கினேன். அது எனக்கு தூரமா இருந்ததால, இங்க 2 ஏக்கர் நிலம் வாங்கிட்டேன்.

முதல் போகமா 40 சென்ட்ல சிகப்புகார் நெல்லும், 40 சென்ட்ல மக்காச்சோளமும் போட்டேன். 'யூரியா போடாம பயிர் விளையாது’னு சுத்தியிருக்கிறவங்க சொன்னாங்க. எதைப் பத்தியும் கவலைப்படாம, இயற்கை விவசாயத்துலதான் செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சது. அதுல கிடைச்ச நெல்லை அரிசியாக்கி, 'பசுமை விகடன்’ மூலமா தொடர்பு கிடைச்ச சிலருக்கு விற்பனை செஞ்சேன். அதுக்கப்பறம் பக்கத்திலேயே ரெண்டு ஏக்கர் சவுக்குத் தோட்டத்தையும் வாங்கிப் போட்டுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த கோட்டைமுத்து, தொடர்ந்தார்.

பயிற்சி கொடுத்த பரிசு...!

கவலைப்பட்டா காசு கிடைக்காது!

''விவசாயம் செய்யுறப்போ வயல் பக்கத்துல இருந்து பாத்துக்க வேண்டியிருந்துச்சு. ஆனா, உடனடியா குடும்பத்தை கிராமத்துக்கு அழைச்சுட்டு வரமுடியல. அதனால ஆடு, மாடு வளர்க்கலாம்னு யோசிச்சப்பதான் வெண்பன்றி வளர்க்கற யோசனை வந்துச்சு. உடனே, அரியலூர்ல ஒருத்தர்கிட்ட பன்றிக்குட்டிகளை வாங்கிட்டு வந்துட்டேன். இவரும், பயிற்சி மூலமா எனக்கு அறிமுகமானவர்தான்.

பயிற்சி கொடுத்த பரிசு...!

ஆரம்பத்துல 460 சதுரடியில தடுப்புகள் வெச்சு அஞ்சு தாய்பன்றிகள், அஞ்சு குட்டிகளை வாங்கிட்டு வந்தேன். எங்க குடும்பத்துல இதுவரைக்கும் யாரும் இந்தத் தொழில் செஞ்சதில்ல. அதை விரும்பவும் இல்லை. என் மனைவிகூட 'உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? வேற தொழில்கூட செய்யலாமே...’னு சொன்னாங்க. இதுக்காக அவங்க ஒரு வாரம் என்கிட்ட பேசாமக்கூட இருந்தாங்க. ஆனா, நான் கவலைப்படவேயில்லை.

ஆரம்பத்துல பசுந்தீவனம், அடர்தீவனம் கொடுத்து வளர்த்தேன். அதுல சரியான வளர்ச்சியில்லை. அப்பறம், பெருங்குடி பக்கம் காலேஜ் ஹாஸ்டல்கள்ல கிடைக்கிற வீணான, மீதமாகிற உணவுப் பொருள்களை எடுத்துட்டு வந்து கொடுக்க ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு வளர ஆரம்பிச்சது. ஒரு வருஷத்துல குட்டிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. அதனால, முறையா கொட்டகை போட்டு வேலைக்கு ஒருத்தரை சேர்த்துக்கிட்டேன். இதுக்காக வங்கியில கடன் உதவியையும் வாங்கினேன்'' என்ற கோட்டைமுத்து, பன்றி, பராமரிப்பு முறைகள் பற்றி விளக்கமாகச் சொன்னார்.

3 மாதத்தில் விற்பனை!

''பன்றிகளுக்குனு சில குணங்கள் உண்டு. குறிப்பிட்ட இடத்திலதான் சாணமும், மூத்திரமும் போகும். ஒண்ணு மேல ஒண்ணு படுத்துகிட்டுத் தூங்கும். தீவனத்தை வைக்கும்போது கூட்டமாத்தான் சாப்பிடும். பசிக்க ஆரம்பிச்சா, எல்லாம் சேர்ந்து அலற ஆரம்பிச்சுடும். இதையெல்லாம் சமாளிக்கணும். பன்றிப் பண்ணையில தீவனம்தான் ரொம்ப முக்கியம். அதனால அதுக்கு சரியான ஏற்பாட்டைப் பண்ணிடணும். பிறந்த 50 நாள்ல தாய்கிட்ட இருந்து குட்டிகளைப் பிரிச்சுடணும். ஒரே வயசுள்ள இருப்பத்தஞ்சு குட்டிகளை ஒரு கொட்டகைக்குள்ள ஒண்ணா விடலாம். வளர வளர இட நெருக்கடி அதிகமாகும். அதுக்கேத்த மாதிரி பிரிச்சு விடணும். 3 மாச வயசுல குட்டிகளை விக்கலாம். அந்த சமயத்துல ஒரு குட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய்ல இருந்து, 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போகும்.

தனித்தனியாக வளர்ப்பு!

பயிற்சி கொடுத்த பரிசு...!

6 மாச வயசு வந்த உடனே, கறிக்கு வளர்க்கற குட்டிகளையும், தாய்ப்பன்றிகளா மாத்த விரும்புற குட்டிகளையும் தனித்தனியா பிரிச்சுடணும். சினைக்கு வளர்க்குற பன்றிகளோடு ஒரு கிடா பன்றியையும் விட்டுடணும், 11 மாசத்துக்கு மேல் பன்றிகள் சினைக்கு வரும். சினை பிடிச்ச பன்றியை தனி ஷெட்ல அடைச்சுடணும். பன்றியோட சினைக்காலம் 3 மாதம் 3 வாரம் 3 நாள். ஒரு பன்றி சராசரியா 7 குட்டில இருந்து 12 குட்டி வரை போடும். வருஷத்துக்கு ஒரு தடவை பன்றிகள் சினைக்கு வரும். குட்டிகளைப் பிரிச்ச பிறகு, அடுத்து வர்ற சினைப்பருவத்துல கிடாவோட சேர்க்கக் கூடாது. அடுத்தப் பருவத்துக்கு வரும்போதுதான் கிடாவோட சேர்க்கணும். அப்போதான், பன்றியோட உடல் நிலை சீராக இருக்கும். 2 வருஷத்துக்கு ஒரு தடவை கிடாவை மாத்திடணும்.  

பிறந்த 50 நாள் வரை தாய்ப்பாலே போதுமானதா இருக்கும். அதுக்கப்பறம் உணவு கொடுக்கலாம். தாய்ப்பன்றிகளா மாத்த வளக்குற பன்றிகளுக்கு உணவுக்கழிவுகளோட... பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கொடுக்கணும். 2 சினைப் பன்றிகளுக்கு ஒருவேளைக்கு மூணு கிலோ அடர்தீவனம், 7 கிலோ பசுந்தீவனம், ஒரு அன்னக்குடை உணவுக்கழிவுனு கொடுக் கிறோம். கறிக்காக வளர்க்கற பன்றிகளுக்கு கழிவுகளை மட்டும் கொடுத்தா போதுமானது. இந்தப் பன்றிகளுக்கு காலையில் ஒரு குடம் கழிவு, சாயங்காலம் ஒரு குடம் கழிவுனு கொடுக்குறோம். பசிக்கேத்த மாதிரி சாப்பாட்டோட அளவைக் கூட்டி, குறைச்சுக் கணும். கறிக்கு வளர்க்குற பன்றிகள் ஒரு வருஷத்துக்குள்ள 90 கிலோ வரைக்கும் எடை வந்துடும்.

தினமும் காலையில் ஏழு மணிக்கு ஷெட் முழுக்க கழுவிவிட்டு, ஒவ்வொரு பன்றியையும் குளிப்பாட்டி விடுவோம். கழுவி முடிக்க,

11 மணி ஆகிடும். அதுக்கப்பறம்தான் தீனி வைப்போம். சாயங்காலம் 5 மணிக்கு தீனி வைப்போம். எப்பவும் ஷெட்டுக்குள்ள தண்ணி இருக்குற மாதிரி பாத்துக்குவோம். வாரம் ஒரு தடவை பசுந்தீவனத்தோட வேப்பிலையைக் கலந்து கொடுக்குறோம். அதனால வயித்துல புழுக்கள் இருக்காது'' என்ற கோட்டைமுத்து, நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.    

பயிற்சி கொடுத்த பரிசு...!

வருஷமெல்லாம் வருமானம்!

''முதல் ஈத்து மூலமா 65 குட்டிகள் கிடைச்சுது. அதுல கொஞ்சத்தை வித்துட்டு, மீதியை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ கையில 20 தாய் பன்றிகள், 89 குட்டிகள் (3 மாதம் முதல் 6 மாத வயது வரை), 21 பால் குட்டிகள், 5 கிடாக்கள்னு மொத்தம் 135 பன்றிகள் இருக்கு. கொட்டகைக்கு 5 லட்ச ரூபாய் செலவாச்சு. தீவனம், போக்குவரத்து, மின்சாரம், சம்பளம்னு வருஷத்துக்கு சராசரியா ஆறரை லட்ச ரூபாய் வரை செலவாகுது. இந்த ஒரு வருஷத்துல மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகிடுச்சு. இதுவரை 4 லட்ச ரூபாய்க்கு பன்றிகளை விற்பனை செஞ்சுருக்கேன். பண்ணையில

5 லட்ச ரூபாய் மதிப்புக்கு பன்றிகள் இருக்கு. அடுத்தடுத்த வருஷத்துல இன்னமும் விற்பனை கூடும். அப்போ லாபமும் அதிகரிக்கும்''¢ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் கோட்டைமுத்து.

தொடர்புக்கு,
கோட்டைமுத்து,
செல்போன்: 91505-89396.

குறைந்த விலையில் குட்டிகள்!

பயிற்சி கொடுத்த பரிசு...!

பன்றி வளர்ப்பு பற்றிப் பேசிய காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் குமாரவேல், ''கறி, இனவிருத்தினு பன்றி வளர்ப்புல ரெண்டு வகைகள் உண்டு. இனவிருத்திக்காக வளர்க்கும் பன்றிகளுக்கு பசுந்தீவனமும், அடர்தீவனமும் மட்டும்தான் கொடுக்கணும். அப்போதான், புரதச்சத்து, மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புகள்னு எல்லா சத்துகளும் கிடைக்கும்.

கறிக்காக வளர்க்கும்போது, உணவகக் கழிவுகளை மட்டுமே கொடுத்தாப் போதும். ஆனா, சூடுபடுத்திக் கொடுக்கணும். எங்கள் வேளாண் அறிவியல் நிலையத்தில் உயிர் எடைக்கு ஒரு கிலோ 200 ரூபாய்னு வளர்ப்புக்கான குட்டிகள் விற்பனைக்கு இருக்கு. ஒரு குட்டி 7 கிலோவுல இருந்து, 10 கிலோ எடை வரை இருக்கும்'' என்றவர்,

''வசம்பை இடிச்சு தண்ணியில கலந்து பன்றிகள் மேல தெளிச்சுவிட்டா... ஈ மொய்க்காது'' என்று அருமையான ஒரு யோசனையையும் சொன்னார்!  

தொடர்புக்கு,
தொலைபேசி: 044-27452371

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism