Published:Updated:

ஜூஸ்... ஜாம்... மிட்டாய்...

நெல்லியில் மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்..! உ. சிவராமன் படங்கள்: வீ. சிவக்குமார்

ஜூஸ்... ஜாம்... மிட்டாய்...

நெல்லியில் மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்..! உ. சிவராமன் படங்கள்: வீ. சிவக்குமார்

Published:Updated:

முயற்சி

##~##

''மயிலே, மயிலே இறகு போடுனு சொன்னா... போடவே போடாது. அதேமாதிரிதான் விவசாயமும். 'விலை கிடைக்கல... விலை கிடைக்கலனு புலம்பிக்கிட்டே இருந்தா, ஒண்ணும் நடக்காது. விவசாயிகளாகிய நாமதான் கவனமா களத்துல இறங்கி கலக்கணும்! ஒரு விவசாயி, எப்போ வியாபாரியாவும் மாறுறாரோ... அப்பதான் அவரோட உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். இதை சும்மா வாய் வார்த்தையா சொல்லலை... அனுபவப்பூர்வமா சொல்றேன்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜூஸ்... ஜாம்... மிட்டாய்...

-விவசாயப் பொருளாதாரம் பற்றி பட்டவர்த்தனமாகப் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி நெல்லி விவசாயி, ஜெயக்குமார்.

திண்டுக்கல்-மதுரை சாலையில் மெட்டூர் என்ற ஊரின் அருகில் இருக்கும் தன்னுடைய நெல்லித்தோப்பிலிருந்த ஜெயக்குமாரைச் சந்தித்தோம்.

''இருபது வருஷமா விவசாயம் பாத்துக்கிட்டிருக்கேன். படிச்சது, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். ஆனாலும், விவசாயம் மேலதான் ஆசை. பதினோரு ஏக்கர் நிலம் இருக்கு. முன்ன பலா, சப்போட்டா, கொய்யானு பழ மரங்கள்தான் வெச்சுருந்தேன். பத்து வருஷத்துக்கு முன்ன... 'நெல்லி போட்டா நல்ல லாபம் கிடைக்கும்’னு சிலர் சொன்னதைக் கேட்டு, பதினோரு ஏக்கர்லயும் என்.ஏ-7, கிருஷ்ணன், சக்கையா, காஞ்சன், பி.எஸ்.ஆர்-1 இப்படி பல ரக நெல்லியை நட்டுட்டேன். தொழுவுரம், பஞ்சகவ்யா ரெண்டையும்தான் உபயோகப்படுத்தினேன். இயற்கை முறைங்கிறதால, காய்கள் பெருத்து இருக்கறதோட கலரும் நல்லா இருக்குது. நெல்லிக்காயை கேரளாவுக்குத்தான் அனுப்பிட்டு இருந்தேன். ஆரம்பத்துல நல்ல விலை கிடைச்சுது. போகப்போக விலை குறைய ஆரம்பிச்சிடுச்சு.

தொழிலுக்கு வழிகாட்டிய தொடர்!

அந்த சமயத்துலதான், 'பசுமை விகடன்’ல 'மதிப்புக்கூட்டும் மந்திரம் தொடர்’ வெளியாச்சு. அதைத் தொடர்ந்து படிக்கவும், ரொம்ப ஆர்வமாயிட்டேன். தஞ்சாவூர், இந்திய பயிர் பதனீட்டு மையத்துக்குப் போய் 'நெல்லியை மதிப்புக் கூட்ட முடியுமா?’னு கேட்டேன். அவங்களோட பயிற்சியில கலந்துக்க சொன்னாங்க. நெல்லிக்காய் மட்டுமில்லாம எல்லா பழங்கள்ல இருந்தும் மதிப்புக் கூட்டி லாபம் சம்பாதிக்குற வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்தாங்க. ஒரு வாரம் தங்கி, நெல்லிக்காய்ல இருந்து 'ஜூஸ்’, 'ஜாம்’, 'மிட்டாய்’ செய்ற தொழில்நுட்பத்தைத் தெரிஞ்சு கிட்டு வந்து தொழிலை ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்னுரை கொடுத்த ஜெயக்குமார், நெல்லியை மதிப்புக்கூட்டும் முறைகளைப் பட்டியலிட்டார்.

 ஜூஸ்... ஜாம்... மிட்டாய்...

நெல்லி ஜூஸ்!

''பூ பூத்த 150-ம் நாள்ல பழமாகிடும். அதைப் பறிச்சி நல்லா கழுவி, 'ஷட்டரிங் மெஷின்’ல (இதன் விலை 50 ஆயிரம் ரூபாய்) போட்டு அரைச்சா... சதை தனியா, விதை தனியா வந்துடும். சதையை மட்டும் எடுத்து 'ஜூஸ் பிரெஸ்ஸர் மெஷின்’ல (இதன் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) போட்டு ஓட்டினா, 'ஜூஸ்’ மட்டும் வந்துடும். ஒரு மணி நேரத்துல 250 கிலோ பழங்கள்ல இருந்து 'ஜூஸ்’ எடுத்துடலாம். இதை 80-90 'டிகிரி செல்சியஸ்’ வெப்பநிலையில கொதிக்க வெச்சு, பிறகு குளிர வெச்சு... ஒரு லிட்டருக்கு 0.005 மில்லி என்கிற கணக்குல 'சிட்ரிக் அமில’த்தைக் கலந்து ஒரு 'டின்’ல ஊத்தி, பதினஞ்சு நாள் கழிச்சு வடிகட்டி 'பாக்கெட்’லயோ, 'பாட்டில்’லயோ நிரப்பி விற்பனை செய்யலாம். பழத்துல தயார் பண்றதால 'ஜூஸ்’ பொன்னிறமாகவும் நல்ல சுவையாவும் இருக்கும். ஒரு கிலோ பழத்துல 350 மில்லியில இருந்து 400 மில்லி வரைக்கும் 'ஜூஸ்’ கிடைக்கும். 700 மில்லி 'ஜூஸ்’ 100 ரூபாய் வரை விற்பனையாகுது.

நெல்லிக்காய் கேண்டி (மிட்டாய்)!

 ஜூஸ்... ஜாம்... மிட்டாய்...

நெல்லிப் பழத்தை 90 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில வேக வைக்கும்போது விதை தனியா பிரிஞ்சுடும். சதைப்பகுதியை மட்டும் எடுத்து ஒரு கிலோவுக்கு 0.005 மில்லி 'சிட்ரிக் அமிலம்’கிற கணக்குல கலந்து புரட்டி எடுத்து, தண்ணியில கழுவணும். பிறகு, சதைப்பகுதியோட எடைக்கு சம அளவுல ஜீனியை (சர்க்கரை) எடுத்து, மூணு பங்கா பிரிச்சு, முதல் நாள் ஒரு பங்கு ஜீனியைப் போட்டு கலந்து ஊற வைக்கணும். அடுத்த நாள் இன்னொரு பங்கு ஜீனி, அதுக்கடுத்த நாள் இன்னொரு பங்கு ஜீனினு போட்டு ஊற வைக்கணும். அப்பறம் அதை தண்ணியில கழுவி எடுத்து, தேவையான அளவு தேன் ஊத்தி ஊற வெச்சு, நாலு மணிநேரம் 'டிரையர்’ல வெச்சு எடுத்துட்டா கெட்டியாயிடும். இதை, 'பாக்கெட்’ பண்ணி விற்பனை செய்யலாம். ஒரு கிலோ 'கேண்டி’ 250 ரூபாய் வரை விற்பனையாகும்.

நெல்லி ஜாம்!

நெல்லிக்காயை நல்லா அரைச்சு, எடைக்குச் சம அளவு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு, தேவையான தண்ணிவிட்டு, 90 'டிகிரி செல்சியஸ்’ வெப்பநிலையில அடி பிடிக்காமக் கிண்டணும். நல்லா வெந்த பிறகு, அப்படியே குளிர வெச்சு... கிலோவுக்கு 0.005 மில்லி 'சிட்ரிக் அமிலம்’கிற கணக்குல கலந்து, காத்துப் புகாத பாட்டில்ல அடைச்சு வெச்சுட்டா 'ஜாம்’ தயார். இது, நாலு மாசம் வரைக்கும் கெடாது. ஒரு லிட்டர் ஜாமை 250 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்'' என்று சொன்ன ஜெயக்குமார் நிறைவாக,

''நிறைய கம்பெனிக்காரங்க நேரடியா வாங்கிக்கறாங்க. ஒரு வண்டி தயார் செஞ்சு ரோட்டோரத்துல நேரடியாவும் விற்பனை செய்றேன். கூடுதல் விலை கிடைச்சா... காயாவே வித்துடுவேன். விலை குறையுற சமயத்துல மதிப்புக்கூட்டி வித்துடுவேன். அதனால, சந்தை விலை இறங்கினாலும் எனக்கு கவலை இல்லை. இதுக்கெல்லாம் காரணம், 'பசுமை விகடன்’தான்'' என்று கண்களில் நன்றி பொங்க விடைகொடுத்தார்.

டிராக்டர் போர்!

'தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், வங்கிக் கடன் தவணையைச் செலுத்த முடியவில்லை. எனவே கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையென்றால், கடனுக்கு வாங்கிய டிராக்டர்களை வங்கிகளே திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி... டிராக்டர்களை ஒப்படைக்கும் போராட்டம் ஜனவரி 21 அன்று திருச்சியை மிரட்டியது!

 ஜூஸ்... ஜாம்... மிட்டாய்...

சமயபுரம், டோல்கேட் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கிளம்பிய விவசாயிகள், வங்கிகளை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். காவல்துறை அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் இறங்கிவிட்டனர். இதையடுத்து, பாரதிய கிசான் சங்க மாநிலத் துணைத்தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு,15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாழை விவசாயிக்கு நிவாரணம் வேண்டும்!

வாழை விவசாயி சங்கப்பிள்ளை, கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது குறித்து, கடந்த இதழில் எழுதியிருந்தோம். 'வறட்சி, நோய் தாக்குதலால் வாழை மற்றும் நெல் சாகுபடியில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதுதான் தற்கொலைக்குக் காரணம். அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு

10 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும்’ என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநில துணைத்தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஜனவரி 20 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த காவல்துறை, மாலையில் விடுதலை செய்தது!

- கு. ராமகிருஷ்ணன்,
படம்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism