Published:Updated:

மின்னணு பணப் பரிமாற்றம்... வரவேற்றுக் கொண்டாடும் விவசாயிகள்...

விரட்டப் பார்க்கும் குத்தூசி கொள்ளையர்கள்... கு.ராமகிருஷ்ணன் படங்கள் : கே.குணசீலன்

மின்னணு பணப் பரிமாற்றம்... வரவேற்றுக் கொண்டாடும் விவசாயிகள்...

விரட்டப் பார்க்கும் குத்தூசி கொள்ளையர்கள்... கு.ராமகிருஷ்ணன் படங்கள் : கே.குணசீலன்

Published:Updated:
##~##

அரசாங்கம் நடத்தும் நேரடி நெல் கொள்முதலின்போது, விவசாயிகளிடம் நடத்தப்படும் பகல் கொள்ளைகள் குறித்து, நம் இதழில் பலமுறை விரிவாக எழுதியிருக்கிறோம். 'குத்தூசி கொள்ளையர்கள்' என்ற தலைப்பில் விரிவான அலசலையும் வெளியிட்டுள்ளோம். அந்த சமயங்களில் மட்டும் ஒன்றிரண்டு கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, விஷயத்தை அத்தோடு மறந்துவிடுவார்கள். காரணம்... இந்தப் பகல் கொள்ளையின் பங்கு... அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தவறாமல் போய்ச் சேர்ந்துவிடுவதுதான்!

இந்நிலையில், சில மாநிலங்களில் 'மின்னணு பணப் பரிமாற்ற முறை' என்கிற பெயரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக கொள்முதல் நிலையக் குற்றங்கள் ஒரளவுக்குக் குறைந்து வருகின்றன. இதை வைத்து, தமிழ்நாட்டுக்கு இந்தத் திட்டம் எப்போது வரும்?' என்று டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை இங்கே வரவிடாமல் செய்வதற்கான வேலைகளில் மறைமுகமாக இறங்கியுள்ளனர் கீழ்மட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் திட்டம் பற்றிப் பேசிய தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் 'சுவாமிமலை’ சுந்தர விமலநாதன், ''நெல் கொள்முதலின்போது, ஒரு குவிண்டாலுக்கு 75 ரூபாய் வீதம் விவசாயிகளின் பணம் திருடப்படுகிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் நெல்லுக்கு, 150 கோடி ரூபாய் மொத்தமாக கொள்ளையடிக்கப்படுகிறது. கொள்முதல் நிலைய ஊழியர்கள் மூலமாகப் பணம் பட்டுவாடா செய்வதால்தான், இப்படி விவசாயிகளின் பணத்தில் கை வைக்கிறார்கள். 'பணத்தை மின்னணு பணப் பரிமாற்ற முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம்’ என மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனை நடைமுறைப்படுத்தச் சொல்லி, 2011-ம் ஆண்டு மத்திய அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்தது.

மின்னணு பணப் பரிமாற்றம்... வரவேற்றுக் கொண்டாடும் விவசாயிகள்...

ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, சட்டீஸ்கர், பீகார், மேற்கு வங்காளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக இதனை நடைமுறைப் படுத்திவிட்டன. தமிழகத்தில் இதை நடைமுறைப்படுத்தாமலே இருக்கிறார்கள். இது நடைமுறைக்கு வந்தால்... விவசாயிகளுக்கு 'ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும். இது ஏ.டி.எம். கார்டு போன்றது. தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தை, தேவைக்கு ஏற்ப, விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மூன்று கோடி ரூபாய்க்குள்தான் செலவாகும்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 78 நாட்கள் மட்டுமே கொள்முதல் நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்வதற்காக ஒரு நாளுக்கு 15 கோடி ரூபாய் வீதம், 78 நாட்களுக்கான பணம், வங்கியில் இருந்து மொத்தமாக எடுக்கப்பட்டு... தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகிறது. முன்கூட்டியே மொத்தமாக எடுக்கப்பட்டுவிடுவதால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வட்டித் தொகையான 65 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மூன்று மாவட்டங்களிலும் உள்ள 1,100 கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று பணம் வழங்க, கார் வாடகையாக மட்டுமே 33 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இப்படியாக, ஒரு பருவத்துக்கு மட்டுமே 1 கோடி ரூபாய் விரயமாகிறது. தினமும் 33 அலுவலர்களின் உழைப்பும் விரயம் செய்யப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் தினப்படித் தொகையும் வீண் விரயம். இதையெல்லாம் கணக்கிட்டால்... மின்னணு பணப் பரிமாற்ற முறைக்கான செலவு என்பது ஒரு பொருட்டே இல்லை'' என்று சொன்னார்.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலூகாவில் உள்ள கொள்முதல் நிலையங்களில், சோதனை அடிப்படையில் மின்னணு பணபரிமாற்ற முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

மின்னணு பணப் பரிமாற்றம்... வரவேற்றுக் கொண்டாடும் விவசாயிகள்...

இதைப் பற்றி பேசும் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர், பி.என்.எஸ். தனபாலன், ''விவசாயிகள் எல்லாருமே இதை விரும்புறாங்க. ஆனால், கொள்முதல் நிலைய ஊழியர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் இதை எப்படியாவது தடுத்து நிறுத்திடணும்ங்கறதுல ரொம்பவே உறுதியா இருக்காங்க. அவங்கதான் விவசாயிகள்கிட்ட தப்பும் தவறுமா சொல்லிக் கொடுத்தும், விவசாயிங்கற போர்வையிலயும் எதிர்ப்பு தெரிவிக்கறாங்க. 'பணம் கிடைக்காது... மூணு நாளாகும்'னு தப்புத் தப்பா சொல்லிவிடறாங்க. இதுல உண்மை இல்ல.

'இது நடைமுறைக்கு வந்துட்டா ஊழல் ஒழிஞ்சுடுமா?’னு சிலர் கேட்கறாங்க. கண்டிப்பா 50 சதவிகிதத்துக்கும்மேல ஊழலைக் கட்டுப்படுத்திடலாம். மின்னணு பணப் பரிமாற்ற முறை வந்துட்டா, கொள்முதல் நிலைய ஊழியர்கள் தங்களோட விருப்பப்படி பணத்தை எடுத்துக்கிட்டு, மீதித் தொகையை விவசாயிகள்கிட்ட கொடுக்கறது நின்னுடும். கமிஷன் வேணும்னா... விவசாயிகள்ட்ட கெஞ்சி, கை நீட்டி காசு வாங்க வேண்டியிருக் கும். வியாபாரிகள்கிட்ட இருந்து தரமில்லாத நெல்லை கொள்முதல் செய்யுறதும் நின்னு போயிடும். அதனால இந்தத் திட்டம் முழுமையா நடைமுறைக்கு வந்தாதான், இந்த பணம் தின்னிக் கழுகுகளை ஒழிக்க முடியும்'' என்றார் ஆவேசமாக.

நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் இதைப்பற்றி கேட்டபோது, ''இது நல்ல திட்டம். விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது'' என்று சொன்னார்.

தமிழக உணவு அமைச்சர் காமராஜிடம் கேட்டபோது, ''விவசாயிகளின் ஆதரவை வைத்து, முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவோம்'' என்றார்.

பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!