Published:Updated:

மீண்டும் உயிர்த்த மேட்டூர் அணை..! தொடங்கியது பண்ணவாடி பரிசல் போக்குவரத்து

மீண்டும் உயிர்த்த மேட்டூர் அணை..! தொடங்கியது பண்ணவாடி பரிசல் போக்குவரத்து
மீண்டும் உயிர்த்த மேட்டூர் அணை..! தொடங்கியது பண்ணவாடி பரிசல் போக்குவரத்து

டந்த கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் அணை, ஆறுகள் முதல் கடைசி மட்ட நீர்நிலைகள் வரை வற்றத் தொடங்கியது. இதன் காரணமாக தேக்கடி உள்ளிட்ட இடங்களில் படகு போக்குவரத்துகூட தடை செய்யப்பட்டிருந்தது. இதுதவிர, வைகை அணையில் தெர்மாகோல் போட்டு மூடும் காமெடியும் நடந்தது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மேட்டூருக்கு அருகே உள்ள ஊர் பண்ணவாடி பரிசல் துறை எப்போதும் தண்ணீரால் நிரம்பி கடல்போல காட்சியளிக்கும். இந்த ஆண்டு காவிரி ஆற்றில் மழையில்லாமல் வரலாறு காணாத வறட்சியில் வறண்டுபோய் கிடக்கிறது. ஆனால், இந்த பண்ணவாடி பரிசல்துறையில் படகு போக்குவரத்து இருந்து வருகிறது. அதாவது தர்மபுரி மாவட்ட பகுதிகளான நாகமரை, ஏரியூர், நெருப்பூர், ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து படகுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதுபோல் அந்தந்த ஊர்களிலிருந்து கொளத்தூர், மேட்டூர் வருவதற்கு இந்தப் பரிசல் போக்குவரத்து பயன்படுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் ஆகியோர் இப்பரிசல் போக்குவரத்தைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். தினமும் வந்து செல்லும் பயணிகளும் பெரும்பாலும் இந்த படகுப் போக்குவரத்தையே பயன்படுத்துவது உண்டு. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக மழையில்லாத காரணத்தினாலும், கர்நாடக அணையிலிருந்து போதிய நீர் வராததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் வரலாறு காணாத அளவில் குறைந்தது. இதனால் பண்ணவாடி படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பண்ணவாடி பரிசல் துறையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. இதனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் பண்ணவாடி பரிசல் துறையில் பரிசல் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. பரிசல் துவங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழங்கால வரலாற்றுச் சின்னங்களான மிகப்பெரிய நந்தி சிலையும், கிறிஸ்துவ கோபுரமும் இங்குதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசல் போக்குவரத்து ஆரம்பித்ததையடுத்து அதில் பயணம் செய்யும் மக்களிடம் பேசினோம். “ரொம்ப நாளா மழை இல்லாம, ஆத்துல தண்ணி இல்ல. அதனால போன மூணு மாசம் பரிசல் இல்லாம கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. பரிசல் போக்குவரத்து நிறுத்துறப்போ எல்லாம் இந்த ஆற்றை நடந்துதான் கடக்கணும். ஆத்துக்கு அந்தப்பக்கம் இருக்குற மக்களும், இந்தப்பக்கம் இருக்குற மக்களுக்கும் இதுதான் சுலபமான வழி. இல்லைனா மேட்டூர்ல இருந்து சுத்தித்தான் போகணும். இத்தனை நாளுக்கப்புறம் பரிசல் ஆரம்பிச்சிருக்கிறது மனசுக்கு சந்தோசமா இருக்கு" என்று சொல்லும்போது பரிசல்துறையின் முனையில் மினி பஸ் வரவே ஜூட் விட்டார்கள். நேரம் ஆக ஆக பசி வயிற்றைக் கிள்ளியது. அப்படியே பக்கத்தில் இருக்கும் கடைபக்கம் கவனத்தை திருப்பினோம். கடையில் இட்லி, தோசையுடன் பொறித்த மீன் என வாய்க்கு ருசியாக இருந்தது. அப்படியே கடைக்காரர் செல்வியிடம் வியாபாரத்தைப் பற்றி பேசினோம். "எங்க தங்கம் சரியாம மழைத்தண்ணி இல்லாம 3 மாசமா ஆத்துல தண்ணியே இல்ல. படகு போக்குவரத்து இல்லாம ஜனங்களும் யாரும் வரலை. வியாபாரம் சுத்தமா இல்ல. 3 மாசத்துக்கு அப்புறம் இப்பத்தான் ஏதோ வியாபாரம் ஆரம்பிச்சிருக்கு. லீவு நாளுல சுத்திப் பார்க்குறவங்களும் அதிகமா வர்றாங்க. அதனால இப்பத்தான் ஓரளவு வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு" என்றவர் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

நகரங்களில் மாசுக்காற்றை சுவாசித்த நமக்கு இயற்கை காற்றை அள்ளித்தந்த பரிசல்துறை மனதைக் கொள்ளை கொண்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைப் பசேலென இயற்கை இருந்த அந்த இடத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கலாம். அந்த இடத்தை விட்டு நகர மனம் இல்லாமல் நின்று கொண்டிருந்தோம். பின் அவ்வழியே வந்த சுற்றுலா பயணிகள் நந்தி சிலையைப் பார்க்க எப்படிப் போக வேண்டும் என்று கேட்க அவர்களுக்குப் பாதையை காட்டிவிட்டு நடையைக் கட்டினோம். மாலை வேளையில், மனம் மயக்கும் மண் வாசனையில், இயற்கையான அந்தப் பசுமை கையசைத்து நம்மை வழியனுப்பி வைத்தது போலவே தோன்றியது.