Published:Updated:

மன்னிக்க முடியாத குற்றம்!

மன்னிக்க முடியாத குற்றம்!

மன்னிக்க முடியாத குற்றம்!

மன்னிக்க முடியாத குற்றம்!

Published:Updated:
##~##

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

''மரபணு மாற்றுப் பயிர்கள் மீதான அறிவியல்பூர்வமற்ற, தவறான கருத்துகளுக்கு நாம் அடிபணிந்து விடக்கூடாது'' என்று காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில், சொல்லியிருக்கிறார், நமது பிரதமர் மன்மோகன் சிங்.

அதேபோல... 'அறிவியல்பூர்வமானது என்று சொல்லப்படுகின்ற அத்தனைக் கருத்துகளுக்கும் அடிபணிந்து விடக்கூடாது' என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

மன்னிக்க முடியாத குற்றம்!

'அறிவியல்பூர்வமானது' என்று சொல்லிக் கொண்டு, 'பசுமைப் புரட்சி' எனும் பெயரில், முப்பது, நாற்பது ஆண்டுகளாக நம் வயற்காடுகளில் தெளிக்கப்படும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு... தற்போது கழுத்தை நெறிக்கிறது என்று கதறிக் கொண்டுள்ளனர் விவசாயிகள்!

''ஒரு பக்கம்... ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் செலவழிப்பதற்காக வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்கின்றன. மறுபக்கம்... இந்த ரசாயனங்களின் பயன்பாட்டால், ஒட்டுமொத்த மக்களும் நோயின் பிடியில் வீழ்ந்துகிடக்கிறார்கள். நிலத்தடி நீரில்கூட ரசாயனங்களின் எச்சம் ஊடுருவிவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பெருகிக் கிடக்கும் கேன்சர் நோயாளிகளே இதற்கு சாட்சி. இந்த நோயாளிகள் மருத்துவமனைக்குப் பயணிக்கும் ரயிலின் பெயரே... 'கேன்சர் எக்ஸ்பிரஸ்' என்று அங்கே பிரபலமாகியிருக்கிறது!'' என்று, பல ஆண்டுகளாக இயற்கை ஆர்வலர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த மாநில சோக கீதம்கூட, பிரதமரின் காதுகளில் ஒலிக்கவில்லையா?

'பசுமைப் புரட்சியால் மண்வளம் கெட்டுவிட்டது...’ என்று 'பசுமைப் புரட்சி'யின் காரணகர்த்தாக்களில் ஒருவரான 'வேளாண் விஞ்ஞானி'

எம்.எஸ்.சுவாமிநாதனே ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்! தன்னுடைய பெயரால் இயங்கும் ஆராய்ச்சி நிலையங்களில் இயற்கை விவசாயத்துக்கு பெரிதாக இடமளித்துக் கொண்டிருக்கிறார்! இந்த விஞ்ஞானிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமரின் கவனத்துக்கே இந்த விஷயம் வரவில்லையா?

'மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து அவசரம் காட்டத் தேவையில்லை. அதன் பின்விளைவுகளை ஆராய்ந்து பார்த்த பிறகே அனுமதிக்க வேண்டும்' என்று, நாடாளுமன்றக் குழு அழுத்தமான அறிக்கை கொடுத்திருக்கிறது. இந்தக் குழுவை ஏற்படுத்திய பிரதமரே, அந்த அறிக்கையைப் படித்துப் பார்க்கவில்லையா?

'நெருப்பு சுடும் என்பதைத் தொட்டுப் பார்த்துத்தான் தெரிந்து கொள்வேன்' என்று தனி மனிதர் மன்மோகன் சிங் வேண்டுமானால், பிடிவாதம் பிடிக்கலாம். ஆனால், 'நூறு கோடி மக்களையும் தொட்டுப் பார்க்கச் சொல்வேன்' என்பது... 'மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும்' என்பதையாவது உணர்ந்தால் சரி!

ஆசிரியர்