Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2014-15

Vikatan Correspondent
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2014-15
##~##

திறமைகளை வளர்த்தெடுக்க, சவால்களைச் சந்திக்க, சமூக மாற்றத்துக்கு ஒரு விதையாக இருக்க விரும்பும் மாணவர்களுக்கு... களம் அமைக்கிறது விகடன்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் மேடை அமைத்து, கனிவோடு கற்றுக்கொடுத்து, பயிற்சியளித்துப் பட்டை தீட்டிய விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் அடுத்த அத்தியாயம்... இதோ!

விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி எடுத்தவர்கள், பல துறைகளில் தங்களுக்கென்று தனி அடையாளத்தைப் பதித்துப் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, தொழில்துறை... எனத் தாங்கள் தடம் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

இளமைக்கு 'ஆ.வி’, நேர்மைக்கு 'ஜூ.வி’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, செல்வத்துக்கு 'நாணயம்’, பயணத்துக்கு 'மோட்டார்’, வளமைக்கு, 'பசுமை’, நலத்துக்கு 'டாக்டர்’, விஷ§வல் கற்பனைகளுக்கு 'விஜிட்டல்’, இன்டர்நெட் உலகத்துக்கு 'விகடன் டாட் காம்’ என தமிழர்கள் வாழும் ஊரெல்லாம் பரவியிருக்கிறது விகடனின் கரங்கள். அந்தக் கையைப் பற்றிக்கொள்ளப் பலர் காத்துக்கொண்டிருக்க, உங்களை நேரடியாகத் தேடி வருகிறது ஓர் அரிய வாய்ப்பு!

1.7.96-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2013-2014) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு (2014-2015) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2013-2014-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க வேண்டாம். தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.3.14-ம் தேதிக்குள் எங்களுடைய பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் (அந்த விண்ணப்பத்தை பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய தொலைபேசி அல்லது செல்பேசி எண் அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாக உங்களையும் அழைக்கிறோம்.

வாழ்த்துகள்!

- ஆசிரியர்

விண்ணத்தாளை PRINT எடுக்க கீழே க்ளிக் செய்யவும்

விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்ப வேண்டியவை:

(அ) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைச் சொந்தக் கையெழுத்தில், தெளிவாகப் புரியும்படி, தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும்.

• பாராளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. கட்சிகளிடையே கூட்டணி தொடர்பான கலகல கலாட்டாக்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் உங்கள் கற்பனைக்கு ஒரு சவால்! நாடாளுமன்றக் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் (தே.மு.தி.க.), டி.ராஜேந்தர் (ல.தி.மு.க.), சரத்குமார் (ச.ம.க.), கார்த்திக் (நா.ம.க.) ஆகிய நால்வரும் சந்தித்துப் பேசினால் எப்படி இருக்கும்? ஜாலியாக கற்பனைப் பேட்டி ஒன்றை எழுதுங்களேன்.

(அல்லது)

•  அடுத்த வார ஆனந்த விகடனை முழுக்கவே வடிவமைக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது! அட்டை டு அட்டை நீங்கள் விரும்பும் செய்திகளை இடம்பெறச் செய்யலாம். 'விகடனில் இது நிச்சயம் இடம்பெற வேண்டும்’ என்று எந்தச் செய்திக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்? அட்டைப் படக் கட்டுரையாக எந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்? 'ஹ்யூமர் ஸ்டோரி’யாக யார் கதையை இடம் பெறச் செய்வீர்கள்? லூஸுப்பையனின் கலாட்டா கற்பனைக்கு எந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொள்வீர்கள்? சமூகம் கவனம் கொள்ள வேண்டிய 'விகடன் பார்வை’ கட்டுரையாக எந்த விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுவீர்கள்? - இது மட்டுமல்லாமல் வேறு எந்தெந்தச் செய்திகளை கவனத்தில்கொண்டு, இதழில் இடம்பெறச் செய்வீர்கள்?

       வானமே எல்லை... கற்பனை வடிவமைப்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!  

(ஆ) புகைப்படத் துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், மேற்கூறிய கட்டுரையை அனுப்பத் தேவை இல்லை. அதற்குப் பதிலாக, இந்த விண்ணப்பம் வெளியான தேதிக்குப் பிறகு, தங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்ப வேண்டும். (ஐந்து படங்களுக்கு மேல் அனுப்ப வேண்டாம்). ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறத்திலும் தங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.

         ஸ்டில் கேமரா தவிர, கூடுதல் தகுதியாக, வீடியோ கேமரா இயக்கும் அனுபவம் உண்டா? இருப்பின், நீங்கள் பதிவுசெய்த காட்சி, நிகழ்ச்சி அல்லது குறும்படத்தின் குறுந்தகடுப் பதிவுகளை அவசியம் அனுப்பிவைக்கவும்.

இ) 'நிருபர் புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து, 15.3.14-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்தக் கட்டமாக, 20.4.14-ம் தேதி அன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. முதல் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள்.

10.4.14-ம் தேதிக்குள் எங்களிடம் இருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், முதல் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  -  600 002.