Published:Updated:

இயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் !

நம்மாழ்வார், ஓவியம்: ஹரன்

இயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் !

நம்மாழ்வார், ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

##~##

'முன்னேற்றம்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பூமியில்... இலங்கைத் தீவின் பரப்பளவுக்கு சமமான பரப்பளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் பருவமழை தவறிப் போகிறது. வெள்ளமும், வறட்சியும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. ஆனாலும், இதிலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், பணக்கார நாடுகள் பலவும் இதை உணர்ந்து... இந்தியாவிலிருக்கும் மாநிலங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தன. அப்படித்தான் ஸ்வீடன் நாடு, தமிழ்நாட்டுடன் இணைந்து சமூக நலக்காடுகள் வளர்க்க ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்படி ஒப்பந்தத்தின் முதன்மையானக் குறிக்கோள், 'பொது இடங்களில் காடுகள் வளர்ப்பதன் மூலம், கிராமத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வது’ என்பதுதான். இதற்காக, தமிழ்நாடு வனத்துறைக்கு 110 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தது ஸ்வீடன். ஆனால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட சமூக நலக்காடுகள் திட்டத்தில், முதன்மைக் குறிக்கோள் கவனத்தில் கொள்ளப்படாமல்... ஏரி, குளங்களில் கருவேல மரங்கள் நடப்பட்டன. இதற்கான விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன. மரங்கள் வளர்ந்து காய்க்கத் தொடங்கும்போது, அடியோடு வெட்டி விறகாகக் கடத்தப்பட்டன. அடுத்தபடியாக... ஆடு, மாடு மேயும் நிலங்களில் தைல மரங்கள் நடப்பட்டன. இந்த நிலங்களில் பொதுமக்கள் நுழைவது தடை செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, வளர்ச்சியடைந்த தைல மரங்கள் வெட்டப்பட்டு, காகித ஆலைகளுக்கு மூலப்பொருளாக விற்கப்பட்டன.

சமூகநலக் காடுகளை மதிப்பீடு செய்தவர்கள், இதில் 'சமூகமும் இல்லை. காடும் இல்லை. இதை, 'முள்கம்பி வேலித் தோப்புகள்’ என்று அழைப்பதே பொருத்தம்’ என்று விமர்சித்தனர். இச்செய்தி ஸ்வீடன் நாட்டுப் பத்திரிகைகளில் வெளியானது. முள்கம்பி வேலிக்கு முன், காக்கிச் சீருடை அணிந்து துப்பாக்கி சுமந்த வன ஊழியர் நடைபயிலும் படமும் வெளியானது. இது, சமூகநலக் காடுகள் திட்டத்தில் ஒரு பெரிய மாறுதலைக் கோரியது.

இயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் !

இத்திட்டத்துக்கு ஆலோசகராக இருந்த வங்காளி நண்பர் பெயர், ரத்தன் ராய். அவர் என்னைப் போன்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பத்து நபர்களை அழைத்து, திட்டத்தை விளக்கி, ஒப்பந்த ஆவணத்தை எங்களிடம் ஒப்படைத்தார். ஸ்வீடன் நாட்டுப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்தார். 'ஸ்வீடன் நாடு, தமிழ்நாட்டின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கே உள்ள சிறியநாடு. நாங்கள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எங்களுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. தொண்டு நிறுவனங்கள் முயற்சித்தால், இத்திட்டத்தின் பலன்களை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்’ என்று அந்தப் பிரதிநிதிகள் எங்களிடம் கூறினர்.

முடிவில், தமிழ்நாடு வனத்துறையினர், ஸ்வீடன் பிரதிநிதிகள், தமிழ்நாட்டுத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என மூன்று பிரிவினரும் கலந்து பேசுவதற்கான மூன்று நாள் கருத்துப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதையட்டி பல்வேறு இடங்களில் தொண்டு நிறுவனங்களின் களப்பணியாளர்களை அழைத்து, சமூக நலக் காடுகள் திட்டம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. அப்படி ஒரு கூட்டம், புதுச்சேரி எல்லையில் உள்ள ஆரோவில்லில் நடைபெற்றது. அப்போதுதான்

இயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் !

முதல்முறையாக நான் ஆரோவில் சென்றேன். அங்கு தங்கியிருந்த காந்திமதி, எனக்கு அறிமுகமானவர். அவரும், சமூக நலக்காடுகள் கருத்தரங்கில் பங்கு பெற்றிருந்தார். அவர்தான், 'இங்கு ஒருவர் இயற்கை வழி வேளாண்மையைச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறார்’ என்று பெர்னாடு டி கிளார்க் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

பெர்னாடு டி கிளார்க், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். 1965-ம் ஆண்டு ஆரோவில் வந்து, அங்கேயே தங்கி விட்டவர். ஆரம்ப காலத்தில் தலையில் நீர் சுமந்து சென்று மரக்கன்றுகளை வளர்த்தவர், பிறகு இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மதிய உணவு இடைவேளையின்போது நானும், பெர்னாடும் சைக்கிள்களில் புறப்பட்டோம். என்னைவிட விரைவாக மிதித்தார். வெயில் கடுமையாக இருந்தது. அவரைப் பின்தொடர்ந்த நான், களைத்துப் போனேன். திரும்பிப் பார்த்தவர், வண்டியை நிறுத்தி இறங்கினார். நானும் இறங்கினேன். 'களைத்துப் போனாயா?’ என்று கேட்டவர், 'மரக்குடை இல்லாததால் பூமிகூட இப்படித்தான் களைத்துப் போயிருக்கிறது’ என்றார்.

இயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் !

மீண்டும் வண்டிகளில் ஏறி, மெதுவாக மிதித்தோம். அவருடைய 3 ஏக்கர் பண்ணை வந்தது. அப்பண்ணையில், மண்ணை உயர்த்தி வரப்பு போடப்பட்டிருந்தது. வரப்பில் 3 வகையான செடிகளை நட்டு, வேலி அமைக்கப்பட்டிருந்தது. வேலிக்குள்ளே, பாரம்பரிய ரகமான வாழைப்பூ சம்பா ரக நெல் பயிர் செய்திருந்தார். நெற்பயிரின் ஊடே, கொள்ளுச்செடிகள் வளர்ந்து நின்றன. ஜப்பானிய விஞ்ஞானி மசானாபு ஃபுகோகாவின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தைப் படித்துவிட்டு, இப்படிச் செய்திருந்தார். மசானாபு ஃபுகோகா, குளோவர் என்னும் உரச்செடியை நெல்லில் ஊடுபயிராக வளர்த்திருந்தார். குளோவருக்கு பதிலாக கொள்ளுச்செடியை வளர்த்திருந்தார் பெர்னாடு.

இயற்கை வேளாண்மை குறித்த முதல் பாடம், இப்படித்தான் எனக்கு வாய்த்தது. பெறுவதற்கரிய நண்பரை, பெர்னாடு வடிவத்தில் நான் கண்டு கொண்டேன்...

'இறுதிக் கட்டுரை’

'இயற்கை விவசாயப் போராளி' என கடந்த நாற்பதாண்டுகளாக வலம் வந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை, 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்' என்ற தலைப்பில், இங்கே பதிவு செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வந்த நம்மாழ்வார், இறுதியாக எழுதித் தந்த கட்டுரை இங்கே இடம் பிடித்திருக்கிறது.

நம்மாழ்வாருடன் பழகியவர்கள், அவருடைய பசுமைப் பயணத்தில் பங்கேற்றவர்கள் என்று பலரிடமும் பேசி, அவருடைய வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism