Published:Updated:

சி.ஐ.டி போலீஸ் வைத்த மரக்கன்றுகள்!

வி. காந்திமதி ஓவியம்: ஹரன்

வரலாறு

##~##

'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்...' என்ற தலைப்பில், இயற்கை வேளாண்மையோடு சேர்த்து தன் வாழ்க்கைக் கதையையும் எழுதி வந்தார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

39 அத்தியாயங்களை முடித்துக் கொடுத்ததோடு, மண்ணில் விதையாகி விட்டார். அவருடைய வாழ்க்கையை முழுமையாக வாசர்களுக்குத் தொகுத்துத் தரும் வகையில், அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி, முடிந்த வரை அனைத்தையும் சேகரித்துத் தர தீர்மானித் துள்ளோம். அந்த வகையில், நம்மாழ்வாருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காக பேசுகிறேன்' என்ற தலைப்பில், இதழ்தோறும் பேசுகிறார்கள்.

இந்த இதழில் வி. காந்திமதி பேசுகிறார்.

 திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வி. காந்திமதி, சென்னை, புனே போன்ற இடங்களில் கல்வி பயின்று, தத்துவம்-சமூகவியல் சார்ந்த துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கிராம மக்கள் மத்தியில் சேவை புரிய வேண்டும் என்கிற நோக்கில், தொண்டு நிறுவனப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். தற்போது, பெங்களூருவில் வசித்து வரும் காந்திமதி, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் பற்றி பேசுகிறார்...

சி.ஐ.டி போலீஸ் வைத்த மரக்கன்றுகள்!

''கிராமப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல், சமூகக்காடுகள்... என்று பணியாற்றிய நேரத்தில்தான் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். வயதில் அவரைவிட  இளையவள் என்றாலும், பெயர் சொல்லி அழைப் பதையே அவர் விரும்புவார். அப்படித்தான், ஆரோவில்லில் நடைபெற்ற சமூகக்காடுகள் வளர்ப்பு சம்பந்தமான கூட்டத்தின்போது, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த பெர்னாடு டி. கிளர்க் பற்றி ஆழ்வாரிடம் சொன்னேன். அதில் பெர்னாடும் பங்கேற்ற தால், உடனடியாக இருவரையும் சந்திக்க வைத்தேன். அந்த சமயத்தில், கர்நாடக மாநிலம், தார்வாட் பகுதியில், பணிபுரிய எனக்கு அழைப்பு வந்தது. 'கர்நாடக மாநிலத் தில் பணியாற்ற போகிறேன்’ என்று ஆழ்வாரிடம் சொன்னேன். உடனே, 'காந்திமதிக்கு, தமிழ் நாட்டிலேயே நிறைய வேலை இருக்கு. எங்களோட குடும்பம் அமைப்பில் சேர்ந்திடுங்க’ என்றார்.

அப்போது, ஆழ்வார், ஆஸி... போன்றவர்கள் இணைந்து, தஞ்சாவூரில் 'குடும்பம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். அதில் என்னையும் இணைத்துக் கொண்டேன். எங்களில் யாருக்கும், எந்தப் பதவியும் கிடையாது. எல்லோரும் சரி சமம். எல்லாவற்றையும்விட, சம்பளம் என்று எதுவும் கிடையாது. தஞ்சாவூரில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடத்தின் ஒரு பகுதியில்தான் 'குடும்பம்' அலுவலகம் இயங்கியது. வெளியில் இருந்து பார்த்தால், அங்கே ஓர் அலுவலகம் இருப்பதற்கான அறிகுறியே தெரியாது.

சி.ஐ.டி போலீஸ் வைத்த மரக்கன்றுகள்!

அந்தக் காலகட்டத்தில் விவசாயப் பணிகளுக்காக... குடும்பம் மற்றும் அசோபா என்ற இரண்டு தொண்டு நிறுவனங்கள்தான் செயல்பட்டு வந்தன. அதனால், நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தன. குடும்பம் அலுவலகத்தில் வட்ட வடிவில் அமர்ந்து பேசத் தொடங்கினால், சாப்பாட்டைக்கூட மறந்து பேச்சு நீண்டுகொண்டே போகும்.

சமூகக்காடு வளர்ப்புத் திட்டத்துக்கான கூட்டம், தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். அந்தக் காலத்தில் செல்போன் வசதி எல்லாம் கிடையாது. சொல்லப் போனால், குடும்பம் அலுவலகத்துக்கு தொலைபேசி இணைப்புக்கூட கிடையாது. கூட்டம் சம்பந்தமாக தந்தி மூலம்தான் தகவல் வரும். தந்தியைப் பார்த்தவுடன், ஆழ்வாரும், நானும் புறப்பட்டு ஓடுவோம். மூன்று, நான்கு பேருந்துகள் மாறி, மாறி கூட்டம் நடக்கும் இடத்துக்குப் போய் சேருவோம். பயணத்தின்போது நாங்கள் இருவரும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

ஆழ்வார் சிறந்த பேச்சாளர். அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். தனக்கு முன், நூற்றுக்கணக்கானோர் அமர்ந்திருந்தாலும் சரி... இரண்டே இரண்டு பேர் இருந்தாலும் சரி... அழுத்தமாகப் பேசும் பழக்கம் கொண்டவர், ஆழ்வார். ஒரு முறை, நான் எங்கோ வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அங்கே, என்னுடைய தாயார், சகோதரரின் இளவயது மகன், ஐந்து வயதுகூட நிரம்பாத ஆஸியின் பெண் குழந்தை ஆகியோர் வட்டவடிவில் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் பசுமைப் புரட்சி பற்றியும் பி.எல். 480 திட்டம் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தார், ஆழ்வார். குழந்தைகளிடமும் கூட, பசுமைப் புரட்சியின் எதிர்விளைவுகளை பதிய வைக்கும் உத்வேகம் அவருக்கு இருந்தது.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற சிந்தனை வளர்ந்த நேரம் அது. ஆனால், அரசுக்கு எதிராக தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதாக, எங்கள் பணிகள் உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டன. இத்தனைக்கும், வெளியில் சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு நிதியுதவிகூட நாங்கள் பெற வில்லை. ஆனாலும், கண்காணிக்கப்பட்டோம்.

சி.ஐ.டி போலீஸ் வைத்த மரக்கன்றுகள்!

ஒரு நாள், எங்கள் அலுவலகத்துக்கு ஒருவர் வந்தார். அவர் எங்களுக்கு மிகவும் புதியவர். யார்... என்ன என்று ஏதும் புரியாமல் நாங்கள் அவரை உற்றுநோக்க... சட்டென்று எழுந்த ஆழ்வார், 'வாங்கய்யா, நல்ல நேரத்துல வந்தீங்க... எங்க அலுவலகத்தைச் சுத்தி மரம் நடலாம்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டோம். உங்க மூலமா அது நிறைவேறப் போகுது’ என்று சொல்லிவிட்டு, மரக்கன்றுகள், மண் வெட்டி, கடப்பாரை எடுத்து வந்து, அந்த புதியவரை மரம் நடும் வேலைகளில் ஈடுபடுத்தினார். ஒவ்வொரு மரக்கன்றையும், கையில் வைத்துக் கொண்டு, அதன் பலன், மரம் நடுவதால் என்னவிதமான பலன் கிடைக்கும் என்று பாடம் நடத்திக் கொண்டே, அன்று மாலை வரை மரக்கன்றுகளை நடவு செய்ய வைத்தார்.

வேலை முடிந்ததும் விறுவிறுவென்று விடைபெற்றுச் சென்ற அந்த நபர், அதற்குப் பிறகு எங்கள் அலுவலகம் இருக்கும் பகுதி பக்கம்கூட தலை வைத்துப் படுக்கவில்லை. அந்த நபர், நாங்கள் என்னவிதமான பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்டறிவதற்காக, மாறுவேடத்தில் வந்த சி.ஐ.டி போலீஸ்காரர். இதை எடுத்ததுமே கண்டுபிடித்து விட்டதால்தான், அவரை மரம் நடும் வேலைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் ஆழ்வார். இந்த விஷயத்தை, அந்த நபர் அங்கிருந்து போனபிறகு நம்மாழ்வார் சொல்ல... அவருடைய புத்தி சாதூர்யத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தோம்!

சமூகக்காடு வளர்ப்புத் திட்டத்தில் பணியாற்றியபோது, காடு வளர்ப்பு பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். 'ஒரு வகை மரங்களை மட்டுமே நடவு செய்வது பொருத்தமாக இருக்காது. பல வகையான மரங்களையும் நடவு செய்வது மட்டுமே இயற்கைக்கு உகந்தது’ என்பது, ஆழ்வார் உட்பட எங்கள் எல்லோரின் கருத்து. ஆகையால், நாங்கள் திட்டமிட்டப்படி, பல வகையான மரங்களை ஊர் பொது இடங்களில் நடவு செய்யும் பணியைத் தொடங்கினோம். இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைத் தேர்வு செய்தோம். மழையை மட்டுமே நம்பி இருந்த, அந்த மாவட்டத்தில் எங்களுக்கான வேலைகள் நிறையவே காத்திருந்தன. ஆகையால், தஞ்சாவூரில் இருந்து புதுக் கோட்டை அருகில் உள்ள கீரனூர் பகுதிக்கு குடும்பம் அலுவலகம் குடியேறியது.

புதுக்கோட்டைக்கு நாங்கள் மாறியதற்கு முக்கிய காரணம்... மானாவாரி பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். தமிழ்நாடு முழுக்க, அந்தக் காலக்கட்டத்தில் தைல மரம் வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தியது. ஆனால், ஆழ்வார் உட்பட எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஆழ்வாருக்கு வேளாண்மை கல்வி பின்புலம் இருந்தபடியால், மானாவாரி நிலத்துக்கு ஏற்ற மரப்பயிர்கள் எதுவெல்லாம் வளர்க்கலாம் என்பதை, படிப்பறிவு மூலமும், பட்டறிவு வழியாகவும் செயல்படுத்தி பார்க்கத் தொடங்கினோம். அந்தப் பணிகள் இன்றளவும், எங்களுக்கு மனநிறைவு அளிக்கின்றன. அதற்கும் மேலாக, உள்ளூர் மக்களுக்கு இன்றளவும் அவை உபயோகமாக இருக்கின்றன. எப்படி என்கிறீர்களா...?''

பேசுவார்கள்
சந்திப்பு: பொன்.செந்தில்குமார்