Published:Updated:

மண்புழு மன்னாரு!

ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு!

ஓவியம்: ஹரன்

Published:Updated:
மண்புழு மன்னாரு!

மாத்தி யோசி

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அடிமை மாதிரி உழைக்கணும்... அரசன் மாதிரி சாப்பிடணும்’னு ஊர் பக்கம் சொல்லுவாங்க. ஆனா, அதெல்லாம் மாறி... நூடுல்ஸ், அது, இதுனு கண்ட குப்பைகளை சாப்பிட்டுட்டு 'விதியே’னு ஓடிட்டு இருக்கோம். நான், பட்டணத்துக்காரங்கள மட்டும் சொல்லலீங்க... கூழ், கஞ்சி, களினு தின்னுக்கிட்டு இருந்த கிராமத்து மனுஷங்களையும் சேர்த்தேதான் சொல்றேன். பாழாபோன 'ஃபாஸ்ட் ஃபுட்’ பழக்கத்துக்கு கிராமத்து ஜனங்களும் அடிமையாகிட்டாங்க. 'உணவே மருந்து, மருந்தே உணவு’னு உலகத்துக்கே பாடம் சொன்ன பரம்பரையில வந்த நாம, சாப்பாட்டு விஷயத்துல சரியா இருக்கணுமா... வேணாமா? சாப்பாடு சரியா இருந்தா, உடம்பு நாம சொல்றபடி கேட்கும்.

17-ம் நூற்றாண்டுல தஞ்சாவூரை ஆண்ட மாராட்டிய மன்னர் 'எக்கோஜி’, சாப்பாட்டு விஷயத்துல கறாரான ஆளு. தான் எப்போ, எதை சாப்பிடணும்னு தனக்கு சொல்றதுக்காகவே... ரகுநாதன்ங்கிற வல்லுநரை அவர் நியமிச்சிருந்தாரு. மன்னருக்காக ரகுநாதன் சொன்ன உணவுக் குறிப்பு அத்தனையும் 'போஜன குதூகலம்’ங்கிற புத்தகத்துல இருக்கு. அதிலிருந்து சுவையான சில விஷயங்களைப் பாப்போம்.

ஆறு வகையில் சாப்பிடணும்!

அறுசுவை’னு கேள்விப்பட்டிருப்போம். ஆனா, சாப்பிடறதையும் ஆறு வகையா பிரிச்சு வெச்சுருக்காங்க. 'சப்பி, குடித்து, நக்கி, விழுங்கி, சுவைத்து, கடித்து... இப்படி ஆறு வகையா சாப்பிடணும். அதாவது, கரும்பு, மாதுளை... போன்றவற்றை சப்பியும்; பால், பழரசம் முதலியவற்றை குடித்தும்; மாம்பச்சடி, தேன், பஞ்சாமிர்தம் மாதிரியான உணவுகளை நக்கியும்; போளியை விழுங்கியும்; லட்டு, பூந்தியை சுவைத்தும்; அப்பளத்தைக் கடித்தும் சாப்பிட வேண்டும்.

மண்புழு மன்னாரு!

விஷத்தை நீக்கும் வாழை இலை!

தீய எண்ணங்கள், கோபம், வெறுப்பு இதையெல்லாம் வெச்சுக்கிட்டே சாப்பிடக்கூடாது. நண்பர்கள், மனைவி, குழந்தைகள்னு கூடுமானவரை குடும்பத்தோட அமைதியான சூழல்ல உக்காந்து சாப்பிடணும். சந்தோஷமா சாப்பிடறப்ப உடலும், உள்ளமும் மகிழ்ச்சியா இருக்கும். வயித்துல இருக்கற சுரப்பிகள் நல்லா வேலை செய்யும். கூடுமானவரை வாழை இலையில சாப்பிடறது நல்லது. ஏன்னா, வாழை இலைக்கு விஷத்தை நீக்குற குணம் இருக்கு. தொடர்ந்து வாழை இலையில சாப்பிட்டு வந்தா... தோல் பளபளப்பாகிடும். உடம்புலயும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

இப்படியெல்லாம் 'போஜன குதூகலம்’ புத்தகத்துல எழுதியிருக்காங்க.

உற்சாகம் கொடுக்கும் பட்டு!

பொங்கல், கல்யாணம், காட்சி மாதிரியான விழா காலங்கள்ல பட்டு உடை உடுத்திக்கிற பழக்கம் இப்பவும் இருக்கு. பட்டு நூல்ல மின்காந்த அலை உருவாகும். அதனால அதை உடுத்தும்போது, உடம்புக்குள்ள உற்சாகம் பொங்குது. அதனாலதான், விழா காலங்கள்ல பட்டுத்துணி கட்டாயம்ங்கிறது பாரம்பரியமா இருக்குது.  வெண்பட்டு பத்தியும் 'போஜன குதூகலம்’ புத்தகத்துல பிரமாதமா சொல்லியிருக்காங்க. 'வெண்பட்டு உடுத்தினால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உடம்புல அதிகமா இருக்குற பித்தம் குறையும். தோல் பொலிவு உண்டாகும்’னு பட்டியல் நீளுது. 'பட்டுத்துணியை பந்தாவுக்காக கட்டமாட்டேன்’னு சிலர் சொன்னாலும், இனி மன மகிழ்ச்சிக்கும், மருந்துக்காகவும் கட்டலாம்தானே..!

தண்ணியிலயும் சூட்சமம் இருக்கு!

புராண கால படத்துல வர்ற முனிவருங்க எப்பவும், கையில தண்ணி கமண்டலத்தோட திரிவாங்க. இந்தக் காலத்துல குப்பன், சுப்பன்கூட தண்ணி பாட்டிலோடதான் அலையறாங்க. எந்தப் பாத்திரத்துல வெச்சு தண்ணி குடிக்கிறமோ, அதுல இருக்கற நல்ல விஷயம் நம்ம உடம்புக்குக் கிடைக்குமாம். இதைப்பத்தி என்ன சொல்லியிருக்காங்கனு பாப்போம்.

'ஈயப்பாத்திரத்தில் வைக்கப்படும் நீர் பசையுள்ளதாகும். இது இனிப்புச் சுவையும் பெறுவதோடு கபத்தையும், வாயுவையும் தரும். செரிமான சக்தியைக் கூட்டும்; தாமிரப் பாத்திரத்தில் வைக்கப்படும் நீர்... உஷ்ணமும் சுவையும் கொண்டது. வாயுவைப் போக்கும்; இரும்புப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர், மிகுந்த கெடுதல் தரும்; மண் பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர், உடலில் உள்ள அழுக்குகளைப் போக்கும். உடல் வளர்ச்சிக்குத் தேவையான தாதுக்களையும், வலிமையையும் கொடுக்கும்’னு சொல்லியிருக்காங்க.

குளுமையான தண்ணி கொடுக்கிற மண் பானை இருந்த இடத்தை... 'எவர்சில்வர்’ பாத்திரம், பிளாஸ்டிக் கேன் இதெல்லாம் ஆக்கிரமிச்சுடுச்சு. தண்ணி குடிக்கறதுக்கு கூட எவர்சில்வர், பிளாஸ்டிக் டம்ளர்னு ஆகிப்போச்சு. அந்தக் காலத்துல அரசன் முதல் ஆண்டி வரை மண்பானை தண்ணியைக் குடிக்கிற பழக்கந்தான் இருந்திருக்கு. பல தடவை பரிசோதிச்சி பார்த்துத்தான், மண் பானை மகிமையை நம்ம பெரியவங்க சொல்லி வெச்சுருக்காங்க. ஆனா, ஒரு தடவை கூட யோசிக்காம... கண்டதையும் நாம வாங்கி பயன்படுத்திட்டிருக்கோம். அதோட பின் விளைவுகளைத்தான் கண்டகண்ட வியாதிகளா அனுபவிச்சுட்டிருக்கோம்... இன்னதுனு புரியாமலே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism