Election bannerElection banner
Published:Updated:

அதிக வருமானம் தரும் அடர்நடவு... சூறாவளி பாதிப்புக்கு சுலப தீர்வு...

வாரிக்கொடுக்கும் வாழை! பி.கமலா படங்கள் வீ.சிவக்குமார்

##~##

வாழை விவசாயிகளுக்கு பெரும்பிரச்னையே... திடீர் தாக்குதல் நடத்தும் சூறாவளிக் காற்றுதான். அதிலும் குலைதள்ளும் நேரமாகப் பார்த்து இப்படி காற்றடித்தால், ஒட்டுமொத்தத் தோப்பும் காலியாகி விடும். இதற்குத் தீர்வாகத்தான் காற்றுத்தடுப்பு வேலி, மரத்துக்கு முட்டு... என சில தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப் படுகின்றன. ''ஆனாலும், பாதிப்பு இருக்கவே செய்கிறது. இதுவே அடர்நடவு முறையில் சாகுபடி செய்யும்போது, சூறாவளியால் ஏற்படும் பாதிப்பு வெகுவாகக் குறைகிறது'' என்று சிபாரிசு செய்கிறார்கள் வாழை வேளாண் வல்லுநர்கள் சிலர்.

''ஆம், இது உண்மையே...'' என்று சாட்சி சொல்கிறார்.... தன்னுடைய தோட்டத்தில் அடர்நடவு முறையைக் கடைபிடித்து வரும், கரூர் மாவட்டம், குளித்தலை, செந்தில்குமார். வாழையில் அதிக மகசூல் எடுத்தது, தொழில்நுட்பங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தியது, விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக... கரூர் வேளாண் அறிவியல் மையம், திருச்சி வாழை நிலையம் ஆகியவை கடந்த ஆண்டில் விருதுகள் வழங்கி, இவரைப் பாராட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!

அதிக வருமானம் தரும் அடர்நடவு... சூறாவளி பாதிப்புக்கு சுலப தீர்வு...

சூறாவளியால் பாதிப்பு இல்லை!

வாழைத்தோப்பில் பணியில் இருந்த செந்தில்குமாரைச் சந்தித்தோம். ''பன்னெண்டாவது முடிச்சதுமே விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல இருந்தே நான் குறைவாத்தான் ரசாயன உரங்களைப் பயன்படுத்திட்டு இருக்கேன். என்னோட குருநாதர்கள், ஏ.வி. கோபால தேசிகர், நம்மாழ்வார் அய்யா இவங்கதான். அவங்க வழிகாட்டுனபடி, பலதானிய விதைப்பு, மூடாக்குனு எளிய முறைகளைக் கடைபிடிச்சு விவசாயம் செய்றேன். அதுல ஒண்ணுதான் அடர்நடவு முறை.

எங்க பகுதியில சித்திரை மாசம் சுழிக் காத்து வீசும். அதனால, குச்சிகளை ஊணி வெச்சுதான் வாழை விவசாயம் செய் வாங்க. நான் அடர்நடவு முறையில சாகுபடி செய்ற தால, காத்துக்கு வாழை சாய்றது இல்ல. தார் பாரம் தாங்குறதுக்காக ஒரு முட்டுக் கொடுத் தாலே போதுமானதா இருக்கு. பொதுவா, ஒரு ஏக்கர்ல 800 கன்னுகள் வரைக்கும் நடுவாங்க. ஆனா, அடர்நடவு முறையில, 1,200 கன்னுகளை நடலாம். அதனால மகசூலும் கூடுது. இப்படி நான், ஆறு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த செந்தில்குமார், அடர்நடவுத் தொழில்நுட்பம் பற்றி விரிவாகவே விளக்கினார். அது அப்படியே பாடமாக இங்கே...

அதிக வருமானம் தரும் அடர்நடவு... சூறாவளி பாதிப்புக்கு சுலப தீர்வு...

தழைச்சத்துக்கு பலதானிய விதைப்பு!

'கற்பூரவல்லி வாழையை நடவு செய்ய மார்கழி, தை, மாசி மாதங்கள் ஏற்றவை. தேர்வு செய்த நிலத்தில் மண்ணின் வளத்தைப் பொறுத்து தேவையான அளவில் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்யவேண்டும்.  முதலில் ரயில் தண்டாவளத்தைப் போன்று இரண்டு கன்றுகளை இணையாக நடவு செய்யவேண்டும். இவற்றுக்கான இடைவெளி இரண்டு அடி. அடுத்த ஜோடி கன்றுகளை  ஒன்பது இடைவெளிவிட்டு, இதேபோல இணையாக நடவு செய்யவேண்டும். வரிசைக்கு வரிசை ஏழடி இடைவெளி தேவை (பார்க்க, படம்).

நடவுக்கு முன்பாக, ஒரு கன்றுக்கு ஒரு கிராம் வீதம் சூடோமோனஸ் கலந்த கலவையில், வேர் நீக்கிய கன்றுகளை 5 நிமிடம் மூழ்க வைத்து விதைநேர்த்தி செய்யவேண்டும். தொடர்ந்து, வாய்க்கால்களை அமைத்து, அதில் பலதானியங்களை விதைக்க வேண்டும். பல தானியச் செடிகள் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து நிலத்தில் சேமித்து வைக்கும். பல தானியச் செடிகளில் பூ எடுத்தவுடன் அவற்றைப் பறித்து வாழைக் கன்றுகளைச் சுற்றி மூடாக்காக இடவேண்டும். இதனால், மண்ணில் ஈரப்பதம் அதிகரிப்பதோடு செடிகள் மட்கி உரமாகவும் பயன்படும்.

அதிக வருமானம் தரும் அடர்நடவு... சூறாவளி பாதிப்புக்கு சுலப தீர்வு...

90, 140, 190-ம் நாட்களில் பரிந்துரைக்கப்படும் அளவுக்கு, உரங்களை இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். குறைவான அளவில் ரசாயனத்தைப் பயன்படுத்தினால்... இலையில் பசுமை கட்டாது. அதனால், பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. அடர்நடவு முறையில் களைகளும் அதிகம் வருவதில்லை. மாதம் ஒரு முறை பழக்காடிக் கரைசல் தெளித்து வந்தால், வாழை நன்கு செழித்து வளரும். வாழையையே தொடர்ந்து சாகுபடி செய்யும்போது நூற்புழுக்கள் தாக்க வாய்ப்புண்டு. அதனால், சுழற்சி முறையில், நெல், கரும்பு ஆகியவற்றையும் சாகுபடி செய்ய வேண்டும். ஏதாவது பூச்சிகள் தென்பட்டால், பூச்சிவிரட்டி தெளிக்கலாம். 13 மாதங்களில் கற்பூரவல்லி வாழை அறுவடைக்கு வரும்.'

சாகுபடிப் பாடம் முடித்த செந்தில்குமார், நிறைவாக, ''1,200 கன்னுகள் நட்டா சராசரியா 1,100 தார் கிடைக்கும். ஒரு தார்

250 ரூபாய்க்கு விற்பனையாகுது. ஒரு தார் உற்பத்தி செய்யறதுக்கு 70 ரூபாய் செலவாகும். ஒரு தாருக்கு 180 ரூபாய் லாபம். ஒரு ஏக்கர்ல கிடைக்கிற 1,100 தார் மூலமா 2 லட்ச ரூபாய் வரை லாபம் கிடைக்கும். என்கூட படிச்சவங்கள்ல நிறைய பேர் வேலைகள்ல சேர்ந்து சம்பாதிக்கற அளவுக்கு நான் விவசாயத்துல சம்பாதிச்சுட்டு இருக்கறதுல... மனநிறைவோட இருக்கேன்' என்று விடைகொடுத்தார்.

 தொடர்புக்கு,
செந்தில்குமார்,
செல்போன்: 97882-03694

 பழக்காடித் தயாரிப்பு!

கனிந்த பூவன் வாழைப்பழம்-25, வெல்லம்-5 கிலோ, தட்டைப்பயறு-2 கிலோ, பரங்கிப்பழம்-2 கிலோ, அரிசி-2 கிலோ ஆகியவற்றை மைபோல அரைத்து, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து, 4 லிட்டர் புளித்தத் தயிரில் சேர்க்க வேண்டும்.

7 நாட்கள் தொடர்ந்து மூன்று வேளையும் இந்தக் கலவையைக் கலக்கி வந்தால், பழக்காடி தயார். கலவையின் மேல் பகுதியில் இருக்கும் தெளிந்த நீரை மட்டும் எடுத்துப் பயன்படுத்தலாம். 12 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் பழக்காடி என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதைத் தெளித்தால், காய்கறி மற்றும் பழங்களில் சுவை அதிகரிக்கும்.

அதிக வருமானம் தரும் அடர்நடவு... சூறாவளி பாதிப்புக்கு சுலப தீர்வு...

பூச்சிவிரட்டி!

வேப்பங்கொட்டைத் தூள்-5 கிலோ, மாட்டுச் சிறுநீர்-12 லிட்டர், தண்ணீர்-10 லிட்டர்  ஆகியவற்றுடன் நான்கு எலுமிச்சம்பழங்களை வெட்டி ஒரு டிரம்மில் இட்டு, மூன்று நாட்கள் ஊறவைத்து வடிகட்டினால்... 20 லிட்டர் அளவுக்கு பூச்சிவிரட்டி கிடைக்கும். 11 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் பூச்சிவிரட்டி என்கிற விகிதத்தில் கலந்து தெளித்தால், பூச்சிகள் அண்டாது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு