Published:Updated:

''நம்மாழ்வாருக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்!''

படம்: எஸ். தேவராஜன் ஓவியம்: ஹரன்

''நம்மாழ்வாருக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்!''

படம்: எஸ். தேவராஜன் ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

பெர்னாடு டி கிளார்க்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தலைப்பில், இயற்கை வேளாண்மையோடு சேர்த்து, தன் வாழ்க்கைக் கதையையும் எழுதி வந்தார் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'

கோ. நம்மாழ்வார். 39 அத்தியாயங்களை முடித்துக் கொடுத்ததோடு, மண்ணில் விதையாகிவிட்டார். ஆனால், அவருடைய வாழ்க்கையை முழுமையாக வாசகர்களுக்குத் தொகுத்து தரும் வகையில், அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி, முடிந்தவரை அனைத்தையும் சேகரித்துத் தர தீர்மானித்துள்ளோம். அந்த வகையில், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுதாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில், இனி இதழ்தோறும் இங்கே பேசுவார்கள்.

''சமூகக்காடுகள் வளர்ப்புத் திட்டம் சம்பந்தமாக ஒரு கூட்டம், புதுச்சேரி எல்லையில் உள்ள ஆரோவில்லில் நடைபெற்றது. அங்கு தங்கியிருந்த காந்திமதி, எனக்கு அறிமுகமானவர். அவர், 'இங்கு ஒருவர் இயற்கை வழி வேளாண்மையைச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறார்’ என்று பெர்னாடு டி கிளார்க் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அங்கேதான் இயற்கை வேளாண்மை குறித்த முதல் பாடம், எனக்கு வாய்த்தது. பெறுவதற்கரிய நண்பரை, பெர்னாடு வடிவத்தில் நான் கண்டுகொண்டேன்...'' என்று தன்னுடைய கடைசி அத்தியாயத்தில் (39) அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார் நம்மாழ்வார்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் இந்த பெர்னாடு. 1965-ம் ஆண்டு புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில் வந்து, அங்கேயே தங்கி விட்டவர். ஆரம்பகாலங்களில் தலையில் நீர் சுமந்துச் சென்று, ஆரோவில் பகுதியில் இவர் மரக்கன்றுகளை வளர்த்து வந்தார். தற்போது, 'இயற்கை வழி வேளாண்மை' ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். நம்மாழ்வாருக்கும் தனக்கும் இடையிலான நட்பு பற்றி, பெர்னாடு இங்கே பேசுகிறார்...

''85-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த மதிய நேரத்தில், மர நிழலில் நானும், நம்மாழ்வாரும் உரையாடியது, இன்றளவும் நினைவில் பசுமையாக உள்ளன. காரணம், மதிய நேரத்தில் சைக்கிளில் அழைத்துச் சென்று, ஏராளமானவர்களிடம் இப்படி கேள்விகளைக் கேட்டுள்ளேன். ஆனால், அவர்களில் நம்மாழ்வார்தான் 'பட்’டென்று இயற்கைப் பாடத்தை தன்னுள் கிரகித்துக் கொண்டவர். இந்தச் சந்திப்புதான், பிற்காலத்தில் நாடு போற்றும் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி'யை உருவாக்கும் என்பது எனக்குத் தெரியாது. என்னைவிட வயதில் மூத்தவர், என்றாலும் 'பெர்னாடுதான் என்னுடைய குரு’ என்று தன் வாழ்நாள் முழுக்கச் சொல்லி வந்தார் நம்மாழ்வார். அதற்கு நான் தகுதியானவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்திய கலாசாரத்தில் தனக்கு வித்தை கற்றுக்கொடுத்தவரை நினைவு கூர்வது பழக்கம். அதைத்தான் நம்மாழ்வாரும் செய்தார்.

''நம்மாழ்வாருக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்!''

ஃபுகோகா பாணியில்!

சரி, விஷயத்துக்கு வருவோம். கருத்துப்பட்டறையின் மதிய அமர்வில் இருவரும் கலந்து கொண்டோம். மாலை நான் புறப்படும்போது, என் பண்ணையைப் பார்க்க நம்மாழ்வார் வந்தார். ஃபுகோகாவின், உழவில்லாத வேளாண்மையை நான் சோதனை செய்து கொண்டிருந்தேன். அதாவது, மக்காச்சோளம், கம்பு, கொள்ளு... போன்ற தானியங்களை முதலில் விதைத்து, அவற்றை அறுவடை செய்யும் முன்பு, பாரம்பரிய நெல் விதைகளை வயலில் தூவிவிட வேண்டும். தானியங்களில் கதிர்களை மட்டும் அறுவடை செய்து, தட்டைகளை வேருடன் பிடுங்க வேண்டும். தட்டைகளை இப்படி வேருடன் பிடுங்குவதால், ஏற்கெனவே தூவியுள்ள, நெல் விதைகள் மண்ணுக்குள் மூடப்பட்டு முளைவிடத் தொடங்கும். தட்டைகளை நிலத்தின் மீது பரப்பி வைத்தால், மட்கி உரமாகும். இதைத்தான் எனது பண்ணையில் செய்திருந்தேன்.

ஏற்கெனவே, ஃபுகோகாவின் 'ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தை நம்மாழ்வார் படித்திருந்தார். அதில் சொல்லியிருந்த விஷயங்களை நான் செயல்படுத்தியிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். அதைப்பற்றி என்னிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். என்னிடம் அப்போது, மாப்பிள்ளைச் சம்பா, சீரகச்சம்பா, கார்த்திகைச் சம்பா என்று... கிட்டத்தட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்தன. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு முழுக்க கிராமம், கிராமமாக பயணம் செய்து விதைகளை சேகரித்திருந்தேன். வறட்சியான மாவட்டம் என்று சொல்லும், ராமநாதபுரத்தில் நிறைய நெல் ரகங்கள் கிடைத்திருந்தன.

நம்மாழ்வார், அந்த நெல் விதைகளை கைகளில் எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார். பசுமைப் புரட்சியின் விளைவால், பாரம்பரிய ரகங்கள் விவசாயிகளிடம் இருந்து கைவிட்டு போன நேரம் அது. என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டுக்காரன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து வருவது அவருக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இரவு வரை இயற்கையின் அதிசயங்கள், தமிழ்நாட்டு விவசாயிகளின் விவசாய ஞானம்... என்று எங்களது உரையாடல் நீண்டுகொண்டே போனது. 'எப்போது தூங்கினோம்?’ என்று தெரியவில்லை. மறுநாள், 'பெர்னாடு, நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது, நிறைய உள்ளது. அடிக்கடி வருவேன்...’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

''நம்மாழ்வாருக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்!''

ரமணர் சரி... சாதாரண மனிதன் தவறு?

அந்தக் காலகட்டத்தில் புதுக்கோட்டை பகுதியில், வறண்ட நிலத்தில் 'கொழுஞ்சி’ என்ற பண்ணையை குடும்பம் தொண்டு நிறுவனம் உருவாக்கியிருந்தது. அந்த அமைப்பை உருவாக்கியதில் நம்மாழ்வாருக்கு முக்கியப் பங்கு உண்டு. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் களையும், விவசாயிகளையும், அடிக்கடி என் பண்ணைக்கு அழைத்து வருவார். இப்படியாக எங்களின் நட்பு வளர்ந்து கொண்டே வந்தது. இந்திய அளவில் இயற்கை விவசாயம் பற்றி நடக்கும் பல கருத்தரங்குகளில் நான் கலந்து கொள்வேன். அந்த சமயத்தில், புதுடெல்லியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர். வந்தனா சிவா, ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு நம்மாழ்வாரையும் அழைத்துச் சென்றேன். அப்போது, இந்திய அளவில் உள்ள இயற்கை வேளாண்மை செயல்பாட்டாளர்களோடு நம்மாழ்வாருக்கு அறிமுகம் உருவானது. இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு... என்று கருத்தரங்கில் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மாலையில், கருத்தரங்கு நடைபெற்ற ஓட்டலுக்கு வெளியில் இருந்த புல்வெளியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும், தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். நம்மாழ்வார் முறை வந்தபோது, சட்டையைக் கழற்றி, வேட்டியை இழுத்து கட்டிக் கொண்டு, தலைகீழாக நின்று யோகாசனம் செய்தார். அங்கிருந்த நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மேல்தட்டு வர்க்கப் பெண்கள், 'பொது இடத்தில் சட்டை இல்லாமல், வேட்டியை தொடை தெரிய கட்டிக் கொண்டிருக்கலாமா?’ என்று கேட்டனர். 'திருவண்ணாமலையில் ரமண மகரிஷி, கோவணம் கட்டிக் கொண்டிருந்தால், 'சாமி’ என்று கையெடுத்துக் கும்பிடுவீர்கள். ஒரு சாதாரண மனிதன், யோகா செய்வது அநாகரிகமா?’ என்று நம்மாழ்வார் கேட்டார். கேள்வி கேட்டவர்கள், வாயடைத்துப் போயினர்.

விவசாயம் கற்க வந்த விடுதலைப் புலி!

இயற்கையைப் பற்றி யார் பேசினாலும், அவர்களுக்கு நம்மாழ்வார் நண்பராகி விடுவார். அப்படித்தான் ஒரு முறை நம்மாழ்வாரிடம், ஒருவர், 'இயற்கை வேளாண்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டுள்ளார். 'என்னுடைய குரு பெர்னாடு, அற்புதமாக கற்றுக் கொடுப்பார். அவரை போய் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்து விட்டார். அந்த நபரும் என் பண்ணைக்கு வந்தார். மறுநாள் காலையில், போலீஸ் அதிகாரிகள் 'திபுதிபு’வென என் பண்ணைக்கு வந்து, 'உங்கள் பண்ணையில் தங்கியுள்ள நபர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்’ என்று சொல்லி என்னை காவல் நிலையத்துக்கு அழைத்தனர். நம்மாழ்வாரிடம் கேட்டபோது, 'எனக்கு அவர் யார் என்று தெரியாது. இயற்கை விவசாயம் என்று சொன்னார். அதனால்தான், அனுப்பினேன்’ என்றார். விசாரணையின் முடிவில் என்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கினர். பண்ணையை விட்டு எங்கு சென்றாலும், காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. எனக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபித்த பிறகு, பத்து ஆண்டுகள் கழித்தே பாஸ்போர்ட் என் கைக்கு வந்தது. இதை ஓர் உதாரணத்துக் காகத்தான் சொல்கிறேன். அந்தளவுக்கு இயற்கை மேல் காதல் கொண்டவர், நம்மாழ்வார்.

பிரஷ்க்குள்ளே பேஸ்ட் இருக்கு!

இந்திய மண்ணுக்குச் சொந்தமான வேம்பு காப்புரிமை வழக்கு ஜெர்மனியில் நடைபெற்றது. வேம்பு காப்புரிமையை மீட்க, இந்தியாவில் இருந்து வந்தனா சிவா, நான், நம்மாழ்வார் போன்றவர்கள் சென்றோம். அவ்வழக்கில் நம்மாழ்வாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதை, நம்மாழ்வாரின் வார்த்தை களிலேயே சொன்னால்தான் சிறப்பாக இருக்கும்.

கோர்ட்டுக்கு வெளிய பல நாட்டுக்காரனும் நின்னுகிட்டு இருக்கான். நான் கையோட கொண்டுபோன, வேப்பங் குச்சியை எடுத்து, சிறுசா உடைச்சி, வாயில வெச்சி நல்லா கடிச்சேன். எல்லாரும், என்னையே பாக்கிறான். அதுல ஒருத்தன், 'என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’னு கேட்டான். 'பிரஷ் பண்றேன்’னு சொன்னேன். 'எது பிரஷ்?’னு கேட்டான். வேப்பங்குச்சி முனையைக் காட்டினேன். 'எங்க பேஸ்ட்?’னான். 'பிரஷ்குள்ளயே பேஸ்ட் இருக்கு. இதுல இருக்கற கசப்புச் சாறுதான் பேஸ்ட். எங்க பாட்டன், முப்பாட்டன் எல்லாம் இப்படித்தான் பல் விளக்கினான்’னு சொன்னேன். பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டானுங்க.

கோர்ட்டுக்குள்ள, 'எங்க பாட்டி, அம்மை போட்டா வேப்பிலை அரைச்சித்தான் பூசுவா. அம்மை காணாம போயிடும். எங்க ஊரு விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்துதான் பூச்சிவிரட்டியா தெளிக்கிறான். உங்களுக்கு மேரி மாதா மாதிரி, எங்களுக்கு மாரியாத்தா பொம்பள தெய்வம். அவளுக்கு வேப்பந் தழையிலதான் மாலை போடுவோம்’னேன். சங்கப்பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை பாடி நடிச்சுக் காட்டினேன். அப்புறம் என்ன? 'வேம்பு இந்தியாவின் சொத்து’னு கோர்ட் சொல்லிடுச்சு.

- இதை பல கூட்டங்களில் நம்மாழ்வார் சொல்லி யிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை வேலைகள் வேகமாக நடைபெறத் தொடங்கியபோது... இரவு, பகல் பாராது ஒற்றை ஆளாக, நாடு முழுக்கச் சுற்றி வந்தார், நம்மாழ்வார். இறுதிவரை தனக்கு என்று தனி வாகனம் வைத்துக் கொள்ளவில்லை. பஸ்ஸில் தூங்கி, கட்டணக் குளியல் அறையில் குளித்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். கடை சியாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பார்த்தேன்'' என்ற பெர்னாடு, நீண்ட மவுனத்துக்குள் சென்றார். எங்கிருந்தோ, ஓடி வந்த மயில் ஒன்று, காய்கறி வயலில் இறங்கி, தோகை விரித்து நடனமாடியது. அருகில் இருந்த மரத்தில் குயில்கள் கூவிக் கொண்டிருந்தன.

''நம்மாழ்வார் சொல்லிவிட்டும், செய்து விட்டும் போன விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவரது படத்துக்கு மாலை போட்டு, கற்பூரம் காட்டி அவரை கடவுளாக்கி விடாதீர்கள். உண்மையாகவே, நம்மாழ்வார் மீது அன்பும், நேசமும் இருந்தால்... இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள். இந்த மண்ணுக்குச் சொந்தமான நாட்டு விதைகள், சிறுதானியம், பயறு வகைகளைப் பாதுகாக்கும் வேலையை செய்யுங்கள். பசுமையை நேசியுங்கள். அதுதான், நம்மாழ்வாருக்கும், பெரும் கருணைகொண்ட இயற்கைக்கும் நாம் செலுத்தும் நன்றி கடன்..!'' என்று சொல்லி விடை கொடுத்தார், 'என் குரு' என்று நம்மாழ்வாரால் விளிக்கப் பட்ட பெர்னார்டு!

பேசுவார்கள்
சந்திப்பு: பொன்.செந்தில்குமார்