Published:Updated:

தண்ணீர்..தண்ணீர்...

மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்கள்... ஆர்.குமரேசன் படங்கள்: வீ. சிவக்குமார்

நீர் மேலாண்மை

##~##

'காதலின் அருமை, பிரிவில்
மனைவியின் அருமை, மறைவில்
நீரின் அருமை அறிவாய், கோடையிலே...’

சத்திய வார்த்தைகளை சந்தமாக்கி வைத்திருக்கிறார், கவிஞர் வைரமுத்து. பருவநிலை மாற்றத்தில் உயிரினப் பன்மயம் பலத்த அடி வாங்கிக் கிடக்கும் சூழலில், ஆண்டின் அத்தனை நாட்களுமே கோடையாகத்தான் இருக்கின்றன. கோடை வருவதற்கு முன்னரே ஓடைகள் வற்றிவிட்டன. கிணறுகள் வெறும் கிடங்குகளாகவும், குளங்களில் குரும்பாடுகள் மேய்ந்து கொண்டும், ஆறுகளில் லாரிகள் ஓடிக்கொண்டும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், 'வரலாறு காணாத வறட்சி'யில் தமிழகம் சிக்கி பல ஆண்டுகளாக வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.

எல்லாம் சரிதான். இந்த வறட்சியை வரவழைத்ததில் நமக்கும் பங்குண்டுதானே? நமது தவறுகளை, நாம்தானே சரி செய்ய வேண்டும். உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிப்பதுதானே முறை. 'வறட்சி... வறட்சி’ என விரக்தியில் வீறிடுவதை விட, அதை விரட்டும் வழிமுறைகளைக் கையிலெடுக்க வேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்றல்ல. தங்கள் செயல் மூலமாக சாத்தியப்படுத்திக் காட்டியிருகிறார்கள், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர். கோம்பை பகுதியைச் சேர்ந்த சாமான்ய மக்கள்.

தொப்பியசாமி மலையின் மேற்குப் பகுதியில், காப்புக்காடுகளுக்கு கீழ், செம்மண் சரளை பூமியில் அமைந்திருக்கிறது இந்தப்பகுதி. மலையில் கிடைக்கும் மழைத் தண்ணீர், ஓடைகள் வழியாக... வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, வாணிக்கரை, கூம்பூர் வழியாக ஈசநத்தம் சென்று குடகனாற்றில் கலந்து, அங்கிருந்து அமராவதி ஆற்றில் ஐக்கியமாகி, காவேரியில் கலந்து கடலில் சேர்கிறது. தரைமட்டத்தில் இருந்து, 360 மீட்டர் மேடான பகுதி என்பதாலும், பெய்யும் மழைநீர் உடனே ஓடி விடுவதாலும், வானம் பார்த்த வெள்ளாமைதான் சாத்தியமாக இருந்தது. ஒரு கட்டத்தில், மழையில்லாமல் மானாவாரி வெள்ளாமைக்கும் வழியில்லாமல், பஞ்சம் பிழைக்க வேறு ஊர்களுக்கு பயணப்பட்டனர் இவ்வூர் மக்கள். இந்நிலையில், 2010-ம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த வள்ளலாரின் பார்வை, இந்தப் பகுதி மீது விழுந்தது. அதன் பிறகுதான், அந்த மாபெரும் மாற்றம் நடந்தேறியது. 'இந்த மண்ணில் இனி எதுவும் விளையாது’ என எண்ணி வெளியூருக்குச் சென்றவர்கள், ஊர் திரும்பிய அதிசயம் அரங்கேறியது.

இது எப்படி சாத்தியமாயிற்று..?

திட்டத்தை செயல்படுத்திய மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் விரிவாக்க அலுவலரும் உதவிப் பொறியாளருமான பிரிட்டோ சொல்வதைக் கேளுங்களேன்..!

தண்ணீர்..தண்ணீர்...

''இது ரொம்ப வளமான பகுதி, ஆனா, ஏன் வறட்சியா இருக்குனு கலெக்டர் (வள்ளலார்) எங்களை விசாரிச்சதோட, அந்தப் பகுதியைப் பத்தின அத்தனை தகவல்களையும் திரட்டச் சொன்னாரு. நாங்களும் பழைய வரைப்படங்களையும் அந்தப்பகுதியில இருந்த வயசானவங்ககிட்டயும் விசாரிச்சு நிறைய தகவல்களைத் திரட்டினோம். அதோட, கூகுள் மேப்ல பாத்தப்போ, அந்தப் பகுதியில ஏழு குளங்கள் இருந்ததைக் கண்டுபிடிச்சோம். ஆனா, அங்க முதல் குளமும், ஏழாவது குளமும் மட்டும்தான் கொஞ்சமா இருந்துச்சு. மத்த குளங்கள் இருந்த அடையாளமே இல்ல. அந்தப் பகுதியில தண்ணியில்லாததால விவசாயமே இல்லை. ஆடு, மாடு வளர்க்கக்கூட தண்ணியில்லாததாலதான் வெளியூர்களுக்கு வேலை தேடிப் போக ஆரம்பிச்சாங்க.

அந்தப்பகுதியில முதல்ல நீராதாரத்தைப் பெருக்கணும்னு முடிவு செஞ்சு, குளங்களைப் புனரமைக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல 'வேண்டாத வேலை’னு ஒதுங்கி நின்னு வேடிக்கை பாத்த ஊர்மக்கள், நாங்க ஒரு குளத்தைத் தயார் செஞ்சதும், ஆர்வமா களத்துல இறங்கிட்டாங்க. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களையும் இதுல ஈடுபடுத்தி ஏழு குளங்களையும் புதுப்பிச்சோம். ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கு தண்ணி போற மாதிரி, 21 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்களை சரி செஞ்சோம். இதெல்லாம் செஞ்சி முடிக்கவும்... ஒரு மழை பெய்யவும் சரியா இருந்துச்சு. கிணறுகள்லயும், போர்வெல்லயும் தண்ணி ஊறிச்சு. மானாவாரி விவசாயத்துக்குக்கூட வழியில்லாம இருந்த நிலத்துல, இறவை விவசாயம் செழிக்க ஆரம்பிச்சது.

தண்ணீர்..தண்ணீர்...

2011-ம் வருஷ ஆரம்பத்துல 18 ஹெக்டேர் நிலத்துல விவசாயம் நடந்துச்சு. இதைக் கேள்விப்பட்டு வெளியூர்களுக்கு வேலைக்குப் போன 21 குடும்பங்கள் ஊர் திரும்பினாங்க. அதே வருஷம் ஜூன் மாசம் 31 ஹெக்டேர்ல கடலை, தக்காளி, வெங்காயம்...னு விவசாயம் ஜோரா நடந்துச்சு. கால்நடைகளும் அதிகமாச்சு. இந்த மூணு வருஷத்துல அந்தப் பகுதியில மூணு நாட்கள் மட்டுமே மழை கிடைச்சுருக்கு. இருந்தாலும், இன்னமும் அங்க விவசாயம் நடக்குது. இவ்வளவு நாளும், மண்ணோட ஈரப்பதம் காக்கப்பட்டு வர்றதுக்கு காரணம் குளங்களை இணைச்சதுதான்'' என்கிறார். பிரிட்டோ.

தண்ணீர்..தண்ணீர்...

குளங்கள் இணைப்புத் திட்டத்தின் முதல் தளமான கிழக்கு மெத்தைப்பட்டி கிராமத் துக்குச் சென்றோம். மழையில்லாமல் மொத்தப் பகுதியும் காய்ந்து போய் கிடந் தாலும், சில இடங்களில் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது, விவசாயம். ஆலமரத் துக்குக் கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த திருமலைசாமியிடம் பேசினோம்.

''கலெக்டர் ஐயா, குளங்களை சரி செஞ்சு கொடுத்த பிறகு வெள்ளாமை நல்லா இருந்துச்சு. ஆனா, தொடர்ந்து மூணு வருஷமா மழையில்லாததால பல போர்வெல் கிணறுகள்ல தண்ணி கீழ போயிடுச்சு. இருந்தாலும், சிலர் இன்னும் செழும்பா வெள்ளாமை பாத்துட்டுதான் இருக்காங்க'' என்று கைகாட்டினார்.

தண்ணீர்..தண்ணீர்...

அவரைத் தொடர்ந்து பேசிய தங்கராஜ், ''ஒரு காலத்துல வெள்ளாமை செய்ய முடியாம காடா இருந்த பூமிங்க. 1950-கள்ல எங்க முப்பாட்டன் பாப்பா நாயக்கர்தான் இதை விவசாய பூமியா மாத்துனாரு. அதுக்கு முன்ன வரை, மலையில பெய்ஞ்ச மழைத்தண்ணி ஒரே ஓட்டமா கீழ ஓடிப் போயிட்டு இருந்துச்சு. எங்க பாட்டன், மலையில இருந்து வாய்க்கால் வெட்டி, ஊர்ப் பக்கமா தண்ணியைக் கொண்டு வந்தாரு. அப்படிக் கொண்டு வந்தவரு, குறிப்பிட்ட இடைவெளிகள்ல சின்னச்சின்னதா குளங்களை வெட்டினாரு. அங்கங்க கிணறுகளையும் வெட்டி, கிணத்துக்கு மேல் பக்கமா மண்ணைக் கொட்டி கரை எடுத்தாரு. அதனால பெய்ற மழைத் தண்ணி கரையில தேங்க ஆரம்பிச்சது. கிணத்துல தண்ணி கொறையாம இருந்துச்சு. எங்க காலத்துல அதை முறையா பராமரிக்காம விட்டதுல, வாய்க்கா தூந்துப் போயி, தண்ணி வராம குளங்கள் அழிஞ்சுப் போச்சு. குளங்களை சரி பண்ணி கொடுத்த உடனே ஒரு மழை கிடைக்கவும், கிணறுகள்ல தண்ணி வந்துச்சு. மறுபடியும் விவசாயத்தை ஆரம்பிச்சுட்டோம்'' என்கிறார் குரலில் உற்சாகத்தைத் தேக்கியவராக.

இந்த கடும் வறட்சியிலும் வெங்காயம் அறுவடை முடித்து, அடுத்த விவசாயத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த பாப்ப நாயக்கர், ''என் வயலுக்கு மேல இருக்கற ஓட்டைமடை குளம் மழைத்தண்ணியால நிறைஞ்ச, ஒரே நாள்ல என் கிணத்துல தண்ணி மேல வந்துடுச்சு. வெங்காயம், தக்காளி...னு போட்டு எடுத்தேன். ஊர் உலகத்துல தக்காளி வரத்து குறையற நேரத்துல எங்க பகுதியில தக்காளி சக்கைப்போடு போடும். அதனால, இயல்பாவே நல்ல விலை கிடைக்கும். இப்ப வெங்காயம் போட்டு எடுத்துட்டேன். முருங்கையும் என் வயல்ல இருக்கு. இந்த பஞ்ச காலத்துலயும், நான் நஞ்சை விவசாயம் பண்றேன்னா அதுக்கு காரணம் இந்த குளம்தான்'' என்றவர்,

தண்ணீர்..தண்ணீர்...

''தண்ணி இருந்தாலும், பல நேரங்கள்ல கரன்ட் இருக்குறதில்ல. அதனால நிலத்துல ஒரு மூலையில, பள்ளம் தோண்டி, களிமண்ணைக் கொட்டி, தொட்டி மாதிரி கட்டி வெச்சிருக்கேன். கரன்ட் இருக்கும்போது, அதுல தண்ணியை நிரப்பிக்குவேன். தேவைப்படும்போது, தொட்டியில இருந்து வாய்க்கா வழியா பாசனம் செஞ்சுக்குவேன். இந்தக் கரையில 50 வாழைக இருக்கு. அது மூலமா ஒரு வருமானம் கிடைக்குது'' என்று தான் பயன்படுத்தி பலன் பார்த்து வரும் தொழில்நுட்பம் ஒன்றை பேச்சின் போக்கிலேயே நம்மிடம் பதிய வைத்தார்!

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் பிரிட்டோ, தன் பேச்சினூடே... தண்ணீர் சேமிக்க மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், குளங்களைப் பராமரிக்கும் முறைகள், போர்வெல் போடும்போது கவனிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் என்று நிறைய விஷயங்களைப் பகிர்ந்தார். ஒவ்வொன்றும் 'அடடா’ ரகம்.

அவை, அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு