Published:Updated:

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

'தண்ணியில்லா காட்டில்' தளிர்விடும் இயற்கைஆர். குமரேசன் படங்கள்: உ. பாண்டி

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

'தண்ணியில்லா காட்டில்' தளிர்விடும் இயற்கைஆர். குமரேசன் படங்கள்: உ. பாண்டி

Published:Updated:

முயற்சி

##~##

 தமிழ்நாட்டின் 'தண்ணியில்லா காடு' எனப் பெயர் பெற்ற ராமநாதபுரத்தை இனி, 'தமிழகத்தின் இஸ்ரேல்’ என அழைத்தாலும் மிகையில்லை. அந்தளவுக்கு புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள் இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. சாகுபடி பரப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வீடுகளைச் சுற்றியுள்ள காலி இடங்கள், மொட்டை மாடிகள், தென்னைக்கு ஊடுபயிர் என காய்கறி உற்பத்தி, இங்கே வேகமெடுத்திருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி நிகழ்ந்தது இப்படி ஒரு அற்புதம்..?

100 இளைஞர்கள்..!

இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது, மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரின் ஆர்வமும், முயற்சியும்தான். இயற்கை ஆர்வலரான நந்தகுமார், மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதும் முள்காடுகளை அழித்து... இயற்கை விவசாயப் பரப்பை அதிகப்படுத்தும் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். இயற்கை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வை விவசாயிகளிடத்தில் ஏற்படுத்தி, அவர்களைத் தற்சார்பு விவசாயிகளாக மாற்றுவதற்காக, 'இயற்கை விவசாய ஆலோசகர்' ஏகாம்பரம் என்பவரை ஒப்பந்த ஊழியராகப் பணியமர்த்தினார். 'பசுமை விகடன்’ இதழில் இடம்பெறும் முன்னோடி விவசாயிகளை ஒவ்வொரு மாதமும் அழைத்து வந்து விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மத்தியில் பேச வைத்தார். அதைத் தொடர்ந்து நூறு இளைஞர்களைத் தயார் செய்து, அவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்து, அவர் களைக் கொண்டு மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தார்.

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

பசுமை விகடனின் பயிற்சி!

இதற்காக, மாவட்ட நிர்வாகத்துடன் 'பசுமை விகடன்' இணைந்து, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் தலைமையில் கடந்த ஆண்டு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற விவசாயிகள்தான், இன்று காய்கறி சாகுபடி செய்து, தினசரி வருமானம் பார்ப்பதோடு, மற்ற விவசாயிகளுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நந்தகுமார், சிவா சகோதரர்கள். மண்டபம் ஒன்றியம், வழுதூரைச் சேர்ந்த இந்த சகோதரர்களின் வீடு தேடிச் சென்றபோது, நம்மிடம் உற்சாகமாகப் பேசிய நந்தகுமார், ''ஒரு காலத்துல விவசாயத்து மேல வெறுப்பு வந்து, கடை கண்ணி வெச்சு பொழச்சுக்கலாம்னு போன ஜனங்க, இப்ப திரும்ப விவசாயத்துக்கே திரும்பி வர்றாங்க. கிட்டத்தட்ட எல்லா வீடுகள்லயும் காய்கறித் தோட்டம் இருக்கு. நம்மாழ்வார் அய்யா கொடுத்த பயிற்சியும், மாவட்ட நிர்வாகம் கொடுத்த விதையும்தான் இன்னிக்கு எங்களை சந்தோஷமா வெச்சிருக்கு'' என்றவர், வீட்டுக்குப் பின்புறம் இருந்த காய்கறித் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேசினார்.

ஜீரோ பட்ஜெட் பந்தல்!

''இது மொத்தம் ஒரு ஏக்கர் 60 சென்ட். இதுல ஒரு ஏக்கர்ல தென்னை மரங்கள் இருக்கு. இந்த 60 சென்ட் இடத்துல கொஞ்சம் மாங்கன்னுகளை நட்டிருக்கோம். மாவுக்கு ஊடுபயிரா காய்கறி விவசாயத்தை ஆரம்பிச்சோம். எங்க பக்கத்துல பனைமரங்களும், சீமைக்கருவேல் முள் செடிகளும் அதிகம். அதனால, முள் குச்சிகளை வெட்டி, பந்தல் போட்டு... கயிறுக்குப் பதிலா பனை நார்களைப் பயன்படுத்தியே பந்தல் விவசாயமும் செய்றோம். ஆடு, மாடுங்க உள்ள வராம இருக்கறதுக்காக, பனங்கைகளை வெச்சு வேலி போட்டுருக்கோம்.

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

இங்க கிடைக்கற பொருள்களையே பயன் படுத்திக்கறதால, செலவு அதிகமில்லை. பீர்க்கன், பாகல், குறும்புடலை, மஞ்சள்பூசணி(பரங்கிக்காய்), கத்திரி, மிளகாய், தக்காளினு போட்டிருக்கோம். முப்பது சென்ட்ல அகத்தி, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, வல்லாரைக்கீரைனு போட்டிருக்கோம். வேலியில 100 முருங்கை இருக்கு. கீரைகளுக்கு நடுவுல செடி அவரை, முள்ளங்கி இருக்கு. கொடுவள்ளிக்கீரைனு ஒண்ணு இருக்கு. இது வறட்சியையும் நல்லா தாங்கும். வீட்டுக்கு ஒரு செடி இருந்தா போதும். ஒரு தடவை இதை சாப்பிட்டுட்டா அப்பறம் விடவே மாட்டாங்க. அவ்வளவு சுவையா இருக்கும். இது, வயித்துப் புண், வாய்ப்புண் மாதிரியான நோய்களுக்கு மருந்துனும் சொல்றாங்க. இதையும் போட்டுருக்கோம்.

எங்களிடமே விதைப்பண்ணை!

ஒரு செடியில மகசூல் முடிஞ்சதும், பக்கத்துலயே அதே விதையை நட்டுடுவோம். அதனால சுழற்சி முறையில காய்கள் இருந்துக்கிட்டே இருக்கும். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் இதுகளைத்தான் பதினைஞ்சு நாளைக்கு ஒரு முறை மாத்தி மாத்தி தெளிக்கிறோம். வேற எந்த பண்டுதமும் பாக்கறதில்லை. செடிகளுக்கு இடையில பள்ளம் பறிச்சு இலை, தழைக் கழிவுகளைப் போடுறதுல, அதெல்லாம் மட்கி உரமாகிடுது. எல்லாமே நாட்டு ரகம்கிறதால விதைகளை நாங்களே எடுத்து வெச்சுக்குவோம். அதனால விதைக்கு அலைய வேண்டியதில்லை'' என்று, நம்மை மலைக்க வைத்த நந்தகுமார், தொடர்ந்தார்.

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

மனம் நிறைவு..! பணம் வரவு!

''தோட்டத்துல இருந்து, தினமும் ஏதாவது மூணு வகை காய்கள் கிடைச்சுகிட்டே இருக்கு. தம்பி சிவா, ராமேஸ்வரத்துல கடை வெச்சுருக்கான். தினமும் காலையில பத்து மணிக்குதான் மதுரையில இருந்து ராமேஸ்வரத்துக்கு காய்கள் வரும். இப்போ, எங்க தோட்டத்து காய்களை அதிகாலையிலயே கடையில கொண்டு போய் வெச்சு வித்துடறோம். இப்பகூட காய்கறிகளோட தம்பி அங்கதான் போயிருக்கான். இப்படி விக்கிறதுல, தினமும் 500 ரூபாய் கணக்குல மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடுது. இதுக்காக நாங்க செலவு செஞ்சது மூவாயிரம் ரூபாய்தான். குடும்ப ஆளுங்களே பராமரிப்பு, அறுவடை வேலையைச் செஞ்சுக்கறாதால... எல்லாமே லாபம்தான்.

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

நம்மாழ்வாருக்கு நன்றி!

எங்ககிட்ட 3 மாடு, 40 ஆடு, 50 நாட்டுக்கோழிங்க இருக்கு. இதுகளோட கழிவுகளைத்தான் செடிகளுக்கு உரமா போடுறோம். இந்தத் தோட்டத்துல கிடைக்குற வருமானமே எங்க குடும்பத்துக்குப் போதுமானதா

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..!

இருக்கு. நல்லது, கெட்டதுனு அவசர செலவுக்கு ஆடு, கோழிகளை வித்துக்குவோம். இப்போ நிறைய பேர், எங்களை மாதிரியே காய்கறி போட்டு, அன்னாடம் வருமானம் பாத்துக்கிட்டு, சந்தோஷமா இருக்காங்க. இதுக்காக கலெக்டர் அய்யா, நம்மாழ்வார் அய்யா, பசுமை விகடன் இவங்களுக்கெல்லாம்தான் நாங்க நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்வுடன் சொல்லி விடைகொடுத்தார், நந்தகுமார்.

நிறைவாக, மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரை சந்தித்தபோது, ''இந்த மாவட்டத்தோட காய்கறித் தேவையை, இங்க விளையற காய்கறிகளை வெச்சே ஈடுகட்டணும்ங்கிற எண்ணத்துலதான், காலி இடத்தில் எல்லாம் காய்கறிகள் விளைய வைக்கிற திட்டத்தைக் கொண்டு வந்தோம். விவசாயிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், களப்பணியாளர்களோட முயற்சியால இது நல்ல முறையில இயங்கிக்கிட்டு இருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

தொடர்புக்கு,
நந்தகுமார் (விவசாயி)
செல்போன்: 94865-75172