Published:Updated:

விதைப்பந்து... மாடித்தோட்டம்... களைகட்டிய தேசிய விதை திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விதைப்பந்து... மாடித்தோட்டம்... களைகட்டிய தேசிய விதை திருவிழா!
விதைப்பந்து... மாடித்தோட்டம்... களைகட்டிய தேசிய விதை திருவிழா!

விதைப்பந்து... மாடித்தோட்டம்... களைகட்டிய தேசிய விதை திருவிழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வு இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், விவசாயம் பற்றிய சிந்தனைகள் இளைஞர்கள் மனதில் வேரூன்றத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாரம்பர்ய விதைகள், விவசாயம் பற்றிய கருத்தரங்குகள் எனப் பல நிகழ்ச்சிகள் பல்வேறு விவசாய அமைப்புகளால் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சென்னை, கிண்டியிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய பன்மைய விதை திருவிழா 9 ஆம் தேதியான இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. இவ்விழாவை, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, பாரத் விதை விடுதலைக் குழு, ஆஷா ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இவ்விழாவில், உத்தரகாண்ட், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைப் பாதுகாவலர்கள், அரசு அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பத்திரிகையாளர் ஞானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ககன் தீப் சிங் பேடி, "மானாவாரியில் இம்முறை அதிக விளைச்சல் எடுக்க விவசாயிகளிடமே யோசனை கேட்டு அவரவர்களின் விருப்பப்படி விதைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விதைகள்தான் ஒரு நாட்டின் விவசாய உற்பத்தித் திறனை நிர்ணயிக்கிறது. அதில், முக்கியமானது பாரம்பர்ய விதைகள் அதிகமான வறட்சியிலும் தாங்கி வளரும். மானாவாரியில் அதிகமான விதைகள் சிறுதானியங்கள், பருப்பு வகைகள் என அனைத்து விதைகளையும் பயன்படுத்தலாம். மானாவாரியில் நெல்லை விதைப்பது தண்ணீரை அதிகமாக உறிஞ்சும், அதனால் நெல் விதைப்பதைத் தவிர்க்கலாம். சிறுதானியங்களின் வளர்ச்சி மானாவாரியில் அதிகமாக இருக்கும். சிறிதளவு மழையை வைத்துக் கொண்டு நீடித்த மகசூலை எடுக்க பாரம்பர்ய சிறுதானிய விதைகளே சிறந்தது. இந்த விதை திருவிழாவைப்போல பல விழிப்பு உணர்வு திருவிழாக்கள் அதிகமாக நடக்க வேண்டும். வரும் 18 ஆம் தேதிகூட தேசிய நெல் திருவிழா நடக்க உள்ளது. இதுபோல அதிகமான பாரம்பர்ய ரகங்கள் காக்கப்பட வேண்டும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில் பேசும்போது, "நமது பாரம்பர்ய விதைகளைக் கையில் எடுக்க வேண்டும். பாரம்பர்ய விதைகளைக் காப்பதைப்போல விதைக்கு உயிர்கொடுக்கும் மண்ணையும் கவனிக்க வேண்டும். குழந்தையான விதையைக் காப்பதுபோல, தாயான மண்ணை காக்க வேண்டும். மண் வளமாக இருந்தால்தான் விதைகள் முளைக்கும். மண்ணுக்கும் மூளை, உயிர், மண்வாசனை ஆகியவை அதிகமாக உண்டு. அதனால்தான் மண்ணில் வீசும் விதைகளைத் துளிர்க்கச் செய்கிறது. மண்ணும், மண்புழுக்களும் இல்லை எனில் விதைகள் வளராது. மண்புழுக்கள்தான் ஒரு மண்ணின் சொத்து" என்றார்.

இவ்விழாவில் 50-க்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் பாரம்பர்ய விதைகளைக் காட்சிக்காக வைத்துள்ளனர். அதில் நெல், பயறு வகைகள், முளைக்கட்டிய தானியங்கள், புத்தக அங்காடிகள், மாடித்தோட்ட பொருள்கள், விதைப்பந்து உருவாக்குதல், பாரம்பர்ய காய்கறி விதைகள், நூலிழைகளான துணிகள் மற்றும் சிறுதானிய உணவகம் எனத் திருவிழா களைகட்டியது. மக்கள் கூட்டமும் அலை மோதியது. மேலும், வேளாண் ஆர்வலர்கள், விவசாயிகள், சமூக மற்றும் விவசாய ஆர்வலர்கள் ஆகியோர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இன்று தொடங்கிய விழா வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மரபணு மாற்றப் பயிர்களும், உணவு அரசியலும் பற்றிய கருத்தரங்கம் பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடைபெற உள்ளது.

படங்கள்: பிரியங்கா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு