Published:Updated:

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

இ. கார்த்திகேயன் படங்கள்: ஏ. சிதம்பரம்

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

இ. கார்த்திகேயன் படங்கள்: ஏ. சிதம்பரம்

Published:Updated:
விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

சாதனை

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இந்தியாவின் இதயம், கிராமங்களில் இருக்கிறது’ என்றார், மகாத்மா காந்தி. அந்த இதயத்தை வலுப்படுத்தி, பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்வதில் 'நபார்டு' வங்கியின் பணி அளப்பரியது. வீழ்ந்து வரும் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் விதத்தில் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டு வரும் இந்த வங்கி, 'மண்ணில் இருந்து மார்க்கெட்டிங் வரை’ என்ற திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது!

தூத்துக்குடி மாவட்ட, 'நபார்டு' மேம்பாட்டு அதிகாரி எம்.ஆர். நடராஜன், இந்தத் திட்டம் பற்றி உற்சாகம் பொங்க நம்மிடம் பேசினார். ''2006-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலூகா, ஆதனூர் கிராமத்தில், நபார்டு வங்கி சார்பில் 'வீரபாண்டிய கட்டபொம்மன் உழவர் மன்றம்' தொடங்கினோம். 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாயத் துறையோடு ஒப்பந்தம் செய்து மக்காச்சோளம் சாகுபடி செய்தோம். வீரியவிதைகள், உரமிடுதல் போன்ற உக்திகள் மூலம் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தியதில் நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து, 2009-ம் ஆண்டு நபார்டில் 'தொழில் சார்ந்த கூட்டுப்பொறுப்புக் குழுக்கள்' தொடங்க முடிவு செய்து... பொம்மையாபுரம், குமரெட்டியாபுரம், ஆதனூர் உள்ளிட்ட 15 கிராமங்களில் 500 மானாவாரி விவசாயிகளைத் தேர்வு செய்தோம். இவர்கள் அனைவரும் மக்காச்சோள சாகுபடி செய்து வந்தவர்கள். இவர்களை, குழுவுக்கு 5 விவசாயிகள் என 100குழுக் களாகப் பிரித்தோம். மண் பரிசோதனை, விதைநேர்த்தி, நீர்மேலாண்மை, உரமிடுதல், பூச்சிக்கொல்லி, கருவிகள், தொழில்நுட்பம், கடன், காப்புறுதி, சந்தைப்படுத்துதல் என 'மண்ணில் இருந்து மார்க்கெட்டிங்’ வரையான அனைத்து விஷயங்களையும் இவர்களுக்கு தொடர் பயிற்சிகள் மூலமாக விளக்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, பாண்டியன் கிராம வங்கி ஆகியவற்றின் மூலம் பயிர்க்கடன் ஏற்பாடு செய்தோம்.

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

இடைத்தரகர் இல்லாமல் விற்பனை!

அவர்களில் சிலரை, கர்நாடக மாநிலம், தார்வார்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம், மலேகான் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள விவசாயிகளோடு உரையாட வைத்ததில், பல புதிய முறைகளைத் தெரிந்து கொண்டார்கள். அதோடு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மூலமாக விளைபொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்யவும் உதவிகளைச் செய்தோம். இப்போது வெற்றிகரமாக அவர்கள் மக்காச்சோள சாகுபடியைச் செய்து வருகிறார்கள். விளைவித்த மக்காச்சோளத்தை அனைவரும் பொம்மையாபுரம் கிராமத்துக்குக் கொண்டு வந்து குவித்து, விற்பனை செய்கிறார்கள். தற்போது, ஒரு குவிண்டால் 1,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கூட்டுச்சந்தை முறையால் நல்ல விலை கிடைப்பதோடு, இடைத்தரகர்களும் தவிர்க்கப்படுகிறார்கள். வெளிச் சந்தையில் குவிண்டால் ரூ.1,200 க்கு விற்பனையாகிறது. எடையிலும் துல்லியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, 12 முருங்கை விவசாயிகளை இணைத்து 'ஸ்பிக்' நிறுவனத்துடன் இணைந்து பி.கே.எம்-1 ரக செடிமுருங்கை சாகுபடியை ஆரம்பித்துள்ளோம். இவர்களை இணைத்து 'ஒட்டப்பிடாரம் வட்டார விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கி, நடவு முதல் விற்பனை வரையான உதவிகளை வழங்கி வருகிறோம்'' என்று சொன்னார் நடராஜன்.

மகசூலைக் கூட்டும் மண் பரிசோதனை!

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

கூட்டுப் பொறுப்புக்குழுவில் உறுப்பினராக இருக்கும் குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்த திருமால், ''2006-ம் வருஷத்துல கோவில்பட்டி விவசாய ஆராய்ச்சிச் பண்ணை மூலமா நபார்டு நடத்தின கருத்தரங்குக்குப் போனப்பதான், மண் பரிசோதனையும் நுண்ணூட்டச்சத்துகள் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். மண்ணுக்கு என்ன சத்து வேணும்னு தெரிஞ்சுக்காம... மத்தவங்க பேச்சைக் கேட்டு உரம் போடுறதால கால்வாசிக்கு மேல உரம் வீணாகுதுனு சொன்னாங்க. அதுவரை நான் மண் பரிசோதனை பண்ணினதேயில்லை. அதுக்கப்பறம் மண் பரிசோதனை செஞ்சு தேவையான உரத்தையும் நுண்ணூட்டச் சத்துகளையும் கொடுத்த பிறகு, விளைச்சலே கிட்டத்தட்ட ரெண்டு மடங்காகிடுச்சு. முன்ன 10 குவிண்டால் விளையும். இப்போ, 18 குவிண்டால்ல இருந்து, 22 குவிண்டால் வரை விளையுது. ஒரு காலத்துல விதை வாங்கவே கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தோம். விவசாயத்தையே விட்டுடலாம்னு இருந்த சமயத்துல எங்களுக்கு நல்ல வழியைக் காட்டிட்டாங்க'' என்றார், சந்தோஷமாக.

உற்பத்தியை அதிகரிக்கும் கிழமேல் பட்டமுறை!

'கூட்டுப்பொறுப்புக் குழு’வின் தலைவர் சண்முகபெருமாள், ''கர்நாடக மாநிலம், தார்வார்ட்ல இருக்கற 'க்ரிஷி வித்யான் கேந்திரா’ மையத்துல 'கிழமேல்பட்டம்'ங்கற ஒரு தொழில்நுட்பத்தைத் தெரிஞ்சுக்கிட்டோம். அதாவது, சூரிய உதயத்தைப் பார்த்து... கிழக்கு-மேற்காக வரிசைப் போட்டு, ஒரு செடியின் நிழல், இன்னொரு செடி மேல் விழாத அளவுக்கு விதைக்கணும். ரெண்டு அடி அகல வரிசையில், 17 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு, விதைச்சு மண் அணைக்கறப்போ... மகசூல் அதிகரிக்கும்னு சொன்னாங்க. அந்த மாதிரி கடைபிடிச்சதுல மகசூல் அதிகரிச்சுச்சு.

இன்னொரு அருமையான நுட்பத்தையும் அங்கிருந்து தெரிஞ்சு கிட்டோம். நெல் உமி, மண்டை வெல்லம் ரெண்டையும் தண்ணியில கலந்து, வயலோட நாலு மூலைகள்லயும் வெச்சுட்டா... பூச்சிகள், வண்டுகள், எலிகள் எல்லாம் வந்து இதைச் சாப்ட்டுக்கும். வயலுக்குள்ள வராதுங்க (ஒரு ஏக்கருக்கு 10 கிலோ உமி,

3 கிலோ வெல்லம் இரண்டையும் கலந்து, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பிசைந்து, நான்கு பங்குகளாகப் பிரித்து, சணல் சாக்கில் வைத்து, வயலின் நான்கு மூலைகளிலும் வைக்க வேண்டும்). ஒருமுறை தயாரிச்சி வெச்சுட்டா, அறுவடைவரைக்கும் எலித் தொல்லை இருக்காது. இதனால, மக்காச்சோளம் வீணாகுறதில்லை. இதையும் கர்நாடகாவுலதான் தெரிஞ்சுக்கிட்டோம்'' என்று சொன்னார்.

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

நிறைவாகப் பேசிய, 'வீரபாண்டிய கட்டபொம்மன் உழவர் மன்ற' செயலர் மற்றும் நபார்டு விவசாயக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ''ஒட்டப்பிடாரம் வட்டாரப்பகுதி, வறட்சியால் பின்தங்கியப் பகுதி. இதை வளமா மாத்தணும்னுதான் விவசாயிகளைக் குழுவா இணைச்சு தேவையான வசதிகளை உருவாக்கிக் கொடுத்தோம். விவசாயம் சார்ந்த தொழில்முனைவோராக மாத்துறதுக்கு நபார்டு வங்கி அதிகாரி, மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் எல்லாருமே உதவி செஞ்சாங்க.

பயிர் பண்றத அடிப்படையா வெச்சு, தனித்தனி கூட்டுப்பொறுப்புக் குழுக்களை அமைச்சுருக்கோம். இயற்கை விவசாயத்துக்கு கொஞ்சம், கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கோம். இன்னும் கொஞ்சம் நாள்ல நூறு சதவிகிதம் இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவோம்.'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார்!

தொடரட்டும் இந்தத் தொண்டு!

 அடமானம் இல்லா கடன்!

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

'நபார்டு' மூலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுப் பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிப் பேசிய பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, ''நான் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவன். எங்க ஆளுங்க எல்லாருமே கூரை வீட்டுலதான் இருக்கோம். யாரு வீட்டுக்கும் கதவே இல்லை. கோணிச்சாக்குதான் கதவு. இப்படிப்பட்ட நிலையில இருக்கற நாங்கள்லாம் பேங்குல கடன் வாங்க முடியுமா? ஆனா, எங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் ஒருங்கிணைச்சு, 'நபார்டு ஆத்மா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுப்பொறுப்புக்குழு’னு அமைச்சு, முப்பது பேருக்கு கறவை மாடு வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஒரு நாளைக்கு 200 லிட்டர் பால் உற்பத்தி பண்றோம்'' என்று சொன்னவர்,

''நபார்டு விவசாயக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மல்லுச்சாமி, ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மோகன்ராஜ் ரெண்டு பேரும்தான் பெருமுயற்சி எடுத்து, எங்களுக்கு உதவி பண்ணினாங்க'' என்று நன்றி பாராட்டினார்.

ஆண்டு வரவு ஒன்றரை கோடி!

விவசாயிகளின் வாழ்வை வளமாக்கிய வங்கி !

கூட்டுறவுச் சங்கம் என்றாலே 'நஷ்ட கீதம்' பாடுவதுதான் பெரும்பாலும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், பொம்மையார்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கமோ... 'லாப கீதம்' இசைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் மாரியம்மாள், ''எங்க சங்கமும் நஷ்டமாகிப் போய், மூடவேண்டிய நிலைமைக்குத்தான் தள்ளப்பட்டுச்சு. அந்த சமயத்துலதான், நபார்டு சங்கங்களோட உறுப்பினர்களை இணைச்சு, அவங்கள்ல 150 பேர் எங்க கூட்டுறவுச் சங்கத்துல உறுப்பினரானாங்க. மத்திய கூட்டுறவு வங்கி மூலமா... பிணையம், வட்டி இல்லாம அவங்களுக்கு கடன் கொடுத்தோம். அதிலிருந்தே எங்க சங்கம் நல்லா செயல்பட ஆரம்பிச்சுடுச்சு. இப்போ, வருஷத்துக்கு 7 லட்ச ரூபாய்க்கு விதை மட்டுமே விற்பனை ஆகுது. வருஷ வரவு... ஒண்ணரை கோடியைத் தாண்டிடுச்சு'' என்றார், பெருமிதத்துடன்!

தொடர்புக்கு, எம்.ஆர்.நடராஜன்,
செல்போன்: 94433-80627.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism